மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், ஏப்ரல் 03, 2008

எழுத்தாளர் சுஜாதா - என் பார்வையில் - II

எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் எனது அனுபவம் குறித்து தொடர்ந்து எழுதுவதாக குறிப்பிட்டு, சுமார் 1 மாதத்துக்கு மேலானபின், தற்போதுதான் இரண்டாவது பகுதியை வலையேற்ற முடிந்தது. இதற்கு இரு காரணங்கள். முதலாவது - இயல்பாகவே நான் வேகமான Blog எழுத்தாளன் அல்ல என்பது! இரண்டாவது - உயிர்மை இதழில் எழுத்தாளர் சுஜாதா நினைவு குறித்து சிறப்பிதழ் வெளியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு கட்டுரை தருமாறும் அதன் ஆசிரியர் நண்பர் மனுஷ்யபுத்திரன் கேட்டிருந்தார். அந்த நேரத்தில்தான் நான் இந்த இரண்டாவது கட்டுரையின் உள்ள்டக்கம் குறித்து முடிவு செய்திருந்தேன். அப்போது எனது கம்ப்யூட்டர் பழுதானது... பின்னர், ஒரு பத்திரிகைக்கு கொடுக்கும் கட்டுரையை - அது அரங்கேறும் முன்னே வலையேற்றுவது சரியல்ல; நியாயமும் அல்ல என்ற எனது கருத்தால் - தற்போது தாமதமாக இங்கே கொடுத்துள்ளேன். இதற்கு வலைஞர்கள் பொறுத்தருள்க! இனி..... அந்த கட்டுரை!
---------------------------------------------------------------------------------
மார்ச் 10ம் தேதி!

எழுத்தாளர் சுஜாதா காலமானதையொட்டி நடந்த நீத்தார் வழிபாட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நெருங்கிய உறவினர்கள், மிகச் சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அமைதியாக நடந்த இது - அந்த வீட்டில் நான் கலந்து கொள்ளும் இரண்டாவது நிகழ்ச்சி. இடையில் பலமுறை அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தமுறைதான் மாறுபட்டு உணர்ந்தேன். முதல்முறை அந்த வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது, எழுத்தாளர் சுஜாதா! அது, அந்த வீட்டின் கிரஹப் பிரவேசம். அலுவலக காரணங்கள் அல்லாமல் - நட்பு ரீதியாக, நான் அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்த முதல் நிகழ்வு அதுதான். அப்போது அவ்வீட்டின் கார் பார்க்கிங்கில் இருந்தபடி அவர் எங்களை வரவேற்ற... - அதே இடத்தில்தான், மரணத்துக்குப் பிறகு அவரது உடல் அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 'முதலும்... முடிவும்... இங்குதானா?' என்று அப்போது எனக்கு தோன்றியது உண்மை. நல்லவேளையாக, அந்த குடும்பத்துடனான எனது தொடர்பு அப்படியே முடிந்துவிடவில்லை. அந்த வீட்டில் மேலும் பல சுபநிகழ்வுகள் நடக்க விரும்புகிறேன்.
* * *
சுஜாதா அவரது - இந்த மைலாப்பூர் வீட்டுக்குக் குடியேறுவதற்கு முன், ஆழ்வார்பேட்டையில் சரவணா அப்பார்ட்மெண்டில் வசித்தபோது - நான் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, ஓரிருமுறை அலுவலக காரணங்களுக்காக, அந்த வீட்டுக்குச் சென்றதாக நினைவு. ஆனால், அந்த சந்திப்புகளில் காரண காரியம் மட்டும்தான் இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவுடன் நான் நெருங்கிப் பழகியது - அவர் மைலாப்பூர் வீட்டுக்குச் சென்றபிறகுதான். ஆனால், 'அதன் பிறகே உடல் அவரை மிகவும் படுத்தியது. பலமுறை அப்போலோவுக்குப் போக வைத்தது' என்று பேசப்படுவதை கேட்டிருக்கிறேன். சுஜாதா கண்மூடித்தனமான செண்டிமெண்ட்களை நம்புகிறவர் இல்லை என்பதால் - அவரும், அவரது மனைவியும் கூட 'இப்படி' நினைக்கவில்லை.

