வெள்ளி, டிசம்பர் 05, 2025
வீட்டுக் கடன் வட்டி : அதிகமா..? அப்பட்டமான பகல்கொள்ளையா? - பகுதி 2
"வீட்டுக்கடன் வட்டி விஷயத்தில்... இன்றுள்ள வட்டி அதிகமில்லை; அப்படி சொல்வதற்கான நியாயம் எதுவுமில்லை" என்று சொன்னதோடு, "இப்படிச் சொல்வதால், நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்” என்பதுதான் முந்தைய முதல் பகுதியில் எனது கருத்து. இப்படி நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
இன்று வங்கிப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு, அவர்களது பணி ஒவ்வொன்றிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, நெருக்கடிகள் அதிகமாக இருப்பதால்... இதைச் சமாளிக்க... வாடிக்கையாளர் ஒத்துழைப்பும் தேவை என... இப்போதெல்லாம், ஓரளவு வாடிக்கையாளர்களை மதிக்கிறார்கள். ஆனால், இன்னும் 6 மாதத்தில் வீட்டுக் கடனை முழுவதுமாக முடிக்கப் போகும் நானோ.... நான் வீட்டுக்கடன் வாங்கிய நாட்களில் கடன் வாங்கிய மற்றவர்களோ... எங்களது நாட்களில் வங்கி அதிகாரிகளைச் சந்திக்க சென்றால்... குறிப்பாக வீட்டுக் கடன் வாங்க வரிசையில் நின்றால்... எங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு... நாங்கள் கிள்ளுகீரைகள். இது, என் கருத்து மட்டுமல்ல; என் வயதுள்ளவர்கள் பலரது கருத்தும் இதுதான்.
வீட்டுக்கடன் வட்டி... அதில் உள்ள பல வாய்ப்புகள்... வட்டி விகித மாறுபாடு, அதற்கான நிபந்தனைகள், இதர வாய்ப்புகள் என.... பலவும் குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் சொல்ல வேண்டும் என அவர்கள் எண்ணியதே இல்லை. அந்த அளவு, அவர்களுக்குப் பொறுமையில்லை என்பது முதல் காரணம். வாடிக்கையாளர்களும், அதில் ஆர்வம் காட்டவில்லை என்பது மறுகாரணம். கடன் மற்றும் வட்டி குறித்த பல்வேறு நிபந்தனைகளை, தொடர்புள்ள பிற அம்சங்களை முழுமையாக புரிந்து கொண்டபின், அதற்கு உடன்பட்டுத்தான் கடனைப் பெறுவதாக உணர்ந்து... அதன்பின், அடுக்கிக் கொடுக்கப்படும் பக்கம் பக்கமான ஆவணங்களில்.... பக்கத்துக்கு இரண்டாக கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு.... எப்போது வெளியே வருவோம் என்ற நிலைக்கு நம்மை தள்ளிவிடுவார்கள்.
எங்களுக்கு முந்தைய தலைமுறை நிலை இன்னும் மோசம். அப்போது இத்தனை வங்கிகளில் வீட்டுக் கடன் வாய்ப்பே கூட இல்லை. அதோடு, வீட்டுக் கடன் வாங்க நினைத்தால் அதற்குமுன் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளாவது, அந்த வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி... அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான Margin money. அதுதான் உங்களுக்கு கடன் கிடைப்பதில் முன்னுரிமை பெற்றுத் தரும் 'ரிசர்வேஷன் டிக்கெட்'. அது இல்லாவிட்டால், உங்களுக்கு கடன் கிடைக்கும் என எந்த உத்தரவாதமுமில்லை. கிடைக்கலாம். ஆனால், அது ஒரு சான்ஸ்... வாய்ப்புதான். இதுமாதிரி இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தேவைப்பட்டால் பின்னர் பார்க்கலாம். இப்போது வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியைக் குறைப்பது எப்படி என்ற விஷயத்துக்கு வருவோம்.
கடந்த பகுதியில் சொன்னது போல, 20 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும்... இன்னொரு 20 லட்சத்துக்கு மேல் கட்ட வேண்டியிருக்கிறது என்பதுதானே பிரச்னை. இதில் நமக்கு இஎம்ஐ (EMI)என, அதாவது மாதாந்திர தவணைத் தொகை என, கணக்கிட்டுச் சொல்லப்படுவது - நாம் ஒப்புக் கொண்ட வட்டி விகிதத்தில்... ஒப்புக் கொண்ட காலத்துக்குள்... வாங்கிய கடன் தொகை மட்டுமின்றி, அதற்கான வட்டியையும் சேர்த்து முழுவதுமாக கட்டி முடிக்க.... - இன்று தொடங்கி மாதந்தோறும், ஒரே அளவாக எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதே!.
