மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, பிப்ரவரி 27, 2005

மின்னணு அரசியல் - II

முதலில் மூக்கருக்கு நன்றி - தலைப்பு, இரவலுக்காக! அவரது 'மின்னணு அரசியல்' என்ற வலைபதிவில் கருத்து தெரிவித்து, அதனுடன் கூடவே தொடர்புள்ள கட்டுரை (1999ல் நான் எழுதியது)க்கு URL கொடுத்திருந்தேன். நண்பர் ஒருவர் 'அந்த தொடர்பில் உள்ளதைப் படிக்க, எழுத்துரு பிரச்னை என்று சொல்லி, அது யுனிகோடில் இருந்தால் பரவாயில்லை' என்று மெயிலியதால் அக்கட்டுரையை முன்னோட்டத்தோடு இங்கே தருகிறேன்.

EVM எனப்படும், எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் பற்றி தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கொஞ்சம் பொறுங்கள்! இரண்டு நாளில், பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வௌதயானாதும் - கருத்துக் கணிப்புகள் சொல்வது போல, லாலு அதில் பெருந்தோல்வி அடைந்தால்.... அடுத்த பூதம் இன்னும் கொஞ்சம் பெருசாகக் கிளம்பக் கூடும்.

ஏற்கெனவே லாலு, EVM பற்றி 'Expert comment' சொன்னவர்தான்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுவிட்டனர். அதனால் தப்பியது EVM. இல்லாவிட்டால் அப்போதே இந்தப் பிரச்னை தலையெடுத்திருக்கும். இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. ரெண்டு நாள்.... Just ரெண்டே நாள் பொறுங்கள்.

அடுத்த வாரத்தில் 'அம்மா'வோடு சேர்ந்துகொண்டு லாலு ஆட்டம் போட நேர்ந்தால் ஆச்சரியப்படாதீர்கள். 'கோர்ட்டுக்கு போகிறோம்' என்று கூட கிளம்புவார்கள். ஆனால் ஒன்று! கோர்ட்டுக்கு போனாலும் இந்த விஷயத்தில், இனி தப்பு அரசியல்வாதிகளால் எதையும் சாதிக்க முடியாது. காரணம் - EVM ஏற்கெனவே கோர்ட்டு படியேறி... இறங்கி... வெற்றி பெற்றுதான் இப்போதைய இடத்தை அடைந்துள்ளது.

இது கோர்ட் படியேறிய முன்னணி, பின்னணி சமாச்சாரம் பற்றி மேலும் விவரங்கள் பெற விரும்பவர்களுக்கே - முதன்முறையாக ஒரு முழு தேர்தலுக்கு EVM பயன்படுத்த முடிவு செய்தபோது நான் எழுதிய 'எப்படி ஜெயித்தது எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?' என்ற இந்தக் கட்டுரை.
-----------------------------------------------------------------------------------------------
எப்படி ஜெயித்தது, எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்?

பத்து வருஷத்துக்கும் மேல் நடந்தது இந்தப் 'போர்'. அதிகாரத்தைப்பிடிக்க, ஆட்சியாளர்களிடையே நடக்கும் அடாவடிப்போர் அல்ல இது. புரட்டுத்தனம் பண்ணும் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே அணியில் திரண்டு நிற்க, தனி மரமாய் நின்று, எதிர்த்த போர். சொல்வது, பேசுவது எல்லாம் ஜனநாயகம்'; ஆனால் அதை முழுமையாக இடம்பெற விடாமல், பித்தலாட்டம் செய்யும் நபர்களை எதிர்த்து நடந்த போர். கடைசியில், ஜெயித்தது தனிமரம் தான். ஆனால் என்ன? இன்று கிடைத்துள்ளது பாதி வெற்றி தான். முழு வெற்றிக்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். அதுவும் விரைவில் கிட்டிவிடும்.

தனிமரம் அதையும் சாதிக்கும். காரணம் - வெற்றிக்காக அவசரப்படும், ஆதங்கப்படும் உயிருள்ள ஜீவன் அல்லவே இது. உயிரற்ற, ஆனால் 'சிலிக்கன் சிப்' மூலம் துடிப்புக் காட்டும் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின். அதாவது, சுத்தத் தமிழில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

அடுத்தமாதம் 4-ம் தேதி கோவா மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபையின் 40 தொகுதி தேர்தல் முழுவதும், இந்த வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தான் நடக்க உள்ளது. இத்துடன் 'செப்டம்பரில் வரும் மக்களவைத் தேர்தலிலும்-எல்லா மாநிலங்களின் சில தொகுதிகளிலாவது இந்த இயந்திரம் பயன்படுத்தப்படும்' என தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் சொல்லியிருக்கிறார்.

