மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, டிசம்பர் 26, 2025

இடைக்கால வரலாற்றின் சில காட்சிகள்!… - சுந்தரபுத்தன் நாவல் “பெரியவன்” விமர்சனம்
பத்திரிகையாளரும், எனது நண்பருமான சுந்தரபுத்தன் எழுதிய முதல் நாவல் - "பெரியவன்". நீண்ட நாட்களுக்குப் பின்... கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்... அவரை நேரில் சந்தித்தபோது இந்த நாவல் எழுதியிருப்பதைப் பற்றிச் சொன்னார். அப்போதே விலை கொடுத்து, அனுப்பி வைக்கச் சொன்னேன். இந்த நாவல் கடந்த டிசம்பரில் வெளியாகியுள்ளது. அவ்வகையில் மிக தாமதமான புத்தக விமர்சனம் இது; அல்லது, இந்த நாவல் பற்றிய எனது புரிதல். நேற்று அந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன். இந்த நாவலின் உள்ளடக்கம் முற்றிலும் கற்பனையல்ல. சுந்தரபுத்தனின் தந்தை ஒளிச்செங்கோ (நடராஜன்) அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அங்கங்கே படம் பிடித்தது போன்ற நிகழ்வுகளின் தொகுப்பாக நீள்கிறது. அந்த வகையில், அவரது தந்தையின் வாழ்க்கைச் சரிதம். சுந்தரபுத்தனின் தாத்தா அந்நாளில் ஒரு பண்ணையாரிடம் சமையல்காரராக இருந்து சுவையான உணவு வழங்கி வந்தவர் என்றும், அதனால், அந்த பண்ணைவீட்டு அந்நாளையத் தொடர்பில், இந்நாளில் ஒரு சிறுவனாக அந்த பண்ணை வீட்டுக்கு தனது பாட்டியுடன் சென்று வருவதாக ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து [சுந்தரபுத்தனின்(!)] இருந்து தொடங்குகிறது நாவல். சுந்தரபுத்தனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவர் செயற்கை தவிர்த்த கிராமத்து சூழலின்.... இயற்கைக் காட்சிகளின் ரசிகன் மட்டுமல்ல; காதலன் என்பது. அது இந்த நாவலின் பல்வேறு பக்கங்களில் அங்கங்கே கொட்டிக் கிடைப்பதை மீண்டும் உணர முடிகிறது. குடும்பத்தில் மூத்த மகன் என்பதால், தாயால் 'பெரியவன்' என்று சொல்லப்படும், நடைமுறை பட்டப்பெயர்தான் இந்த நாவலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அதோடு நாவல் முழுக்க பரவிக் கிடக்கும் இன்னொரு விஷயம் ஒரு முழுநேர பத்திரிகையாளராக, ஒரு நிறுவனத்துடன் இணைந்து இல்லாமல், அந்நாளில் இருந்த ஒரே ஊடகமான செய்தி பத்திரிகைக்கு பணியாற்றுவதில் உள்ள சவால்கள்... சிரமங்களை 'பெரியவன்' நடராஜன் அவர்களின் அனுபவமாக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தரபுத்தன். இந்த நேரத்தில் எனது சொந்த அனுபவம் ஒன்றும் நினைவில் வருகிறது. நான் பொறியியல் பட்டம் பெற்று சில காலம் ஆசிரியப் பணியிலும் இருந்தபின், பத்திரிகை துறைக்கு செல்ல விரும்புவதாக கூறியபோது, 'என்ன வேலை?' என்ற என் தந்தையிடம் "நிருபராக" என்று சொன்னேன். அவருக்கு வந்ததே கோபம். ஒரு அரசு அலுவலகத்தில்... மாவட்டத் தலைநகர் கூட இல்லாத சிறு நகரம் ஒன்றில் மட்டுமே வாழ்ந்து பணியாற்றிய அவருக்கு 'நிருபர்' என்றவுடன், மனதில் என்ன மாதிரி பிம்பம் உருவாகியிருக்கும் என்பதை, இந்த நாவலில் நடராஜன் அவர்கள் படும்பாட்டில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நாவலின்படி, கதாநாயகன் நடராஜன் அவர்களுக்கு பல வேடங்கள். 'அவ்வைசண்முகி கமல்' மாதிரி! ஒருநேரத்தில், பத்திரிகையாளராக... ஒருவேளையில், விவசாயியாக, இன்னொரு கணத்தில், குடும்பத்தின் மூத்த மகனாக - தம்பிகள், தாய் உள்ளிட்டவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்புள்ளவனாக... மற்றொரு வேளையில் திராவிடர் கழக அனுதாபியாக.... என மாறி மாறி காட்சி தருகிறார். தந்தைப் பெரியாரின் தொடர் பயணங்கள், பிரச்சாரங்கள், மேடைப் பேச்சுகள் என்று சில வரி செய்திகளாக மட்டுமே அங்கங்கே படித்து அறிந்திருந்து என் தலைமுறை. அதன் சாமானியர்களுக்கு, அந்நாளைய யதார்த்தங்கள் பற்றி அதிகம் எட்டாத பல விஷயங்கள் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் நடத்திய பயிற்சி வகுப்புகளில் ஒரு பங்கேற்பாளராக நடராஜன் கலந்து கொண்டதை காட்சிப்படுத்தும்போது நாம் உணர்வது - ஒரு திராவிடர் கழகப் பற்றாளர் பற்றி மட்டுமல்ல. இது அந்த கட்சி எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவு என்றும் உணர்கிறேன். மேலும், தாய் கழகத்தில் இருந்து பிரிந்துவிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த நாட்கள் முதல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலம் வரையான நடப்புகளில் 'பெரியவன்' அனுபவமாக சுந்தரபுத்தனின் பார்வை இந்த நாவலில் அறங்கேறியுள்ளது. இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நடப்புகளை காட்சிப்படுத்தும்விதமாக அங்கெங்கே இடம் பெற்றுள்ள ஓவியர் மனோகரின் கோட்டோவியங்கள் அருமை. பின்னட்டையை அலங்கரிக்கும் தனராஜூ சுவாமிநாதனின் படைப்பும், இந்த நாவலுக்கும், புத்தகத்துக்கும் உயிரூட்டுகின்றன. இதையெல்லாம் தாண்டி, நாவலை முடித்தபோது தோன்றிய ஒரு எண்ணத்தைச் சொல்லாமல் விட்டால், அது நடுநிலை தவறிய விமர்சனம் என உணர்கிறேன். ஆங்கில நூல்கள் பலவற்றில் கவனித்திருக்கிறேன். அது நாவலோ, வேறு உரைநடையோ... எதுவாக இருந்தாலும், அதன் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்பவர் ஒருபுறமிருக்க... அதன்பின் Editor என்ற பெயரில், ஒருவர் அந்நூல் வெளியாகும் முன் அதில் இயங்குவது உண்டு. அதன்மூலம், படைப்பின் உள்ளடக்கத்தை இன்னும் செறிவாக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த Editor பணி செய்வோர் பொதுவாக பறந்துபட்ட நூல் அறிவும், உலக அறிவும் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால், ஒரு திரைப்படத்தில் எடிட்டர் செய்யும் வேலையை இவர்கள் எழுத்தில் செய்வார்கள் என்பது பிரபல, தேர்ந்த, ஆங்கில பதிப்புமுறை. ஆனால், அத்தகைய நடைமுறை, நான் அறிந்த வரை தமிழில் அரிதானது. முக்கியமாக படைப்பு இலக்கியத்தில் - மூச்.... நமது படைப்பாளிகள், அடுத்தவர் தனது படைப்பில் கை வைப்பதை விரும்பவே மாட்டார்கள். இந்த நிலை மாறுமா.... மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நான் அறிந்த வரையில் சுந்தரபுத்தன், தமிழ் சூழலில் நிறைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு சராசரி தமிழ் படைப்பாளியின் Ego கொண்டவரல்ல. இது எனது மதிப்பீடு. அதனால், ஒருவேளை 'பெரியவ'னுக்கு மேலே சொன்னது போன்றதொரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நாவல் இன்னும் மேம்பட்டிருக்கும் என்பதோடு, தமிழ் படைப்புலகில் ஒரு புதிய தொடக்கமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். தமிழ்வெளி பதிப்பாக வந்துள்ள 200+ பக்கங்கள் கொண்ட இந்த நாவல், சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பின்னுள்ள இடைக்கால தமிழக வரலாற்றின் சில யதார்த்தங்களை காட்சிப்படுத்துகிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. சுந்தரபுத்தனின் அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன்.

புதன், டிசம்பர் 17, 2025

சாமானியனுக்கும் AI....

அதிரா....

இதென்ன.... பெண்ணின் பெயரா.... ?

'ஆதிரை' என்ற பெயரைக் சங்கத் தமிழில் படித்ததாக... கேட்டதாக ஞாபகம். இதென்ன அதிரா... ஒருவேளை, வெற்றுமொழிச் சொல்லா...? அப்படியானால், இதற்கு என்ன பொருள்?

இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா...

AI... அதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் யோசிச்சி நம்ம நேரத்தை வீணடிக்க வைக்கிறாங்கப்பா என அலுத்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் யோசிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு குறித்து.... வருங்காலத்தில் பலரது வேலைக்கு வேட்டு வைக்கும் என்று சொல்லப்படும் நவீன தொழில்நுட்பமான AI குறித்து சாமானியர்களுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது என்ற கேள்வியோடு நின்றுவிடாமல்.... அதைத் தெரிவிப்பது எப்படி.... வரும் நாட்களில் புதிது புதிதாக எழும் பல சவாலை எளிதாகச் சந்திக்க... சமாளிக்க வேண்டும் என்றால், நம் எல்லாருக்கும் AIயின் அடிப்படைகளாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து... அந்த நோக்கத்தில்.... அதைப் பரவலாக்கும் திட்டத்தில் செயல்படும் ஒரு அமைப்பாக அதிராவை நான் உணர்கிறேன்.

அதிரா என்ற சொல்லே... அதன் ஆங்கில மூலமான ADiRA ... AI for Digital Readiness & Advancement (ADiRA) என்பதன் சுருக்கம்தான். இந்த அமைப்பு மூலம் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பரவலான புரிதலை உண்டாக்க AI in Tamil Ecosystem என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளனர். அதற்காக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். அந்தவகையில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் நான் பங்கேற்றேன்.

முரளி கிருஷ்ணன் பயிற்றுநராக விரிவான தகவல்களைத் தமிழில் பகிர்ந்து கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது போன்ற பல பயிற்சி வகுப்புகளில் உரையாடல் மொழி ஆங்கிலமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பயிற்றுநர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்றாலும் கூட பங்கேற்போர் அனைவருக்கும் தமிழில் சொன்னால் ”புரியாது” என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதைவிட கொடுமை என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த இது போன்ற வேறொரு துறை பயிற்சி வகுப்பில் நான் பணம் செலுத்தி பங்கு பெற்றேன். பயிற்று மொழி ஆங்கிலம் மட்டும் என்று வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துபூர்வமாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பயிற்சியின்போது, பயிற்றுநருக்கு தாய்மொழி ஹிந்தி என்பதால்.... தொடர் உரையின்போது.... சிக்கலான விஷயங்களைச் சொல்ல முயலும்போது... பலருக்கும் தம்மையும் மீறி தாய்மொழி சொற்கள்... வட்டார வழக்கு பிரயோகங்கள் உள்ளே நுழைந்துவிடும் என்பதால்... சுமார் 10 சதம்வரை அவர் ஹிந்தியில் பேசினார்.

”நீங்கள் ஹிந்தியில் குறுங்கதைகள் சொல்வதை நான் எதிர்க்கவில்லை; ஆனால், அதன் ஆங்கில மொழியாக்கத்தையும் தொடர்ந்து சொன்னால் நாங்களும் புரிந்துகொள்வோம் என்று போராடிப் பார்த்தேன். ஹிந்தியில் பயிற்றுநர் சொல்லும் அந்த குறுங்கதைகளைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது அதன் அடிப்படை சாரம் புரியாமல் தவிப்பேன். எடுத்துகொண்ட பாடத்தில் சொல்ல வேண்டிய விஷயங்கள் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லப்படும். இருந்திருக்கலாம். ஆனால், கோவிட் பெருதொற்றுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வாய்ப்பான E learing எனக் குறிப்பிடப்படும் மின்னணு தொலைக்கல்வியில்... அதற்கான பயிற்சி வகுப்புகளில்..... நாம் எதிர்பார்ப்பது பாடத் திட்டத் தகவல்கள் மட்டுமில்லை என்பதுதானே உண்மை!