சரி.... கடனைக் கட்டி முடிப்பதற்குமுன்.... இடைப்பட்ட காலத்தில், நாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வட்டிவிகிதத்தில் மாற்றம் வந்தால்...? வரும்... அவ்வப்போது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்.... ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்ற பெயரில்... நடப்பில் உள்ள கடன் வட்டி அளவை மாற்றுகிறார்களே.... பத்திரிகைகளுலும், டிவியிலும் செய்தி வருகிறதே! அந்த மாதிரி நேரத்தில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறும். ரெப்போ அதிகரித்தால்... உங்கள் கடன் வட்டியும் கூடலாம்; அப்போது, ஏற்கனவே ஒப்புக் கொண்டதைவிட கூடுதலாக வட்டி கட்ட வேண்டி வருமில்லையா... அந்த சூழலில் வங்கிகள் என்ன செய்யும் என்றால்... உங்களுக்கு ஒரு இ மெயில் மூலம் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, நாம் கடன்தவணை செலுத்த வேண்டிய காலத்தை... மாதங்களின் எண்ணிக்கையை... பெரும்பாலும் அவர்களாகவே அதிகரித்துவிடுவார்கள். அரிதான நேரங்களில் மட்டுமே நம்மிடம் கருத்து கேட்கப்படும். அல்லது, கருத்து கேட்டதாகக் குறித்துக் கொள்ளப்படும் போல. இதனால், சில மாதங்களில் தொடங்கி, பல மாதங்கள் வரை கூட நமது தவணைக்காலம் அதிகரிக்கலாம். ஆனால், ரெப்போ குறைப்பினால், ஒருவேளை வீட்டுக்கடன் வட்டி குறைந்தால்.... நீங்களே பத்திரிகையிலோ... டிவியிலோ... இது குறித்த செய்தியைப் பார்த்து தெரிந்து கொண்டபின், சிறு கால இடைவெளிக்குப் பின்... நேரில் சென்று இதற்கென, அவர்கள் வைத்திருக்கும் தனி விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து... வங்கியைப் பொறுத்து, ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்தினால் மட்டும்தான், அடுத்து வரும் காலத்தில் இந்த வட்டி குறைப்புக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். ஒருவேளை அப்படி நடந்தால், நீங்கள் கட்ட வேண்டிய மாத தவணையின் எண்ணிக்கையும், அதனால் காலமும் குறையும் வாய்ப்புள்ளது. ஒப்புக் கொண்ட காலத்துக்கு முன்பே வீட்டுக் கடன் முடிந்துவிடும். ஆனால், நீங்கள் போய் முறையிடவில்லை என்றால்.... எதுவுமே நடக்காது போல, வங்கி உங்களிடம் கூடுதல் வட்டி வாங்கிக் கொண்டே இருக்கத் தயங்காது. பலரது நிலை இதுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கும், அடுத்து வரக் கூடிய இன்னும் சில ஆண்டுகளுக்குமான பொதுவான பொருளாதார கணிப்பு... வட்டி விகிதங்கள் வரும் நாட்களில் இன்னும் குறையலாம். அல்லது அதே நிலையில் நீடிக்கும் என்பதே. எனவே, குறையும் நேரங்களில் உங்களது முன்முயற்சி இருந்தால், வட்டியை சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டித் தொகையின் அளவைக் குறைக்கலாம். இதுதான் கடன் வாங்கிய அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரே வாய்ப்பு! மற்றதெல்லாம் சிலருக்கு பொறுந்தும்; பலருக்கு வாய்ப்பில்லை
மொத்தவட்டி அளவைக் குறைக்க உள்ள 2வது வாய்ப்பு - Pre payment என குறிப்பிடப்படும். அதாவது, மாதந்தோறும் நாம் செலுத்தும் தவணைத் தொகை மட்டுமின்றி... கூடுதலான இன்னும் கொஞ்சம் பணத்தையும் சேர்த்துக் கட்டுவது.