நாடு முழுவதும் நடத்தப் போதுமான வாக்குப் பதிவு இயந்திரங்கள், இப்போது ஸ்டாக் இல்லை என்பது இன்னொரு காரணம். தற்போது தேர்தல் கமிஷனிடம் 1.5 லட்சம் இயந்திரங்கள்தான் உள்ளன. இன்றைக்கு அரசியல் கட்சிகள் முதல், அதிகார வட்டம் வரை (வேறு வழியில்லாமல்) ஏற்றுக் கொண்டு விட்ட இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உருவானது, 1989-ல். ஆனால் இப்படி ஒரு மெஷின் தேவை என்ற சிந்தனை உருவானது 1977லேயே. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிப் பேச்சு வந்த போது தான், இதற்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள். இதை ஒட்டி 1979-ல் முதல் மாடல் உருவானது. அதில் சில திருத்தங்களும், மாற்றங்களும் தேவைப்பட்டதால், அடுத்த முன்னேறிய மாடல் 1980 செப்டம்பரில் உருவானது. கேரளத்தில் உள்ள பரூர் தொகுதி உட்பட மொத்தம் 11 தொகுதிகளில் இந்த மாடலின் சோதனை ஒட்டம் நடந்தது. இது, 1982-83 தேர்தலின் போது. ஆனால் தேர்தல் முடிவு ஏற்கப்படாமல், விஷயம் கோர்ட்டுக்குப் போனது. பரூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.சி. ஜோஸ் என்பவர்தான், இந்த வழக்கைப் போட்டார். எல்லா மட்டத்திலும் இந்த மாடலின் நம்பகத்தன்மை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் மெஷினைப் பற்றிக் குறை சொல்லாவிட்டாலும், 'தேர்தல் சட்டங்கள் இதற்கு (மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த) அனுமதிக்க வில்லை' என்று உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

அடுத்து, படிப்படியாக புதுப்புதுத் தடைகள். பல கட்டங்களில், பலமட்டத்திலிருந்து வந்த எல்லா சேலன்ஜ்-ஐயும் தாண்டிப் போராட வேண்டியிருந்தது. கடைசியில் 1989 மார்ச்சில் 'மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்' என்று அரசியல் சட்டத்திருத்தம் வந்தது. அதன்பிறகு, தற்போது பயன்படுத்தப்பட உள்ள அடுத்த மாடல், கூடுதல் அம்சங்களுடன் தயாரானது. மார்ச் 1990-ல், குற்றம் சொல்லமுடியாத இந்த மாடலில், 1.50 லட்சம் மெஷின்கள் தயாரிக்கப்பட்டு ரெடியானது. பெங்களூரில் உள்ள 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' என்ற பொதுத்துறை நிறுவனம் இதைத் தயாரித்து முடித்தது. [தமிழ் வாசகர்கள் பலருக்கு எழுத்தாளராக அறிமுகமான சுஜாதா, (நிஜப்பெயர்- ரங்கராஜன்) இந்த இயந்திரத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.] 8.50 கோடி ரூபாய் செலவில், நவீன இயந்திரங்களை நிறுவி தயாரான மின்னணு வாக்குப் பதிவு யந்திரத்தின் பயணம், இதன் பிறகும் எளிதாகி விடவில்லை.

1989-ன் இறுதியில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வி.பி.சிங் இந்த மெஷினைக் குறை சொன்னார். தேவையானவர்களுக்கு சாதமாகச் செயல்படும்படி, இந்த மெஷினின் புரோகிராமை வடிவமைக்க முடியும் என்று சாதித்தார். இதற்கு ஆதாரமாக சாதாரண கம்ப்யூட்டரில் புரோகிராம்களை மாற்றி எழுதி, முடிவுகளைக் காட்டி பூகம்பத்தைக் கிளப்பினார். ஆனால் இந்த வாக்குப் பதிவு இயந்திரத்தின் புரோகிராம்கள்-யார் வேட்பாளர், அவர் எந்தக் கட்சி என்ற எந்தத் தகவலும் இல்லாத நிலையில், (அடிப்படை புரோகிராமையே ஒரு மைக்ரோ சிப்புக்குள் வைத்து சீல் செய்து, அந்த சிப்புகளையும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தியே) தயாரிக்கப்பட்டிருந்தன. சிங், எழுப்பிய பிரச்னையால், தயாரான மெஷின்கள் எல்லாம் தேர்தல் கமிஷனின் அறை ஒன்றில் தூங்கிக் கொண்டேயிருந்தன. அப்போதைய தேர்தல் முடிவுகளின்படி வி.பி.சிங்கே பிரதமராகப் பதவி ஏற்றார். மனுஷன், பதவி ஏற்றவுடனேயே, தினேஷ் கோஸ்வாமி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார். எல்லாக் கட்சியிலிருந்தும் உறுப்பினர்கள் கொண்ட அந்தக் கமிட்டியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்திரேசன், ராவ் காசரபாடா மற்றும் சம்பத் போன்றவர்களும் இடம் பெற்றனர். இத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.சக்தர், செயலர் கணேசன் என ஒரு மாபெரும் படையே இறங்கி, எல்லா அம்சங்களையும் அக்கு வேறு ஆணி வேறாய் அலசியது. இறுதியில் 'இந்த மெஷினை, எந்த ரீதியிலும் தவறாகப் பயன்படுத்த முடியாது. இதனால் அடுத்து வரும் தேர்தல்களில் இதை பயன்படுத்த வேண்டும்' என்று அறிக்கையைக் கொடுத்தது படை. ஆனாலும் விஷயம் அத்தோடு முடியவில்லை.

எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் தேர்தலில் இடம் பிடித்து விட்டால், தற்போது பயன்படும் 'வாக்குப் பெட்டிகள்' செய்பவர்களிலிருந்து, இன்னும் பலருக்கு வேலை காலியாகும்; பிழைப்பில் மண் விழும். இவர்களெல்லாம் சேர்ந்து அரசியல்வாதிகளை அணைத்துக் கொள்ள, மறைமுகத் தடைக் கற்கள். பைல்கள், பரண் ஏறிப்படுத்தன. தயாரான மெஷின்கள் அனைத்தும், கும்பகர்ணத் தூக்கத்தில் முழ்கின.