பாடத் திட்டத் தகவல் மட்டும்தான் தேவை... விருப்பம்... எதிர்பார்ப்பு என்றால், ஏற்கனவே இருந்த தொலைத்தூரக் கல்வியின் அஞ்சல்வழி வரும் புத்தகங்கள் மட்டும் போதுமே! நமது விருப்பம் போல, ஓய்வான நேரத்தில் மெல்ல படித்துக் கொள்ளலாமே! மற்றவர்கள் எப்படியோ... ஆனால், நான் இதுபோல இணையத் தொடர்பு மூலம் (Recorded session அல்லாத) நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் தனித்தன்மையாக கருதுவது வேறு. பயிற்றுநரின் விரிவான அனுபவமும், நகைச்சுவையும், பிற ஆற்றலும் சேர்ந்தே இவ்வகையில் பகிரப்படுவதால், பயிற்றுநரின் தனித்தன்மை பொறுத்து, இத்தகைய வகுப்புகள் கொடுக்கும் உணர்வு தனிரகம். பல நேரங்களில் அந்தந்த துறையின் ஆகச் சிறந்த ஆளுமைகளோடு சில மணி நேரம் பயணித்த அனுபவங்களை நம் வீட்டில்.... அலுவலகத்தில் இருந்தே பெற்ற உணர்வை இந்த webinar கொடுப்பதாக நான் உணர்ந்ததுண்டு. அதைத்தான் இவ்வகையான பயிற்சி வகுப்புகளில் நான் எதிர்பார்க்கிறேன்.

AI குறித்து தமிழகத்தில்... தமிழ் மக்களிடம் அச்சமற்று அணுகும் அறிமுகத்தை உண்டாக்க முயலும் அதிராவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதோடு, இந்த பயிற்சி தற்போது அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தினரையும், மருத்துவ துறையினரையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுவதாக முரளி கிருஷ்ணன் தெரிவித்தார். விருப்பமுள்ள ஊடக அமைப்போ, மருத்துவமனையோ போதுமான எண்ணிக்கையிலான ஆர்வலர்களோடு அணுகினால், அவர்களது வளாகத்திற்கு சென்றும் இந்த பயிற்சி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கணினி தொழில்துறையில்... மென்பொருள் தளத்தில் முன்னிலையில் உள்ள தமிழர்கள் செயற்கை நுண்ணறிவு தளத்திலும் பின்தங்கிவிடவில்லை என்று சொன்ன முரளி கிருஷ்ணன், தமிழ் மொழி தொடர்பான பணிகளுக்கென தனியாக பல AI tools -ஐ உருவாக்கியுள்ளதுடன், சர்வதேசத் தேவைக்கான ஆங்கில மொழியில் செயல்படும் பல tools ஐயும் உருவாக்கி உலகின் முன்னணி பங்களிப்பாளர்களாக உள்ள தமிழர்கள்... அவர்களது tools ஐ பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அடிப்படை பயிற்சி முற்றிலும் கட்டணம் இன்றி, பங்கேற்பாளர்களுக்கு செலவு இல்லாமால் இலவசமாக வழங்கப்படுவதால், ஆர்வமுள்ள யாரும் இந்த பயிற்சியை பெறுவது நல்லது. வரும் நாட்களில் எழ வாய்ப்புள்ள சவால்களின்போது நாம் வழக்கொழிந்த.. தகுதியற்ற பின்வரிசைக்காரர்களாக நின்றுவிடாமல்... போட்டியில்.... முன்னணியில் நிற்க நம்பிக்கை தரும் ஆரம்ப பள்ளி பாடமாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் முழுமையாகக் பங்கேற்பவர்களுக்கு இதற்கான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் விவரங்களைப் பெற முரளி கிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண் : 9003319806.

விகடன் & தமிழ் ஹிந்து முன்னாள் ஆசிரியர் அசோகன் யூ ட்யுப் சேனல் பேட்டி - பகுதி 1

கடந்த வாரத்தில் நான் எழுதிய முகநூல் பதிவையொட்டி, விகடன் மற்றும் தமிழ் ஹிந்து முன்னாள் ஆசிரியரான அசோகன் தனது யூ டியுப் சேனலுக்கு பேட்டி தருமாறு கேட்டிருந்தார். அதன் முதல் பகுதி இன்று வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு இதோ...... நண்பர்கள் பார்வையிட்டு கருத்து சொல்லவும். நன்றி

சனி, டிசம்பர் 13, 2025

வீணாப்போன காங்கிரஸ், வீறு கொள்ளுமா? 

அண்மையில் மீண்டும் முகநூலுக்குள் வந்த நான், தொடர்ந்து அதில் எழுதி பங்கேற்பதுடன், எனது சுய விவரக்குறிப்புகளில் தொடங்கி...., மற்ற பலவற்றிலும் சில மாற்றங்களைச் செய்து... முகநூலை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ளவும், அதில் உள்ள பல வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் முயன்று வருகிறேன். அதையொட்டி, அண்மையில் இப்பக்கத்தை தொழில்முறை சார்புடையதாகவும் மாற்றியுள்ளேன். இதில் கண்ட புது விவரங்களை அறிந்த நண்பர் ஒருவரை தற்செயலாக நேரிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியதாக இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு, "மற்ற விஷயங்கள் பற்றியெல்லாம் எழுதும் நீங்கள், அரசியல் குறித்து அதிகம் எழுதுவதில்லையோ!" என்ற அவரது சந்தேகத்தைக் கேட்டார். 

அவரது புரிதல், ஒருவகையில் சரிதான். அதே வேளையில், முற்றிலும் முழுதாக நான் அரசியல் குறித்து எதுவுமே பேசுவதில்லை; எழுதுவதில்லை என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாது. நாட்டின்... மாநிலத்தின் நிர்வாக அரசியல் மட்டுமின்றி... கட்சி அரசியல் குறித்தும் அவ்வப்போது நானும் எழுதுவதுண்டு. ஆனால், ஒரு சராசரி பத்திரிகையாளன் பதிவு செய்யும் அளவைவிட எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று சொன்னால் அது சரி... எல்லாத்துறை குறித்தும் ஒரு மனிதன் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம், எல்லா அரசியல் நடப்புகளையும் பற்றி என் கோணத்தில் யோசித்து, நான் சரியென நம்பும் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கும் நேரம் வேண்டும். எல்லாரையும் போல, எனக்கும் உள்ள ஒரு தினத்தின் 24 மணி நேரத்தில் எழுத்துப் பணிக்குச் செலவிடும் நேரத்தில் - நான் அதிகமாக கவனம் செலுத்தும் நிதி, வணிக துறைகளின் முக்கிய நடப்புகள் குறித்து எழுத முடிவதே குறைவுதான் என்பதால்.... பொதுபுத்தியில் அரசியல் என புரிந்து கொள்ளப்படும் விஷயங்கள் குறித்து, நான் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், முற்றிலும் தவிர்ப்பதாகவோ, ஒதுங்கி நிற்பதாகவோ சொல்ல முடியாது. 

 சில தினங்களுக்கு முன்பு கூட, அறம் இணைய இதழின் ஆசிரியர் நண்பர் சாவித்திரி கண்ணன் எழுதிய பதிவு ஒன்றில் - "காயத்ரி கார்த்திக்" என்பவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், அந்தக் கட்சியின் எம்பியாக பதவியில் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு இணக்கமாகவும் செயல்படுகிறார் என்பது குறித்து பேசுகையில்.... "சசிதரூரின் மனைவி சுனானந்த புஷ்கரின் மர்ம மரண வழக்கு விசாரணை... அது குறித்த சந்தேகங்கள்.... விசாரணை பின்னர் புஸ்வாணமாகிப் போனது" என விவாதித்தபோது, பதில் பதிவாக எனது விமர்சன கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதை அப்படியே இங்கு உங்கள் முன் வைக்கிறேன். 

 "Gayathri Karthik... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதிலும், எப்போது தொடங்கி இவர் பாஜகவை மிகவும் நெருங்கிறார் என்று கூர்ந்து நோக்கினால் இந்த சந்தேகம் தவிர்க்க இயலாதது. கார்கேவை எதிர்த்து கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்ட போதே, ராகுல்... சோனியா தலைமையை இவர் ஏற்கவில்லை என்பது தெளிவானது - ஜனநாயகம் என்ற போர்வையில்...! அடுத்து, தனது ஆங்கில அறிவை ஆயுதமாக பயன்படுத்தி மயக்க முயன்ற அவரது பச்சா எடுபடவில்லை. இப்படி சொல்வதாலேயே சோனியாவை நான் ஆதரிப்பதாக எண்ணக்கூடாது. சோனியாவுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் பலர் போல, அவர் 'அந்நிய மண்ணில் பிறந்தவர்' என்பதால் நான் அவரை விமர்சிக்கவில்லை. ராஜீவ் மரணத்துக்காக, பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் பலியானாலும் பரவாயில்லை என வியூகம் வகுத்து பழி தீர்த்துக் கொண்டவர். அது மட்டுமல்ல. இவரது எதிர்பார்ப்புக்கு எல்லாம் ஒத்திசைய மாட்டார் என்பதால், பெருவாரி இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகவிடாமல் காய் நகர்த்தியவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியிருக்க, அவரது கட்சியில் இருப்பவர்கள் மட்டும் இவருக்கும், கட்சிக்கும் விஸ்வாசமாக இருப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?!. போபர்ஸ் ஊழல் விசாரணையை நிறுத்த, ஒரு ஆட்சியை ஆட்டம் காண வைத்து, ஒரு தனி நபர் அதை விலக்க முடியும் என்றால்.... அந்த சூழலில்தானே, சோனியா அரசியலில் அடி எடுத்து வைத்து, கட்சியை கைப்பற்றினார்!. பெருவாரி மக்களின் விருப்பத்தை, தனிநபரின் தேவைக்காக வளைக்க முடியும் என்றால்... அவரைத் தூக்கிப்பிடிக்கும் யாருக்கும்..... சசி தரூரைக் குறை சொல்லவோ... கேள்வி கேட்கவோ அருகதை இல்லை. சாமானியர்களான நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சசிதரூரை விமர்சிக்கலாம். வாக்காளர் என்ற வகையில் அதற்கு நாம் உரிமை பெற்றவர்கள்.” இரண்டு பக்கமும் நானே கோல் போடுவதாக நினைக்க வேண்டாம். இருவரில் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதுதான் என் வாதம்" என்று சொல்லி என் கருத்தை முடித்திருந்தேன். 

இது மட்டுமல்ல; வரவிருக்கும் தமிழகச் சட்டமன்ற தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வியூகம் என்ன.... ஒருபக்கம் - ஐவர் குழு அமைத்து திமுகவுடன் பேச்சு வார்த்தை என ஒரு முகம். இன்னொரு பக்கம் - காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தியை அனுப்பி தவெகவின் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை என இன்னொரு முகம்.... பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் விஜயைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி பலன் அடையலாம் என்ற யோசனை... அப்படி நடந்தால், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லையா.... பாத்துக்கலாம் என்ற அலட்சியமா.... அல்லது திமுகவை குறைத்து மதிப்பிடுவதா... எங்கெல்லாம் உங்களுக்கு சாதகமோ... அங்கெல்லாம் காய் நகர்த்தி மற்ற கட்சிகளை குறைத்து மதிப்பிடும் ஆணவம்... இந்த போக்கு மாறாதவரை, எதுவும் நடக்காது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால்.... அதற்கு காங்கிரஸ் கட்சி உழைக்காது; அதன் செயல்பாடுகளால் அது முடியாது; பாஜக மனது வைத்தால்தான் முடியும்!. அது சாத்தியமா.... அதற்கு வாய்ப்புண்டா என்றால்.... எதற்கும் ராகுலை நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால், யாராவது கேட்டுச் சொல்லுங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணம் - ஸ்டாலினைச் சகோதரன் என்று சொல்லிவிட்டு, அவரது கட்சிக்கு.... திமுகவுக்கு போக்கு காட்டும் காங்கிரஸின் செயல்பாடு புதிதல்ல. 