புதிய வீடு சுஜாதாவுக்கு எப்படியோ! ஆனால், அவருடன் அம்பலத்தில் பணியாற்றிய பலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்ததாக நம்பினார்கள். பல ஆண்டுகளாக அவர் தேர்ந்தெடுத்து படித்து... சேகரித்து வைத்திருந்த நூலகத்தைத் திறந்துவிட்டு... விருப்பமான, தேவையான புத்தங்களை எடுத்துக் கொள்ளும்படி சுஜாதா சொன்னது - அந்த புது வீட்டுக்கு இடம் பெயர்ந்தபோதுதான். இன்று, என் வீட்டில் இருக்கும் சின்ன லைப்ரரியின் பெரும்பாலான தமிழ் கிளாஸிக்ஸ் - அவரிடமிருந்து, அந்த நூலகத்திலிருந்து பெற்றவைதான். அவர் எனக்குத் தந்தது, அந்த புத்தகங்களை மட்டுமல்ல; இன்றைக்கு நான் பெற்றிருக்கும் இலக்கிய பரிச்சயம், தொடர்பு, அறிவு எல்லாம் அவர் தந்த பயிற்சிதான். அம்பலத்துக்கு நான் வந்து சேருமுன், நான் ஒரு 'செய்தியாளன்' என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், இன்று என்னைக் குறித்த பலரது மதிப்பீடுகள் வேறாக இருப்பதை உணர்கிறேன். எனக்கே கூட, - 'நான் அவனில்லை' என்றுதான் இப்போது தோன்றுகிறது.

அப்போது விகடன் குழுமத்தில் இருந்து வெளியான மாலை நாளிதழ் - 'விகடன் பேப்பரி'ல், 'சுஜாதாட்ஸ்' என்ற பெயரில் புதிய கட்டுரைத் தொடர் ஆரம்பமானது. நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு.ராவ் என்னை அழைத்து, ''நீயும் என்ஜினியர்; அவரும் என்ஜினியர். உங்களுக்குள் புரிதல் எளிதாக இருக்கும்" என்று சொல்லி, அந்த பகுதி அச்சேறும் வரையான அனைத்து பணிகளுக்குமான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அப்படித்தான் எங்களது முதல் அறிமுகம்.

பின்னர், சுஜாதாவின் பொறுப்பில்... கண்காணிப்பில் அம்பலம் இணைய தளம் தொடங்கியபோது (ஆரம்ப நாட்களில் இது 'மின்னம்பலம்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தது), 'எனக்கு அதில் ஒரு வாய்ப்பு கிடைக்குமா சார்?' என்று நான் கேட்டபோது, 'பயோடேட்டாவுடன் இன்றே வந்து சேர்!' என்று பணித்தார். அதன்பிறகு அவர் எனக்கு திறந்துவிட்ட கதவுகள் எத்தனையோ! நான் அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் எத்தனையோ! இவை எதுவும் பள்ளிக்கூட ஆசிரியர் வகுப்பெடுப்பது போலவோ, மகனுக்கு தந்தை கற்பிப்பது போலவோ நடக்கவில்லை. மாறாக, நீச்சல் கற்பிக்க தண்ணீரில் தள்ளிவிடுவதைப் போல, செய்முறை பாடமாகவே நடந்தது. நீரில் இருப்பவன் 'பயில்பவன்' என்பதால், லைஃப் ஜாக்கெட்டை கையில் வைத்தபடி கண்டும், காணாமலும், கண்காணித்து கற்க வைத்தவர் சுஜாதா!