ஒட்டுமொத்தமாக, எல்லாக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கும், ஏன் பல அதிகாரிகளுக்கும் கூட சிம்ம சொப்பனமாக இருந்து வயிற்றில் புளியைக் கரைத்த, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் கூட, இந்த விஷயத்தில் துணிந்து முடிவெடுக்க முடியவில்லை. பல விஷயங்களை, தேர்தல் சீர்திருத்தங்களை முன்னுக்குத் தள்ளிய அவர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை மட்டும், தனது அஜெண்டாவில் பின்னுக்குத் தள்ளிவிட்டார். இன்றைய தேர்தல்கமிஷன்தான் துணிந்து முடிவு எடுத்து, நேர்மையான தேர்தலுக்குப் பயன்படும் -'மெஷின்'களின் தூக்கத்தை கலைத்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதம்:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று-பேலட் பாக்ஸ் எனப்படும் வாக்குப் பதிவு செய்யும் பகுதி. இதில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களது சின்னம் இடம் பெற்றிருக்கும். அவற்றுக்கு எதிரில், ஓட்டுப் போட அழுத்த வேண்டிய பட்டன் இருக்கும். ஓட்டுப் பதிவாகி விட்டதைக் காட்ட, சிவப்பு விளக்கு ஒன்று எரியும் வகையில் இதில் ஏற்பாடுகள் உள்ளன. மற்றொருபகுதி, பதிவான வாக்குகளைக் கணக்கிட்டுக் கொள்ளும் கண்ட்ரோல் யூனிட். பேலட் பாக்ஸும், கண்ட்ரோல் யூனிட்டும், மிக நீண்ட கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கண்ட்ரால் யூனிட், தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது இருக்க, பேலட் பாக்ஸ் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடத்தப்படும். கண்ட்ரோல் யூனிட்டில் 'பேலட்' (Ballot) என்றொரு பட்டன் உள்ளது. இதை தேர்தல் அதிகாரி அழுத்திய பின்னரே, வாக்குப் பதிவு செய்ய முடியும். இது அழுத்தப்பட்டு, வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம் என்பதை, பேலட் பாக்ஸின் மேல் புறத்தில் உள்ள இன்னொரு சிவப்பு விளக்கு எரிந்து, தகவல் சொல்லும். அதன் பின் வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தலாம். உடனே, கண்ட்ரோல் யூனிட்டுக்குத் தகவல் சென்று, சம்மந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் வாக்கு பதிவாகி விடும். வாக்கு பதிவாகி விட்டதை 'பிப்' என்ற ஒலியும்,வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள சிவப்பு விளக்கு கண் சிமிட்டியும் தகவல் சொல்லும். இதன் பிறகு அடுத்த வாக்காளர் வாக்குப் பதிவு செய்ய, தேர்தல் அதிகாரி மீண்டும் கண்ட்ரோல் யூனிட்டின் 'பேலட்' பட்டனை அழுத்த வேண்டும். இதற்கு முன்பு வேறு யாரும் வாக்குப் பதிவு செய்ய முடியாது. எத்தனை முறை பேலட் பாக்ஸின், எந்த பட்டனை அழுத்தினாலும் பலன் இருக்காது. இத்துடன் நமது தேர்தல் முறையின் படி ஒரு நிமிடத்தில் அதிகப் பட்சம் 5 முதல் 6 வாக்குகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், அவ்வாறே இந்த இயந்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை விட வேகமான வாக்குப் பதிவுக்கு இயந்திரம் இடம் தராது. இதனால் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி, ஒரு வேட்பாளருக்கே இஷ்டப்படி ஓட்டுப் போடும் மோசடியைத் தவிர்க்க முடியும். தேவைப்பட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப் பதிவான விதத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, சரிபார்க்கவும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை இயந்திரம் ஒன்றில் அதிகப் பட்சமாக 3840 வாக்குகளைப் பதிவு செய்யலாம். அதனால் சராசரியாக ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு இயந்திரம் போதுமானது. தேவைப்பட்டால் இரண்டாவது இயந்திரத்தையும் பயன்படுத்த முடியும். சின்னச் சாவடிகளில், இரண்டு சாவடியின் ஓட்டையும், ஓரே இயந்திரத்தில் பதிவு செய்யவும் வாய்ப்பு உண்டு.

பேலட் பாக்ஸ் ஒன்றில், 16 வேட்பாளர்கள் பெயர் இடம் பெறும் (படத்தில் காணலாம்). இதுபோல 4 பேலட் பாக்ஸ்களை, ஒரே கண்ட்ரோல் யூனிட்டுடன் இணைத்து தேர்தல் நடத்தலாம். இதனால் இந்த வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் அதிக பட்சமாக 64 வேட்பாளர் வரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியும். குறைவான வேட்பாளர்கள் இருந்தாலும், அதற்கு ஏற்ப இதைத் திருத்தி அமைத்துக் கொள்ளலாம். (அதுவும் படத்தில் காட்டப்பட்டுள்ளது).

ஒரு வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்து முடிந்தவுடன், கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'Close` என்ற பட்டனை அழுத்திவிட்டால், கன்ட்ரோல் யூனிட் பூட்டிக் கொள்ளும். இதன் பிறகு என்ன செய்தாலும் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது.

தேர்தல் முடிவுகளை அறிய கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'Result` என்ற பட்டனை அழுத்த வேண்டும். பதிவான மொத்த வாக்குகள், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் என வரிசையாக கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள டிஸ்பிளேப் பகுதியில் பார்க்க முடியும்.