அண்மையில் நடந்து முடிந்த பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை எப்படி நடத்தினார்கள் என்பதைப் பார்த்தோம். ஜார்க்கண்ட் மாநில அமைச்சரையில் பதவியில் இருந்து கொண்டே, அவர்களுக்கு 2 இடங்களில் போட்டியிட கூட கூட்டணியில் இடம் இல்லை என்ற உங்கள் வியூகம், கடைசியில் என்ன ஆனது.... அதிக தொகுதியில் போட்டியிட்டு, சிறப்பான வெற்றியா... உத்திர பிரதேசத்தில் எம்பி தேர்தலில், அகிலேஷ் தயவில் ஓரளவு இவர்களது கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், ஹரியானா தேர்தலில் அகிலேஷ் கட்சியை நீங்கள் நடத்திய விதம் சரியா.... 

 காங்கிரஸ் கட்சியின் geneனே சரியில்லை; மரபணு மாற்ற சிகிச்சை செய்தால்தான் காங்கிரஸ் கட்சி தனது பெரியண்ணன் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளும் என்றால்... அந்த வைத்தியம் செய்யும் மருத்துவராக மோடியை அங்கிகரிப்பது காங்கிரஸ் கட்சிதான். மாநில அளவில் உள்ள நபர்கள்தான் காங்கிரஸ் கட்சி அண்மையில் அடைந்துள்ள அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று சொல்லி, பழியை வேறு திசைக்கு திருப்ப முயலக்கூடாது. காங்கிரஸ் தலைமைதான் காரணம். ரிமோட் கண்ட்ரோலில் தில்லியில் இருந்து அனைத்தையும் நிர்வகிக்கிறேன் என ஆண்டாண்டு காலாமாக நீங்கள் நடத்தும் மையப்படுத்தல் மனோபாவம்தான் இதற்கெல்லாம் காரணம். இன்றைக்கு அத்தகைய போக்கில் மாறியிருப்பதாக ராகுல் சில விஷயங்களில் தோற்றமளித்தாலும், இன்னும் காங்கிரஸ் கட்சி சோனியாவில் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

 எண் 24, அக்பர் சாலை, புது டில்லி என்ற இடத்தில் இருந்து..., எண் 9A,கோட்லா சாலை, புது டில்லி என்ற முகவரிக்கு அலுவலகத்தை மாற்றினால் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போதாது. அடிப்படையில் "பல ஆண்டுகாலம் இந்த தேசத்தை ஆண்ட கட்சி" என்ற மேலாதிக்க மனோபாவம், காங்கிரஸ் டெல்லித் தலைவர்களுக்கு... அதன் நிர்வாகிகளுக்கு மாறாதவரை காங்கிரஸ் கட்சியை மீட்க முடியாது - மோடி மனது வைத்தாலன்றி! 

பின்குறிப்பு : இன்றைக்கு தன் கட்சிக்கு சாதகமாக மாநில எதிர்க்கட்சிகளை உடைப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதாக பாஜகவை... அதன் என்டிஏ கூட்டணியைக் குறை சொல்லும் காங்கிரஸ் கட்சி, சோனியா தலைமையில் யுபிஏ கூட்டணி ஆட்சி காலத்தில் எத்தனை புனித காரியங்களில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதை, அப்போதே விமர்சித்து எழுதியிருக்கிறேன். "அந்தராத்மாவின் அட்டகாசங்கள்" என்ற தலைப்பில் அப்போது நான் எனது வலைப்பூ "நாலாவது கண்" (http://naalaavathukann.blogspot.com)-ணில் எழுதிய விமர்சனம், இப்போதும் அங்கு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதை அங்கு சென்று படிக்கலாம். மற்றவர்களுக்காக அதை அடுத்த பதிவாக இங்கேயே மறுபதிவு செய்கிறேன். 
#சந்திரன் #நாலாவதுகண் #காங்கிரஸ் #தவெக #பாஜக #நரேந்திரமோடி #மோடி #ராகுல் #சோனியா #அகிலேஷ் #ஸ்டாலின் #திமுக #ஜார்க்கண்ட்முக்திமோர்ச்சா #பிகார்தேர்தல் #பிரவீன்சக்ரவர்த்தி #அறம் #சாவித்திரிகண்ணன் #சசிதரூர் #கார்கே #சுனானந்தா #naalaavathukann #பத்திரிகையாளன் #Journalist

புதன், டிசம்பர் 10, 2025

இசை நாயகி குறித்து இன்னொரு பதிவு

"இசை நாயகி" என்ற பெயரில் சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி குறித்து பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நண்பர் பாஸ்கர் சக்தி ஒன்றல்ல; இதுவரை 2 பதிவுகள் போட்டுள்ளார் என்பதே அதன் முக்கியத்தை உணர்த்துகிறது. இன்னொரு பக்கம் நண்பர் சாவித்திரி கண்ணனும், இதுகுறித்து அறம் இணைய இதழில் எழுதியிருக்கிறார். எனது நட்பு வட்டத்தில் உள்ள... இந்த இருவரின் பதிவுகள் தவிர, இன்னும் ஏராளமான பதிவுகளும் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இவ்விருவரின் 3 பதிவுகளைப் படித்தபோது, நேரில் இந்த நிகழ்ச்சியை ரசிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன். ஆனால், நான் ஒன்றும் அத்தனை மகா இசைப் பிரியன் என்று சொல்வதற்கில்லை. கடந்த சில தினங்களில் எழுத்தாளர், இயக்குனர், தோழர் தமயந்தியின் பதிவு ஒன்றில் இசை எத்தனை எத்தனை மாயாஜலங்களையும், மீட்டெடுத்தலையும் செய்யவல்லது என்று புரிந்தது. இவரிடம் மட்டுமல்ல. யோசித்துப் பார்த்தால், நம் சக மனிதர்களிடம் இசை செய்து வரும் ரசவாதங்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. காயம்பட்ட மனங்களுக்கும்.... ஆற்றுதல் தேடும் உள்ளங்களுக்கும்... இசை எப்படி தோள் கொடுத்துள்ளது என்பதை நினைவுகூர முடிந்தது.
டிசம்பரில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது தற்செயலானதா... திட்டமிட்டு நடந்ததா... எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சென்னையின் டிசம்பர் சீஸன் என்பது மேட்டிமைக் குடிகளாக கருதிக் கொண்ட சிலரின்... சில தரப்பின் "டீ கடை பெஞ்ச்" என்ற கருத்தில்தான் நீண்டகாலம் இருந்தேன். அதன்பிறகு ஒருகட்டத்தில் - வீட்டுக்கு வெளியே வந்து.... சில மாமாக்களும், மாமிகளும் மாலைச் சிற்றுண்டிக்காக கூடுவதற்கான இன்னொரு Proxy ID இது என நினைத்ததுண்டு. இசைதான் பிரதானம் என்றால், ஏன் சென்னை தவிர மற்ற ஊர்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் டிசம்பரில் நடப்பதில்லை என்று யோசித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் டிசம்பர் சீஸனில் சபா நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு பெறுவதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அரசியல்... உள்ளடி நிகழ்வுகள்.... சபா நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் உள்ள சித்து விளையாட்டுகள் என பலவும் குறித்து கேள்விப்பட்டபோது... இதையும் கடந்து போவோம் என நினைத்துக் கொண்டேன். இப்படியாக, நான் மீடியாவுக்குள் நுழைந்த நாட்களில் இருந்து 'டிசம்பர் சீஸன்' குறித்த என் கருத்துகள் தொடர் மாற்றம் கண்டு வருகிறது.
ஆனால், இந்த டிசம்பரின் "இசைநாயகி" நிகழ்ச்சிக்கும்.... ஏற்கனவே "பெயர்" பெற்றுள்ள சென்னை சபாக்களுக்கும் தொடர்பில்லை என நினைக்கிறேன். இதில் கானா இசையும், சுஃப்பி இசையும்... இன்னபிற இசை வடிவங்களும் கூட ஆய்வு உரையாகவும், வரலாறாகவும், பாடல் வடிவிலும் அரங்கேறியுள்ளதாக உணர்கிறேன். அந்த வகையில் இப்போது என் நினைவுக்கு வருவது இயக்குனர் பாலச்சந்தரின் படப்பாடல், "பாடறியேன்... படிப்பறியேன்...."
ஏற்கனவே சொன்னதுபோல, எனக்கு பேரதிக ஆர்வம் இல்லை என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் என் மகளை வாய்ப்பாட்டு வகுப்புக்கு என் மனைவி அனுப்பி வைத்தார். கட்டணம் செலுத்தியது தவிர, எனக்கு அதில் எந்த பங்கும் இல்லை. ஆனால், எங்கள் வீடுள்ள பகுதியில் வசிக்கும் நெருங்கிய குடும்பங்கள் சில மட்டும் சேர்ந்து கொண்டாடும் தாமத புத்தாண்டு - ஜனவரி 1ம் தேதி இரவு நடக்கும் - நவீன கூட்டாஞ்சோறு நிகழ்வின்போது என் மகள் கற்ற ஒரு சாஸ்த்ரிய சங்கீத பாடலைப் பாடினாள். அது தெலுங்கு மொழி பக்தி கீர்த்தனையாக இருக்கலாம். ஆனால், அதில் கவனம் பெற்றது, அந்த இசையின் இடையே இருந்த Tongue twister. அது நெற்றிப் புருவங்களை உயர்த்த வைத்தது, என்னை மட்டுமல்ல. தொடர் பயிற்சிதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். ஆனாலும் பல்வேறு காரணங்களால், அந்த வாய்ப்பாட்டு பயிற்சியை என் மகள் தொடரவில்லை.
கல்லூரி படிப்பு முடித்து சில காலம் விரிவுரையாளராக பணியாற்றியபோது, எனது நண்பர் ஒருவர், தீவிர திரைப்பட இசை ரசிகர். பாட விரும்புவார். கண்களை முடிக் கொண்டு லயத்து உச்ச ஸ்தாதியில் பாடுவது மட்டுமின்றி.... எதனாலோ காதுகளையும் விரலால் மூடிக் கொள்வார். நிஜத்தைச் சொல்வதனால் அவர் குரலில் அந்த பாடல் அத்தனை தூரம் கரைந்து ரசிக்கும்படி இருந்ததில்லை. ஆனால், எனது நல்ல நண்பன் என்பதாலோ... எனக்கு அத்தனை இசை ஞானம் இல்லை என்பதாலோ நான் அவரை விமர்சித்தது இல்லை. விமர்சிக்கும் அளவோ... ஆலோசனை சொல்லும் அளவோ எனக்கு இசையில் விஷயம் தெரியாது என்பதுதான் உண்மை.
இப்படியாக, இசை குறித்த எனது தொடர்புகள் நீண்ட ரயிலின் தனித்தனி பெட்டிகள் ஒவ்வொரு நிறுத்தத்தில் துண்டிக்கப்பட்டது போல, அங்கங்கே நின்று போனதால்... இசைநாயகி நிகழ்ச்சி குறித்த எந்த முன் தகவலும் என்னை எட்டவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் இதை ஏற்பாடு செய்த அந்த 8 பெண்களுக்கும் எனது பாராட்டுகள். வாழ்த்துகள். அந்த 8 பேரில் எனக்கு நன்கு அறிமுகமான நண்பர் தீபாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறித்து மகிழ்ச்சி. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்.
#பாஸ்கர்சக்தி #சாவித்திரிகண்ணன் #அறம் #அறம்இணையஇதழ் #டிசம்பர்சீஸன் #தமயந்தி #தீபா #கானா