ஒருமுறை அம்பலம் இணைய இதழில் - அம்மாவைப் பற்றி, 'என்.டி.ராஜ்குமாரின் கவிதை ஒன்றைப் பிரசுரிக்க நான் முயன்றபோது, சகலரும் அச்சுறுத்தினர். அந்த கவிதையின் ஊடே, சில வரிகள் - பொதுச் சபைக்கு ஏற்பில்லாத... ஆபாசம் தொனிக்கும் வகையில் இருப்பதாகக் கருதினர். அதனால், அதை ஏற்கக்கூடாது என்பதுதான் வாதம்! ஆனால், நான் அந்த கவிதையை துணிந்து பிரசுரித்தேன். பலரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த கவிதை தேர்வுக்காக என்னை அழைத்து முதன்முறையாக சுஜாதா என்னை வாய்விட்டு பாராட்டினார். அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில் இதுபோல நடந்திருக்கிறது. பின்னர் எனது Blogல் (http://naalavathukann.blogspot.com/) இந்த கவிதை குறித்து 'அம்மாவுக்கு விஷம் வைத்தவன்' என்ற தலைப்பில் நான் எழுதியிருந்தபோது, அந்த கவிதை குறித்த எனது அணுகுமுறை, பார்வை பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒருகட்டத்தில் என் கவிதை ரசனை பற்றி அவருக்கு நம்பிக்கை வந்தபோது, நல்ல கவிதைகள்... கவிதைத் தொகுப்புகள் பற்றி நிறைய பேசத்தொடங்கினார். நான் படித்ததில் ரசித்தவை குறித்து நானும் மனந்திறக்க தொடங்கினேன். சில புத்தங்களை அவருக்கு பரிந்துரைத்தபோது, அவற்றைப் படித்து அங்கிகரிக்கவும் செய்தார். சிலவற்றை விகடனின் 'கற்றதும் பெற்றதுமி'ல் 'ஆண்டின் சிறந்த படைப்பு' என பட்டியலிட்டதிலும் சேர்த்துக் கொண்டார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அனுபவமாக வடிவெடுத்த, 'கரும்பலகையில் எழுதாதவை' என்ற கவிதை நூல் அந்தவகைதான்.
* * *
ஒத்த கருத்துடையவர்கள்தான் எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருக்க முடியும் என்றும் ஒரு கருத்துண்டு. இதனாலேயே, சிலர் தங்களது சொந்த கருத்துகளை அவரிடம் வெளிப்படுத்தாமல் இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு Man of Moods என்பதால், நேரடியான விமர்சனங்களை அவரிடம் எடுத்துச் செல்ல சரியான தருணங்கள் தேவைப்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை, சுஜாதா மாற்றுக்கருத்துகளுக்கு அளவாக இடம் தந்து அதை அங்கிகரித்ததோடு, நியாயமான... நாகரீகமான விமர்சனங்களுக்கு கதவு திறக்க பல நேரங்களிலும் தயாராகவே இருந்தார் என்பதுதான் எனது அனுபவம்.
தமிழின் பல்வேறுவிதமான எழுத்து வடிவங்களையும் தொட்டுப் பார்த்த.... குறைந்த பட்சம் பரிசோதித்தாவது பார்த்துவிட்ட சுஜாதா சற்றே தள்ளி நின்றது - சுய முன்னேற்ற கட்டுரைகள் எழுதுவதில்தான் என்று நினைக்கிறேன். அவருக்கு 'இது' குறித்து ஒருவகையான விமர்சனம்கூட இருந்ததாக நம்புகிறேன். பல நேரங்களில் அவரது உடல்மொழியுடன் வாய்மொழியும் இந்த கருத்தை எதிரொலித்தன. ஆனால், இதற்கு நேர் எதிரான கருத்து கொண்டவன் நான்! டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுத்துகளுக்கு நான் மாபெரும் ரசிகன் என்பதை மட்டுமின்றி, அவரது எழுத்துகளால்தான் என் வாழ்க்கை பாதை திசை மாறி வந்தது என்ற நம்பிக்கையையும் நான் மறைத்ததில்லை. இது போதாதென்று வாய்ப்பு இருந்த நேரத்தில் எல்லாம், உதயமூர்த்தியின் கட்டுரைகளில் சிலவற்றை அம்பலத்தில் நன்றியுடன் நான் அரங்கேற்றியபோது, 'அந்த தமிழ் எழுத்து நடை உள்ளிட்ட சிலவற்றைப் பற்றி ஆராய்ச்சிப் பூர்வமாக கருத்து சொல்லி, 'அது உதயமூர்த்தியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்' என்றும் சுஜாதா சொல்லியிருக்கிறார்.

'விசில்' படம் வெளியானபோது, அம்பலத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன் - நிறைய குறைகளைச் சொல்லித்தான். அதைப் படித்தவர், என்னை அழைத்து பாராட்டினார். 'மற்ற பலரும் கவனிக்காத நிறைய விஷயங்களை கவனித்திருக்கிறாய்! தொடர்ந்து அம்பலத்தில் சினிமா விமர்சனம் எழுதேன்' என்றார். அதன்பிறகு அவர் தொடர்புள்ள திரைப்படங்களின் ப்ரிவியூ காட்சிகளுக்கு டிக்கெட் கொடுத்து விமர்சனம் எழுதச் சொல்வார்.

'எப்போது வாய்ப்பு கிடைக்கும்?' என காத்திருந்தது போல - ஊர், உலகமே கூடி தர்ம அடி கொடுப்பதில் ஈடுபட்ட 'பாய்ஸ்' படம் பற்றி... அதில் அவரது வசனம் பற்றி நானும் பாதகமான விமர்சனமாகத்தான் எழுதியிருந்தேன். ஆனால், மற்ற பல மீடியாக்களில் போல அல்ல! அந்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இணையம் பற்றி அம்பலம் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். 'இணைய தளத்தில் இப்போது ஏராளமான விஷயங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், அதற்கு ஈடாக குப்பையும் கொட்டிக் கிடக்கிறது. இதில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான்...' என விவாதம் நீண்டது. அம்பலம் இணைய தளத்தில் நான் எழுதிய 'பாய்ஸ்' பட விமர்சனத்தில், 'சுஜாதாவின் வயது, வாழ்நிலை போன்றவற்றோடு சிறிதும் சம்மந்தமில்லாத விடலைகள் பேசும் வார்த்தைகள் நிறையவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் வீட்டின் எந்த இண்டர்நெட் கனைக்ஷன் இந்த மாதிரி 'சமாச்சாரங்களை' எல்லாம் எடுத்து வந்து கொட்டுகிறதோ?' என்று எழுதியிருந்தேன். அதை அவர் படித்தபோது ஒரு நொடி மவுனம்; பின்னர் சலனம்! அடுத்து மெல்லிய புன்முறுவல். ஒருமுறை நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு, மீண்டும் அதைப் படிப்பதில் மூழ்கிவிட்டார்.