இது மட்டுமின்றி, இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதாவது சட்டமன்றம், பாராளுமன்றம் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தாலும், இதைப் பயன்படுத்தலாம். இரண்டுக்குமான முடிவுகளை அறிய, தனித்தனியான 'ரிசல்ட்' பட்டன்கள் இதில் உள்ளன.

இது மட்டுமின்றி சாதாரணமாக தற்போது நடக்கும் தேர்தலில் செல்லாத ஓட்டுகள் என்று பதிவாவதும் இதில் சாத்தியமே இல்லை. வாக்குப் பதிவு செய்யும் நபர், தான் விரும்பிய வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனைத் தொட்டவுடனே வாக்குப் பதிவாகி, இணைப்புதுண்டிக்கப்படுவதால், அதன் பிறகு தவறுதலாக வேறு பட்டனில் விரல் பட்டாலும் பாதிப்பு இருக்காது.

இது மட்டுமின்றி தேர்தல் முடிவுகளை அறிய நாள் கணக்கில் காத்திருப்பது, 'ஓட்டுகளை மாற்றிப் போட்டு எண்ணிவிட்டார்கள்' என மறு எண்ணிக்கை, பெரிய தொகுதிகளில் ஒட்டுகளை எண்ண ஏராளமானவர்களைப் பணியில் அமர்த்திப் பராமரிப்பது, போன்ற எந்த சிரமங்களும் இதில் இல்லை. பட்டனைத் தட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் பலன்கள்:

தற்போதைய முறையில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் மொத்தக் காகித செலவில் 1000த்தில் ஒரு பங்கு தான், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைக்குத் தேவை. காரணம் ஒரு பேலட் பாக்ஸுக்கு ஒரே ஒரு அடையாளச் சீட்டு (வாக்காளர் பெயர், சின்னம் கொண்டது) மட்டுமே தேவை. எல்லா வாக்காளரும் அதைப் பயன்படுத்தியே வாக்குப் பதிவு செய்துவிட முடியும். தேர்தல் நடத்தத் தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கையையும், கணிசமாகக் குறைக்கலாம். இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் 'படிகள்' போன்றவை மிச்சமாகும். வாக்கு எண்ணிக்கைக்கும், பெரும்படை தேவையில்லை. அந்தச் செலவும் மிச்சம்.

ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தை, குறைந்த பட்சம் 10 ஆண்டுகளும், அதிக பட்சம் 20 ஆண்டுகள் வரையிலும் பயன்படுத்த முடியும். இதனால் குறைந்தது 2 தேர்தலுக்கும், அதிகபட்சம் 4 தேர்தலுக்கும் இதைப் பயன்படுத்தலாம். (இப்போதுள்ள சூழ்நிலை போல, அடிக்கடி பொதுத் தேர்தல்கள் நடந்தால், இந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கேற்ப அரசின் செலவும் ஏகத்துக்குக் குறையும்!)

தேர்தலுக்கான பிரசார காலத்தையும் கணிசமாகக் குறைக்கலாம். வாக்குச் சீட்டு அச்சிடுவது போன்ற காரணங்களுக்காக தற்போது 15 நாட்கள் வரை தேவைப்படுகிறது. இது குறைக்கப்பட்டால் வேட்பாளர்களுக்கு ஆகும் பிரசார காலத்துச் செலவுகளும் கணிசமாகக் குறையும்.

செலவு கணக்குகள் எப்படி?

தற்போது தயாராகிக் காத்திருக்கும் 1.50 லட்சம் இயந்திரங்களைத் தயாரிக்க - ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை செலவாகியுள்ளது. இத்துடன் கன்ட்ரோல் யூனிட்டை இயக்கத் தேவைப்படும் ஸ்பெஷல் பேட்டரி ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை. (இது 1990-ன் கணக்கு) இப்படிப்பல விதங்களில் பயன்தரும், சிக்கனமான தேர்தல் முறைக்கு வழி செய்வதால் தான், எல்லாஎதிர்ப்புகளையும் மீறி இந்த 'மெஷின்' இடைக்கால வெற்றியைப் பெற்றுள்ளது. முழு ஜனநாயகத்தை வரவேற்க விரும்பும் அனைவரும், இந்த வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்பது ஆச்சரியமில்லை தானே! (23-5-1999 / www.ambalam.com)

புதன், பிப்ரவரி 23, 2005

எங்கே போகுது எம்.பி., எம்.எல்.ஏ. இடஒதுக்கீடு?

எனக்கு இதெல்லாம் தமாஷாகப்படுகிறது. 1996லிருந்து மாறிமாறி 'பால் கொடுத்து படுக்கைக்கு அனுப்பி வைக்கப்படும்', பெண்களுக்கான இந்த இடஒதுக்கீடு, இப்போது அவசர அவசரமாக சீவி முடிச்சி சிங்காரிக்கப்படுகிறதோ என்று நினைக்கிறேன். பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33% சதவிகித இடங்களை ஒதுக்க நடக்கும் புது கூத்தைத்தான் சொல்கிறேன்.

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை 33% கூட்டி, அதை அப்படியே பெண்களுக்கு ஒதுக்கி விடலாம் என்ற... சோனியா காந்தியால் முன் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் திட்டத்தைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு முன்வடிவைத் தயாரித்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அவர்களது கருத்துக்கள் திரட்டப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படுமாம். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இது குறித்து மற்ற கட்சித் தலைவர்களை... தேவைப்பட்டால் நேரில் சந்தித்துப் பேசுவார் என்கின்றன தலைநகரச் செய்திகள்.

