மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, மார்ச் 25, 2005

காப்புரிமை கலாட்டா ஏன்? - II

கடந்த 22ந்தேதி நாடாளுமன்றத்தில் பாஸானது 3வது சட்டத்திருத்தம் என்று ஏற்கெனவே சொன்னோம். இதிலிருந்தே இதற்கு முன்பு இரண்டு திருத்தங்கள் நடந்துள்ளன என்பது புரியும். அதில், முதல் திருத்தம் 1999ல். இரண்டாவது 2002ல் நடந்தது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. ஆட்சி நடந்தது. 3வது திருத்தத்தின் மூல வடிவம்கூட தேஜகூ.வினர் தயாரித்ததுதான். ஆனால் அதற்கே எதிர்ப்பு தெரிவித்துதான் நாடாளுமன்றத்தில் வௌதநடப்பு செய்தனர் பா.ஜ.க. & தோழர்கள். அந்த 'பாலிடிக்ஸை'த் தனியாக வைத்துக் கொள்வோம்.

எனினும் இப்போது பாஸான சட்ட வடிவம், பாஜக தயாரித்த ஆரம்ப, மூல வடிவம் அல்ல. அது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கம்யூனிஸ்ட்களும் மற்ற சிலரும் கிட்டத்தட்ட 10 மாற்றங்கள் வரைக் கேட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. மீதி உள்ளதை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்கள். தேவைப்படும்போது, பின்னாளில் இன்னொரு திருத்தம் வரும்.

சரி! கம்யூனிஸ்ட்டுகளால் கொண்டுவரப்பட்டு ஏற்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

முதல் விஷயம் - கடந்த கட்டுரையின் முடிவில் சொன்ன பன்னாட்டு மருந்துப் பொருள் நிறுவனங்கள் செய்து வரும் சதிக்கு 'மருந்து'.

இப்போதைய Product Patentபடி, 1995க்குப் பிறகு புதிதாக காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் எதுவானாலும் அவற்றை கண்டுபிடித்த / உருவாக்கியவருக்கு காப்புரிமைத் தொகை தரப்படவேண்டும். இது கட்டாயமாகிறது. இந்தவகையில், 1995 தொடங்கி, 2004வரை 6989 மருந்துப் பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டதாக / கண்டுபிடிக்கப்பட்டதாகக் காப்புரிமை பெற்றுள்ளன (இத்துறை தகவல்). இவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகள் என கோரிக்கை வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் வெறும் 250 பொருட்கள் மட்டுமே நிஜமாகவே புதிதாம். மற்றவையெல்லாம் ஏற்கெனவே ஏதோ ஒருவகையில் மருந்து பொருட்களாகப் பயன்பட்டு வந்தவைதான். காப்புரிமை பெறும் பொருள் 20 ஆண்டுகள் வரை ராயல்டி பெறலாம் என்பதால், விரைவில் காலாவதியாக உள்ள (மேலுள்ள கணக்கின் மீதி) பொருட்களுக்கு சின்ன சின்ன டிங்கரிங் வேலை செய்து, அதையே புதிய பொருள் என்று சொல்லி, இன்னும் ஒரு 20 வருடத்துக்கு ராயல்டி வாங்கி கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள் பன்னாட்டு மருந்து பொருள் நிறுவனங்கள்.

டிங்கரிங் வேலை என்பது - அதே பொருள் வேறொரு நோய்க்கு மருந்தாகிறது என்றோ (சளி மருந்தால் - தலைவலிக்கு நிவாரணம்... வயிற்று வலி போகும் என்பது போல), பழைய பொருளின் மூலக்கூறில் சின்ன மாற்றம் செய்தோ, அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்களை கூட்டி, குறைத்தோ... இப்படித்தான் இருக்கின்றனவாம். அவ்வகையில் இது, 'புதுசு கண்ணா... புதுசு' என்று காட்டி, இன்னும் 20 வருஷம் 'அட்ரா சக்கை' என்று வாரிக் கொட்டலாம் என்பது திட்டம். இதை இத்துறையில் Evergreening என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். அதாவது, எந்நாளைக்கும் பசுமையாக... காமதேனுவாக ஒரு மருந்துப்பொருளை வைத்திருப்பது! கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தியபிறகு 22ந்தேதி பாஸான சட்டப்படி, இனி ஒரு மருந்துப் பொருளை எந்நாளுக்கும் பசுமையாக வைத்திருக்க பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சி, தந்திரம் செல்லுபடியாகாகது. எனவே உத்தேசமாக வெறும் 250 பொருட்களுக்கு மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்த விஷயம் - Embedded Software. (இதுபற்றி இணைய நண்பர்கள் பலருக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கலாம்) தனியொரு நிறுவனத்தின் தேவைக்காக எழுதப்படும் மென்பொருள் போல அல்லாமல், செல்போன் போன்ற பொது பயன்பாட்டுக்கான பொருட்கள் இயங்க எழுதப்படும் மென்பொருள்களை இவ்வகையில் சேர்க்கலாம். எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு மெஷினில் இருப்பதும்கூட இவ்வகைதான். இவற்றை யார் வேண்டுமானாலும் அப்போதைய தேவைக்காக இஷ்டப்படி மாற்றுவது இயலாது. அதேபோல, அடிக்கடி புதிதாக மென்பொருள்கள் வரிசைகளை அறிமுகப்படுத்துவதும் அரிதானதுதான். எனவே, இவ்வகையிலும் இனி பலவற்றுக்கும் காப்புரிமை கோர முடியாது.
தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது இந்த வகையில் தேருமா தெரியவில்லை. முதலில் முத்து நெடுமாறன் இந்த மாதிரியான முயற்சியில் இருக்கிறாரா... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அடுத்து - ஒரு பொருளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இடையிலேயே மறுப்பு சொல்லி வேறு யாரும் அதற்கு தடங்கல் செய்ய முடியாது என்று இருந்த வாசகம் வாபஸாகி விட்டது. இதுதான், 'மஞ்சள்களுக்கும்', 'வேப்பிலைகளுக்கும்' இனி யாராவது காப்புரிமை கோரினால் அதை தடுக்கப் பயன்படும் அம்சம். அதிருஷ்டவசமாக, இந்திய காப்புரிமை சட்டத்தின் இன்றைய வடிவில் - ஒரு பொருள் காப்புரிமைக்கு காத்திருக்கும் போதும், அதைப் பெற்ற பின்னரும் - மறுப்பு, எதிர்ப்பு தெரிவிக்க முடியும். பல நாடுகளில் இப்படியில்லை.

இதேவகையில், எதிர்பாராத சூழலில் சார்ஸ்... அல்லது பறவை ஜுரம் (Bird flu) போன்ற ஏதாவது புதிய நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவ நேர்ந்தால், அந்த நேரத்தில் அவசர, அத்தியாவசிய காரணங்களுக்காக - காப்புரிமை பெற்ற மருந்துப் பொருளின் Generic வடிவம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு அனுமதி உண்டு. இதை Compulsary Licence முறை என்கிறார்கள். அடுத்து ஒரு நாட்டில் மருந்து உற்பத்திக்கான முறையான தொழிற்சாலைகளே இல்லை எனும்போது, ஆர்டரின் பேரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திக்கும் அனுமதி உண்டு. இப்படியான சிலவற்றுக்கும் முழு ராயல்டி கேட்டு, இனி கழுத்தை நெரிக்க முடியாது. ராயல்டியில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு காப்புரிமைக்காரர் வாய்மூடி இருக்க வேண்டியதுதான் - குறிப்பிட்ட காலம் வரை. ஆனால் இந்திய அதிகார வர்க்கத்திடம் compulsary license அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே என்பது, பலநாட்டு மருந்துப் பொருள் இறக்குமதியாளர்களின் கவலை.

அதேபோல, தாவர வகைகள் குறித்த காப்புரிமை கோரும் அம்சங்கள் இந்த சட்டவரம்புக்குள் வராது என்பது மிகவும் தௌதவாக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் கோரி ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படிமாற்றங்கள் தவிர, தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் இன்னும் நுட்பமானவை. அவசர கதியில் முடிவுக்கு வரக்கூடாது என்பதால், நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அவை அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது நுண்ணுயிரிகள் குறித்த காப்புரிமை. அதாவது, வைரஸ், பாசிவகை போன்ற இன்னும் பல சின்னஞ்சிறு உயிரிகள் குறித்தவை. அதேபோல, முற்றிலும் புதிதான மருந்து / வேதியியல் பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை அனுமதிக்கப்படும் என்பதில் 'புதிதானவை' என்றால் என்ன, அதன் அடிப்படை தேவை என்ன என்பதற்கும் இன்னும் தௌதவான விளக்கம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் வரவிருக்கும் நாட்களில் பொது விவாதத்திற்கும், நிபுணர் ஆய்வுக்கும் உட்படும்.

எப்படியானாலும் இந்தியாவின் பழைய காப்புரிமை கதைகள் காலாவதியாகிவிட்டன. அவ்விடத்தில் புதிய சவால்கள் தவிர்க்க முடியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தோஹா தீர்மானத்தில் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 'அறிவுசார்ந்த சொத்துரிமை' அம்சங்களின்படியே கூட, இன்னும் பலவகையிலும் திட்டமிட்டு - ராயல்படி பிசாசிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் நிபுணர்கள் பலரது கருத்தும். இதற்கான வழிகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காப்புரிமை விஷயத்தில் இத்தனை கலாட்டாவும், கூச்சலும்.

வியாழன், மார்ச் 24, 2005

'காப்புரிமை' கலாட்டா ஏன்?

என் நினைவில் இருப்பது சரியென்றால், காப்புரிமை விஷயத்தில் இந்தியாவில் கூச்சல் தொடங்கி 6 வருடத்துக்கு மேலாகிறது. 1999 இறுதியில் என்று ஞாபகம். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 'ரைஸ்டெக்' என்ற நிறுவனம், பாசுமதி அரிசி குறித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்தது. இதனால், காலகாலமாக பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையில் உலக அளவு முன்னோடிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், இனி உலக சந்தையில் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதாவது, இனி இந்தியாவில் விவசாயிகள் பாசுமதி அரிசி பயிரிட்டால், அதற்கு ரைஸ்டெக் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றார்கள். அப்போது, CSIR-ன் இயக்குனராக இருந்த மஷோல்கர், சுற்றுப்புற சூழல் ஆர்வலர் வந்தனா சிவா உள்ளிட்ட ஒரு குழு, இது சம்மந்தமாக கோர்ட் படியேறி போராடி அந்த காப்புரிமையை கேன்சல் செய்தனர். ஆனாலும், ரைஸ்டெக் நிறுவனம் தங்களது உற்பத்தியை 'பாசுமதி மாதிரி' என்று முத்திரை குத்தி விற்க வருவதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்து, காயத்தை ஆற்ற பாரம்பரியமாக இந்திய கிராமங்களில் பயன்படுத்தப்படும் மஞ்சளை, 'ரண நிவாரணி' என, எதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி 'யூனிவர்சிட்டி ஆஃப் மிசுசிபி மெடிக்கல் சென்டர்', 1993ல் அப்ளை செய்திருந்த காப்புரிமை விஷயம் சந்திக்கு வந்து... அதற்கும் சட்ட ரீதியில் போராட்டம் நடந்து அதுவும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கும் மஷோல்கர்தான் படையை நடத்திச் சென்றார்.

இப்படி வேப்பிலை, இந்திய 'டார்ஜிலிங் டீ' என்று பலப் பொருட்களுக்கு படையெடுக்க வேண்டியிருந்தது கடந்த காலங்களில். மேற்கண்ட எல்லாமே, நம்ம பாட்டன்கள் நமக்கு விட்டுவிட்டுபோன சொத்துக்கள்.

பின்னாளில், ஆங்கில மருத்துவ முறைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் ஆட்சி செலுத்த வந்தவுடன், இன்று அவை குறித்தும் அதே சத்தம் கேட்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. கடந்தமுறைகள் போலன்றி, வலுவான ஆயுதங்கள் எதுவும் கையில் இல்லாமல், 'ஏழைகளான எங்களை சும்மாவாச்சும் சுரண்டித் திங்காதீங்கப்பா!' என்ற ரீதியில் இருக்கிறது தற்போதைய போராட்டம். அதாவது, உரிமையுடன் கத்த முடியாதபடிக்கு.