திங்கள், டிசம்பர் 08, 2025

யார் தருவார் இதற்கெல்லாம் தீர்வு?
அண்மையில் பெய்த மழையில் தாம்பரம் பெருங்களத்தூர் அருகில் அமைந்துள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றின் வில்லா வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதுடன், கழிவு நீரும் கலந்து மக்கள் பெருந்துயர் அடைந்ததாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. பார்த்திருப்பீர்கள். கட்டுமான நிறுவத்தைக் குறை சொன்ன ஆட்கள், போகிறபோக்கில் அரசின் மீது புகார் பட்டியல் வாசித்தார்கள். ஆனால், இது போலவும், மற்ற வகையிலும் கட்டுமான நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் புதிதல்ல. அரிதானதும் அல்ல. குறிப்பிட்ட அந்த வளாகத்திற்குள்ளேயும் நான் போயிருக்கிறேன். ஆனால், அப்போது என் இலக்கு அதுவல்ல. பின்னர் சரியான விசாரணைக்குப் பின் அருகில் இருந்த இன்னொரு பிரபல நிறுவனத்தின் இதே போன்ற வில்லா வளாகம் (Gated community) அடையாளம் கண்டு அங்கு சென்றோம். அதில் இருந்த ஒரு வில்லாவை வாங்கியவர் அதற்கு வங்கியில் வாங்கும் கடனுக்காக அந்த சொத்தை மதிப்பீடு செய்வதுதான் எனது பயணத்தின் நோக்கம். அப்போது எனக்கு பரிசீலனைக்கு தரப்பட்ட ஆவணங்களில் Construction Agreementபடி அனைத்து வசதிகளும் உள்ளதா என்று பார்க்க ... அவற்றை நேரில் பார்க்க வேண்டும் என கோரினேன். அது ஒவ்வொன்றும் வெவ்வேறு மூளைகளில் உள்ளதாக அங்கிருந்தபடியே பல திசைகளைக் காட்டினார்கள். "சரி... வாங்க... போய் பார்க்கலாம்" என்று கேட்டபோது, மெள்ள வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்ட அந்த நிறுவனப் பணியாளர் என்னை பார்த்த பார்வையும், விதமும், முனகலும் அலாதி. பின்னர் "அதெல்லாமே மக்கள் பயன்பாட்டில் பல காலமாக இருப்பதுதான் சார்... " என்றார். "சரி.... இப்போது எல்லா வசதிகளும் செயல்பாட்டில் உள்ளதுதான் என்றால், அதைப் பார்த்து இன்றைய தேதியில் அதை ஒரு போட்டோ எடுத்துவிடலாமே...!" என்று சொல்லியபடி நடக்கத் தொடங்கினேன். ஆனால், நின்ற இடத்தில் இருந்து நகராத அவர், "போட்டோ எடுக்கணும்னா, முன்னாடியே பர்மிஷன் வாங்கணும் சார்..." என்றார். "சரி... நெம்பர் சொல்லுங்க போன் போடறேன்" என்றபோது, "சார்... நீங்க கேட்ட உடனே எப்படி சார் பர்மிஷன் கிடைக்கும், நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை. சிஆர்எம்-ல கேக்காம, போட்டோ எடுக்க அனுமதி கிடையாது சார்..." என்றார். "இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் வரோம்ன்னு ஏற்கனவே பேங்க் மேனேஜர் சொல்லியிருங்காங்க!" என்று திரும்பி அருகில் இருந்த மேனேஜரைப் பார்த்தேன். அவரும், "ஆமாம்... உங்க சிஆர்எம்ல பேசிட்டுத்தான் வேல்யுவருக்கு கன்ஃபார்ம் பண்ணோம்" என்றார். இப்படியே வாதம் தொடர்ந்தது. வங்கி மேலாளர் முழுவதும் என் தரப்பில் நின்றார். "அவர் கேக்கற டாக்குமெண்ட் எல்லாத்தையும், பார்க்கணும் சொல்ற எல்லா வசதியையும் நீங்க காட்டித்தான் ஆகணும். இல்லாட்டி, அவர் கிட்ட ரிப்போர்ட் வராது. ரிப்போர்ட் இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாது. நீங்க யார் கிட்ட பேசணுமோ, பேசுங்க... நான் பேசணுமா சொல்லுங்க... வேல்யுவர் பேசணுமா.... பேசுவார்" என்று சொல்லி என்னைத் திரும்பிப் பார்த்தார். நான் அந்த நிறுவனப் பணியாளரைப் பார்த்தேன். "ஏன் மேடம்.... இவர் மட்டும்தான் இதெல்லாம் கேக்கறார்... வேற பேங்க்ல இருந்தும் எத்தனை பேர் வராங்க... போறாங்க... எல்லாரும் இப்படி நிக்கலையே!" என்று புலம்பினார். சொத்து வாங்கும் நபர், குற்றவாளியைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார். நான் தேவையில்லாத பிரச்னை செய்வதாக அவர் நினைத்தாரோ என்னவோ.... அந்த பார்வையில், "ஏன் சார் பிரச்னை பண்றீங்க!" என்ற கேள்வியிருந்தது. மீண்டும் திரும்பி பேங்க் மேனேஜரைப் பார்த்து, கண்ணில் அதே கேள்வி தொனிக்கப் பார்த்தார். மேனேஜர், "மேடம்... உங்க ரைட்ஸூக்காகத்தான் அவர் கேக்கறார்!", என்று சொத்து வாங்கும் பெண்மணிக்கு விளக்கம் அளித்தார். காலம் கடந்து கொண்டே இருந்தது. ஆனால் தீர்வு வரவில்லை. சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசிவிட்டு வந்த நிறுவனப் பணியாளர் வங்கி மேலாளரிடம், "மேடம்... நாளைக்கு வாங்க.... நான் ஏற்பாடு செய்து வைக்கிறேன்" என்றார். சொத்து வாங்கும் பெண்மணியில் முகத்தில் கலவரம் நீங்கி, அமைதி திரும்பி, மெல்லிய புன்னகை தெரிந்தது. வங்கி மேலாளர் என்னைத் திரும்பி பார்த்தார். "மேடம்.... ஏற்கனவே 3 நாளா பேசி... இப்பதான் வந்திருக்கோம்.... அடுத்த 3 நாள் நான் சொந்த வேலையா வெளியூர் போறேன். அப்புறம்... ஒத்துக்கிட்ட மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் வரணும். ஆனா, நாம் முன்னாடி சொல்லாமலே... எதோ சர்ப்ரைஸ் விசிட் வந்த மாதிரி பேசறாங்களே... இதே கேஸ்ஸுக்கு இன்னொரு முறை ஏன் நான் வரணும்" என்றேன். "ரைட்தான் ஸார்...!" என்றபடி போனை எடுத்தவர், சில எண்களை அழுத்தினார். மெல்ல நகர்ந்து சிறிது தூரம் சென்று அங்கிருந்து சில நிமிடங்கள் யாரிடமோ பேசிவிட்டு காத்திருந்தார். 5 நிமிடங்கள் ஓடின. மீண்டும் அவரது போனில் அழைப்பு வந்திருக்கும் போல. எடுத்து பேசினார். அங்கிருந்து அருகில் வந்தவர் அந்த நிறுவனப் பணியாளரிடம் போனைக் கொடுத்து... "இந்தாங்க...பேசுங்க!" என்றார். போனை வாங்கி பேசியவர், "சரி, சார்... காட்டிறேன் சார்..." என்று முடித்துக் கொண்டு என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு, வெறுப்பான முகத்தோடு, அலுவலகம் வந்து இன்னொரு ஆளை அழைத்து கூட அனுப்பி வைத்தார். இதில் 2 விஷயங்கள் எனக்கு புரிந்தது. 1. சொத்து வாங்க பல லட்சங்களை... சில நேரங்களில் கோடியும் கொடுத்து வில்லாவோ... பெரிய 3 BHK ஃப்ளாட் வாங்கும் நபர்களில் பெரும்பாலோர், நிறுவனம் காகிதத்தில் அச்சிட்டு தரும் விஷயங்கள் அனைத்தும் நிஜமாக செயல்பாட்டில் உள்ளதா என்பதை கவனிப்பதில்லை. 'இருக்கும்' என அவர்களாக நம்பிவிடுகிறார்கள். அத்தனை பேரிடம் இவ்வளவு காசு வாங்கும் கட்டுமான நிறுவனம் இதையா செய்யாமல் இருக்கும் என்பது அவர்களது அலட்சியத்துக்கு காரணமாக இருக்கலாம். நாம் கேட்காவிட்டாலும், பார்க்காவிட்டாலும்.... இங்கே வில்லா.... குடியிருப்பு வாங்கிய மற்றவர்கள் பார்த்திருப்பார்கள். நாம் இப்போது அதைத் தேடிப்போய் பார்க்காவிட்டால் என்ன என்ற சிந்தனை காரணமாக இருக்கலாம். அதைத் தாண்டி இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் இறுக்கமும், உறுதியும் காட்டினால் அங்கே வசிக்கும் காலத்தில் நமக்கான மற்ற பிற சேவைகள் வேண்டிச் செல்லும்போது தர்மசங்கடம்... இழுத்தடிப்பு... தாமதம் வரலாம் என்ற அச்சம்.. அல்லது முன்னெச்சரிக்கை காரணமாக பலரும் தனியாக நின்று எதையும் வலியுறுத்துவதில்லை. இதைத்தாண்டி, இதுபோன்ற பெருந்திட்டங்களில் முதலீடு செய்யும் பெரும்பாலோர் அதை ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் அங்கே வசிப்பதில்லை. அதனால், எந்த வசதி இல்லை; எது இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொள்வதில்லை. ஆனால், அங்கேயே குடியிருக்கும் நபர்களுக்குத்தான் இது போன்ற பிரச்னைகள். இப்படி எதாவது பிரச்னை வந்தால், அவற்றை சாமளிக்க தெரிந்த களப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், இதை ஒரு சேவை குறைபாடு என உணர்வதே இல்லை. 2. சொத்து வாங்கிய நபர்கள்தான் அதை கவனிக்கவில்லை. அவர்கள் கடன் வாங்கும் வங்கியின் சார்பில் களத்துக்கு வரும் வங்கி மேலாளர்... மதிப்பீட்டாளர் போன்றவர்களையாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதையும் செய்வதில்லை. மாறாக, என் வேலையைச் சரியாக செய்வேன் என்று உறுதியாக நிற்கும் வங்கி தரப்பினரையும் தலைவலியாகக் கருதும் பலர்தான் இதுபோன்ற சில கட்டுமான நிறுவனங்களின் ஆதார வலிமை. மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நாம் ஏன் தவிர்க்க வாய்ப்புள்ள கேள்விகளைக் கேட்டு தனிநபர் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பல நபர்களின் சுயநலமும் இதுபோன்ற சூழலுக்கு தீனி போடுகிறது என்பதுதான் உண்மை. Construction agreementல் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களும், களத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக Completion certificate கொடுக்கும் அதிகார வர்க்கமும் இதற்கு பொறுப்பு. ஆனால், அவர்கள் களத்திற்கு வரும்போது அவர்களைத் திருப்திபடுத்திவிட்டு, சான்றிதழ் வாங்கிக் கொள்ளும் பல நிறுவனங்கள் அதைப் பராமரிப்பதை சரியாகச் செய்வதில்லை எனவும் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அந்த வளாகத்தில் உள்ள சொத்து உரிமையாளர்களின் கூடுமுயற்சி இருந்தால் ஒப்பந்தப்படியான சேவை குறைபாடுகளுக்கு இன்றுள்ள ஒரே விடை - நுகர்வோர் நீதிமன்றமும், RERAவும்தான். ஆனால், இதுவும் கூட ஒவ்வொரு திட்ட ஆவணங்களைப் பொறுத்து மாறுபடும் வாய்ப்புள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளாத வரை இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடிவு காலம் இல்லை