இஎம் ஐ என, நாம் செலுத்தும் தொகை - பொதுவாக... நாம் வாங்கிய கடனுக்கு அன்றைய தினம் வரையான வட்டி + நாம் வாங்கியுள்ள நிகரக் கடன்தொகையில் ஒரு சிறிய பகுதி.. இரண்டும் சேர்ந்ததாக இருக்கும். அதாவது, வணிக வார்த்தைகளில் ஆங்கிலத்தில் சொல்வதானால்... A share of Principal loan amount & accured loan interest till date. இரண்டும் சேர்ந்த தொகை. எனவே, நாம் ஒரு தவணைத் தொகையைச் செலுத்தியவுடன்.... அதிலிருந்து, பாக்கியுள்ள வட்டித் தொகையை முதலில் எடுத்துவிடுவார்கள். மீதி தொகை, ஆரம்ப கடன்தொகையில் வரவு வைக்கப்படும். இதனால், அடுத்த மாத கடன் பாக்கி சற்றே... அதாவது சில பத்துகளில்... அல்லது சில நூறுகளில் குறையும். அதிகபட்சமாக 4 இலக்கத்தை எட்டிப் பிடிக்கலாம். உங்கள் மொத்த கடன்தொகை, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றைப் பொறுத்தது, இது!. ஆகவே, ஆரம்ப நாட்களில் நீங்கள் செலுத்தும் கடன்தவணையின் பெருந்தொகை வட்டிக்கும். மிகச் சிறிய பகுதி மட்டும் கடனைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படும். அந்த நேரத்தில் கணக்கு பார்த்தால், நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும். அதிரவில்லை என்றால்தான் ஆச்சரியம். கடன் தவணை கால இறுதி மாதங்களில் அதே மாதத் தவணையை நாம் செலுத்தினாலும், அதில் பெரும்பகுதி கடன்தொகையைக் குறைக்கவும் சிறிய பகுதி மட்டுமே வட்டிக்கும் போகும். இந்த நாட்களில்.... நேரத்தில் நாம் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
இதனால், நாம் முன்பே சொன்னது போல Pre payment என்ற வகையில்.. அவ்வப்போது நம்மால் முடிந்த கூடுதல் தொகையை.... அந்த மாதத் தவணையைத் தாண்டி... கூடுதலாகச் செலுத்தினால், அந்த தொகை நேரடியாக கடன் பாக்கியில் வரவு வைக்கப்பட்டு, மீதிமுள்ள கடன்தொகை அளவைக் குறைக்கும்... அதற்கு இணையாக, வட்டி அளவும் குறையும். ஆனால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்துக்கு இவ்விதம் கூடுதல் பணத்தை செலுத்துவது என்பது - பேசுவதற்கும்.... இதுபோல எழுதுவதற்கும் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை. இதைப் படிக்கும் நீங்கள் வீட்டுக் கடன் தவணை செலுத்துபவராக இருந்தால் இந்த உண்மையை உணருவீர்கள்.
"வீட்டுக்கடன் வட்டியை இவ்வளவு குறைக்கலாம்... இப்படி குறைக்கலாம்" என பல யூ டியூப் சேனல்களில் சொல்லப்படும் யோசனைகள் எல்லாமே இந்த ரகம்தான். "கையில் கிடைக்கும் கூடுதல் பணத்தை அப்படியே வீட்டுக் கடன் தொகைக்கு செலுத்தி வட்டியைக் குறைத்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு பணத்தை இப்படி கூடுதலாக செலுத்த முடியுமோ, அந்த அளவு முன்னதாகவே கடன் முடிவுக்கு வரும். அப்போது நீங்கள் கட்டும் கடன்வட்டியும் குறைவாக இருக்கும்" என்கிறார்கள். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சராசரி மனிதனின் வருவாயில், அவர் வணிகராக இல்லாத நிலையில், "கூடுதல் பணம்" எப்படி வரும்... வந்தாலும் எவ்வளவு வரும்.... நான் இங்கே சொல்வது நியாயமான வழியில்.... சிக்கல் இல்லாமல் வரும் பணம். சிலருக்கு பரம்பரை சொத்தில் இருந்து... அதன் விற்பனையிலிருந்து... மிகச் சிலருக்கு லாட்டரி உள்ளிட்ட எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டத்தில் அப்படி பணம் வரலாம். ஆனால், எல்லாருக்கும் வருமா என்றால்.... வாய்ப்பில்லை ராஜா!. எனவே, இது போன்ற விஷயங்களில் நடைமுறை யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டால்.... வேறு வாய்ப்புகள் உண்டா என்றுதான் பார்க்க வேண்டும். நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்