எல்லாம் WTO என்ற உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்ந்ததன் விளைவுதான். (இப்படி சொல்வதானால் எனக்கு சிவப்பு கலரடிக்க யாராவது முயன்றால் ஸாரி! வெட்டிவேலை. WTO முடிவால் இந்தியாவுக்கு பலன்களும் உண்டு என்பதை மறுக்காதவன் நான்) உலக வர்த்தக ஒப்பந்தப்படி, TRIPS எனப்படும் - அறிவு சார்ந்த சொத்துரிமையை இந்தியா மதித்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு ஆராய்ச்சி செய்து, புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நபருக்கு, அந்த பொருள் மீதான காப்புரிமை இருப்பதை மதித்து போற்றி, அதற்கான விலையை இந்தியாவும் தர வேண்டும் என்பது. 2005 முதல் இந்தியா இந்த முழு காப்புரிமை சமஸ்தானத்துக்குள் நுழைகிறது.

இங்கே காப்புரிமை என்று சொல்லும்போதே, இதில் இரண்டு வகையிருப்பதையும் சொல்ல வேண்டும். ஒன்று - உருவாக்கப்பட்ட பொருள் குறித்த முழு காப்புரிமை. Product Patent. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற பல WTO அங்க நாடுகளிலும் தற்போது நடைமுறையில் இருப்பது. இலங்கை உட்பட. இரண்டு - புதிதாக உருவான பொருளைத் தயாரிக்கும் வழிமுறை மட்டும் பற்றிய காப்புரிமை. Process Patent. கடந்த 2004ம் ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்த இரண்டாவது தளத்தில்தான் இருந்தது.

இந்த இருவகையையும் இன்னும் தௌதவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்லலாம். நமக்கு, சென்னையிலிருந்து தலைநகர் தில்லி செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பல வழிகள் உண்டு. ஒன்று - நேரடியாக விமானம் ஏறி, தில்லியில் இறங்குவது. மற்றொன்று - சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், அல்லது ஜிடி.யைப் பிடிப்பது. இது தவிர - வசதியும், நேரமும் இருப்பவர்கள்,சாவகாசமாக ஒரு கார் எடுத்துக் கொண்டு, வழியில் இருக்கும் பல ஊர்களையும் பார்த்துக் கொண்டு செல்லலாம். வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆக, நமது இறுதி இலக்கு - தில்லி செல்வது. அதற்கு இருக்கும் பல வழிகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பது போல, ஒரு பொருளை தயாரிக்கவும் பலமுறைகள் உள்ளன. அதில் அந்த பொருளைக் கண்டுபிடித்தவர் கையாண்ட வழியல்லாத மற்ற முறையில் அந்த பொருளைத் தயாரிக்கும் முறை இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி, அது வேலைக்காகது.

இப்போது இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கும் புதிய காப்புரிமை முறையை நடைமுறையாக்க, ஏற்கெனவே அமலில் இருந்த 'இந்திய காப்புரிமை சட்டம் 1970'ல் திருத்தங்கள் கொண்டு வருகிறார்கள். கடந்த வாரத்தில் (மார்ச் 22ந் தேதி) நாடாளுமன்ற மக்களவையிலும், மறுநாள்
மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த 3வது திருத்தம்தான் இந்தியாவை Product Patent வரம்புக்குள் தள்ளுகிறது. மாற்றம் நடப்பது இந்தியாவில்தான் என்றாலும், இந்தியர் அல்லாத மற்ற பலரும் இது குறித்து கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தத்திற்கு முன்பு நைரோபி நகரில் இந்திய தூதரகம் நோக்கி ஒரு பேரணியே கிளம்பியது. தர்ணா போராட்டமும், மற்றவகை எதிர்ப்பும் அதிகம் இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம், இந்தியா அண்மைக் காலம்வரை விலை மலிவாக உலக சந்தையில் சப்ளை செய்து வந்த மருந்து பொருட்கள்தான்.

பொதுவாக உலக சந்தையில் மருந்து பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அந்த மருந்து பொருளைத் தயாரிக்கவும், அதற்கான ஆரம்ப கட்ட ஆராய்ச்சிக்கும் மிக அதிகமாக செலவிடுவதாகச் சொல்லி, அந்த காசையெல்லாம் திரும்ப எடுக்கவும், கூடுதலாக லாபம் பார்த்து, அடுத்த சில ஆராய்ச்சிகளுக்கு செலவழிக்கவும் வேண்டி தாங்கள் கண்டுபிடித்த புதிய மருந்து பொருளுக்கு, ஒன்றுக்கு பத்தாக விலை வைத்துதான் சந்தையில் விற்பார்கள். இது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு வேண்டுமானால் கட்டுபடியாகலாம். உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் ஏஆர்வி (ARV - Anti-retroviral drug) மருந்துகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் தயாராகும் இவ்வகை மருந்து, மாதம் முழுமைக்கும் 1000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்க, Product Patent கொண்ட மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. அன்றாடம் வயிற்றுக்கே போராடும் மக்கள், அந்த விலை கொடுத்து வாங்கி என்னத்தை செய்ய?

அதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளும்... நம்மைவிட மோசமான நிலையில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் மக்களும் அவ்வளவு விலை கொடுத்து மருந்து பொருட்களை வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் நம்மைப் போன்றவர்களும் நோய் நொடி தவிர்த்து வாழ, மருந்துகள் தேவைப்பட்டால், அதை உட்கொண்டுதானே ஆக வேண்டும். அதற்கு இத்தனை நாட்களாக நாம் கையாண்டு வந்த முறை - அதே மருந்தை மாற்றுவழிகளில் தயாரிப்பது என்பதுதான். இங்கேதான் Process Patent நமக்கு அனுகூலமாக இருந்தது. அதே மருந்தை வேறு வழிகளில் தயாரித்து நாமும் உட்கொண்டு, மற்ற நாடுகளுக்கும் அளித்து வந்தோம். இந்த மருந்துகளைத்தான் Generic drugs என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இவ்வகையில், உலகநாடுகளில் அதிக மருந்துப் பொருள் தயாரிக்கும் நாடு என இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. பொருள் அளவில் 4வது இடத்தைப் பிடித்தாலும், அவற்றின் விலை மதிப்புப்படி உலகின் 13வது நாடாகத்தான் இருக்கிறது. அமெரிக்காதான் மருந்துப் பொருள் உற்பத்தியில் அதிக வருவாய் பெறும் நாடு. ஒரு புள்ளிவிவரக் கணக்குப்படி, இன்றைய உலகின் மொத்த மருந்துப் பொருள் உற்பத்தி மதிப்பான 300 பில்லியன் அமெரிக்க டாலரில், அமெரிக்கா மட்டும் 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவருகிறது.

இந்தியாவில் எவ்வளவு விலை குறைவாக, அதே நேரத்தில் தரமானதாகவும் மருந்துப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்பதற்கு இன்னும் சில புள்ளிவிபரங்களும் தரலாம். மற்ற நாடுகளில் புதிதாக ஒரு மருந்துப் பொருள் தயாரிக்க 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கும் என்றால், அதே மருந்துக்கு மாற்றாக இந்தியாவில் ஒரு generic மருந்து தயாரிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர்தான் செலவாகிறது என்பது மருந்துப் பொருள் தயாரிப்புத் துறையினரது தகவல் என்கிறது வணிக நாளிதழ் பிஸினஸ் ஸ்டாண்டர்ட். எத்தனை மடங்கு குறைவு என கணக்கிடுங்கள்! இதையெல்லாம் சொல்வதனால் இந்தியாவில் செய்வதெல்லாம் இந்த 'உல்டா' வேலை மருந்துகள்தானோ என்று எண்ணி விடாதீர்கள். இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக..., குறிப்பாக '2005 கெடு' நெருங்குகிறது என்ற ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் பல நிறுவனங்கள் சொந்தமாக ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இவர்களாக ஆராய்ந்து வெற்றி பெற்று, மற்ற நாட்டு நிறுவனங்கள் போலவே புதிய மருந்து பொருட்களைத் தயாரித்து விற்று வருகிறார்கள்.

சரி! நாமாகவும் புதிய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். மற்ற நாடுகளின் மருந்துகளுக்கு மாற்றாக வேறுவழிகளில் விலைகுறைவான மருந்துப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறோம். அப்படியிருக்கையில் எதற்காக இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்? இதில் அர்த்தம் இருக்கிறதா? இந்திய நிறுவனங்கள் மற்றவர்களின் மருந்துகளை உல்டா பண்ண அனுமதிக்கவில்லை என்பதுதான் இந்த கூச்சலுக்கெல்லாம் காரணமா? இப்படியெல்லாம் கூட கேட்கத் தோன்றலாம். அடுத்து, இந்த மாதிரி உல்டா வித்தைகள் எல்லாம் இனியும் அவசியம்தானா என்றும் கேட்கலாம். அதற்கு அவசியம் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், பன்னாட்டு மருந்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்தான்.

இதை பற்றியும், இன்னமும் அடுத்த பகுதியில்....!

வியாழன், மார்ச் 17, 2005

எந்த பசிக்கு சோறு போடுகிறார் ப.சி.!?

ப.சிதம்பரம் தாக்கல் செய்த அண்மைய பட்ஜெட் பற்றி பொதுவான கருத்து - கிராமப்புற வளர்ச்சிக்கும், அதன் அடிப்படைத் தேவைகளுக்கும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்பதே! கம்யூனிஸ்ட்டுகளுடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொதுத்திட்டத்திற்கு முடிந்தவரை இந்த பட்ஜெட்டில் நியாயம் செய்யப்பட்டுள்ளது என்றால் கூட, அநியாயம். சற்று கூடுதலாகவே இறங்கி வந்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதைத் தாண்டி, இன்னொரு விஷயமும் இந்த பட்ஜெட்டில் தொக்கிக் கிடக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது; உறுதியாக நம்புகிறேன். அது - பங்குசந்தைக்குள் அதிக பணம் பாய, ப.சிதம்பரம் கொஞ்சம் முன்ஜாக்கிரதையாகவே மடை மாற்றுகிறார் என்பதுதான். என் சந்தேகத்துக்கு அடிப்படைகள் இல்லாமல் இல்லை.

சிதம்பரம் மடை மாற்றுகிறார் என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு நிதியமைச்சர்..., அதிலும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையிலிருக்கும் ஒரு நாட்டின் நிதியமைச்சர் கட்டாயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய திசையில்தான் அவரது நடவடிக்கை இருப்பதாகவே நினைக்கிறேன். முதலில் எந்தவகையில் பணம் இனி பங்குசந்தைக்குள் அதிகமாக பாயும் என்று நான் நம்புவதைச் சொல்லிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருகிறேன்.

தனிநபர் வருமான வரி முகப்பை, ஒரு லட்சம் என்று உயர்த்தியிருக்கும் சிதம்பரம் - கூடவே இன்னும் ஒரு சலுகையும் தந்துள்ளார். அது, அடுத்து 1 லட்ச ரூபாய்வரை சேமித்து, முதலீடு செய்பவர்களுக்கு - அந்தத் 'தொகை'க்கும் வருமான வரி இல்லை என்பது. சேமிப்புக்கான இந்த சலுகை, முற்றிலும் புதிதானதல்ல. கடந்த ஆண்டுகளிலெல்லாம் கூட, சேமிக்கப்படும் தொகைகளில் - இன்ஸ்யூரன்ஸ் என்றால்... 'இவ்வளவு!'. அதில் பென்ஷன் பாலிசி என்றால்... 'இப்படி!'. சிறுசேமிப்பு பத்திரமா?... 'இந்தா, பிடிச்சிக்கோ!'. வரி சேமிக்கும் பாண்ட்களில் பணம் போட்டால் - 'இந்த மட்டும்', என ஒவ்வொன்றுக்கும் ஒரு வரம்பு இருக்கும். சலுகை தரப்பட்டது.

இப்போது அந்த மாதிரியான வரம்புகள் எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டார் சிதம்பரம். யாருக்கு எந்த வகையில் தேவையோ, ஆர்வமோ, தெரியுமோ அந்த வகையில் இஷ்டம்போல முதலிட்டுக் கொள்ளலாம். கதவு திறக்கப்பட்டுவிட்டது.