வெள்ளி, டிசம்பர் 05, 2025

வீட்டுக் கடன் வட்டி : அதிகமா..? அப்பட்டமான பகல்கொள்ளையா? - பகுதி 2 "வீட்டுக்கடன் வட்டி விஷயத்தில்... இன்றுள்ள வட்டி அதிகமில்லை; அப்படி சொல்வதற்கான நியாயம் எதுவுமில்லை" என்று சொன்னதோடு, "இப்படிச் சொல்வதால், நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்” என்பதுதான் முந்தைய முதல் பகுதியில் எனது கருத்து. இப்படி நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இன்று வங்கிப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு, அவர்களது பணி ஒவ்வொன்றிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, நெருக்கடிகள் அதிகமாக இருப்பதால்... இதைச் சமாளிக்க... வாடிக்கையாளர் ஒத்துழைப்பும் தேவை என... இப்போதெல்லாம், ஓரளவு வாடிக்கையாளர்களை மதிக்கிறார்கள். ஆனால், இன்னும் 6 மாதத்தில் வீட்டுக் கடனை முழுவதுமாக முடிக்கப் போகும் நானோ.... நான் வீட்டுக்கடன் வாங்கிய நாட்களில் கடன் வாங்கிய மற்றவர்களோ... எங்களது நாட்களில் வங்கி அதிகாரிகளைச் சந்திக்க சென்றால்... குறிப்பாக வீட்டுக் கடன் வாங்க வரிசையில் நின்றால்... எங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு... நாங்கள் கிள்ளுகீரைகள். இது, என் கருத்து மட்டுமல்ல; என் வயதுள்ளவர்கள் பலரது கருத்தும் இதுதான். வீட்டுக்கடன் வட்டி... அதில் உள்ள பல வாய்ப்புகள்... வட்டி விகித மாறுபாடு, அதற்கான நிபந்தனைகள், இதர வாய்ப்புகள் என.... பலவும் குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் சொல்ல வேண்டும் என அவர்கள் எண்ணியதே இல்லை. அந்த அளவு, அவர்களுக்குப் பொறுமையில்லை என்பது முதல் காரணம். வாடிக்கையாளர்களும், அதில் ஆர்வம் காட்டவில்லை என்பது மறுகாரணம். கடன் மற்றும் வட்டி குறித்த பல்வேறு நிபந்தனைகளை, தொடர்புள்ள பிற அம்சங்களை முழுமையாக புரிந்து கொண்டபின், அதற்கு உடன்பட்டுத்தான் கடனைப் பெறுவதாக உணர்ந்து... அதன்பின், அடுக்கிக் கொடுக்கப்படும் பக்கம் பக்கமான ஆவணங்களில்.... பக்கத்துக்கு இரண்டாக கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு.... எப்போது வெளியே வருவோம் என்ற நிலைக்கு நம்மை தள்ளிவிடுவார்கள். எங்களுக்கு முந்தைய தலைமுறை நிலை இன்னும் மோசம். அப்போது இத்தனை வங்கிகளில் வீட்டுக் கடன் வாய்ப்பே கூட இல்லை. அதோடு, வீட்டுக் கடன் வாங்க நினைத்தால் அதற்குமுன் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளாவது, அந்த வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி... அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான Margin money. அதுதான் உங்களுக்கு கடன் கிடைப்பதில் முன்னுரிமை பெற்றுத் தரும் 'ரிசர்வேஷன் டிக்கெட்'. அது இல்லாவிட்டால், உங்களுக்கு கடன் கிடைக்கும் என எந்த உத்தரவாதமுமில்லை. கிடைக்கலாம். ஆனால், அது ஒரு சான்ஸ்... வாய்ப்புதான். இதுமாதிரி இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தேவைப்பட்டால் பின்னர் பார்க்கலாம். இப்போது வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியைக் குறைப்பது எப்படி என்ற விஷயத்துக்கு வருவோம். கடந்த பகுதியில் சொன்னது போல, 20 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும்... இன்னொரு 20 லட்சத்துக்கு மேல் கட்ட வேண்டியிருக்கிறது என்பதுதானே பிரச்னை. இதில் நமக்கு இஎம்ஐ (EMI)என, அதாவது மாதாந்திர தவணைத் தொகை என, கணக்கிட்டுச் சொல்லப்படுவது - நாம் ஒப்புக் கொண்ட வட்டி விகிதத்தில்... ஒப்புக் கொண்ட காலத்துக்குள்... வாங்கிய கடன் தொகை மட்டுமின்றி, அதற்கான வட்டியையும் சேர்த்து முழுவதுமாக கட்டி முடிக்க.... - இன்று தொடங்கி மாதந்தோறும், ஒரே அளவாக எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதே!. சரி.... கடனைக் கட்டி முடிப்பதற்குமுன்.... இடைப்பட்ட காலத்தில், நாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வட்டிவிகிதத்தில் மாற்றம் வந்தால்...? வரும்... அவ்வப்போது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்.... ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்ற பெயரில்... நடப்பில் உள்ள கடன் வட்டி அளவை மாற்றுகிறார்களே.... பத்திரிகைகளுலும், டிவியிலும் செய்தி வருகிறதே! அந்த மாதிரி நேரத்தில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறும். ரெப்போ அதிகரித்தால்... உங்கள் கடன் வட்டியும் கூடலாம்; அப்போது, ஏற்கனவே ஒப்புக் கொண்டதைவிட கூடுதலாக வட்டி கட்ட வேண்டி வருமில்லையா... அந்த சூழலில் வங்கிகள் என்ன செய்யும் என்றால்... உங்களுக்கு ஒரு இ மெயில் மூலம் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, நாம் கடன்தவணை செலுத்த வேண்டிய காலத்தை... மாதங்களின் எண்ணிக்கையை... பெரும்பாலும் அவர்களாகவே அதிகரித்துவிடுவார்கள். அரிதான நேரங்களில் மட்டுமே நம்மிடம் கருத்து கேட்கப்படும். அல்லது, கருத்து கேட்டதாகக் குறித்துக் கொள்ளப்படும் போல. இதனால், சில மாதங்களில் தொடங்கி, பல மாதங்கள் வரை கூட நமது தவணைக்காலம் அதிகரிக்கலாம். ஆனால், ரெப்போ குறைப்பினால், ஒருவேளை வீட்டுக்கடன் வட்டி குறைந்தால்.... நீங்களே பத்திரிகையிலோ... டிவியிலோ... இது குறித்த செய்தியைப் பார்த்து தெரிந்து கொண்டபின், சிறு கால இடைவெளிக்குப் பின்... நேரில் சென்று இதற்கென, அவர்கள் வைத்திருக்கும் தனி விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து... வங்கியைப் பொறுத்து, ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்தினால் மட்டும்தான், அடுத்து வரும் காலத்தில் இந்த வட்டி குறைப்புக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். ஒருவேளை அப்படி நடந்தால், நீங்கள் கட்ட வேண்டிய மாத தவணையின் எண்ணிக்கையும், அதனால் காலமும் குறையும் வாய்ப்புள்ளது. ஒப்புக் கொண்ட காலத்துக்கு முன்பே வீட்டுக் கடன் முடிந்துவிடும். ஆனால், நீங்கள் போய் முறையிடவில்லை என்றால்.... எதுவுமே நடக்காது போல, வங்கி உங்களிடம் கூடுதல் வட்டி வாங்கிக் கொண்டே இருக்கத் தயங்காது. பலரது நிலை இதுதான். கடந்த சில ஆண்டுகளுக்கும், அடுத்து வரக் கூடிய இன்னும் சில ஆண்டுகளுக்குமான பொதுவான பொருளாதார கணிப்பு... வட்டி விகிதங்கள் வரும் நாட்களில் இன்னும் குறையலாம். அல்லது அதே நிலையில் நீடிக்கும் என்பதே. எனவே, குறையும் நேரங்களில் உங்களது முன்முயற்சி இருந்தால், வட்டியை சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டித் தொகையின் அளவைக் குறைக்கலாம். இதுதான் கடன் வாங்கிய அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரே வாய்ப்பு! மற்றதெல்லாம் சிலருக்கு பொறுந்தும்; பலருக்கு வாய்ப்பில்லை மொத்தவட்டி அளவைக் குறைக்க உள்ள 2வது வாய்ப்பு - Pre payment என குறிப்பிடப்படும். அதாவது, மாதந்தோறும் நாம் செலுத்தும் தவணைத் தொகை மட்டுமின்றி... கூடுதலான இன்னும் கொஞ்சம் பணத்தையும் சேர்த்துக் கட்டுவது. இஎம் ஐ என, நாம் செலுத்தும் தொகை - பொதுவாக... நாம் வாங்கிய கடனுக்கு அன்றைய தினம் வரையான வட்டி + நாம் வாங்கியுள்ள நிகரக் கடன்தொகையில் ஒரு சிறிய பகுதி.. இரண்டும் சேர்ந்ததாக இருக்கும். அதாவது, வணிக வார்த்தைகளில் ஆங்கிலத்தில் சொல்வதானால்... A share of Principal loan amount & accured loan interest till date. இரண்டும் சேர்ந்த தொகை. எனவே, நாம் ஒரு தவணைத் தொகையைச் செலுத்தியவுடன்.... அதிலிருந்து, பாக்கியுள்ள வட்டித் தொகையை முதலில் எடுத்துவிடுவார்கள். மீதி தொகை, ஆரம்ப கடன்தொகையில் வரவு வைக்கப்படும். இதனால், அடுத்த மாத கடன் பாக்கி சற்றே... அதாவது சில பத்துகளில்... அல்லது சில நூறுகளில் குறையும். அதிகபட்சமாக 4 இலக்கத்தை எட்டிப் பிடிக்கலாம். உங்கள் மொத்த கடன்தொகை, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றைப் பொறுத்தது, இது!. ஆகவே, ஆரம்ப நாட்களில் நீங்கள் செலுத்தும் கடன்தவணையின் பெருந்தொகை வட்டிக்கும். மிகச் சிறிய பகுதி மட்டும் கடனைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படும். அந்த நேரத்தில் கணக்கு பார்த்தால், நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும். அதிரவில்லை என்றால்தான் ஆச்சரியம். கடன் தவணை கால இறுதி மாதங்களில் அதே மாதத் தவணையை நாம் செலுத்தினாலும், அதில் பெரும்பகுதி கடன்தொகையைக் குறைக்கவும் சிறிய பகுதி மட்டுமே வட்டிக்கும் போகும். இந்த நாட்களில்.... நேரத்தில் நாம் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. இதனால், நாம் முன்பே சொன்னது போல Pre payment என்ற வகையில்.. அவ்வப்போது நம்மால் முடிந்த கூடுதல் தொகையை.... அந்த மாதத் தவணையைத் தாண்டி... கூடுதலாகச் செலுத்தினால், அந்த தொகை நேரடியாக கடன் பாக்கியில் வரவு வைக்கப்பட்டு, மீதிமுள்ள கடன்தொகை அளவைக் குறைக்கும்... அதற்கு இணையாக, வட்டி அளவும் குறையும். ஆனால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்துக்கு இவ்விதம் கூடுதல் பணத்தை செலுத்துவது என்பது - பேசுவதற்கும்.... இதுபோல எழுதுவதற்கும் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை. இதைப் படிக்கும் நீங்கள் வீட்டுக் கடன் தவணை செலுத்துபவராக இருந்தால் இந்த உண்மையை உணருவீர்கள். "வீட்டுக்கடன் வட்டியை இவ்வளவு குறைக்கலாம்... இப்படி குறைக்கலாம்" என பல யூ டியூப் சேனல்களில் சொல்லப்படும் யோசனைகள் எல்லாமே இந்த ரகம்தான். "கையில் கிடைக்கும் கூடுதல் பணத்தை அப்படியே வீட்டுக் கடன் தொகைக்கு செலுத்தி வட்டியைக் குறைத்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு பணத்தை இப்படி கூடுதலாக செலுத்த முடியுமோ, அந்த அளவு முன்னதாகவே கடன் முடிவுக்கு வரும். அப்போது நீங்கள் கட்டும் கடன்வட்டியும் குறைவாக இருக்கும்" என்கிறார்கள். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சராசரி மனிதனின் வருவாயில், அவர் வணிகராக இல்லாத நிலையில், "கூடுதல் பணம்" எப்படி வரும்... வந்தாலும் எவ்வளவு வரும்.... நான் இங்கே சொல்வது நியாயமான வழியில்.... சிக்கல் இல்லாமல் வரும் பணம். சிலருக்கு பரம்பரை சொத்தில் இருந்து... அதன் விற்பனையிலிருந்து... மிகச் சிலருக்கு லாட்டரி உள்ளிட்ட எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டத்தில் அப்படி பணம் வரலாம். ஆனால், எல்லாருக்கும் வருமா என்றால்.... வாய்ப்பில்லை ராஜா!. எனவே, இது போன்ற விஷயங்களில் நடைமுறை யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டால்.... வேறு வாய்ப்புகள் உண்டா என்றுதான் பார்க்க வேண்டும். நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம் 1. மிகப் பெரிய அளவில் கூடுதல் வருவாய் வராது என்றாலும், வீட்டுக் கடன் பெறும் பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு தீபாவளி போன்ற நேரங்களில் கிடைக்க வாய்ப்புள்ள போனஸில் இருந்து ஒரு பகுதியும், மற்ற வகையில் கொஞ்சம் புரட்டியும், கூடுதலாக ஆண்டுக்கு ஒரு தவணையாவது... அதாவது, ஆண்டுக்கு 12 தவணையைத் தாண்டி, 13 வது தவணை என ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக ஒருமுறை செலுத்த முடிந்தாலே... முயன்றாலே.... கடன் தவணைக் காலத்தைச் சில ஆண்டுகள் வரை குறைக்க முடியும். அதனால், சில லட்சங்களை மிச்சம் பிடிக்கலாம். (வீட்டுக் கடன் பெறும் மிகப் பெரும்பாலோருக்கு இது சாத்தியம் என நான் நம்புகிறேன்) 2. ஒருவேளை சிலருக்கு கூடுதல் வருவாய்... கூடுதல் பணம் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை முழுவதுமாக வீட்டுக் கடன் வட்டியில் செலுத்த வேண்டுமா என்பதற்கு எனது பதில்.... அவசரப்பட வேண்டாம் என்பதுதான். காரணங்கள் இவை. நல்ல வேளையாக.... இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வணிக ரீதியில் இல்லாத தனிநபர் வீட்டுக் கடன்களில், மாதத் தவணையைவிட, கூடுதலாகச் செலுத்தும் தொகைக்கு Prepayment penalty வசூலிக்கும் முறை இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், வணிக ரீதியிலான கடன்களுக்கும், தற்போதுள்ள பாக்கித் தொகை முழுவதையும் ஒரே நேரத்தில் செலுத்துவோருக்கும் சில வங்கிகள் இப்போதும் அபராதத் தொகையை வசூலிக்கின்றன. அதனால், இவ்விதமான நடைமுறையின் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். 3. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு சில வரிச் சலுகைகளை இந்திய வருமான வரித் துறை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரிச் சட்டத்தின்படி அந்த வரிச் சலுகைகள் வாபஸ் பெறப்பட்டு, வேறு நடைமுறைகள் கொண்ட புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனினும், வரி செலுத்தும் நபர் தனது விருப்பப்படி பழைய விதிகள்... புதிய விதிகள்.. என எதையும் தேர்ந்தெடுத்து, அதன்படி கணக்கிட்டு வருமான வரி செலுத்தலாம் என்பதால், தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அவரது வருவாய்.... பிற சலுகை வாய்ப்புகள்.... போன்றவற்றைப் பொறுத்து எது அவருக்கு சாதகமாக... அமைகிறதோ அதன்படி முடிவு எடுக்கலாம். காரணம், வருமான வரிச் சட்டத்தின்படி, வரிச் சலுகையாக, ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் கணிசமானத் தொகையைச் சேமிக்க முடியும். அதில் வீட்டுக் கடனுக்கு நாம் செலுத்தும் அசல்தொகையையும் சேர்த்து, பிரிவு 80சியின்படி பல வகை சேமிப்புகளுக்கு வரிச்சலுகை உண்டு. அந்தச் சலுகை பெறும் வேறு சேமிப்புகள் எதுவும் உங்களுக்கு இல்லாத பட்சத்தில், இந்த தொகையாக மட்டுமே 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். அதேபோல, கடன் பெற்ற வீட்டில்தான் தற்போது நீங்கள் வசிப்பவராக இருந்தால், வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டி தொகைக்கு வருமானவரிச் சட்டப்பிரிவு 24(B)வின்படி 2 லட்ச ரூபாய் வரை சலுகை உள்ளது. மொத்தமாக, 3.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை பெற வாய்ப்புண்டு. எனவே நீங்கள் விரைவாக கடனைச் செலுத்தி அதன்மூலம் பெரும் வட்டி சேமிப்பு எவ்வளவு என்பதையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும் வருமான வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மொத்தமாக சேமிக்க வாய்ப்புள்ள தொகை எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுப் பார்த்து, எது உங்களுக்கு அணுகூலமோ அதைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலிதனம். வெறுமனே, வீட்டுக் கடனை முன்னதாக அடைக்கிறேன் பேர்வழி என, கண்மூடித்தனமாகக் காரியத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. அதுதான் நிதிசேமிப்பில் சரியான வியூகமாக இருக்கும். எனினும், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி சட்டமும், அந்த முறையும்தான் வழக்கில் இருக்கும்; பழைய வரிக்கணக்கீட்டு முறை செல்லாது என மத்திய அரசு ஒரு முடிவு எடுக்குமானால், இந்த வாய்ப்பும் சலுகைகளும் இல்லாமல் போகலாம். ஆனால், இன்றைய நிலை - சலுகை உண்டு!. 4. இதுபோக, நீங்கள் எந்த வங்கியில் அல்லது நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளீர்கள்... என்ன வட்டியில் கடன் பெற்றுள்ளீர்கள் என்பதும் முக்கியம். சிலர் தங்களது சொத்து தொடர்பான ஆவணங்கள் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால், சில தனியார் வங்கிகளில்.... வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள். அங்கே வட்டி அதிகம் என்றாலும், வேறு வழி இல்லை என்பதால் இம்முடிவுக்கு வருகிறார்கள். மாறாக, இன்னும் சிலர் தங்களது அவசரம் கருதி... பொதுத்துறை வங்கிகளில் காலதாமதம் ஆகும் என்பதால், காத்திருக்க வழியில்லாமல் அதிக வட்டிக்கு கடன் பெற்றிருந்தாலும் பின்னர் அதை வேறு வங்கியில் கிடைக்கும் குறைந்த வட்டிக் கடனாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும், இந்த மாற்றத்துக்கு எவ்வளவு செலாவாகும் என்பதையும் கணக்கிட்டு, அதைத்தாண்டி சேமிப்பு இருப்பதாக கருதினால் மட்டுமே காரியத்தில் இறங்க வேண்டும். Loan transfer / takeover என்ற இந்த முயற்சியில், மாறிச் செல்லும் வங்கியின் கடன் பரிசீலனை கட்டணம், வழக்கறிஞர் சேவைக் கட்டணம், மதிப்பீட்டாளர் கட்டணம் போன்றவை தவிர எந்த வங்கியில் / நிறுவனத்தில் இருந்து மாற நினைக்கிறீர்களோ அந்த நிறுவனம் விதிக்கும் Pre closure charges போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். தீபாவளி... பொங்கல் போன்ற விழாக்காலங்களில் சலுகைத் திட்டமாக சில வங்கிகள் பரிசீலனை கட்டணம் உள்ளிட்டவற்றில் தள்ளுபடி சலுகை வழங்குவதும் உண்டு. திட்டமிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்வது பல ஆயிரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும். 5. இவை அனைத்தையும் தாண்டி, பல ஆண்டுகளாக காகிதத்தில்... பேச்சில் இருந்த மற்றொரு யோசனைக்கு அண்மையில் உயிரூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கைப் பொறுத்து, வீட்டுக் கடன் பெறும் நபரின் வட்டி மாறுபடும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாம். அதாவது ஒரு நபரின் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், அவருக்கு சற்றே குறைந்த வட்டியிலும், மற்றவர்களுக்கு வங்கியின் இயல்பான வட்டியிலும் கடன் தரப்படுவது சில வங்கிகளில் அமலுக்கு வந்துள்ளது என்கிறார்கள். ஆனால், இதை வங்கி அதிகாரிகளே உங்களுக்குச் சொல்வார்கள் என நம்பினால், நீங்கள் ஒரு அப்பாவி. முதலில் சில வங்கிகளில் பேச்சு வார்த்தை நடத்தி, அவ்வங்கியிடம் Pre sanction approval கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டி நீங்கள் விரும்பும் வங்கியில் பேரம் பேசித்தான் இவ்விதமான வட்டி குறைப்பு சாத்தியமாகிறது என்பது மேற்கண்ட சலுகையைப் பெற சொல்லப்படும் யோசனை. எனவே, எல்லா வங்கிகளும் இன்று Floating rate என்ற வகையில்தான் வீட்டுக் கடன் தருவார்கள் என்றாலும், ஆரம்பகால வட்டியை சில புள்ளிகள் குறைவாகத் தொடங்கினால், அந்த சேமிப்பும் உங்களுக்குத்தானே!