முக்கிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும்... இந்த புதிய ஆலோசனைக்கு முன்பே கூட, பெண்களுக்கு இட ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் கருத்து முரண் கொண்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் - வௌதப்படையாகவாவது. அதனால் அவர்களது கட்சி எம்.பி.ககள் ஒட்டு மட்டுமே இதை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற போதுமானது. அதன் பிறகும் இந்த விஷயத்தில் சிக்கல் நீடிக்க காரணம் - முலாயம் சிங் போன்ற சிலர் பெண்களுக்கான இந்த 33% சதவிகிதத்திற்குள் ஜாதி அடிப்படையிலான உள்ஒதுக்கீடும் தேவை என்று கொடிபிடிப்பதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி கட்சிகளின் ஆதரவும் இல்லாவிட்டால் மாநில சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட இயலாது என்பது ஒரு சிக்கல்தான். அதனால், முலாயம் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாமலோ..., விருப்பமில்லாமலோ காரியம் தள்ளிபோடப்பட்டு வருகிறது. முலாயம் போன்றவர்களுக்கு, இது தள்ளிப் போவதில் பெரிதான இழப்பும் இல்லை. விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 540 சொச்சம் உறுப்பினர்களோடு, இன்னுமொரு 170 சொச்சம் (33%) புதிய உறுப்பினர்கள் உருவாவார்கள். தமிழக சட்டமன்றத்தில் உள்ள 240 சொச்சம் உறுப்பினர்களோடு இன்னுமொரு 80 (33%) புதிய உறுப்பினர்கள் இடம் பிடிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து, தற்போது எத்தனை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக சட்டம் இயற்றும் அரங்குகளுக்குச் செல்கிறார்களோ, அதனுடன் சேர்த்து இன்னும் கூடுதலாக மூன்றில் ஒருபங்கு கூட்டம் இதே பணியைச் செய்ய கூடிக் கொள்ளும். மற்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், படிகளும், பதவிசுகளும் இன்னும் கூடுதலான நபர்களுக்கு வழங்கப்பட புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இன்னுமொன்று நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன்புதான், மாநில மற்றும் மத்திய அரசுகளில் அமைச்சர்களாக பதவி விகிப்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கத்துக்கு எகிறி, அதனால் ஏற்பட்ட உபரி செலவுகள் பயமுறுத்தும் எல்லையை எட்டியபோது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இத்தனை சதவிகிதம் பேர்தான் மந்திரியாகலாம் என்று வரையறை கொண்டு வரப்பட்டது. அதனால் சில மாநிலங்களில் பதவி இழந்தவர்கள் கூட உண்டு. அந்தந்த மாநில தலைநகர்களில் சிக்கலான பல நபர்களுக்கு பதவி அளிக்க இயலாத நிலை ஆளுங்கட்சிகளுக்கு ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து அத்தகையவர்களை சமாளிக்க எதாவது ஒரு பொறுப்பான பதவியை புதிதாகவாவது உருவாக்கிட வேண்டிய கட்டாயம் பல மாநில முதல்வர்களுக்கு இன்றும் கூட தொடர்வது வேறு விஷயம். இது போன்ற சிக்கல்கள் எல்லாவற்றும் ஒட்டுமொத்த ஒரேவீச்சு தீர்வாக இந்த புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்களோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இந்த புதிய அணுகுமுறை மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்து அவர்களுக்கு ஜனநாயகத்தில் புதிய பொறுப்பை உண்டாக்கித் தந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தனது தொப்பியில் இறகு குத்துக் கொள்வது மட்டுமின்றி, இனி மாநிலம் தோறும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டுமல்ல; மந்திரிகளின் எண்ணிக்கையும் சட்டப்படி அதிகரிக்கும். அப்படி செய்து கொள்ள அந்தந்த மாநில முதல்வர்களுக்கு, பிரதமருக்கு தார்மீக உரிமை கிடைத்துவிடும்.

இந்த புதிய ஆலோசனையை நியாயப்படுத்த உள்துறை அமைச்சகம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்வைக்கப்படும் வாதம் வினோதமானது. 'தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 1952ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி முடிவு செய்யப்பட்டது. அன்றைய மக்கள்தொகையை ஒப்பிட்டால், இப்போது அது 3 மடங்காகியுள்ளது. எனவே, மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களது பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்க வேண்டியுள்ளது. எனவே இந்தவகையில், அதை செய்து கொள்வதில் தவறு இல்லை' என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்தும், இதற்கான வாதம் பற்றியும் வேறு எந்த கட்சியும் இன்னும் பெரிதாக கருத்து சொல்லிவிடவில்லை. பாஜக மிகவும் கவனமாக இதை அணுகுவதாகத் தெரிகிறது. வரும் 23ந்தேதி கூடும் அக்கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து கருத்து சொல்வார்களாம். மற்ற கட்சிகள் இதைக்கூட இன்னும் சொல்லவில்லை. மவுனம் காக்கிறார்கள். எனக்கென்னவோ இந்த மவுனத்துக்கு அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்துக்கு - தேர்தல் அல்லாத நேரங்களில் பொதுமக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்ற ஊடகங்கள் போன்றவை மௌனம் காத்தால்... 'இதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பெரிதான எதிர்ப்பு இருக்காது' என்று எண்ணி, இந்த திட்டத்தை பல கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடும். மாறாக, ஊடகங்கள் இதற்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுத்தால் - அதை உணர்ந்து மற்ற சில கட்சிகளும் இத்திட்டத்தை ஏற்க மறுக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. மற்றபடி இத்தனை நாட்களுக்குப் பிறகும் மற்ற பல கட்சிகளும் மௌனம் காப்பதை என்னால் வேறு மாதிரி புரிந்து கொள்ள முடியவில்லை.