இதனால் ஏற்படும் நிகர விளைவாக என்ன இருக்கும் என்றால் - வரி சேமிப்பு கட்டாயத்துக்காக குறைந்த வட்டியும், வருவாயும் தரும் பாண்ட் போன்றவற்றில் இனி யாரும் முதலிட மாட்டார்கள். அல்லது யோசிப்பார்கள். மாநில அளவில் சிறுசேமிப்பு திட்டங்களில் போடப்படும் பணத்தின் அளவும் கணிசமாகக் குறையும். இப்படி பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருந்த குறைந்த வருவாய் பெற்ற பணமெல்லாம் இனி 1. வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அல்லது 2. பரஸ்பர நிதித்திட்டம் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் 3. இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் என்ற வகையில் மட்டுமே அதிகமாக திரும்பக்கூடும். இதில்கூட, எண் 1ம், 3ம் எதிர்கால மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதிதான். மற்றபடி, பெரும்பாலோர் அதிக லாபம் ஈட்ட எண்ணி 2வது வகை திட்டங்களை நாடுவது அதிகரிக்கப் போகிறது. இன்னும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டால், அப்புறம் ரியல் எஸ்டேட் போல திசை மாறக்கூடும். மற்றபடி ஓராண்டில் அனுமதிக்கப்படும் சேமிப்பான ஒரு லட்சத்தில் அலுவலகத்திலேயே கட்டாயப் பிடிப்பான தொகைகள், வீட்டுக்கடன் போன்ற இதர இனங்கள் எல்லாம் போக, மீதி கிடைப்பதில் பொதுவாக பெருந்தொகைகளை எதிர்பார்க்க முடியாது. அது போன்ற தொகைகள் சேமிக்கப்படும்போது கிடைக்கும் தொகைக்கு இந்த வழிகள்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி! ஆனால், அந்த அளவுக்கு நம் மக்களிடம் விழப்புணர்ச்சி இருக்கிறதா என்று கேள்வி எழுந்தால் சரிதான்.

மேலே விவாதிக்கப்படும் தரப்பினரெல்லாம் மாத ஊதியம் பெற்று, முறையாக வருமான வரி செலுத்தும் ஆட்கள் என எடுத்துக் கொண்டு இந்த கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இத்தரப்பினரிடையே ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் போன்ற சேமிப்பு பழக்கங்கள் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையான அனுமதிப்படி, இத்துறையில் 10 ஆயிரம் வரை முதலிட்டு அதிகபட்சமாக 2000வரைதான் சலுகை பெறலாம் என்பதால், அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும், குறைவாக முதலிட்டவர்களும் கூட இனி தங்கள் பார்வையை திசை திருப்புவார்கள். இவர்கள் பாதுகாப்பு கருதி நேரடியாக பங்குசந்தைக்குள் போகாவிட்டாலும் மியூச்சல் பண்ட்கள் வழிகளையும் தவிர்க்க வாய்ப்புகள் குறைவே! அத்துடன் தற்போது தனியார்த்துறை இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என ஏகத்துக்கும் வந்துவிட்டபின், இவர்கள் - விளம்பரங்கள் மூலமே எல்லாருக்கும் தகவல் தந்து அவர்களிடம் பணம் புரட்டும் வேகத்தை அதிகரிப்பார்கள். இந்தப் பணம் எல்லாம் அடுத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்குசந்தைக்குள்தான் பாயும். கவனத்தில் கொள்க - வரி செலுத்தும் ஒவ்வொருவரும் அதிக பட்சமாக 1 லட்சம்வரை கூட இங்கே முதலிடலாம். அப்படியானால் மொத்தத் தொகை எவ்வளவு திரள வாய்ப்பிருக்கிறது? கணக்கு போடுங்கள்.

அடுத்தும், தற்போது புதிய அணுகுமுறையாக, வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் தொகுப்பையும் பங்கு சந்தையில் முதலிட அனுமதிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதே போல, ஓய்வூதியத் துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்து, தனியார்த்துறை இவ்வகையில் செயல்படும் வேகத்தையும், விவரத்தையும் மேம்படுத்தத் திட்டமிடப்படுகிறது. எனவே இந்த எல்லா பணமும் கடைசியில் 'ஜிஜிபாய் டவர்-ஐ தவிர, வேறு எந்த திசை நோக்கி போகமுடியும்! போட்டி பெருகுவதால் எல்லாருக்கும் அதிக லாபம் ஈட்டித்தர வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

'சிதம்பரத்தின் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம்' என நான் நினைக்கும் கருத்துக்கு ஆதாரமாக நிறுத்த இவை மட்டுமேயல்ல; இன்னும் சில விஷயங்களையும் சொல்ல நான் விரும்புகிறேன்.
இந்த பட்ஜெட்டில்தான் முதன்முறையாக அவர் அறிமுகப்படுத்தும் இன்னொரு அம்சம் - தங்கப் பங்குகள் (Gold Units). இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தெரிந்த பொதுவான முதலீடு - தங்கம் வாங்குவதுதான். அதை குறைந்த பட்சமாக ரூ.100 விலையிலும்கூட, (பரஸ்பர நிதி திட்ட பங்குகள் போல) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் - அது மௌ஢ள மௌ஢ள மற்ற வகை பங்குகள் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொடுக்கும். அதனால், அடுத்தடுத்த கட்டமாக மெல்ல பரஸ்பர நிதி என்று பயணம் செய்து, அடுத்து நேரடி பங்கு முதலீட்டு எல்லையை எட்ட வழிவகுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அந்தவகையில் தங்கபங்குகள் - ஒரு 'ஆரம்ப பாடசாலை'யாக கட்டாயமாக இருக்கும் என நினைக்கிறேன். ரிசர்வ் வங்கிக்கும், செபிக்கும் இந்த பட்ஜெட்டில், இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து, சிதம்பரம் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள மற்றொரு பங்கு சந்தை ஊக்க மாத்திரை -பங்கு வர்த்தகத்தின் ஒருவகை நீட்சியான டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் இனி, ஊக வணிக வகையில் சேராது என்று சொல்லியிருப்பது. இதனால் ஊக வணிகத்தால் உள்ள இடைஞ்சல் நீங்கி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் அதிகரிக்கும்.

இந்த மாதிரி கன்னாபின்னாவென பணம் பாய்ந்தால், அதைக் கையாள்வதில் பங்குசந்தை இடை அமைப்புகளான தரகர் உள்ளிட்டவர்கள் தடுமாறிவிடக்கூடாது என, இதுகுறித்த முறையான 'பாடசாலை' ஒன்றை உருவாக்கவும் அறிவிப்பு வந்துவிட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்' என்ற அந்த அமைப்பை 'தேசிய மூலதன கல்வி நிறுவனம்' என்றா... அல்லது வேறு எப்படி தமிழில் சொல்லப் போகிறார்கள் தெரியவில்லை. அதில், இந்த துறை ஆராய்ச்சிக்கும் வழிகள் உருவாக உள்ளன.

இன்னொரு பக்கம், பங்கு சந்தையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொள்ளும் வர்த்தக வங்கிகள் தங்களது கையிருப்பு ரொக்கத்தை எப்படி கையாள்வதென, இதுவரை இருந்த அரசு சட்டத் திட்டங்கள் திருத்தப்பட்டு, 'இனி, அதெல்லாம் ரிசர்வ் வங்கியின் வரம்பும், பொறுப்பும்' என மாற்றப் போகிறார்கள். இதன்படி வங்கிகள் இனி அவர்களிடம் வைத்திருக்கும் குறைந்தபட்ச, அதிகபட்ச ரொக்க கையிருப்பு, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்கும் முன்ஜாக்கிரதை பிணைப் பணம் என்பதையெல்லாம் இனி அரசு நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்தாது. எனவே வலுவான வங்கிகள் கூடுதலாக பணத்தைத் தாங்களே கையாள அனுமதிக்கப்படும். நோஞ்சான்கள், ஏற்கெனவே போட்டியில் அடிபட்டு, வலுவான வங்கிகளுடன் இணைக்கப்படும் திட்டங்கள் உள்ளன. போட்டி நிறைந்த இன்றைய நாளில் கூடுதல் லாபம் காண பல வங்கிகளும் தங்களது கையிருப்பில் ஒரு பகுதியையாவது பங்கு சந்தைக்குத் திருப்பிவிடும். முந்தைய காலங்களில் போல எல்லாவற்றையும் தொழில்துறைக்கு கடனாகக் கொடுத்து Non performing Asset ஆக மாற்றி வைப்பது எந்த வங்கிக்கும் இனி சாத்தியமில்லை. அதனால் யாரெல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கடனைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கடன். மற்ற பணத்தை கையில் சும்மா வைத்திருக்க வாய்ப்பில்லை.

சரி, இவ்வளவு பணமும் இந்திய பங்கு சந்தைக்கு தேவையா என்றால் - நான் நினைப்பது தேவை மட்டுமல்ல; அவசியமும்கூட.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழிற்துறையில் மட்டுமின்றி, பங்குசந்தையிலும் அந்நிய நிறுவனங்கள் முதலிட அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் நீர்ஊற்று போல மெதுவாகத் தொடங்கிய இந்த முதலீடுகள் இன்று உருண்டு, திரண்டு வௌளம் போல பாய்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த பங்குசந்தை வர்க்கத்தில் கால் பகுதிக்கும் மேல் அந்நிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டது என்கின்றன புள்ளிவிபரங்கள். இந்தியாவின் அனைத்து நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், மற்ற நிறுவனங்கள், தனி முதலீட்டாளர்கள் என எல்லாரும் சேர்ந்தது மீதி பகுதி. எனவே இன்று நான்கில் ஒரு பங்குக்குமேல் வர்த்தக பங்கை கைக்குள் வைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு எதிர்குஷனாக பங்குசந்தையில் உள்நாட்டு முதலீடு தேவைதான்.

1990களின் இறுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் இங்கே நினைவு கூறத்தக்கவை. அந்நாட்களில் மேற்கண்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து, அவர்களது நாணய மதிப்பு உலக சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டு, பொருளாதாரம் படுத்துவிட்டது. அப்போது, அதற்கு காரணமாக கண்டறியப்பட்டது - அவர்களது அந்நிய முதலீட்டுக்கு ஈடாக உள்நாட்டில் சேமிப்பு இல்லாமல் போனது என்பதுதான். லாபம் கிடைக்கும்வரை இருந்த அந்த அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது 'வேலை' முடிந்தவுடன் ஒரே நேரத்தில் கடையை காலிசெய்ய... அதை சமாளிக்க அங்கே உள்நாட்டு மூலதனம் இல்லாததால் எல்லாம் ஆடிப்போனது. அப்போது ஏற்பட்ட பொருளாதார ரத்த வௌளத்தை உலகமே பரிதாபமாக பார்த்தது. அந்த நிலை, இன்று நமக்கும் ஏற்படாமல் இருக்க - நம் உள்நாட்டு சேமிப்பு அதிகரிக்க வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மற்றவர்களை அதிக சேமிப்பு வழக்கம் கொண்டவர்கள்தான். சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைய சூழல் நமது சேமிப்பை இன்னும் அதிக அளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.மு.கூ. அரசு பதவி ஏற்க இருந்த நாட்களில்... அடுத்த ஆட்சியின் நிச்சயமற்ற போக்கு நிலவியபோது... அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆட்சிதான் அடுத்து அமையும் என்ற தகவல்கள் கசிந்தபோது அந்நிய முதலீட்டாளர்கள் ஒருமுறை பின்வாங்கினர். அப்போது, இதுவரையான சரித்திரத்திலேயே இல்லாத அளவு ஒரே நாளில் 800 புள்ளிகள் வரை அதள பாதாளத்தில் பாய்ந்த பங்குசந்தை குறியீட்டெண், பின்னர் சமாளித்து 500+ புள்ளிகளில் அன்றைய தினத்தை முடித்தது. அன்றைய தினம் LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணம் பங்குசந்தைக்குள் கணிசமாகப் பாய்ந்ததால்தான் சிக்கல் அந்த அளவோடு அடங்கியது. இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும். எனவே இது போன்று எதிர்பாராத சம்பவங்களை சமாளிக்கவும் நாடு தயாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே கணிசமான பங்குசந்தை சார்ந்த முதலீடு இந்தியாவுக்கு தேவைதான். அதற்காகத்தான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக்கூட, ப.சிதம்பரம் பங்கு சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீட்டை ஊக்குவிக்கிறாரோ என்றும், மறுபுறம் இதைக் கொண்டு இந்திய தொழில்களையும், உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த எண்ணுகிறாரோ என்றும் நான் நினைக்கிறேன்.

கண் சிமிட்ட வைத்த கவிதைகள், இன்னும் சில!

கவிதை ரசிகர்கள் நிறையத்தான் இருக்கிறார்கள் இங்கே! ஆனால் தீவிர, நவீன கவிதை ரசிகர்களும் இருப்பார்கள் நிறையவே என்னும் தோன்றுகிறது. பிரமிள் பற்றியும், இன்னும் அவரையொத்த மூத்த கவிஞர்களின் கவிதைகளும் எல்லாருக்கும் ரசிக்க சிரமம் என்பதால்..... நான் ரசித்த என்பதைவிட, என்னை கண் சிமிட்ட வைத்த கவிதைகள் என்று இங்கே சிலவற்றைத் தருகிறேன். இந்த பட்டியலில் நமது Blogக்கர்கள் குழுவின் உறுப்பினரான பாலு மணிமாறனின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் அம்பலம் இணைய இதழில் நான் கவிதைத் தேர்வுக்கு பொறுப்பில் இருந்த காலத்தில் பிரசுரமானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துத் தருகிறேன். இனி கவிதைக்குச் செல்வோம்.