அடுத்த இரண்டாவது நாள் விகடனில் ஒற்றை எழுத்து விமர்சனம் வெளியானது. அதன்பிறகுதான், அம்மன் அருள் பாலித்தது போல, ஆளாளுக்கு களமிறங்கி சாமியாடினர்; வாய்க்கு வந்த வார்த்தைகளைப் போட்டு படத்தை துவம்சம் செய்தனர். 'மூவர் கூட்டணி'யின் தொடர் வெற்றிகள் குறித்து மனக் குமைச்சல் இருந்த பலருக்கும் 'களமிறங்க' தைரியம் கொடுத்தது அந்த ஓரெழுத்து விமர்சனம்தான். என் கருத்தில் சுஜாதாவும் கூட அப்படித்தான் நம்பினார். ஆனால், அந்த நேரத்தில்தான் முதன்முறையாக சுஜாதாவின் அளவற்ற அக்கறை, அதீத பொறுப்புணர்ச்சி, கூட்டுப் பொறுப்பு, தலைமைப் பண்பு போன்ற குணங்களின் செயல்வடிவத்தைக் கண்டேன். பல திசைகளில் இருந்தும் வந்து பாயும் பருந்து கூட்டத்திடம் சிக்கிய கோழிக்குஞ்சை காப்பது போல - இயக்குனர் ஷங்கரை விமர்சகர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றார். ஒருகட்டத்தில், 'கொஞ்ச நாட்களுக்கு இங்கே இருப்பதை தவிர்த்துவிடு!' என்று சொல்லி, அவரை குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததில் சுஜாதாவுக்கும் பங்குண்டு! முழு ஈடுபாடு என்பார்களே.... அது! அதை, அப்போது சுஜாதாவிடம் கண்டேன். அவர் அந்த படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல!

துரதிருஷ்டவசமாக, அந்த நேரத்தில்தான் சென்னையைச் சேர்ந்த கலாச்சார அமைப்பு சுஜாதாவை விருது ஒன்றுக்கு பரிந்துரைத்திருந்தது. 'பாய்ஸ்' பட வசனங்களுக்காக சுஜாதா விமர்சனத்துக்கு உள்ளானபோது, அந்த அமைப்புக்கு நெருக்கமான சிலர் சுஜாதாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, "You just disown the portion of the dialouge, which is under criticism" என்று ஆலோசனை சொன்னார்கள். தொலைப்பேசியில் உரையாடிய அந்த நேரத்தில் அவர் என்ன நினைத்தாரோ! சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, "பாருப்பா... இவங்க என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறாங்கன்னே தெரியல! அது எப்படி நான் disown பண்ண முடியும்? என் பேருல வந்த வசனத்துல 'இதை மட்டும் நான் எழுதலை! அவங்களே என் பேருல எழுதிக்கிட்டாங்க'ன்னு நான் சொல்லணுமாம்! அது எப்படி முடியும்? என்னையும், என் பேரையும் மட்டும் நான் காப்பாத்திகவா?" என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார்.
சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் பேசத் தொடங்கியவர் "நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதெல்லாம்....'' என்று 'முடியாது' என கையசைத்தபடி மூடு மாறி... அல்லது மாற்றிக் கொண்டு வேறு புத்தகத்தை கையில் எடுத்து அதில் மூழ்கிப் போனார்.

மிக மிக அரிதாகவே அவரது உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிக்காட்டும் சுஜாதா, இந்த சம்பவத்தின்போதுதான் கோபம் மேலோங்க சற்று பதட்ட மடைந்ததை நான் கண்டேன். இங்கு மட்டுமல்ல; எப்போதுமே சுஜாதா அவரது சொந்த கருத்து, முடிவுகளின்படியான நபராகத்தான் இருந்தார். இதையெல்லாம் தாண்டி அவரை Influence பண்ணியது - அவர் நம்பிய 'ஸ்ரீரங்கன்' மட்டும்தான் என்றே நினைக்கிறேன்.