"இசை நாயகி" என்ற பெயரில் சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி குறித்து பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நண்பர் பாஸ்கர் சக்தி ஒன்றல்ல; இதுவரை 2 பதிவுகள் போட்டுள்ளார் என்பதே அதன் முக்கியத்தை உணர்த்துகிறது. இன்னொரு பக்கம் நண்பர் சாவித்திரி கண்ணனும், இதுகுறித்து அறம் இணைய இதழில் எழுதியிருக்கிறார். எனது நட்பு வட்டத்தில் உள்ள... இந்த இருவரின் பதிவுகள் தவிர, இன்னும் ஏராளமான பதிவுகளும் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இவ்விருவரின் 3 பதிவுகளைப் படித்தபோது, நேரில் இந்த நிகழ்ச்சியை ரசிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன்.
ஆனால், நான் ஒன்றும் அத்தனை மகா இசைப் பிரியன் என்று சொல்வதற்கில்லை. கடந்த சில தினங்களில் எழுத்தாளர், இயக்குனர், தோழர் தமயந்தியின் பதிவு ஒன்றில் இசை எத்தனை எத்தனை மாயாஜலங்களையும், மீட்டெடுத்தலையும் செய்யவல்லது என்று புரிந்தது. இவரிடம் மட்டுமல்ல. யோசித்துப் பார்த்தால், நம் சக மனிதர்களிடம் இசை செய்து வரும் ரசவாதங்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. காயம்பட்ட மனங்களுக்கும்.... ஆற்றுதல் தேடும் உள்ளங்களுக்கும்... இசை எப்படி தோள் கொடுத்துள்ளது என்பதை நினைவுகூர முடிந்தது.
டிசம்பரில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது தற்செயலானதா... திட்டமிட்டு நடந்ததா... எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சென்னையின் டிசம்பர் சீஸன் என்பது மேட்டிமைக் குடிகளாக கருதிக் கொண்ட சிலரின்... சில தரப்பின் "டீ கடை பெஞ்ச்" என்ற கருத்தில்தான் நீண்டகாலம் இருந்தேன். அதன்பிறகு ஒருகட்டத்தில் - வீட்டுக்கு வெளியே வந்து.... சில மாமாக்களும், மாமிகளும் மாலைச் சிற்றுண்டிக்காக கூடுவதற்கான இன்னொரு Proxy ID இது என நினைத்ததுண்டு. இசைதான் பிரதானம் என்றால், ஏன் சென்னை தவிர மற்ற ஊர்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் டிசம்பரில் நடப்பதில்லை என்று யோசித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் டிசம்பர் சீஸனில் சபா நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு பெறுவதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அரசியல்... உள்ளடி நிகழ்வுகள்.... சபா நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் உள்ள சித்து விளையாட்டுகள் என பலவும் குறித்து கேள்விப்பட்டபோது... இதையும் கடந்து போவோம் என நினைத்துக் கொண்டேன். இப்படியாக, நான் மீடியாவுக்குள் நுழைந்த நாட்களில் இருந்து 'டிசம்பர் சீஸன்' குறித்த என் கருத்துகள் தொடர் மாற்றம் கண்டு வருகிறது.
ஆனால், இந்த டிசம்பரின் "இசைநாயகி" நிகழ்ச்சிக்கும்.... ஏற்கனவே "பெயர்" பெற்றுள்ள சென்னை சபாக்களுக்கும் தொடர்பில்லை என நினைக்கிறேன். இதில் கானா இசையும், சுஃப்பி இசையும்... இன்னபிற இசை வடிவங்களும் கூட ஆய்வு உரையாகவும், வரலாறாகவும், பாடல் வடிவிலும் அரங்கேறியுள்ளதாக உணர்கிறேன். அந்த வகையில் இப்போது என் நினைவுக்கு வருவது இயக்குனர் பாலச்சந்தரின் படப்பாடல், "பாடறியேன்... படிப்பறியேன்...."
ஏற்கனவே சொன்னதுபோல, எனக்கு பேரதிக ஆர்வம் இல்லை என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் என் மகளை வாய்ப்பாட்டு வகுப்புக்கு என் மனைவி அனுப்பி வைத்தார். கட்டணம் செலுத்தியது தவிர, எனக்கு அதில் எந்த பங்கும் இல்லை. ஆனால், எங்கள் வீடுள்ள பகுதியில் வசிக்கும் நெருங்கிய குடும்பங்கள் சில மட்டும் சேர்ந்து கொண்டாடும் தாமத புத்தாண்டு - ஜனவரி 1ம் தேதி இரவு நடக்கும் - நவீன கூட்டாஞ்சோறு நிகழ்வின்போது என் மகள் கற்ற ஒரு சாஸ்த்ரிய சங்கீத பாடலைப் பாடினாள். அது தெலுங்கு மொழி பக்தி கீர்த்தனையாக இருக்கலாம். ஆனால், அதில் கவனம் பெற்றது, அந்த இசையின் இடையே இருந்த Tongue twister. அது நெற்றிப் புருவங்களை உயர்த்த வைத்தது, என்னை மட்டுமல்ல. தொடர் பயிற்சிதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். ஆனாலும் பல்வேறு காரணங்களால், அந்த வாய்ப்பாட்டு பயிற்சியை என் மகள் தொடரவில்லை.
கல்லூரி படிப்பு முடித்து சில காலம் விரிவுரையாளராக பணியாற்றியபோது, எனது நண்பர் ஒருவர், தீவிர திரைப்பட இசை ரசிகர். பாட விரும்புவார். கண்களை முடிக் கொண்டு லயத்து உச்ச ஸ்தாதியில் பாடுவது மட்டுமின்றி.... எதனாலோ காதுகளையும் விரலால் மூடிக் கொள்வார். நிஜத்தைச் சொல்வதனால் அவர் குரலில் அந்த பாடல் அத்தனை தூரம் கரைந்து ரசிக்கும்படி இருந்ததில்லை. ஆனால், எனது நல்ல நண்பன் என்பதாலோ... எனக்கு அத்தனை இசை ஞானம் இல்லை என்பதாலோ நான் அவரை விமர்சித்தது இல்லை. விமர்சிக்கும் அளவோ... ஆலோசனை சொல்லும் அளவோ எனக்கு இசையில் விஷயம் தெரியாது என்பதுதான் உண்மை.
இப்படியாக, இசை குறித்த எனது தொடர்புகள் நீண்ட ரயிலின் தனித்தனி பெட்டிகள் ஒவ்வொரு நிறுத்தத்தில் துண்டிக்கப்பட்டது போல, அங்கங்கே நின்று போனதால்... இசைநாயகி நிகழ்ச்சி குறித்த எந்த முன் தகவலும் என்னை எட்டவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் இதை ஏற்பாடு செய்த அந்த 8 பெண்களுக்கும் எனது பாராட்டுகள். வாழ்த்துகள். அந்த 8 பேரில் எனக்கு நன்கு அறிமுகமான நண்பர் தீபாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறித்து மகிழ்ச்சி. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்.
#பாஸ்கர்சக்தி #சாவித்திரிகண்ணன் #அறம் #அறம்இணையஇதழ் #டிசம்பர்சீஸன் #தமயந்தி #தீபா #கானா
புதன், டிசம்பர் 10, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)