குறிப்பாக - இத்திட்டம் குறித்து கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைதி காப்பது ஏன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. நிதியமைச்சரின் பொறுப்பான பட்ஜெட் தயாரிப்பில் - அவர் எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இவர்கள் பரிந்துரைப்பார்களாம். கேட்டால், இவர்கள்தான் இந்திய மக்களின் காவல் நாய்களாம். இந்த நாய்கள் குரைப்பதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் போனால், கடிக்கவும் தயங்க மாட்டார்களாம். இவர்கள் கடித்தால், பாதிப்பு அதிகம் இருக்குமாம். இப்படியெல்லாம் விடப்பட்ட பல மிரட்டல்களைத் தாண்டித்தான் சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளன என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.

இதுபோக, தனியார் நிறுவனங்களுக்கும், கார்ப்போரேட் கம்பெனிகளுக்கும் தரப்படும் வரிச் சலுகைகளைக் குறைத்து, அதை சாமானிய பொது மக்கள் பயன் அடையும் வகையில் செலவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்த காவல் நாய்கள், அரசின் செலவை அதிகரிக்கவும், வெட்டித்தனமாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் கூச்சலிட்டு கோஷம் போட்டு அதற்கு செலவாகும் மக்களின் வரி பணத்தை இன்னும் அதிகரிக்கவும் வழி செய்யும் ஒரு புதிய திட்டம் குறித்து கருத்து சொல்லாமல் தாமதிப்பது, அல்லது தவிர்ப்பது ஏன் என்று கேட்க தோன்றுகிறது. முலாயாம் சிங் உள்ளிட்ட 'உள் ஒதுக்கீடு' கேட்ட நபர்களும்கூட, 'புதிய திட்டத்தின்படியும் உள்ஒதுக்கீடு தேவையா? அல்லது 'அது' இல்லாத எதையும் ஏற்கத் தயாரில்லையா, அல்லது இப்போதைய திட்டத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது குறைந்தபட்சம் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறாரா?'என்று இதுவரை வாய் திறந்ததாகத் தெரியவில்லை. இந்த மவுனத்துக்கெல்லாம் அர்த்தம்...!?

இதையொட்டி நான் கணிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில்... அல்லது வாரங்களில் நிஜமானால் எனக்கு உள்ளார்ந்தபடி வருத்தம்தான் மிஞ்சும். நமது அரசியல்வாதிகளை சரியாக கணித்து வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மாறாக எனது கணிப்பு பொய்த்து - வேறு திசையில் சம்பவங்கள் நடந்தால் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி; ஆனால் கூடவே அதிர்ச்சியும் இருக்கும்.

சட்டமியற்றும் பணிக்கு, மக்கள்தொகை கணக்குப்படி பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள், இதுவரை இயற்றப்பட்டுள்ள சட்டங்களை அமலாக்கும் பணியில் உள்ள நிர்வாகிகள், பணியாளர்கள், அதிகாரிகள் எண்ணிக்கையையும் அதேபோல அதிகரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்களா? அடுத்து, இயற்றிய சட்டத்தை காக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார்களா? அவ்வாறு உணர்ந்திருந்தால், அதை செய்ய இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அல்லது இனிதான் என்ன செய்யப் போகிறார்கள்?

ஏற்கெனவே பல அரசு அலுவலங்களில்... மத்திய, மாநில அரசுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், பதவி உயர்வில் செல்வபவர்கள், பதவி காலத்தில் காலமாகிவிடுபவர்கள் என உருவாகும் பல பணியிடங்களுக்கும் கூட புதிதாக ஆட்களை அமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ளனர். இருக்கும் பணியாளர்களே முடிந்த அளவு காரியத்தை செய்கிறார்கள். முடியாத காரியம் - யாருக்கு எத்தனை அவசரம் என்றாலும் தனக்கு 'விதிக்கப்பட்ட' வேகத்தில்தான் நகர்வேன் என்று சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு சம்பவம் சொல்ல விரும்புகிறேன். (நேற்றைய தினம் - 21 Feb 2005, NDTV செய்தியில் பார்த்தது)

நாட்டின் ரயில்வே துறையில் தற்போது ரயில் என்ஜினை இயக்கும் டிரைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாம். சட்டப்படி, ஒரு டிரைவர் நாளொன்றுக்கு தொடர்ந்து 10 மணி நேரம்வரை வேலை செய்யத்தான் பணிக்கப்படலாமாம். ஆனால் இன்று நடப்பதோ வேறு. டிரைவர்கள் பற்றாக்குறையால் ஒவ்வொரு டிரைவரும் அதிகபட்ச வேலை நேரத்தைத் தாண்டி, பல மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதாம். அதனால் ஏற்படும் அயர்ச்சி, சோர்வு போன்றவை பல நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது என்கிறார் ஒரு டிரைவர். நாட்டில் வடக்கு முதல் தெற்குவரை... கிழக்கு முதல் மேற்குவரை ஓடும் பல்லாயிரம் மக்களின் உயிரை முன் வைத்து விளங்கும் பிரச்னைகள் பலவே இப்படியிருக்கையில் - மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்கள் இங்கெல்லாம் உருவாக்கப்படாமல் இருக்கையில் சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் - மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் என்ன பலன் ஏற்பட்டுவிடும்? அடுத்து, தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்களில் எத்தனை பேர் நடக்கும் விவாதங்களைப் புரிந்து கொண்டு, பங்கேற்று, அதை வடிவமைக்கப் பங்காற்றுகிறார்கள்? அத்தகைய பங்களிப்பு, புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் வரும் எந்த உறுப்பினர் குறைவால் ஈடு செய்ய முடியாத இழப்பாகப் போகிறது என்று எனக்குப் புரியவில்லை.