திங்கள், டிசம்பர் 01, 2025

வீட்டுக் கடனுக்கான வட்டி : அதிகமா...? பகல் கொள்ளையா? அண்மையில் ஒரு யூ டியுப் வீடியோ பார்த்தேன். வீட்டுக்கடன் வட்டி குறித்து பேசப்பட்டிருந்தது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்டத் தொகையை, இன்ன வட்டியில் குறிப்பிட்ட ஆண்டுக்கு வீட்டுக் கடனாகப் பெற்றிருந்தால், அதற்கான வட்டியும், முதலும் சேர்த்து மொத்தமாக எவ்வளவு தொகை கட்டுவோம் என கணக்கிட்டு காட்டி... வட்டியாக மட்டும் இவ்வளவு கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லி.... "அய்யோ... இவ்வளவு பணம் வட்டியா... வாங்கிய கடனைவிட கட்டற வட்டி அதிகமா இருக்கே...!?". என அதிர்ச்சியை வெளியிட்டு... அதை குறைக்க யோசனை....வழி... என இன்னும் அந்த வீடியோ நீள்கிறது. நாம் விஷயத்துக்கு வருவோம். இதைப் பதிவைப் படிக்கும் நபர்களில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் யாரும் இருந்து... இஎம்ஐ (EMI) என்ற பெயரில் மாதந்தோறும் அவர்கள் கட்டும் வட்டி குறித்து பின்னோக்கி நீங்கள் கணக்கிட்டு பார்த்திருந்தால்... நீங்களும் அந்த அதிர்ச்சியை உணர்ந்தவர் பட்டியலில் இடம்பெறக்கூடும். மறுப்பதற்கில்லை. வங்கிகள் நிறைய வட்டி வாங்குகிறார்களோ என்ற வருத்தம் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி சொல்லி, புலம்பிய பலரை, நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வருந்துவது, புறத்தோற்றத்தை மட்டுமே நம்பி! உண்மையை நம்பியல்ல. இந்த தோற்றம் நிஜத்தின் ஒரு பாதிதான். மறுபாதியையும்.. அதாவது மறுபக்கத்தையும் பார்த்தால்தான், நமக்கு இதில் உள்ள தோற்றப் பிழை புரியும். அதைப் பற்றி பலர் பேசுவதில்லை. பேசுவது என்ன.... கடன் வாங்குவோரில் பெரும்பான்மையானவர் அதை உணர்வதேயில்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்காக, இதை அவர்களின் குற்றமாகவோ... குறையாகவோ சொல்லவில்லை. அது யதார்த்தம் இல்லை. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், வீட்டுக் கடன் வட்டி குறித்து இன்னும் கூடுதலாக அவர்களுக்குப் புரிய வைத்து... அந்த கடனை அடைத்தவர்களின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்கமாகச் சொல்லி புரிய வைத்தால்.... இந்தக் கடனைச் சுமந்த பளுவின் வலியை மறந்து மகிழ்வார்கள்... இன்னும் சிறப்பாக உணர்வார்கள் என நினைக்கிறேன். புரிதலுக்காக, ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒருவர் ₹20,00,000/-வீட்டுக் கடன் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அந்தக் கடன்தொகைக்கு.... ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி.... 20 ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால்... அவரது மாதாந்திர கடன் தவணைத் தொகை எவ்வளவு இருக்கும்?. இணையத்தில் உள்ள, குறிப்பிட்ட ஒரு வங்கியின் கால்குலேட்டர் கணக்குப்படி மாதந்தோறும் ₹16,730/- மற்ற வகையில் கணக்கிட்டாலும் மிகப் பெரிய வேறுபாடு இருக்காது. அதிக பட்சம் ₹17,000/-இருக்கலாம். கால்குலேட்டர் போட்டக் கணக்குப்படி, இதை 20 ஆண்டுகளுக்கு... அதாவது 240 மாதங்களுக்கு தொடர்ந்து அவர் செலுத்தி வந்தால், அவர் செலுத்தும் மொத்தத் தொகை ₹40,15,000/- வாங்கிய கடன் தொகை ₹20 லட்சத்தைக் கழித்துவிட்டால், அவர் வட்டியாக மட்டும் செலுத்திய தொகை ₹20,15,000/- அதாவது, 20 லட்சம் கடனுக்கு வட்டியாக மட்டும் கட்டும் தொகை 20 லட்சத்துக்கு மேல். பலரது புரியாத புலம்பலுக்கு இதுதான் காரணம். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒரு சின்ன முயற்சி. ஒரு தலைகீழ் முயற்சி என்றும் சொல்லலாம். அதாவது, நாம் வங்கியில் வாங்கும் கடன்தொகை ₹20,00,000/-க்கு பதிலாக.... நம்மிடம் கையிருப்பாக ₹20,00,000/-இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். அந்தப் பணத்தை வங்கியில் ஒரு வைப்பு நிதி (Fixed Deposit)-ஆக போட்டு வைப்பதாக இருந்தால், அதற்கு அந்த வங்கி வட்டி தரும். அதை மாதாந்திர வட்டியாக பெற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டால்..... நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? இப்போது இந்த சோதனை முயற்சி உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். அதாவது, நாம் 20 லட்சம் வங்கியில் கடன் வாங்குவதற்கு பதில், அதே வங்கியில் 20 லட்சம் டெப்பாசிட் போட்டு வைத்தால், அந்த வங்கி நமக்கு எவ்வளவு தொகையை வட்டியாக கொடுத்திருக்கும்? அதே தலைகீழ் கணக்குதான். ஆனால், என்ன.... ஒரு சின்ன நெருடல்... இன்றைய நிலையில் நான் அறிந்து இந்தியாவில் எந்த வங்கியும் 20 ஆண்டு காலத்துக்கு வைப்பு நிதி என டெப்பாசிட்டை இப்போது பெறுவதில்லை. அதோடு 8 சதவீத வட்டி என்பதும் இன்றைய சூழலுக்கு, நம்பகமான வங்கிகளில் சற்றே அதிகம். ஒரு அதீத யதார்த்த நிலை. ஆனால். இதை ஒரு ஒப்பீட்டுக்குத்தானே முயல்கிறோம். இதையும் முன்போலவே இணையத்தில் உள்ள ஒரு கால்குலேட்டரில் கணக்கிட்டால், நமது டெப்பாசிட் 20 லட்ச ரூபாய்க்கு, ஆண்டுக்கு 8% வட்டியை கணக்கிட்டு, மாதந்தோறும் வட்டி தருவதாக இருந்தால், அந்த வங்கியால் ₹13,739/-தர முடியும் என்கிறது அந்த கால்குலேட்டர். இப்போது மேற்கண்ட மாத வட்டித் தொகை இரண்டையும் ஒப்பிடுங்கள். நீங்கள் டெப்பாசிட் போட்டால், வங்கி உங்களுக்கு மாதந்தோறும் ₹13,739/-தரும். அதுவே, நீங்கள் வங்கியிடம் கடன் வாங்கினால் அதற்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை ₹16,730/- இரண்டுக்கும் 3000/-ரூபாய் வேறுபாடு. அதாவது, நீங்கள் கடன் வாங்கினால் மாதம் 3 ஆயிரம் அதிகம் செலுத்த வேண்டும். அது போல 20 ஆண்டுகள் செலுத்த வேண்டும். அப்படியானால் வங்கி நம்மிடம் அதிக வட்டிதானே பெறுகிறது என்ற வாதத்தை இப்போது நீங்கள் முன்வைக்கலாம். மேம்போக்காக பார்க்கப் போனால் அந்த வாதம் சரி. அல்லது, சரிபோலத்தான் தோன்றும். ஆனால், உண்மையும்... யதார்த்தமும் சொல்வது வேறு. அதை விரிவாகப் பார்க்கலாம். நீங்கள் 20 லட்சம் டெப்பாசிட் போட்டால், 20 ஆண்டு முடிவில்... உங்களுக்கு வங்கி திருப்பித் தருவது - ஆரம்ப டெப்பாசிட்டான 20 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால், 20 ஆண்டு முடிவில் வங்கி உங்களுக்குத் திருப்பித் தருவது வில்லங்கம் அற்ற உங்கள் வீட்டின் உரிமையை! அந்த வீட்டிற்கான மதிப்பு, இந்த 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு என கணக்கிட்டால், அது கட்டாயம் அதே 20 லட்சமாக இருக்காது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். 20 லட்சத்தைவிட ஒருசில மடங்குகளாவது... குறைந்தது இன்னொரு மடங்காவது அதிகமிருக்கும். ஒருவேளை உங்களது சொத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால், அதன் சந்தை மதிப்பு 20 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதுவும் கூட கட்டாயமாக 20 லட்சத்தைவிட சிறிய அளவிலாவது கூடுதலாக இருக்கும் - குடியிருப்பு சரியான பராமரிப்பு, கண்காணிப்பு போன்றவற்றுக்கு உட்பட்டு இருந்திருந்தால்! கடனில் வாங்கிய சொத்து தனி வீடாக இருக்கும் பட்சத்தில் அதன் இன்றைய மதிப்பு கட்டாயமாக உங்களை புன்முறுவல் பூக்க வைக்கும் வாய்ப்புகள்தான் மிக அதிகம். இதற்கு மாறாக, நான் சொல்வது உங்களை கோபமூட்டினால், நீங்கள் என்னை முறைத்துப் பார்க்கும் நிலைதான் யதார்த்தம் என்றால்.... பிரச்னை வேறு எங்கே..... இந்த பிரச்னைக்கு வேறு காரணிகளால் இருக்கும் என்றே தோன்றுகிறது. எனவே, கடனில் நீங்கள் வாங்கிய சொத்தின் இன்றைய கூடுதல் மதிப்புக்கு விதையாகத்தான், நீங்கள் மாதம் தோறும் கூடுதலாகச் செலுத்தி வந்த ₹3000/- எனச் சொல்லலாம். ஆனால், இது மட்டுமே அல்ல. இன்னும் இருக்கிறது. 20 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி, நீங்கள் கட்டிய வீடோ... வாங்கிய வீடோ... அல்லது அடுக்குமாடி குடியிருப்போ.... அதில் கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் குடியிருந்திருப்பீர்கள்தானே! அப்போது அந்த வீட்டுக்கு என, நீங்கள் வாடகை எதையும் செலுத்தியிருக்க மாட்டீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டிற்கான வாடகை எவ்வளவு இருந்திருக்கும். இந்த வாடகை தொகையை செலுத்தாமல் கடந்த 20 ஆண்டுகளும் நீங்கள் அந்த வீட்டில் குடியிருந்ததால் உங்களுக்கு மிச்சமான தொகை, கட்டாயமாக மாதம் 3 ஆயிரம் அல்லது அதைவிட கூடுதலாக இருக்கும்தானே... அதையும் கணக்கில் கொண்டு பார்த்தால், நாம் கூடுதல் வட்டியாக செலுத்திய தொகை என்பது, இந்த வீட்டுக்கு மாறாக வெளியில் குடியிருந்தால் செலுத்தியிருக்க வேண்டிய வாடகைத் தொகை. அதையே இங்கு வட்டியாகச் செலுத்தி வாடகை இல்லாமல் குடியிருந்த வகையில் நமக்கு நஷ்டம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறோம். அல்லது நீங்கள் வேறு வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருப்பீர்கள். அதன்மூலம் மாதந்தோறும் ஒரு தொகையை வருமானமாக பெற்றிருப்பீர்கள். அந்த தொகையைச் சேர்த்துதான் மாத தவணையாக 3000 கூடுதலாக கட்டி வந்தீர்கள் என புரிந்து கொள்ளலாம். எனவே, வீட்டின் ஒட்டுமொத்த மதிப்பு உயர்வு, மாதந்தோறும் கிடைக்கும் வாடகை வருவாய் என இரண்டும் சேர்த்து பார்க்கும்போது வீட்டுக் கடன் வட்டியினால் நமக்கு இழப்பு இல்லை என்பது குறைந்தபட்ச உத்தரவாதம். கூடுதலாக கிடைக்கும் மதிப்பு என்பதெல்லாம் இடைப்பட்ட காலங்களில் மாத தவணையைச் சரியாக செலுத்த நீங்கள் சந்தித்த சவால்கள்... மனப் போராட்டங்கள்... உள்ளிட்ட மற்ற முயற்சிகளுக்கு கிடைத்த கூடுதல் பலன் என்று புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவில் உதாரணத்துக்காக 20 லட்சம் கடன் 8% வட்டியில், 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் நிலையைப் பார்த்தோம். இதில் ஒருவேளை தவணைக் காலம் அதிகரித்தால் நீங்கள் செலுத்தும் வட்டி இன்னும் கொஞ்சம் கூடுதாலகவும் இருக்கலாம். அதேபோல ஆண்டு வட்டி விகிதத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன வகையில் சின்ன வேறுபாடு தெரியலாம். ஆனால், மிக மிக அரிதான சூழலில் வேண்டுமானால், அந்த சொத்து அமைந்துள்ள இடம் உள்ளிட்ட மற்ற புற காரணிகளால், நமது இந்த வாதமும், கணக்குகளும் வலு குறைந்ததாக தோன்றும். ஆனால், மிகப் பெரும்பான்மையான இடங்களில் இந்த வாதம் பொருந்தும் என்றே நம்புகிறேன். தனிப்பட்ட யாரேனும் ஒருவருக்கு மேற்கண்ட நமது கணக்குகள்படி, சொத்து மதிப்பும் உயரவில்லை; வட்டியும் மிக அதிகமாக கட்ட வேண்டிய நிலை உள்ளது. மொத்தத்தில் வீட்டுக் கடன் வட்டி என்பதால் எனக்கு பெருத்த நஷ்டம் என யாரும் என கருதினால், அந்த நண்பர்கள் தயவு கூர்ந்து அது குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வது - புதிய புரிதலுக்கும் ஆய்வுக்கும் இடமளிக்கும் என்பதால் தயங்காமல் தொடர்பு கொள்ளும்படியும், விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன் ஒருவேளை வீடோ.... அடுக்குமாடி குடியிருப்போ...! அதற்கு நீங்கள் கொடுத்த முழு விலையைவிட குறைவான.... ஒரு பகுதி தொகையை மட்டுமே வீட்டுக் கடனாக பெற்றவர்களுக்கு வேண்டுமானால், மேற்கண்ட ஒப்பீடு அப்படியே ஏற்புடையதாகவும், புரிந்து கொள்ள ஏற்றதாகவும் இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களுக்கும் கூட இந்த வாதத்தில் உள்ள நிஜம் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். சரி.... இப்படி வாதிடுவதன் மூலம் நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக யாராவது நினைத்தால்.... ஸாரி.... அப்படியில்லை. உண்மை வேறு. எனது முயற்சி அதுவல்ல; வங்கிக்கு செலுத்தும் வீட்டுக் கடன் வட்டியை சிறிய அளவிலாவது குறைக்கும் முயற்சிகள் குறித்து அறிய விரும்பினால்.... அதற்கான தேடலில் நீங்கள் இருந்தால்... நானும் உங்கள் கட்சிதான். அதற்கு இன்னும் பல யோசனைகளும் கூட இருக்கின்றன. அந்த வாய்ப்புகள் குறித்து, அடுத்த பதிவில் பார்க்கலாம். #HomeLoan #RealEstate #FinancialPlanning #Investment #PropertyValuation #வீட்டுக்கடன் #ரியல்எஸ்டேட் #நிதிமேலாண்மை #சொத்துமதிப்பீடு #வீட்டுக்கடன்வட்டி

வியாழன், நவம்பர் 27, 2025

 செயலற்ற வருவாய் (Passive income) அவசியமா?

தலைப்பே, கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நானும் உங்களுக்கு வாக்களிக்கிறேன். ஆனால், இதற்கு நான் பொறுப்பல்ல; கடந்த காலங்களில் சக பயணியாக இருந்த பத்திரிகை நண்பர் கண்ணன்தான் காரணம்.