அணில்

வேலி மேல் ஓடிக்கொண்டிருந்த

ஓர் அணில் திடீரென்று நின்றது
களைப்பாறவாக இருக்கலாம்

அடர்ந்த வாலில் இளமைத் துடிப்பு
மூன்று பட்டையில் இறைவனின் நாமம்
பிச்சிப்பூ மொட்டுப் பற்களில்
கவ்விய வாதாங்கொட்டை

இது எனக்குத் தெரியாத அணில்
புதிதாக வந்திருக்கிறது போல

இதுவரை வரும் அணில்கள் எல்லாம்
கோழிக்குப் போட்ட இரை தானியத்தைத்
திருடித் தின்றுவிட்டு ஓடும்

புது அணிலும் கோழி இரையைத் தின்றது
இதுவும் திருட்டு அணில்தான் என்று
பெருமூச்சு விடும் என்னை முறைத்தது
வாதாங்கொட்டையை விலையாய்
விட்டுச் சென்றது

பண்டமாற்று முறை புரிந்த புது அணில்.

- காஞ்சனா தாமோதரன்

நதியிடம் அதன் பால்யம் பற்றிக்
கேட்டேன்
ஒரு நாள் அடர்ந்த மரங்களின் ஊடே
மலையினடியில்
கிடந்த சிறிய ஓடைதான் நான்
அப்போது
இலைகள் தன் வாசனை கலந்து நீர்
உதிர்க்க
உதிர்க்க
ஊர்களைக் கடந்து பெரிய
நதியாகிவிட்டேன்
ஆனால் இன்னும் வனத்தில் ஞாபகமாய்
அலைகிறேன் என்றது

வண்ணத்துப்பூச்சி தன் பால்யத்தைப்
பற்றி
வருத்தமாய் சொன்னது
அப்போது நிறங்கள் பூசிய சிறகுகளற்று
பாதுகாப்பற்ற வீட்டில்
இருப்பது போல்
எப்போதும் எதிர்காலம் குறித்த
பயத்தோடு காற்றில் ஊஞ்சலாடும்
இலையில்
அசூயையூட்டும் புழுவாய் கிடந்தேன்

நல்ல வேளை
அப்போது என்னைப் பார்த்த
உறவினர்கள்
தற்சமயம் இல்லை
ஒரே வேடிக்கையாய் இருந்திருக்கும்
என்றது

தன் பால்யம் பற்றி புறநகர் பகுதி
மரமொன்று சொன்னது
இப்போது போல் அன்றைக்கு வீடுகள்
எல்லாம் நெருக்கமாய் வரவேயில்லை
எப்போதும் ஆடுகள்
குறித்த துர்சொப்பனங்களே
இரவெங்கும்.

- சங்கர ராம சுப்ரமணியம்

கிடைக்குமா!

ஆதாம் ஏவாளுக்கு அப்புறம் வந்து
ஏதோ நினைத்து எதற்கோ
கிறுக்கிய
ஆதிகால மனிதர்களின்
பழங்கால பாறை ஓவியங்களை
ஆராய்ச்சி செய்யும் மாமா...!

என் எழுத்தை எதிர்காலத்தில்
எவரேனும் ஆராய வேண்டுமென
ஆசையுண்டு எனக்கும்.
முழுக்கத் தேடிவிட்டேன்...
சிங்கப்பூர் தீவில் சிக்கவேயில்லை
பாழாய்ப்போன பழைய பாறை!

- பாலு மணிமாறன்

இங்கு இப்படியாக இலக்கியம்

ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
லா.ச.ரா.
இன்னும் எவர் எவரோ
நூலக அடுக்குகளில் வரிசையாய்
எத்தனையோ நாளாய் என்னோடு
பேச...

மன்னிக்கவும்.

ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.
ஒரு மணி நேர இன்டர்நெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப் பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!

எங்கே போய்விடும் இலக்கியம்?

பேசலாமே பின்னொரு நாள்!

- பாலு மணிமாறன்

சிங்கையில் கூடி மகிழும் நண்பர்களுடன் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கொரிக்கவாவது எதையாவது அனுப்ப முடியுமா என்ற ஏக்கம் இருந்தது.

யப்பா!........... இப்போது என் ஏக்கம் எல்லாம் தீர்ந்தது - மற்றவர்களுக்கும் சேர்த்து, எதோ பழங்கஞ்சியாவது குடிக்க கொடுத்ததில்!

செவ்வாய், மார்ச் 15, 2005

பங்குசந்தைக் குறியீட்டெண் குழப்புகிறதா?

பங்குசந்தை பற்றி இங்கே தனியாளகப் போராடிக் கொண்டிருக்கும் நண்பர் சசியின் கட்டுரைகள்... பட்ஜெட் பற்றிய விமர்சனங்கள் படித்திருப்பீர்கள். அவருக்கு தோள் கொடுக்கும் விதமாக என்னால் முடிந்ததைச் செய்யலாம் என்று எண்ணம். அதனால், 'புதிய பார்வை' இதழில் நான் எழுதிய பொருளாதாரம் பற்றிய கட்டுரைகளை இங்கேயும் அரங்கேற்றும் முடிவுக்கு வந்துள்ளேன். நண்பர் அண்ணாகண்ணன் கொடுத்த ஐடியாவும் இதற்கு காரணம் - நம் அனைத்து படைப்புகளையும் ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் களஞ்சியமாக இந்த தொகுப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு உதவும்தானே! இனி கட்டுரைக்கு செல்வோம். இந்த கட்டுரை 'புதிய பார்வை 'யில் வௌதயாகி சில மாதங்கள் ஆகிறது. - சந்திரன்

பங்குசந்தைக் குறியீட்டெண் குழப்புகிறதா?

பங்குசந்தை பற்றிய சாமானியனின் பயத்திற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது இத்துறையில் புழங்கும் புரியாத வார்த்தைகள். மிரட்டும் இந்த வார்த்தைகளே, 'இது ஏதோ பெரிய விஷயம் போல' என்ற மாயையை உண்டாக்கிவிடுவது உண்மை. மற்ற பல விஷயங்களில் விவரமான பலரும் கூட, இந்த மாதிரி மாயாஜால வார்த்தைகளுக்கு மயங்கி பயப்படுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆனால் நிஜத்தில், இந்த வார்த்தைகள் எல்லாம் சூப்பர் கம்ப்யூட்டரோ... கிரியோஜினிக் என்ஜின் ரகசியமோ அல்ல!

உதாரணமாக, சின்னத்திரை செய்தி முதல் தினசரிகளின் (அரிதாகி வரும்) வணிகப் பக்கங்கள்வரை பங்குசந்தை என்றதும் குறிப்பிடப்படுவது, குறியீட்டெண் என்ற சமாச்சாரம்தான். ஒருவரியில் சொல்வதானால், பங்குசந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல்தான் அது. அவ்வளவுதான். ஆனால், இது பற்றி தௌதவான விபரம் சொல்லப்படாததால் அது மிரட்டுகிறது. இந்த குறியீட்டெண்ணை எப்படி கணக்கிடுகிறார்கள்... அதன் உள்விவகாரங்கள் என்ன என்பதைப் பற்றி... இதுபோல, பங்குசந்தையில் புழங்கும் இதர புதிய வார்த்தைகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகமானவர்களை பங்குசந்தை பக்கம் ஈர்க்க உதவும் என்று நம்புகிறேன் - கம்ப்யூட்டரில் தமிழிலேயே கடிதம் அனுப்பலாம்... நகல் தயாரிக்கலாம் என்றானபின் இணையத் தமிழ் எழுத்தாளர்கள் எண்ணிக்கையே எண்ண முடியாத அளவுக்கு அதிகரித்தது போல.

'நீந்த விரும்பினால், தண்ணீரில் இறங்கித்தான் ஆக வேண்டும்' என்பதுபோல, முறையான வழியில் நாலு காசு பார்க்க எண்ணிய பலரை பங்குசந்தை இன்று காந்தம் போல ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு இந்த மாதிரி விஷயங்களைத் தௌதவாக்கிவிட்டால்?!

முன்பே சொன்னபடி வெகுஜன திரை ஊடகங்கள் எல்லாவற்றிலும், குறியீட்டெண் என்ற அந்த ரெண்டு... மூன்று... எண்களின் பட்டியலை வாசிப்பது சடங்காகிவிட்டது. அதில் மும்பை பங்குசந்தை குறியீட்டெண் 'பிஎஸ்இ சென்ஸெக்ஸ்' என்றும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் 'நிப்டி' என்றும் சொல்லப்படும் இவை தொடங்கிய வரலாறு கூட கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான்.

318 வியாபாரிகள், ஆளுக்கு ஒரு ரூபாய் முதல் போட்டு 130 வருஷத்துக்குமுன் தொடங்கியதுதான் இந்திய பங்குசந்தையின் முதல் வித்து. இந்த வித்து விழுந்தது மும்பையில். அதாவது, 1875ம் ஆண்டு இந்த வியாபாரிகள் போட்ட முதல் (முதலீடு), கால ஓட்டத்தில் இத்தனைப் பெரிய அமைப்பாக வளர்ந்து இன்று இந்திய அரசியல், மத்திய அரசு, அதன் கொள்கைகளில் மாற்றங்களை உண்டாக்கவல்ல திறன் பெற்று நிற்கிறது. ஆரம்பித்த அந்தநாளில் இந்த வியாபாரிகளுக்கு அன்றிருந்த ஒருசில நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில்... விற்பதில் மட்டும்தான் அக்கறை. மற்ற விஷயங்களில் அல்ல. ஆனால் பின்னாளில் மற்றவர்களும் இதுபற்றித் தெரிந்து... நாமும் பணம் பண்ணிப் பார்க்கலாம் என்று முத்துக்குளிக்க முழ்கியபோது இக்கலாச்சாரம் பரவி, பத்திரிகைகளில் பேசப்பட்டது. அப்போது, 'நேற்று பங்கு வர்த்தகம் எப்படியிருந்தது' என்பது பற்றி கருத்து சொல்ல ஒரு காரணி தேவைப்பட்டது.

100 கம்பெனிகளின் பங்குகள் அங்கே விற்பனையாகின்றன என்றால், அதில் எத்தனை கம்பெனிகளின் பங்குகள் ஏறுமுகத்தில் இருந்தது, எத்தனை சரிந்தன, எவையெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தன என்று அறிய ஒவ்வொரு பங்குவிலை பற்றியும் வில்லாவாரியாக எழுத... பேச... வேண்டியிருந்தது. எனவே 'இத்தனை எண்களையும் ஒருசேர நினைவில் கொள்வதைத் தவிர்க்க வழியிருக்கா?' என்று பார்த்தபோது உருவானதாகத்தான் இந்த குறியீட்டெண்ணைச் சொல்ல வேண்டும். ஆனால் இது, இன்றுள்ளபடி உரு பெறுவதற்குள் 100 வருஷங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன.

அத்துடன், மும்பையில் விழுந்த முதல் விதை... கல்கத்தா, தில்லி, அகமதாபாத், சென்னை என பல இடங்களிலும் விழுதுவிட்டு தன் இருப்பையும் விரிவாக்கிவிட்டிருந்தன. அதன்பின், 1986ல்தான் குறியீட்டெண் என்ற இந்த அடையாளம் உருவானது. ஆனால் அந்நாளில் மற்ற பல இடங்களில் இருந்த விற்பனையை ஒன்று சேர்த்தாலும், அதைத்தாண்டி பலமடங்கு விற்பனை நடந்தது மும்பை பங்குசந்தையில்தான். எனவே இங்கு விற்பனையான பங்குகளின் விலை அடிப்படையில் அமைத்தாலே அது உண்மையைப் பிரதிபலிக்கும் என்று, 'பிஎஸ்இ சென்ஸெக்ஸ்' (BSE Sensex - Bombay Stock Exchange Sensetive Index) என்றே இதை அழைத்தார்கள். இது தொடங்கிய காலத்தில் அன்று விற்பனையானவற்றிலேயே அதிக சுறுசுறுப்புடன், நிறைய விற்பனையான முன்னணி பங்குகள் 30ன் விலையை அடிப்படையாகக் கொண்டு இதைக் கணக்கிட்டார்கள்.