இதையும்தாண்டி, பழைய தீர்மான நகலின்படி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் போனதற்கு காரணமாகச் சொல்லப்படுவதற்கு விடை காண்பதுதான் ஆட்சியாளர்களின், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களின் கடமையும் பொறுப்புமேயன்றி, அப்பிரச்னையில் இருந்து திசைத் திருப்பி, அதை வேறு தளங்களுக்கு கொண்டு செல்வதல்ல. சோனியா முன் வைத்துள்ள திட்டம், முலாயம் போன்றவர்கள் கேட்ட உள்ஒதுக்கீடுக்கும் வகை செய்யவில்லை; 'அது தேவையில்லை. தற்போதைய வடிவிலேயே அதை ஏற்றுக் கொள்கிறோம். இது குறித்து உங்களது விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது' என்று அவர்களை இறங்கி வரச் செய்யவும் இல்லை. மாறாக - எந்த அரசியல் கட்சியும் தற்போது அனுபவித்து வரும் பதவி சுகங்களில் - பெண்களுக்கு பங்கு தர வேண்டாம். உங்களுக்கு இழப்பு இல்லாதவகையில் புதிதாக பெண்களுக்கு பதவியை உருவாக்கித் தந்து அதில் உங்களுக்கும்
உரிய பங்கு தருகிறோம் என்று அரசியல் கட்சிகளுக்குச் சொல்வதாகத்தான் உள்ளது.

எனவே, நாளை சோனியா முன் வைத்த திட்டம் ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிதாக பெண்கள் சட்டமியற்றும் அவைகளுக்கு அனுப்பப்பட்டால், அது பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்பபட்டதாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, மக்களை, குறிப்பாக பெண்களை ஏமாற்றும் அரசியல் சமூகம் தொடர்ந்து இன்னுமொருமுறை வெற்றி பெற்றதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

செவ்வாய், பிப்ரவரி 22, 2005

என்னைப் பற்றியொரு அறிமுகம்

இணையத்தில் எனக்கு இது 6வது வருஷம்; பத்திரிகையில் கிட்டத்தட்ட 12 வருஷம் முடிஞ்சிடுச்சு!

''சரி! அதுக்கு என்ன இப்ப?'' என்பது நியாயமான கேள்விதான்.

பதில் : நான் இணையத்துக்குள்ள வந்தபோது, இந்த அளவு இணையமும் வளர்ச்சி பெறவில்லை. நானும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருந்தன. 'அப்ப..., இப்ப எல்லாம் கத்துகிட்டாச்சா'ன்னு எதிர் கேள்வி, இப்ப வேணாம். ஆனா, இணையத்துக்கு வந்தபிறகு நான் கத்துக்கிட்டது நிறைய. அதுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாயிருந்த எல்லாருக்கும் ஒருமுறை நன்றி சொல்லிட்டு விஷயத்துக்கு போவோம்.

''12 வருஷம் பத்திரிகைக்காரனாயிருந்து என்ன சாதிச்சே!''

நாம நெனைக்கிறதையெல்லாம் எழுதணும்னா, இந்தமாதிரி Blog தேவைன்ற அவசியத்தை புரிஞ்சிக்கிட்டதுதாங்க!

இதை எப்படி புரிஞ்சிக்க போறாங்களோன்ற சந்தேகம் ஒண்ணு எனக்கு இப்பவே வருது. ஆனா அதுக்கு இப்ப விளக்கம் சொல்றது - 1. சிலருக்கு போரடிக்கும். 2. என் தரப்பையும் சரியா முன்வைக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பின்னாடி வருது பதில்!

எப்படியும் இனி வாரத்துக்கு - 2... 3... முறையாவது சந்திக்கலாம்னு தோணுது.

நான் Blogல தஞ்சம் புக காரணம்னா, ரெண்டு... மூணு பேரை முன்னோடின்னு சொல்ல விரும்பறேன்.

முதலாவது sify.com வெங்கடேஷ். 'நேசமுடன்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் இதழ் நடத்தினார். அவர் மட்டும்தான் அதில் எழுதுவார். அவரது அரசியல், சினிமா, புத்தக, சமூக விமர்சனங்கள்.... பார்வைகளின் தொகுப்பாக வந்து கொண்டிருந்தது. எதனாலோ கொஞ்ச நாட்களாக மெயில் வருவதில்லை.

இரண்டாவது நபர் பத்ரி. crickinfo தளத்தைச் சார்ந்து, எனக்கு அறிமுகமான இந்த பெயர் - பின்னர் இணையம் தொடர்பான பல விஷயங்களில் அவர் காட்டிய ஆர்வம்... 'கிழக்கு பதிப்பகம்' பெயரில் இப்போது எடுத்திருக்கும் இன்னொரு அவதாரம் போன்றவற்றால் பிரம்மாண்டம் பெற்றுள்ளது. இதற்கு மேல் அவரைப்பற்றி இங்கு பேசிக் கொண்டிருந்தால், அடிக்க வருவீர்கள்.