1. மிகப் பெரிய அளவில் கூடுதல் வருவாய் வராது என்றாலும், வீட்டுக் கடன் பெறும் பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு தீபாவளி போன்ற நேரங்களில் கிடைக்க வாய்ப்புள்ள போனஸில் இருந்து ஒரு பகுதியும், மற்ற வகையில் கொஞ்சம் புரட்டியும், கூடுதலாக ஆண்டுக்கு ஒரு தவணையாவது... அதாவது, ஆண்டுக்கு 12 தவணையைத் தாண்டி, 13 வது தவணை என ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக ஒருமுறை செலுத்த முடிந்தாலே... முயன்றாலே.... கடன் தவணைக் காலத்தைச் சில ஆண்டுகள் வரை குறைக்க முடியும். அதனால், சில லட்சங்களை மிச்சம் பிடிக்கலாம். (வீட்டுக் கடன் பெறும் மிகப் பெரும்பாலோருக்கு இது சாத்தியம் என நான் நம்புகிறேன்)
2. ஒருவேளை சிலருக்கு கூடுதல் வருவாய்... கூடுதல் பணம் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை முழுவதுமாக வீட்டுக் கடன் வட்டியில் செலுத்த வேண்டுமா என்பதற்கு எனது பதில்.... அவசரப்பட வேண்டாம் என்பதுதான். காரணங்கள் இவை. நல்ல வேளையாக.... இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வணிக ரீதியில் இல்லாத தனிநபர் வீட்டுக் கடன்களில், மாதத் தவணையைவிட, கூடுதலாகச் செலுத்தும் தொகைக்கு Prepayment penalty வசூலிக்கும் முறை இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், வணிக ரீதியிலான கடன்களுக்கும், தற்போதுள்ள பாக்கித் தொகை முழுவதையும் ஒரே நேரத்தில் செலுத்துவோருக்கும் சில வங்கிகள் இப்போதும் அபராதத் தொகையை வசூலிக்கின்றன. அதனால், இவ்விதமான நடைமுறையின் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
3. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு சில வரிச் சலுகைகளை இந்திய வருமான வரித் துறை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரிச் சட்டத்தின்படி அந்த வரிச் சலுகைகள் வாபஸ் பெறப்பட்டு, வேறு நடைமுறைகள் கொண்ட புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனினும், வரி செலுத்தும் நபர் தனது விருப்பப்படி பழைய விதிகள்... புதிய விதிகள்.. என எதையும் தேர்ந்தெடுத்து, அதன்படி கணக்கிட்டு வருமான வரி செலுத்தலாம் என்பதால், தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அவரது வருவாய்.... பிற சலுகை வாய்ப்புகள்.... போன்றவற்றைப் பொறுத்து எது அவருக்கு சாதகமாக... அமைகிறதோ அதன்படி முடிவு எடுக்கலாம். காரணம், வருமான வரிச் சட்டத்தின்படி, வரிச் சலுகையாக, ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் கணிசமானத் தொகையைச் சேமிக்க முடியும். அதில் வீட்டுக் கடனுக்கு நாம் செலுத்தும் அசல்தொகையையும் சேர்த்து, பிரிவு 80சியின்படி பல வகை சேமிப்புகளுக்கு வரிச்சலுகை உண்டு. அந்தச் சலுகை பெறும் வேறு சேமிப்புகள் எதுவும் உங்களுக்கு இல்லாத பட்சத்தில், இந்த தொகையாக மட்டுமே 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். அதேபோல, கடன் பெற்ற வீட்டில்தான் தற்போது நீங்கள் வசிப்பவராக இருந்தால், வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டி தொகைக்கு வருமானவரிச் சட்டப்பிரிவு 24(B)வின்படி 2 லட்ச ரூபாய் வரை சலுகை உள்ளது. மொத்தமாக, 3.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை பெற வாய்ப்புண்டு. எனவே நீங்கள் விரைவாக கடனைச் செலுத்தி அதன்மூலம் பெரும் வட்டி சேமிப்பு எவ்வளவு என்பதையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும் வருமான வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மொத்தமாக சேமிக்க வாய்ப்புள்ள தொகை எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுப் பார்த்து, எது உங்களுக்கு அணுகூலமோ அதைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலிதனம். வெறுமனே, வீட்டுக் கடனை முன்னதாக அடைக்கிறேன் பேர்வழி என, கண்மூடித்தனமாகக் காரியத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. அதுதான் நிதிசேமிப்பில் சரியான வியூகமாக இருக்கும். எனினும், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி சட்டமும், அந்த முறையும்தான் வழக்கில் இருக்கும்; பழைய வரிக்கணக்கீட்டு முறை செல்லாது என மத்திய அரசு ஒரு முடிவு எடுக்குமானால், இந்த வாய்ப்பும் சலுகைகளும் இல்லாமல் போகலாம். ஆனால், இன்றைய நிலை - சலுகை உண்டு!.