அது பற்றிய இன்னும் விரிவான தகவலுக்குச் செல்லும்முன், இதற்கு பயன்படுத்தப்படும் Market Capitalization என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, XYZ என்ற நிறுவனம் சந்தையில் பங்கு விற்பதாக வைத்துக் கொள்வோம். அன்று மும்பை பங்குசந்தையில் அதன் பங்கு ஒன்று, 100 ரூபாய்க்கு விற்கிறது. அன்றைய தினத்தில், அந்த நிறுவனத்தில் மொத்தமாக 1 லட்சம் பங்குகள் இருப்பதாகக் கொண்டால் (அதன் மொத்த பங்குகளின் எண்ணிக்கை), அந்த நிறுவனத்தின் Market Capitalization = 100 x 1 லட்சம் = 1 கோடி. வேறுவிதமாகச் சொல்வதானால், ஒரு பங்கு 100 ரூபாய்க்கு விற்பதால், நம்மிடம் 1 கோடி ரூபாய் இருந்தால், அந்த நிறுவனத்தின் எல்லா (1 லட்சம் ) பங்குகளையும் நம்மால் விலைக்கு வாங்கிவிட முடியும். அதன்மூலம், அந்த நிறுவனத்தின் தனிமுதலாளியாக நாம் ஆகிவிட முடியும். அவ்வகையில் ஒரு நிறுவனத்தை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட தேவைப்படும் மொத்த பணமதிப்புதான் அந்நிறுவனத்தின் Market capitalization எனப்படுகிறது. கணித வழியில் சொல்வதானால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் எண்ணிக்கை x ஒரு பங்கின் அன்றைய விலை.

இவ்வாறு, பல நிறுவனங்களின் 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்' ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பங்குசந்தையின் உயிர்நாடி துடிக்கிறது. பெருவாரியான பங்குகளின் விலை உயர்ந்தால்.... அவற்றின் 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்'-ம் உயர்கிறது. எனவே அந்த மார்க்கெட் கேப்பிடலைசேஷனைப் பொறுத்து, அன்றைய தினம் பங்கு சந்தையில் எத்தனைப் பணம் புழங்கியது என்று கணக்கிட முடிகிறது. எனவே 'மார்க்கெட் கேப்பிடலைசேஷன்' அல்லது 'மார்கெட் கேப்' என்றும் குறிப்பிடப்படும் இந்தத் தகவல்தான் முக்கியம்.

எனவே, ஒரு நாளில் அதிகபட்ச மார்க்கெட் கேப் கொண்ட முன்னணி நிறுவனங்களை பங்குசந்தைக் குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொண்டார்கள். முன்பே சொன்னபடி இப்படி முதன்முதலில் கணக்கிட்டது 1986ல்தான். அப்போது பங்குசந்தைக் குறியீட்டெண்ணைக் கணக்கிட 1978-79ம் நிதியாண்டின் சராசரி பங்குவிலைகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன. அவற்றை, உத்தேசமாக 100 புள்ளிகள் என்ற அடிப்படை ஆரம்ப மதிப்புக்கு ஒப்பிட்டு, கணக்கைத் தொடங்கினார்கள். அதிலிருந்து அது மௌ஢ள மௌ஢ள உயர்ந்து வந்துள்ளது. அதாவது, இன்று 4000 புள்ளியை எட்டியது... 50 புள்ளிகள் சரிந்தது என்று சொல்வதெல்லாம் இந்த 100 புள்ளிகளில் தொடங்கியதுதான்.

அதேபோல, அப்போது முன்னணியில் இருந்த 30 பங்குகள் மட்டும் குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், இத்துறையின் வளர்ச்சி, பரவலாக்கம் போன்றவற்றால் 30 பங்குகளின் விலையை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிடுவது அர்த்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. அதனால் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் பங்குகளை பரிசீலிக்க வேண்டியிருப்பது உணரப்பட்டது. எனவே 30 என்ற எண்ணிக்கையை 100 என உயர்த்திக் கொண்டு, முன்னணி 100 நிறுவனங்களின் Market Capitalizationஐ வைத்து, இன்னொரு புதிய குறியீட்டெண்ணைக் கணக்கிட்டார்கள். இது தொடங்கியது 1989ல். ஆனால் இது தேசிய அளவில், அதாவது - பங்குசந்தை கால்பரப்பிய மற்ற இடங்களில் விற்பனை தொடங்கிய இதர நிறுவனங்களின் நிலவரங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணியதால் மும்பை சந்தையுடன், கல்கத்தா, தில்லி, அகமதாபாத் மற்றும் சென்னை பங்குசந்தைகளில் பதிவு பெற்ற பங்குகளின் மார்க்கெட் கேப்பிடலைசேஷனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதில் முன்னணி 100 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டார்கள். இதற்கு, 1983-84ம் ஆண்டில் அவற்றின் சராசரி விலையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, புதிய குறியீட்டெண் கணக்கிடப்பட்டது. ஆரம்பத்தில், இதை தேசிய குறியீட்டெண் என்று சொல்லிவந்தாலும், 1996 அக்டோ பர் 14ல் இது தனது பெயரை 'பிஎஸ்சி 100 (BSE-100)' என மாற்றிக் கொண்டது.
ஆனால் இந்த மாற்றமும் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை. அதாவது, சந்தையில் பங்குகளின் விலையை, அவற்றின் போக்கை மிகச் சரியாக பிரதிபலிக்கவில்லை. எனவே மேலும் பரவலாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு, 1994 மே 27 அன்று, புதிதாக இரு குறியீட்டெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அது முறையே BSE-200 என்றும், Dollex-200 என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்னொரு பக்கம் ஒரு நேரத்தில் முன்னணியில் இருக்கும் கம்பெனிகள் தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்லை; அல்லது முடியவில்லை என்பதால் குறியீட்டெண் கணக்குக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிறுவனம் எவை என்ற பட்டியலிலும் மாற்றங்கள் வரத் தொடங்கின. சம்மந்தப்பட்ட பங்குசந்தை நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த நிறுவனங்கள் பல உள்ளும், வௌதயும் பயணிப்பதும் இயல்பான விஷயமானது.

இந்த குறியீட்டெண் கணக்குமுறை 2003 செப்டம்பரில், அடுத்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டது. இந்த மாற்றம், இன்று உலக அளவில் பெரும்பாலான இடங்களில் பங்குசந்தை குறியீட்டெண் கணக்கிடும் முறையைப் போன்றது. அதாவது, முன்பு கையாண்ட முறையில் - ஒரு நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கணக்கிட, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தமான எல்லா பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் நிஜத்தில் ஒரு நிறுவனத்தின் எல்லா பங்குகளும் பங்கு வர்த்தகத்தில் பங்கேற்பதில்லை. உதாரணமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய அம்பானிகளோ, டாடா, பிர்லா நிறுவனங்களைத் தொடங்கியவர்களோ அவர்களது நிறுவனத்தின் பங்குகளில் கணிசமானவற்றை நிரந்தரமாக தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்த நிறுவனப் பங்குகளை பெருமளவில் வாங்கி வைத்திருக்கும் LIC போன்ற நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள், நிறுவன முதலாளிகளுக்கு நெருக்கமான நண்பர்கள், அவர்களது மற்ற நிறுவனங்கள் போன்றவை தங்களிடம் உள்ள பங்குகளை சந்தையில் அன்றாட விற்பனைக்கு விடுவதில்லை. நிரந்தரமாக, அல்லது பெரும்பாலான நாட்களில் அவை முடங்கித்தான் கிடக்கின்றன. எனவே அவை சந்தையில் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் எந்தவகையிலும் பங்களிப்பதில்லை. எனவே அவற்றை குறியீட்டெண் கணக்கிடும்போது முழுஅளவு ஈடுபாடு கொண்டவை என எடுத்துக் கொள்ள வேண்டாம். சந்தைக்கு வந்து போய், விலை ஏற்ற, வீழ்ச்சியில் பங்களிக்கும் அந்நிறுவனப் பங்குகளின் அளவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்ற யோசனைதான் இது. இவ்வாறு தொடர்ந்து பங்களிக்கும் பங்குகளின் அளவை Free floated பங்குகள் என்று வகைப்படுத்தி, அவற்றின் அளவை கணக்கிட்டு, அந்த விகிதத்தில் மட்டுமே அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன், குறியீட்டெண் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனால் பலன் உண்டா, அப்படியானால் என்ன லாபம் என்பது சரியான கேள்விதான். என்ன பலன் என்றால் - ஒரு தரப்பினர் சந்தைக்கு அனுப்பாமல் நிரந்தரமாக வாங்கி வைத்திருக்கும் பங்குகளால்...., ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகள் மட்டுமே சந்தையில் புழங்குவதால்...., அந்த பங்கை அதிகமாக வாங்கவோ, விற்கவோ எண்ணுபவர்களுக்கு ஏற்படும் சிரமம், அதனால் ஏற்படும் விலை மாற்றம், இதன்மூலமான லாப நஷ்டம் போன்றவை பங்குசந்தையின் போக்கில் உண்டாக்கும் பாதிப்புகள் உண்டு. இந்த பாதிப்பு, முன்பு இருந்ததைவிட இப்போது கையாளப்படும் புதிய குறியீட்டெண் கணக்கிடும் முறையில் இன்னும் அதிகமாக பிரதிபலிக்கப்படுகிறது என்பதுதான். இன்றைக்கு டிவியும், செய்தித்தாள்களும் அறிவிக்கும் குறியீட்டெண்கள் எல்லாம் இந்த Free float market Capitaliaztion வகையில் கணக்கிடப்பட்டதுதான்.
இன்றைய நிலையில் இந்த குறியீட்டெண்களை பங்கு சந்தைகளே - பங்கு வர்த்தகம் நடைபெறும் நேரத்திலும் கூட, 15 நொடிக்கு ஒருமுறை கணக்கிட்டு அறிவித்துவிடுகின்றன. அவற்றைத்தான் மற்ற ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இப்படியே ஏற்பட்ட ஒருபக்க வளர்ச்சிக்கு மறுபுறம், கணிணியின் பயன்பாடு அதிகரித்தபோது முதலில் மும்பை பங்கு சந்தை ஆன்லைன் வர்த்தகம் (BOLT)என்பது அறிமுகமானது. இன்னொருபக்கம் OTC என்ற பெயரில் Over The Counter exchange of India என்ற இன்னொரு பங்குசந்தை உரு பெற்றது. ஆனால் அதையும் தாண்டிய முன்னேற்றங்களுடன் உருவான 'தேசிய பங்கு சந்தை (National Stock Exchange)' இன்று நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டும் கம்ப்யூட்டரின் வழியாகவே பங்குவிலைகளைப் பார்த்து வணிகத்தில் ஈடுபடலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டதால் மும்பை பங்குசந்தையே மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது.

மும்பை பங்குசந்தைப் போலவே, தேசிய பங்குசந்தையும் தனக்கென தனியான குறியீட்டெண்களைக் கொண்டுள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கிடும் முறைகளில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை. அடிப்படை விஷயங்கள் மும்பை பங்குசந்தை குறியீட்டெண்ணுக்கு என்னவோ அதேதான். எனினும் தேசிய பங்குசந்தை, இந்த பணிக்கு தற்போது சர்வதேச நிறுவனமான Standard & Poor என்ற நிறுவனத்தையும், இந்திய மதிப்பீட்டு நிறுவனமான CRISILலையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பு உள்ளதால் தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் தற்போது S&P CNX என்ற முன்அடைமொழியுடன் வழங்கப்படுகிறது. அதனால் 'நிப்டி' என்பதை இன்றைய நிலையில் S&P CNX NIFTY என்று குறிப்பிடுவதுதான் டெக்கினிக்கலாக சரி!

அதோடு, ஒரு குறிப்பிட்ட துறை, குறிப்பிட்ட இலக்கு கொண்ட நிறுவனங்களில் மட்டும் முதலிட விரும்புபவர்களின் தேவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு இன்று S&P CNX NIFTY, CNX NIFTY JUNIOR, S&P CNX DEFTY, CNX IT, S&P CNX 500, CNX MIDCAP 200 என்று பல குறியீட்டெண்கள் வழக்கத்துக்கு வந்துள்ளன. எனினும் இவை பற்றிய நுணுக்கமான தகவல்கள் இத்துறையை ஆழமாக அணுகுபவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படும். நம்மை போன்ற சராசரி முதலீட்டாளருக்கு இந்த எண்கள் சொல்லும் செய்தி மட்டுமே போதும். குடலாப்ரேஷன் செய்தது போல அவற்றை கணக்கிடும் உள்விவகாரம் தேவைப்படும் ஆட்கள் 'புதிய பார்வை'யில் இப்படியான ஒரு கட்டுரைக்காகவா காத்திருப்பார்கள்!?