மூன்றாவது நபரும் உங்களுக்கு தெரிந்தவர்தான். தேசிகன். எழுத்தாளர் சுஜாதாவின் Official Biographer என்று அறியப்படுபவரும், மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவையை மௌள மௌள வலையேற்றியவருமான அதே நபர்தான். அவர் மகளுக்கு 'ஆண்டாள்' என்று பெயர் வைத்துள்ள வித்தியாசமான, கணிணி தொழில்நுட்ப விவர புருஷர். அது பற்றி ஒரு blog எழுதியே நல்ல வீச்சுக்கு உள்ளானவர்.

இவர்கள் மூவரும்தான் எனக்கு blog எழுத ஆவலைத் தூண்டிய மகா புருஷர்கள்.

ஆனால், 'Blogகா?... தேவையான்னு இன்னொருமுறை யோசித்து... அப்புறம் உன் இஷ்டம்' என்று உள்ளுக்குள் ஒரு விதமான அச்சத்தை உண்டாக்கிய இன்னொரு நபரும் உண்டு. எனது நண்பர் மனுஷ்யபுத்திரன். கூர்மையான உணர்வுகள் கொண்ட அவர், அண்மையில் உயிர்மை என்ற பெயரில் தொடங்கிய வலைப்பதிவு குறித்து எழுந்த கருத்து மோதல் - எனது நாற்காலி மட்டும் பூகம்பத்தை ஒருமுறை சந்திக்க வைத்தது. ஆனால் ஒரு விஷயம். இது போன்ற விஷயங்கள்தான் 'புலவர்களின் பரம்பரைச் சொத்து' என்ற வசனம் பழையதுதானே! என்ன... புலவர்களின் என்பதிலிருந்து இன்றைக்கு அதை இலக்கியவாதிகளின் என்று மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை, தனிப்பட்ட விரோதங்களுக்கு வித்திடாதவரை இந்த மாதிரியான கருத்து மோதல்கள் சரிதான். ஆனால் பல நேரங்களில் உணர்ச்சி பிழம்பாக பலரும் வெடிக்கும்போது எனக்கு கொஞ்சம்போல வருத்தம் என்பது உண்மைதான். நான் அந்த மாதிரியான ஆட்டத்துக்கு தயார் இல்லை. அதை இப்போதே நான் எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

தனிப்பட்ட தாக்குதல்களுக்கு, விமர்சனங்களுக்கு நான் தயாரில்லை. என் எழுத்தையும், கருத்தையும் ஏற்க முடியாதவர்கள் இருக்கலாம். அதை விமர்சிக்கலாம். அதற்கு நானும் - முடிந்தால் விளக்கமோ, இல்லையானால் வருத்தமோ தெரிவிக்கிறேன். விமர்சனம் எல்லை கடந்து போவதாக இருக்குமானால் இப்போதே சொல்கிறேன். எனது response ......... காதை செவிடாக்கிக் கொண்டு, 'வேறுபக்கம் என் பயணம்' என்று தொடர்வதுதான்.

சரி! இந்த blogல் எதைப் பற்றியெல்லாம் எழுதப் போகிறேன்? இந்த பெயர் 'நாலாவது கண்' என்றால் என்ன?

அறிமுகத்தின் ஆரம்பத்திலேயே சொன்னபடி.... நான் பத்திரிகையாளன் என்பதால் - இது ஒரு பத்திரிகையாளனனின் டைரி குறிப்பாக இருந்தால் ஆச்சரியப்பட முடியாது. The Hinduவில் வௌதயாகும் From reporter's diary போல, சுருக்கமாகவே எல்லா விஷயங்களையும் சொல்லிவிட முடியாது. மறுபுறம் எல்லா விஷயங்களிலும்... சில நேரங்களில் போதுமான தகவல் கிட்டாமையினால் கூட, விரிவாக கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்படும். அந்த மாதிரி நேரங்களில் சுருக்கமாகவே சில வரிகளில் முடித்துக் கொள்கிறேன்.

சமூகம், அரசியல், பொருளாதாரம், சினிமா போன்றவை அதிகமாகவும்.... அவ்வப்போது அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்வது திட்டம்.

''நாலாவது கண் ?''

சிவனின் 'நெற்றிக்கண்'ணை மூன்றாவது கண் என்று குறிப்பிடுகிறார்கள். அதில் ஒரு உக்கிர பார்வை, நெருப்பு கக்கும் தன்மை எல்லாம் உண்டு. ஆனால் நாலாவது கண் கட்டாயமாக அப்படியிருக்காது.

அடுத்து, ஜனநாயகத்தை காக்கும் 'நாலாவது தூண்' என்று பத்திரிகைகளைக் குறிப்பிடுகிறார்கள். 'நிஜமாகவா?' என்று கேட்டுக் கொள்வது பத்திரிகையாளனான நானேதான்? 12 ஆண்டு கால அனுபவத்தில் உளப்பூர்வமாக என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. இன்றைக்கு என் நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்தான் இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் கூட அதிகமிருக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது நிலை என்ன என்பது பற்றி உங்களுக்கு இன்னும் நிறையவே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதனால் இந்த நாலாவது கண், மூன்றாவது கண் மாதிரி உக்கிரத்தை வீசாது. அதே நேரத்தில் எதையாவது தாங்கிப் பிடிப்பதாக பாவ்லாவும் செய்யாது. மனத்தில் பதிந்த நிழலை மற்றவர்களும் பார்க்க பதித்துவிட்டுச் செல்வதுதான் நோக்கம். எப்போது என் 'கண்கள்' எதைப் பார்க்கப் போகின்றன? எதைத் தவறவிடப் போகின்றன என்பது இப்போது தெரியவில்லை.

இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். விரைவில் எனது மனதில் பதிந்த முதல் Pictureவுடன் பேசுவோம்.