4. இதுபோக, நீங்கள் எந்த வங்கியில் அல்லது நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளீர்கள்... என்ன வட்டியில் கடன் பெற்றுள்ளீர்கள் என்பதும் முக்கியம். சிலர் தங்களது சொத்து தொடர்பான ஆவணங்கள் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால், சில தனியார் வங்கிகளில்.... வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள். அங்கே வட்டி அதிகம் என்றாலும், வேறு வழி இல்லை என்பதால் இம்முடிவுக்கு வருகிறார்கள். மாறாக, இன்னும் சிலர் தங்களது அவசரம் கருதி... பொதுத்துறை வங்கிகளில் காலதாமதம் ஆகும் என்பதால், காத்திருக்க வழியில்லாமல் அதிக வட்டிக்கு கடன் பெற்றிருந்தாலும் பின்னர் அதை வேறு வங்கியில் கிடைக்கும் குறைந்த வட்டிக் கடனாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும், இந்த மாற்றத்துக்கு எவ்வளவு செலாவாகும் என்பதையும் கணக்கிட்டு, அதைத்தாண்டி சேமிப்பு இருப்பதாக கருதினால் மட்டுமே காரியத்தில் இறங்க வேண்டும். Loan transfer / takeover என்ற இந்த முயற்சியில், மாறிச் செல்லும் வங்கியின் கடன் பரிசீலனை கட்டணம், வழக்கறிஞர் சேவைக் கட்டணம், மதிப்பீட்டாளர் கட்டணம் போன்றவை தவிர எந்த வங்கியில் / நிறுவனத்தில் இருந்து மாற நினைக்கிறீர்களோ அந்த நிறுவனம் விதிக்கும் Pre closure charges போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். தீபாவளி... பொங்கல் போன்ற விழாக்காலங்களில் சலுகைத் திட்டமாக சில வங்கிகள் பரிசீலனை கட்டணம் உள்ளிட்டவற்றில் தள்ளுபடி சலுகை வழங்குவதும் உண்டு. திட்டமிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்வது பல ஆயிரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும்.
5. இவை அனைத்தையும் தாண்டி, பல ஆண்டுகளாக காகிதத்தில்... பேச்சில் இருந்த மற்றொரு யோசனைக்கு அண்மையில் உயிரூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கைப் பொறுத்து, வீட்டுக் கடன் பெறும் நபரின் வட்டி மாறுபடும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாம். அதாவது ஒரு நபரின் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், அவருக்கு சற்றே குறைந்த வட்டியிலும், மற்றவர்களுக்கு வங்கியின் இயல்பான வட்டியிலும் கடன் தரப்படுவது சில வங்கிகளில் அமலுக்கு வந்துள்ளது என்கிறார்கள். ஆனால், இதை வங்கி அதிகாரிகளே உங்களுக்குச் சொல்வார்கள் என நம்பினால், நீங்கள் ஒரு அப்பாவி. முதலில் சில வங்கிகளில் பேச்சு வார்த்தை நடத்தி, அவ்வங்கியிடம் Pre sanction approval கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டி நீங்கள் விரும்பும் வங்கியில் பேரம் பேசித்தான் இவ்விதமான வட்டி குறைப்பு சாத்தியமாகிறது என்பது மேற்கண்ட சலுகையைப் பெற சொல்லப்படும் யோசனை. எனவே, எல்லா வங்கிகளும் இன்று Floating rate என்ற வகையில்தான் வீட்டுக் கடன் தருவார்கள் என்றாலும், ஆரம்பகால வட்டியை சில புள்ளிகள் குறைவாகத் தொடங்கினால், அந்த சேமிப்பும் உங்களுக்குத்தானே!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)