திங்கள், மார்ச் 14, 2005

அந்தராத்மாக்களின் அட்டசாகங்கள்

நான் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றவன் இல்லை. அதனால், 'அந்தராத்மா' என்ற வார்த்தைக்கு நிஜமான அர்த்தம் தெரிந்துகொள்ள, நல்ல ஹிந்தியில் தேர்ச்சி பெற்றவர்களைத் தேடி, இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்புகூட இரண்டு நாள் காத்திருந்தேன். இந்த சொல், காந்தியடிகள் உச்சரித்த சொல்லாகத்தான் எனக்கு அறிமுகம். அதற்கு அர்த்தம் - 'மனசாட்சி' அல்லது 'உள்மனசு' என்று சொல்லலாம். அல்லது, அண்மைக்காலமாக அதிகம் கேட்க நேரும் inner voice என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

காந்தியடிகள் சுதந்திர போராட்டக் காலங்களில், பல அஹிம்சைப் போராட்டங்களைத் தொடங்கும்முன் 'அந்தராத்மா'விடம் பேசுவராம். அது என்ன சொல்கிறதோ, அதன்படிதான் நடவடிக்கை. சில நேரங்களில் அவர் போராட்டம் அறிவித்த பின்னர் கூட, போராட்டத்தின் போக்கு எதிர்பார்த்ததற்கு எதிர்திசையில் போய் கலவரங்களில் முடிந்திருக்கின்றன. அதில் பலர் அடிதடி, உதை என துன்பத்துக்கு உள்ளாகி, சில நேரங்களில் உயிர்பலி எனவும் போராட்டம் வழிமாறிச் சென்றபோது, காந்தியடிகள் தனது போராட்டத்தையே திரும்பப் பெற்றும் இருக்கிறார். மனித உயிர்கள் மீது அவருக்கு அத்தனை அக்கறை. அதனால்தான் தனது போராட்டங்களில் பலியாவது இந்திய உயிர்களா? பிரிட்டீஷ் பிரஜைகளாக என்று பார்க்காமல் யாராயிருந்தாலும் ஒரே வழிமுறையை கையாண்டிருக்கிறார்.

இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு தகவல் - இந்த மாதிரி நேரங்களில் போராட்டம்தான் வாபஸாகுமேயன்றி, அதன் நோக்கத்தையே கைவிட்டு அவர் விலகி விட்டதில்லை. அத்தகைய கொள்கை பிடிப்பு, தர்மத்தின் மீதான நம்பிக்கை அவரிடமிருந்ததால்தான் அவரது அஹிம்சைப் போராட்டங்களை ஏற்காத மற்றவர்களும்கூட, அவரது நோக்கத்தைக் குறை சொன்னதில்லை. அவர், 'அந்தராத்மா' என்று உச்சரித்த வார்த்தைக்கு ஒரு மரியாதையும், கௌரவமும் கிடைத்தது. இதெல்லாம் நான் படித்து அறிந்தவைதான். நல்லவேளையாக, காந்தியடிகள் வாழ்ந்த காலங்களில், அவரைத் தவிர மற்ற யாரும் இந்த வார்த்தையைப் பேசி கலங்கப்படுத்தவில்லை, நான் அறிந்தவரையில்.

இன்று நடப்பது என்ன? இந்த அந்தராத்மா... அதாவது, மனசாட்சி... வேறு வார்த்தைகளில், Inner voice... இரண்டு முறையாவது பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளன, மூத்த... முன்னணி அரசியல்வாதிகள் சொன்னதாக! காந்திக்குப் பிறகு, இந்த வார்த்தை முக்கியத்துவம் பெற்றது இன்றைய காந்தி(!)யான சோனியா இதை உச்சரித்தபோது. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 'நான் பிரதமராக பொறுப்பேற்கப் போவதில்லை' என்று (சற்றே தாமதித்துத்தான்) அவர் அறிவித்தபோது, எனக்கு அவர் மீது துளியும் சந்தேகம் வரவில்லை. சரியான சூழலில், சரியான காரணத்துக்குத்தான் இந்த வார்த்தை பயன்படுகிறது என்று சோனியா மீது கொஞ்சம் மரியாதைகூட வந்தது.

ஆனால், இன்று? 'எத்தனைதான் வேஷம் போட்டாலும், சூழ்நிலை - ஒருவனுக்குள் ஔதந்திருக்கும் திருடனை ரொம்ப நாட்களுக்கு மறைந்திருக்க அனுமதிக்காது; வௌதக்கொண்டு வந்துவிடும்' என்று டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி சொல்வார். அதைப்போலத்தான் இப்போது நடந்திருக்கிறது. பிரதமர் பதவி, நாட்டின் மிக சக்திவாய்ந்த பதவி. அதையே தனக்கு வேண்டாம் என்று சொல்லும் ஒரு நபர், நிஜமாகவே அர்ப்பணிப்பு குணம் கொண்டவராக... நிஜமாகவே காந்திக்கு அடுத்த ஸ்தானத்தில் வைக்கப்பட வேண்டியவர் என்று எதிர்ப்பை கிளப்பிய சோனியா, 'நானும் இன்றைய சராசரி அரசியல்வாதிதான். வேறு எந்தவிதத்திலும் இவர்களில் இருந்து குறைந்தவரோ, தரமற்றவரோ, மாறுபட்டவரோ அல்ல' என்பதை இன்று நிருபிக்கிறார் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் - ஜார்க்கண்ட், கோவா, பிகார் போன்ற இடங்களில் இன்று நடக்கும் சம்பவத்திற்கும், சோனியாவுக்கும் எந்தவகையிலும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கே தெரியும், அதெல்லாம் பத்திரிகையில் அப்படி செய்தி வர வேண்டும் என்பதற்காகத்தானென்று! நிஜம், இதிலிருந்து ரொம்பவே தள்ளியிருக்கிறது என்பது, பல்வேறு நடப்புகளைத் தொடர்புபடுத்தி பார்க்கத் தெரியும் எல்லாருக்கும் புரிந்துபோகும்.

முதலில், 'கோவா' சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு முதல்வராக பொறுப்பில் இருந்த பாஜகவின் மனோகர் பரிக்கர் ஆட்சி, கம்பி நுனியில் காலம் ஓட்டிக் கொண்டிருந்ததுதான். ஆனால் அமைதியாக, ஒருவகையில் நல்லவகையிலும் அங்கு ஆட்சி நடந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். 'எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் சொன்னேனேயன்றி, எனது கட்சிக்காரர்களுக்கு பதவி வேண்டாம் என்று எப்போது நான் சொன்னேன்?' என்று ஒரு கேள்வியை சோனியா நம்முன் வைத்தால், நம்மில் யாரும் பதில் சொல்ல முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கேள்வியை அவருக்குள்ளாகவே வைத்துக் கொண்டு, அல்லது காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே வைத்துக் கொண்டு காரியத்தில் இறங்கிவிட்டார்கள் அக்கட்சியினர். மனோகர் பரிக்கர் மந்திரி சபைக்கு ஆதரவு தந்த ஆட்களை வாபஸ் பெறத் தூண்டி, அதன்மூலம் அங்கு ஆட்சி கவிழ்ப்பு நடத்தி, வாபஸ் பெற்ற நபர் காங்கிரஸை ஆதரிக்கச் செய்ய...

இப்படியெல்லாம், நடப்பதைச் சமாளிக்க தெரியாதவர்களா என்ன பாஜகவினர்? கூத்துகள் தொடங்கின.

நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸுக்கு வாக்களிக்கக்கூடும் என்ற நபரை வாக்களிக்க அனுமதிக்காமல் செய்து, சபாநாயகர் ஓட்டு மூலம் பாஜக. மெஜாரிட்டி காட்ட... கவர்னர் ஜமீர் அதை ஏற்க மறுத்து, உடனடியாக காங்கிரஸ் ஆட்சியமைக்க வழி ஏற்படுத்த... அதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது, பாஜக ஆதரவு சபாநாயகர் பதவி விலக... புதிய சபாநாயகர் முன்னிலையில் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு. காலச் சக்கரம் ஒரு U திருப்பத்திற்குள்ளாகி, மீண்டும் அதே சதிவேலை... சபாநாயகர் வாக்குடன் காங்கிரஸ் மெஜாரிட்டி என்பது கவர்னரால் ஏற்கப்படுகிறது. ஆனால் நல்லவேளையாக மத்தியில் இருந்து தலையிட்டு, சட்டசபையை முடக்கிவைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது.
'பதவி சுகம் அல்ல, தான் வேண்டுவது' என்று சொன்ன சோனியா, இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரது மனசாட்சி... inner voice அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ! கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் அண்மையில் தேர்தல் முடிந்து தொங்கு சட்டசபை வந்த 2 மாநிலங்களில் யார் ஆட்சியமைப்பது என்ற கேள்வி வருகிறது. வழக்கத்தில் உள்ளதுபடி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி..., தனி பெருங்கட்சி என இரண்டு வகையிலும் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான 'என்டிஏ'தான் ஆட்சியமைக்க அழைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை தூக்கியடித்து, துவம்சம் செய்து காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஜெஎம்எம் ஆட்சியமைக்க அழைக்கப்படுகிறது, போதுமான எண்ணிக்கை எம்எல்ஏ ஆதரவு இல்லாமலேயே! ஆனால், பாவம் என்ன செய்வது? சோனியாவின் மனசாட்சி ஒவர் டைம் வேலை இருந்திருக்குமோ என்னவோ, இந்த சம்பவங்களின்போதும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
ஆனால் சோனியாவின் மனசாட்சி உண்மையில் தூங்கிக் கொண்டுதான் இருந்ததா என்ற கேள்விக்கு, இன்னொரு வகையில் பதில் கிடைத்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளை எந்தவித குறுக்கீடும் இன்றி நடத்த ஒத்துழைப்பதாக சில நாட்களுக்குமுன் ஒப்புக் கொண்டிருந்த பாஜகவினர், இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுபடியும் பாராளுமன்ற நடவடிக்கைக்கு இடைஞ்சல் செய்ய...., இதனால் 'எங்களைப் போன்ற இளம் எம்பிக்கள் உறுப்பினர் என்றவகையில் செய்ய வேண்டிய பங்காற்ற வாய்ப்பு இல்லை' என்று சோனியாவின் மகள் ராகுல் தனது பரிவரங்களைச் சேர்த்துக் கொண்டு உண்ணாவிரதம்... தர்ணா போராட்டம் என களம் இறங்குகிறார். இதைப்பற்றி தாய் சோனியாவிடம் சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவு ராகுல் என்ன minor குழந்தையா? அதனால் சோனியாவின் அந்தராத்மாவுக்கு எந்த தகவலும் எட்டவேயில்லை போல!

இவராவது பரவாயில்லை; அந்தராத்மாவை துணைக்கழைத்த இன்னொரு நபர்தான் இன்னும் அதிர்ச்சி தருகிறார். முதல்வராக பதவியேற்று இரட்டை இலக்க நாட்களைக்கூட தாண்ட இயலாத சிபுசோரன், சில நாட்களுக்குமுன் தனது பதவியை ராஜினமா செய்தபோது, 'எதனால் பதவியை ராஜினாமா செய்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வது - 'அந்தராத்மாவின் கட்டளை'. 'அப்படியானால், அது தில்லியில் இருக்கிறதா?' என்று யாரும் அவரைக் கேட்கவில்லை போல! ஏற்கெனவே நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதே 'காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள்' என்று இவரது கட்சி எம்பிக்களின் மீதுதான் குற்றச்சாட்டு. அடுத்து, இந்த முறைகூட இவர் மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற புதிதில் - கடந்த காலத்தில் எப்போதோ பதிவான கிரிமினல் வழக்கு ஒன்றின் விசாரணையில் இவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது, பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், மந்திரியாக இருந்துகொண்டே தலைமறைவாகிப் போனவர்தான் இவர். அந்த சம்பவங்களின்போதெல்லாம் இவர்களது மனசாட்சிகள் மாடு மேய்க்கப் போயிருக்குமோ என்னவோ! பிறகென்ன... இல்லாவிட்டால், பெரும்பான்மை பலம் இல்லை என்று தெரிந்தும் பொறுப்பேற்க துணிந்திருப்பாரா?
இப்போது, இதுமாதிரியான காரணங்களுக்காக இவரைக் குறை சொல்வதற்கு, எனது Inner voice என்னையே கேள்வி கேட்கிறது! 'இவர்களுக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் இவர்களை ஒப்பிடும்போது எந்தவகையில் யோக்கியமானவர்கள்?' என்ற அதன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. என்ன செய்வது?

எது எப்படியோ, கோவா சம்பவம் தற்போதைக்கு கிடப்பில் கிடக்க, ஜார்க்கண்ட் விவகாரம் உச்சநீதி மன்றம் சென்று, அதன் தீர்ப்பாக - ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இடைக்கால சபாநாயகர் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட, பலரது அந்தராத்மாக்களுககு ஒரே நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னால்... அதுவும் 'மேல் அப்பீல் இல்லை' என்ற நிலையில் இருக்கும் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னால் அதை நிறைவேற்றுவதா? அல்லது, சட்டமியற்றும் இவர்களது அதிகாரத்தில் குறுக்கிட நீதிமன்றத்தை அனுமதிப்பதா என்ற கேள்வி, பல inner voiceகளை தட்டி எழுப்பியது. குய்யோ... முறையோ... என்ற கூச்சல், பாராளுமன்றத்தில்!

காங்கிரஸ் சார்பானவர்கள் ஜனாதிபதி மூலம் உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்கலாம் என்று சொல்ல, இன்னொரு தரப்பு 'தர்ம காவலர்கள்', உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்பதா? என்று வானத்துக்கும் தரைக்கும் குதித்தார்கள். தீர்ப்பு - இவர்களுக்கு சாதகமாக இருந்ததுதான் காரணம். அதனால், உச்சநீதிமன்றத்தை எதிர்த்து கருத்து சொன்ன பாராளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என்று முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர். அண்மைக்காலங்களில் சபாநாயகர் பதவியில் அமர்ந்த சிலர் நடந்து கொண்ட விதங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, அது பற்றியெல்லாம் தனது தனிப்பட்ட வருத்தத்தைக்கூட தெரிவிக்கவில்லை. ஆனால், சட்டமியற்றும் அவைகளின் உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியே அதிகம் யோசித்தது இவரது அந்தராத்மா. 'இதற்காக என் மீது நம்பிக்கையில்லா தீர்மானமா? செய்யயுங்கள்! நான் எனது கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை' என்றார். நல்லவேளை, இவரும் பல்டி அடிக்கவில்லை.

இந்தவேளையில் பிரதமரது அந்தராத்மாவுக்கு சிக்கல். எங்கே அரசியல் சட்ட சிக்கல் வந்து, எக்குதப்பாக எதாவது நடந்துவிட போகிறதோ என்று இவர் காரியத்தில் இறங்கி, அமைச்சரை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சிபுசோரன் மாநில கவர்னரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்றுதான் செய்தி. திடீரென்று, உள்துறை அமைச்சருக்கு கட்டளை பிறப்பிக்க, 'ஜார்க்கண்ட் முதல்வர் டிஸ்மிஸ்' என்று செய்தி சொன்னார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் எனது அந்தராத்மா சும்மா இல்லை. என்னுள் பல கேள்விகளை எழுப்பி அது ஆட்டம் போட்டது. இந்திய அரசியல் சட்டப்படி - 'சட்டம் இயற்றும் அவை'யின் உரிமைகளில் நீதிமன்றமும், இவர்கள் உரிமையில் அவர்களும் தலையிடக்கூடாது என்பதெல்லாம் சரி! ஆனால், ஒரு மாநில முதல்வரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் அதில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. எந்த பிரிவின் கீழ் இப்போது மேன்மைமிகு சிபுசோரனை டிஸ்மிஸ் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய அவர், அப்படி செய்ய இயலவில்லை என்று அந்த அவையின் சபாநாயகர் எந்த முடிவையும் இன்னும் சொல்லவில்லை. எனவே, இந்தப்படிக்கு டிஸ்மிஸ் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை. அடுத்து, வழக்கமாக டிஸ்மிஸுக்குச் சொல்லப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இப்போது யாராலும் எழுப்பப்படவில்லை. அதைத்தாண்டி, அரசியல் சட்ட மீறல் எதாவது நடந்திருக்கிறதா என்றால்... அப்படி எதையும் கூட இப்போது திடீரென்று முதல்வர் மீது யாரும் எழுப்பவில்லை. அப்படியில்லாத நிலையில், எந்த காரணத்துக்காக சிபுசோரன் டிஸ்மிஸ் தெரியவில்லையே! எதற்கும் அப்பாவியான சிபுசோரனை இப்படி அநியாயமாக பதவியிறக்கிவிட்டார்கள் என்று நாளையே ஒரு வழக்கறிஞர் வைத்து அதே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துவிட வேண்டியதுதான் என்று என் அந்தராத்மா துடித்துக் கொண்டிருந்தது. அப்போது, என் நினைப்பு எல்லாவற்றுக்கும் வில்லனாக அந்த சிபு சோரனே தன் பதவியை ராஜினாமா செய்தார் என்ற அறிவிப்பு வந்தது. எனது inner voice அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் இன்னொரு ஓட்டை அல்லது காலி இடம் இப்போதைக்கு கேள்விக்கு உள்ளாகாது என்று சந்தம் அடைந்தது.

ஆனால் எனது inner voice இன்னும் தௌதவு பெறாத கேள்விகள் சில உள்ளன.
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரம் வரையான தகவல்கள்படி, சோம்நாத் சாட்டர்ஜி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கைவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், அதற்கு காரணம் என்ன? உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்பது போல சாட்டர்ஜி பேசியதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அதை சபாநாயகரே செய்தார் என்பதும்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி அவர்கள் பேசக் காரணம். இப்போது சாட்டர்ஜி தான் பேசியதை வாபஸ் வாங்கிவிட்டாரா? இல்லையே! மறுபடியும் அதுபற்றி பேசியபோதுகூட 'நான் பேசியதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் சந்திக்கத் தயார்' என்றுதானே சொல்கிறார்.

அப்படியானால், இங்கே தவறிழைத்தது யார்?

'உச்ச நீதிமன்றம் எங்களது உரிமையில் தலையிடுவதா? இது குறித்து ஜனாதிபதி மூலம் கருத்து கேட்போம்' என்று பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் கூச்சலிட்ட காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் வாதம் இப்போது என்னவானது? லேட்டஸ்ட் தகவல்படி கருத்து கேட்கும் திட்டம் கைவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது!

அப்படியானால், உச்சநீதி மன்றம் தலையிட்டதா, இல்லையா? தலையிட்டு இருந்தால், அதை வாபஸ் பெற்றுக் கொண்டதா? அல்லது தலையிடுவதற்கு முன்பே, சும்மாவாச்சும் நமது எம்பிக்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்களா? இதற்காகத்தான் பாராளுமன்றத்திலும், ஜார்க்கண்ட் சட்டமன்றத்திலும் அத்தனை கூச்சல், குழப்பமா?

'பாராளுமன்றத்தில் இளம் எம்பிக்களுக்கு பேச வாய்ப்பு இல்லாமல் போகிறது' என்று போராட களம் புகுந்த ராகுல்காந்தியின் அந்தராத்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கிறது?

எனக்கு ஒன்று மட்டும் புரியவுமில்லை. பதில் தெரியவும் இல்லை. 'பாராளுமன்றம் என்பது யாருக்காக?' என்ற, என் அந்தராத்மா கேள்விக்கு பதில் தெரியவில்லை. அதனால், அதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை. உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

சனி, மார்ச் 12, 2005

இன்னும் சில கவிதைகள் இங்கே!

'நல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுத்து போடுங்கள்' என்று உஷா கேட்டுக் கொண்டதால், நான் ரசித்த சில கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதனால், மற்ற கவிதை... மற்றவர்களின் கவிதைகள் பற்றி, நான் வேறு மாதிரி எண்ணம் கொண்டிருப்பதாக எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கு நவீன இலக்கியவாதிகள், பல்வேறு 'இஸங்க'ளைப் பேசுகிறார்கள். அதில் பலவும் என் தலைக்கு மேலே போகும் விஷயங்கள். அத்தகைய சில கவிதை நூல்களும் சிறப்பானவை என எனக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி நான் கருத்து சொல்வதோ, மறுப்பு சொல்வதோ... இரண்டுமே சரியில்லை என்பது என் கருத்து. எனவே, எனது மூளைக்கு எட்டியவற்றுள், நல்ல கவிதை என நான் எண்ணியவற்றில் சிலதை மட்டும்தான் இங்கே கொடுத்துள்ளேன்.

நண்பர்களின் தேவை, விருப்பம், வரவேற்பு, கருத்துகளைப் பார்த்து அவசியம் என்றால் பின்னும் தொடர்வேன். அல்லது...

இனி கவிதைகள்....

பழ.புகழேந்தி என்பவர் எழுதிய 'கரும்பலகையில் எழுதாதவை' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து......

நின்றது மழை.
நனைந்த சிறகோடு

மைதானத்தில் வண்ணத்துப்பூச்சி.

ஒலித்தது
பள்ளியின் கடைசி மணி.

கூட்டமாய் 'பூட்ஸ்' கால்கள்.
பதற்றத்தில் மனசு.

***********

அந்த வகுப்புக்குள்
வௌவால்கள் அதிகம்
அன்று உள்ளே நுழைகையில்

குழந்தைகளின் கும்மாளம்,
விழுந்து கிடந்த வௌவாலைச் சுற்றி

வௌவாலைத் துரத்திய பிறகு
மனசுக்குள் சங்கடம்
குழந்தைகளின்
சிரிப்பைக் கொன்றுவிட்டோமோ

இருப்பினும்
உயிரோடு இருந்தது
வௌவால்

**************
அடுத்து பச்சியப்பன் என்பவரது 'கல்லால மரம்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து....

வாய்ப்பு
----------
ஒலி கூட்டி
உச்சரிக்கையில்
கவனிக்காது நானிருந்தால்
முகத்தில் அடிக்கும்

முறைத்தால்
சிறுஇதழ் கொண்டு முத்தமிடும்

முடிபற்றி இழுத்து
வீடெங்கும்
ஒரு குதிரைக்காரன்போல
நடக்கும்

மறுத்துப் படுத்தால்
தண்ணீர் கொண்டுவந்து
முகத்தில் ஊற்றும்

தெருவில் நடக்கிறேனென
அடம் பிடிக்கும்
இறக்கிவிட்டால்
மண் கிளறும்

'அவளை' நெருங்குகையில்
இடையில் படுத்து
உரத்துச் சிரிக்கும்

இப்படியாய்
எல்லோருக்கும் போல
எனக்கும் வாய்த்திருக்கிறது
மகளின் குறும்புகள்

ஆனால்
எவருக்கேனும் நேருமோ
மழலையின் மோதிரத்தை
அடகு வைக்கும் வாழ்க்கை

*************
எம்.ஜி.கன்னியப்பன் எழுதிய 'என் நந்தவனத்து பட்டாம்பூச்சிகள்' என்ற தொகுப்பில் இருந்து.....

இன்று
அப்பாவின் திவசம்
அண்ணனும் - அண்ணியுமாய்
அக்காவும் - மாமனுமாய்

குழந்தைகுட்டிகள்
கொட்டமடித்து
உற்றார் உறவினரால்
கலகலப்பாகும் வீடு

ஓரத்தில் சோர்ந்து
கிடக்கும்அம்மாவிடம்
மட்டும்ஏதேதோ சொல்கிறது
கொடியில் காயும்
அப்பாவின் ஜிப்பா
--
வரம் கேட்கிறேன்
_________________

வேறென்ன கேட்பேன்
பராசக்தி

வில்லங்கம் ஏதுமில்லா
காணிநிலம்

அதில் தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை

அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனைக்ஷன்

வைரஸ் வராத
கம்ப்யூட்டர்

விளையாடி மகிழ
வெப்சைட்

சரியான முகவரியோடு
எலக்ஷன் கார்டு

பக்க விளைவில்லா
பாஸ்ட் புஃட் அயிட்டங்கள்

மறக்காமல்கொஞ்சம்
மினரல் வாட்டர்

வேறென்ன கேட்பேன்
பராசக்தி

இவையாவும்
தரும்நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்

---

மா. வெங்கடேசன் எழுதிய 'சில்லுக்கோடு' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து.....

கையில் சில்லறையுடன்
காத்துக் கொண்டிருந்தேன்
தூரத்தில் கைக்குழந்தையுடன்
வரும்பிச்சைக்காரிக்காக
'இல்லை' என்று சொல்லி

விலகுபவரும்
தொலைவில் பார்த்து
தன் இருப்பிடத்தை
காலி செய்பவர்களாக
மனிதர்கள்
கையில் சில்லறையுடன்

காத்துக் கொண்டிருந்தேன்
மனிதர்களைக் கூர்ந்து கவனித்தபடி
.......................
..........................

என்னைக் கடந்தபடி அவள்.

*******************
வஸந்த் செந்தில் எழுதிய 'ஒற்றை இறகு' என்ற புத்தகத்திலிருந்து.........

கடிதம்
--------

விடுமுறை முடிந்து
வீடு திரும்புகிறோம்.

இருந்த கூடொன்றை
இழந்து நிற்கிறது
முன்பக்க மரக்கிளை

கடிதம் வந்திருக்கலாமென
கதவைத் திறக்கிறாய்

வீழ்ந்து கிடக்கிறது
ஒற்றை இறகு

எதுவும் இல்லையென்று சொல்லி
எடுத்து வீசுகிறாய்

கடிதம் இல்லையா அது?

----------------
'ஜெய பாஸ்கரன் கவிதைகள்' என்ற புத்தகத்திலிருந்து........

வாடகை
-----------
வாடகை
ஆயிரம் ரூபாய்

குடிநீருக்கு
ஐம்பது

மின்சாரத்துக்கு
மாதாந்திரக்
குத்துமதிப்பாக
இருநூறு

முறைவாசலுக்கும்
கழிவறைக்கும்
முப்பது ரூபாயாம்

ஆக மொத்தம்
ஆயிரத்த இருநூற்றுஎண்பது
ரூபாயை
தேதி தவறாமல்
கொடுத்து வருகிறேன்
வீட்டுக்காரனுக்கு

நாள் கடத்தாமல்
வாடகை தருவதாக
என்னை வியந்து
போற்றுகிறான் வீட்டுக்காரன்

அவனிடம்
சொல்லிக் கொள்வதில்லை
நான்

கொடுக்கற
வாடகை,
வீட்டருகே கூவும்
வேப்ப மரத்துக் குயிலுக்காகவும்
உனக்குத் தெரியாமல்
வந்து போகும்காற்றுக்காகவும்தான் என்று!
--
பேரம்
--------
முழம் மூன்றுரூபாய் என்று
தௌதவாகச் சொன்னாள் அவள்
இரண்டரை ரூபாய் வீதம்

இரண்டு முழம் கொடு
தேள்ளத் தௌதவாகச் சொன்னேன் நான்
மூன்று நிமிடங்களுக்கும்

மேலாகநீண்டு கொண்டு போனது
முழம் மூன்று ரூபாய்க்கான
அவளது நியாயங்களும்
இரண்டரை ரூபாய்க்கான
எனது விளக்கங்களும்
இறுதியாகஐந்தரை ரூபாய்க்கு

இரண்டு முழம் பூவை
சுருட்டிக் கொடுத்துவிட்டு
இரண்டி அடிக்கு அப்பால்
இயல்பாகத்தான் துப்பினாள்
வெற்றிலை பாக்கு எச்சிலை

ஆயினும்
சந்தேகமாகத்தானிருக்கிறது

ஷோரூம்காரன்
சொன்ன விலைக்கு
நான்செருப்பு வாங்கி அணிவதை
பார்த்திருப்பாளோ அந்த பூக்காரி?
-------

இது போதும் என்று நினைக்கிறேன். இதில் ஜெயபாஸ்கரன் கவிதைகளில்தான் இன்னும் கொஞ்சம் வார்த்தை சிக்கனம் இருக்கலாமோ என நான் நினைத்திருக்கிறேன். ஆனால் கவித்துவத்தில் எந்த குறையும் வைக்காத எளிய கவிதைகள் இவை என்பது என் கருத்து.

-சந்திரன்

வியாழன், மார்ச் 10, 2005

அம்மாவுக்கு விஷம் வைப்பவன்.

முதலில், ஒரு முன்னுரை - இதற்கு தேவைப்படுவதாக நினைக்கிறேன். தோழியர் வலைபதிவில் 'உஷா' கடந்த வாரம் எழுதியிருந்த 'கிளி' என்ற கவிதையை எத்தனை பேர் படித்தீர்கள் எனத் தெரியவில்லை. நான் படித்தேன். அது குறித்து எனது பின்னோட்டத்தை, அப்போது தோன்றிய அளவில் எழுதிவிட்டேன். இன்று காலை வந்த பார்த்தபோது, உஷா அதற்கு பதில் அளித்திருந்தார். அந்த பதில்தான், இந்தக் கட்டுரைக்கு(!)க் காரணம். எனது விமர்சனம் - தவறான நோக்கிலோ, திட்டமிட்ட திசையிலோ இல்லை என்பதை உஷா சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும், அவரது பதிலின் அடிநாதமாக எதோ ஒரு வருத்தம் அவரை ஆட்கொண்டிருக்க வேண்டும் என்றும் புரிந்தது.

எனது கருத்துகள் உஷாவை புண்பட, வருத்தப்பட வைத்திருந்தால், அதற்கு முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும், 'மகளீர் தின'த்தையொட்டி ஒரு பெண்மணி புண்பட காரணமாக இருக்க, நான் விரும்பவில்லை. அந்த எனது உறுத்தல்தான் இந்த பதிவுக்குக் காரணம்.

உஷாவின் கவிதை குறித்து எனது விமர்சனம் இதுதான்.

// கவிதையை 'காலி' பண்ணாமல் விடுவதில்லை என்ற முடிவோடு இருக்கிறீர்கள் போல! ;-) வாழ்த்துகள். ஆனால் ஒரு விஷயத்தை..., மனதில் பட்டதை உங்களுக்குச் சொல்லாமல் இருந்தால், அது நட்புக்கு நியாயமாகாது என்று நம்புகிறேன். அதனால் சொல்கிறேன். 'கிளி' கவிதையில் ஒரு கவிதை முயற்சி இருக்கிறது என்றுதான் சொல்வேன். இதன் மிகப் பெரிய குறை - வளவள தன்மை. முடிந்தவரை சுருக்கமாக... 'இதற்கு மேல் அதைச் சுருக்கவே முடியாது' என்ற அளவுக்குத்தான் கவிதையில் வார்த்தைகள் இருக்க வேண்டும். அடுத்து, நீங்கள் சொல்ல வரும் பல விஷயங்களை வாசகரே மனதில் உணர வைக்கும் அளவு கட்டமைப்பதுதான் நல்ல கவிதை என்பேன். அதை sub text என்பார்கள். நீங்கள் நேரடியாகச் சொல்லாத விஷயமும் கவிதைக்குள் மறைந்திருக்கும்படி கவிதை எழுத முன்னேற வேண்டும் என்ற விருப்பத்துடன் நண்பன், - சந்திரன் //

எனது விமர்சனத்தின் நோக்கம் - நல்ல கவிதைகளைப் படித்து, உணர்ந்து... அதைப் போல இன்னும் நிறைய உஷாவும் படைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு உதாரணமாக, நல்ல கவிதை என நான் நினைத்த ஒன்றை அவருடன் மட்டுமின்றி, எல்லாரோடும் பகிர்ந்து கொள்வோம் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
- - -
என்.டி.ராஜ்குமார் எழுதிய 'அம்மா' என்ற தலைப்பிட்ட கவிதை இது. அதில் மனதைத் தைத்த, மறக்க முடியாத வரிகளை மட்டும் முதலில் சொல்கிறேன்.

''ஓங்கிய கையை இறக்கிவிடு.
மூச்சு திணறுகிறது.

சூசகமாக ஒரு வார்த்தை சொல்!

சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்''

இவை கவிதையின் இறுதிவரிகள். இந்தக் கவிதையில் முந்தைய வரிகளில் கவிஞர் தன் மனைவி தனக்கு எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார் என்பதையும், தாய் எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தார் என்பதையும் பற்றி பேசுவார். சில வரிகள் கொஞ்சம், பொது மேடைக்கு உவப்பில்லாத வரிகளாகக் கூட வரும். ஆனால் கவிஞரின் சூழலையும், தாய், மனைவி... இருவரின் முக்கியத்துவத்தையும் விளக்கவே அந்த வரிகள். இப்படி மனைவி, தாய் இருவரும் அவசியம்தான் என்று உணரும் கவிஞர் அவர்கள் இருவருக்கும் எப்போதும் தொடரும் சண்டையில் யார் பக்கம் நிற்பது என்று புரியாமல் தள்ளாடுகிறார். அந்நிலையில் ஒருநாள் தாய்க்கும், மனைவிக்கும் சண்டை. மனைவி, தாயை அடிக்க கையை ஓங்குகிறார். அந்த நேரத்தில் மனைவியைப் பார்த்து பேசுவது போல இந்த வரிகள் வருகின்றன.

நான், SUB TEXT என்று சொன்னேனே அந்த வகையில்தான் கவிஞரின் மனப் போராட்டங்களும், வருத்தமும் அந்த கவிதையில் மறைந்திருக்கும். மேம்போக்காகப் பார்த்தால் 'என்ன இது, மனைவிக்காக - அம்மாவை விஷம் வைத்துக் கொள்வதாகச் சொல்கிறானே, இந்தப் பாவி!' என்று தோன்றும். கூடவே, மனைவியின் முக்கியத்துவமும் சொல்லப்பட்டிருப்பதால் 'பொண்டாட்டி தாசனோ!' என்று கூட சொல்லத் தோன்றலாம்.

ஆனால் நிஜத்தில், மனைவியிடம் அவன் கோருவது - 'உன்னை நான் பிரிய முடியாதுதான். ஆனால் என் தாய்க்கும் ஒரு ஸ்தானம், தகுதி, அந்தஸ்து உண்டு. அவர், உன்னிடம் அடி வாங்கிக் கொண்டு, வயிறு நிரப்பி உயிர் வாழ வேண்டும் என்ற கேவலமான நிலையில் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்றால், அவர் இறந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீ அவரை அடிக்காதே... ஓங்கிய உன் கையை தயவு செய்து அப்படியே நிறுத்திவிடு... '' என்கிறார்.

இப்போது மறுபடியும் ஒருமுறை அந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். ஒருவன் தன் தாய்மேல் கொண்டிருக்கும் அன்பு, பாசம், அவருக்கு கொடுக்கும் மரியாதை, முக்கியத்துவம் எல்லாம் புரியும். இதுவே, தன் தாயை அடிப்பவர் வேறு யாராவதாக இருந்தால் அவர் எப்படி நடந்து கொள்வாரோ... ஆனால் மனைவியாக இருக்கப்போய் கையாலாகாத நிலையில் இருக்கிறார். ஆனாலும், இந்த நிலை இனியும் இப்படியேதான் தொடரும்... விடிவே இல்லை என்றால் - அத்தகைய நிலையில், அடிவாங்கிக் கொண்டு தனது தாய் உயிர் வாழ்வதைவிட, எந்த துன்புறுத்தலும் இல்லாமல் தானே தாய்க்கு விஷம் வைத்து ஒரேயடியாக கொன்றுவிடவும் தயார் என்கிறார்.

இன்னொருபக்கம் - 'அப்படியே செய்து விடுங்கள்' என்று மனைவி பொது இடத்தில்... முகத்துக்கு முகம் நேரடியாகச் சொல்லத் தயங்கும் நிலை இருந்தால், 'பரவாயில்லை.... அதைச் சூசகமாகச் சொல்!' என்றும் கேட்கிறார். அதாவது, 'Adjust பண்ணிப் போ' என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை என்று நினைத்தால், சூசகமாக அதைச் சொல்லிவிடு... ஆனால் அடிக்காதே!' என்பது வேண்டுகோள்!

வளர்ந்த ஒருவனின் தாய் பாசத்தை விளக்கும் இப்படியான ஒரு கவிதையை, நான் இதுவரையில் வேறு எங்கும் படிக்கவில்லை. இந்த கவிஞரே எழுதிய முழு கவிதைத் தொகுப்பை நான் படித்திருந்தாலும், இப்படியான வலுவான ஒரு கவிதையை இன்னும் நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உஷாவுக்கு மட்டுமல்ல! கவிதை எழுத முயலும் இன்னும் பலருக்கும்கூட 'நல்ல கவிதை' என்பதை நான் உணர்ந்த வகையில் அடையாளம் காட்டுவதுதான் நோக்கம்.

எனவே, இதைப் படிக்கும் கவிதை முயற்சியாளர்கள், 'ரசிக்கத்தக்க... இது போன்ற கவிதைகளுக்கு இலக்கு வைத்து நகர்ந்தால் விரைவில் அதை எட்டிவிட முடியும்' என்று நம்புகிறேன். இப்போது அந்தக் கவிதையை முழுவதுமாகத் தருகிறேன்.

அம்மா
---------

அவள் எனக்கு பசி தீர்த்தவள்.
நீ, காமம் தீர்த்தவள்
எருமைபோல வளர்ந்த நான்
அவளுக்குக் குழந்தை

எனக்கு, என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்

பற்றி எரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு.
மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒரு வார்த்தை சொல்

சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்றுவிடுகிறேன்.

- என்.டி.ராஜ்குமார்.