மாத சம்பளக்காரர்களுக்கு Passive income-ன் அவசியம் குறித்து எழுதும்படி அவர் கேட்டிருந்தார். அதற்கு ஒப்புக் கொண்ட நான், அந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் உண்டா என்று யோசித்தேன். 'செயற்கை நுண்ணறிவு... அதான் AI, என்ன சொல்கிறது' எனக் கேட்டுப் பார்த்தேன். “செயலற்ற வருமானம்” என்று பதில் வந்தது. சரியா.... தவறா என்று யோசித்தால்... பதில் - “சரிதான்!” ஆனால், ஏனோ... எனக்கு அந்தச் சொல்லில் அத்தனை ஏற்பில்லை. சில விஷயங்களை நம்மால் அப்படியே ஏற்க முடியாது. இதுவும் அந்த ரகம்தான். 

இதுபோன்ற வேளைகளில் துணைக்கு வருவது - எழுத்தாளர் சுஜாதாவுடன் பணியாற்றிய என் அனுபவமும், பயிற்சியும்தான். அந்த வகையில் எனது யோசனையில்... கற்பனையில் உருவான சொல் - துடிப்பில்லா வருவாய்!  செயலற்ற வருமானம்  என்று சொல்வதைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது. ஆனாலும் இது என் கருத்துதான். மற்றவர்கள் கருத்து மாறுபடலாம். இன்னும் கொஞ்சம் சிறப்பான... நளினமான... அழகியலுடனான சொல் தோன்றினால்.... நண்பர்கள் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன். 

சரி... மாத சம்பளக்காரர்களுக்கு இந்த துடிப்பில்லா வருவாய் / செயலற்ற வருவாய் ஏன் அவசியம் என்பது நண்பர் கண்ணனின் கேள்வி. ஆனால், "நிஜமான தேடல், அது அல்ல!" என நான் புரிந்து கொள்கிறேன். 

மாறாக, இன்று மாத சம்பளம் வாங்கும் ஒரு நபர்... அந்தப் பணிக்கு  எந்த இடையூறும் (!)... ஆபத்தும்(?)... இல்லாமல்..., மாத சம்பளம் பெற்றுத் தரும் அந்த 8 மணி நேரக் கடமைகளில் இருந்து விலகாமல்... அந்தப் பணிக்கான நேரத்தில் கை வைக்காமல்... மற்ற நேரங்களில்... மற்ற செயல்பாடுகள் மூலம் கூடுதலாக இன்னொரு வருவாய் (Passive income) பெற வாய்ப்புகள் உள்ளதா என அவர் தேடுகிறார். இதுதான் எனது புரிதல். அவர் மட்டுமல்ல;  இன்று மாத ஊதிய நெருக்கடியில் உள்ள பலருக்கும் இதே நெருக்கடிதான். 

பணவீக்கம் என புரியாத வார்த்தையில் சொல்லப்படும் "விலைவாசி ஏற்றம்" மற்றும், Peer pressure என ஆங்கிலத்தில் சொல்லப்படும், அடுத்தவனைப் பார்த்து தானும் ஆசைப்படுவது என்ற சாமானியனின் புரிதல் இல்லாத போக்கு... போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் பணத்தேவைகள்தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

மறுபுறம், இப்படியான ஒரு வருவாய் வாய்ப்பு - சட்ட வரம்புகள் எதையும் மீறாமல்.... சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடாமல்... வருமானம் பெறுவதாக இருக்க வேண்டும் என்பது நண்பர் கண்ணனின் அளவுகோலாக இருக்கும். அவருக்காக இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள ஆதரவு... நட்பு வட்டத்தின் தேவைகளுக்காக கண்ணன் இதை யோசிக்கிறார் என நான் நம்புகிறேன். காரணம் - அவரோடு நானும் பணியாற்றிய நாட்களிலேயே கவனித்திருக்கிறேன்; அவர் குறித்த மற்றவர்களின் மதிப்பீட்டையும் உணர்ந்தவன் என்ற வகையில் இதைச் சொல்கிறேன்.    

சரி... விஷயத்துக்கு வருவோம். நிஜத்தைச் சொல்வதானால்.... மாத சம்பளம் வாங்குபவர்களைபோல, உத்தரவாதமான ஒரு வருவாய்க்கும் கூட வாய்ப்பில்லாத சிறுவணிகர்களைக் கேட்டால்... செயலற்ற வருவாயின் அவசியம் குறித்து இன்னும் நிறைய சொல்வார்கள். மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் Passive income அத்தியாவசியமற்றதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குதான் இவ்வித வருவாய்க்கு அதிக வாய்ப்பிருக்கிறது...  நடைமுறையில் சாத்தியமாகிக் கொண்டும் இருக்கிறது. மறுபுறம், மற்றவர்களைப் போலவே, அவர்களும் கூட, இன்று அதிகம் விரும்புவது... 'இதைத்தான்' என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் எல்லா தரப்பினருக்கும் இன்று செயலற்ற வருவாய் அவசியம் என நான் நினைக்கிறேன்

Passive Income அல்லது ‘துடிப்பில்லா வருவாய்’ என்பது ஒரு நபரின் அப்போதைய பங்களிப்பு இல்லாமல்.... தானாகவே... கிடைக்கக்கூடிய வருவாய் எனச் சொல்லலாம். அதனால்தான் இதைத் துடிப்பிலா வருவாய் எனக் குறிப்பிடலாம் என எனக்குத் தோன்றியது. இப்போதைக்கு நீங்கள் மெனக்கெட போவதில்லைதானே! மறுபுறம், இன்று எதுவும் செய்யாமல், முன்பு எதோ ஒரு நேரத்தில் செய்த காரியத்தை ஒட்டி, அதன் பலனாக இன்றும் தொடர்ந்து வருவாய் வருகிறது என்பதால்தான் அது Passive Income. இந்தவகை  வருவாய்க்கு உதாரணம் சொல்வதானால்..., 1. வாடகை வருவாய், 2. டிவிடெண்ட் எனச் சொல்லப்படும் முதலீட்டின் மீதான வருவாய் (பங்கு அல்லது மியூச்சுவல் ஃப்ண்ட் உள்ளிட்ட முதலீடுகளில்), 3. ராயல்டி எனச் சொல்லப்படும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வருவாய், 4. ஓய்வுநேர சேவைகள்..... என இன்னும் சிலவற்றையும் சொல்லலாம். 

இவ்வகை வருவாய் வாய்ப்புகள், இப்போது உங்கள் உடல் உழைப்பைக் கோருவதில்லை என்பது சரி... ஆனால், வாடகை என்ற வகையில் இந்த ரக வருவாய் வேண்டும் என்றால்... அதற்கு நம்மிடம் ஒரு சொத்து இருக்க வேண்டும். அதுவும், அந்த சொத்து இன்றைய தினம் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட தகுதியான நிலையில் இருக்க வேண்டும். அப்படியானால், கடந்த காலங்களில் எதோ ஒரு கட்டத்தில் நீங்களோ... உங்களைச் சார்ந்தவர்களோ.... உங்கள் முன்னோரோ... சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட அல்லது அவர்களே வாங்கி வைத்த சொத்தாக அது இருக்கும்.  அவ்வகையில் இன்று நமது உடல் உழைப்பு, நேரம், பணத்தைக் கேட்காவிட்டாலும் முன்னொரு காலத்தில்... நேரத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த சொத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, நேற்றோ.... இன்றோ... ஒரு பெரும் தொகையை முதலிட வாய்ப்பில்லை என்பவர்களுக்கு, இவ்வகையான வருவாய்க்கு.... "வாய்ப்பில்லை ராஜா.... வாய்ப்பில்லை". அதிகபட்சமாக, கடந்த சில பதிவுகளில் நான் விரிவாக எழுதியிருந்த 'ரீட்ஸ் (Real estate Investment trust - REIT)' யூனிட்களில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது முதலீடு செய்து வந்து... அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வகை வருவாய் பெறலாம்.  

Passive income பெறுவதற்கு, வீட்டு வாடகை மட்டும்தான் வாய்ப்பு என்றில்லை. தேர்ந்தெடுத்த பங்குகளில்....  தேர்ந்தெடுத்த மியூச்சுவல் பண்ட் திட்ட யூனிட்டுகளில் என, மற்ற வகையிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாகவே முதலீடு செய்தவர்களுக்கும் இது பொறுந்தும். முதலீட்டின் மீதான வருவாய் என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு டிவிடெண்ட் வருவாய் கிடைக்க, இது உதவும். இதில் தேர்ந்தெடுத்த என்ற சொல்லையும் நான் சேர்த்து பயன்படுத்தி இருப்பதன் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். நிஜம்தான். இன்றைக்கு பங்குசந்தையில் அன்றாடம் வணிகம் நடக்கும் முன்னணி பங்குகளை எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த எல்லா பங்குகளிலும் டிவிடெண்ட் கிடைப்பதில்லை. அதுவும்... வருவாய் எனக் குறிப்பிடும் அளவு, ஒரு நியாயமான தொகையைத் தொடர்ந்து தரும் பங்குகளின் எண்ணிக்கை எனப் பார்த்தால் அது மிக நீண்டதொரு பட்டியல் என சொல்வதற்கில்லை. 

இங்கே மற்றொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மூலதன வளர்ச்சி (Capital Appreciation) பெறும் பங்குகளின் எண்ணிக்கை இன்றைய சந்தையில் கூடுதலாக இருக்கலாம். அதாவது நீங்கள் ஒரு பங்கை வாங்கும்போது முதலீடு செய்த தொகை..., சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது கிடைக்கக் கூடிய தொகை... இந்த இரண்டுக்குமான வளர்ச்சி என்பது, பரவலாக கணிசமான பங்குகளில் சாத்தியம். ஆனால், இவ்வகை பங்குகள் அனைத்தும், உங்களுக்கு Passive income-ஐத் தருவதில்லை; தராது என்பதையும் உணர வேண்டும். எனவே, துடிப்பில்லா வருவாயைத் தருவதற்கு ஏற்ற பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினால்தான் நல்ல டிவிடெண்ட் கிடைக்கும். இவ்வகைப் பங்குகளில் நாம் ஏற்கனவே சொன்ன மூலதன வளர்ச்சிக்கும் வாய்ப்புண்டு.. மறுபுறம் அந்த பங்கை வாங்கி, காத்திருந்து, பின்னர் விற்பதற்கு முன்பான இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் மூலதன வருவாயை (Dividend)நல்ல விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பெற விரும்புவோர், தாங்கள் முதலீடு செய்ய ஏற்ற பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது மிக முக்கியம். 

அதேபோல, மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்களிலும் பல நிறுவனங்கள்.... ஒவ்வொரு நிறுவனத்திலும் பல திட்டங்கள்..... அந்த ஒவ்வொரு திட்டத்திலும் சில வாய்ப்புகள் என... நிறைய விஷயங்களை கவனித்து முதலீடு செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. 

நல்ல அளவில் வாடகை வருவாய் பெற விரும்பினால், அதற்கான சொத்தை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்படி அதீத கவனமும், அக்கறையும் செலுத்துகிறோமோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் ஆரம்ப நாட்களில் நாம் மிக கவனமாக தேர்ந்தெடுத்து பங்குகளில்... மியுச்சுவல் ஃப்ண்ட் யூனிட்டுகளில் முதலீடு செய்தால் போதும். அதன்பின் கண்காணிப்புதான் தேவை. தொடர்ந்து வருவாய் நம்மை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.  இந்த இரண்டு வகை முதலீட்டிலும் தொடர்புள்ள சொத்தை விற்பனை  செய்யும்போது ஆரம்ப நாட்களில் செலுத்திய அதே கவனத்தைச் செலுத்தினால் விறபனையிலும் நல்ல வருவாய் வரலாம். ஆனால், அப்படி விற்பனை செய்யும்போது Passive income முடிவுக்கு வரும். சுதாரிப்பு உள்ளவர்கள் நேரம்.. காலம்.. பார்த்து சரியான ஒரு கட்டத்தில் அதை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அதை வேறு நல்ல சொத்தைத் தேர்ந்தெடுத்து....  வேறு நல்ல பங்குகளை.... மியூச்சுவல் ஃப்ண்ட் யூனிட்களைத் தேர்ந்தெடுத்து மறு முதலீடு செய்கிறார்கள்... அவ்வகையில் தங்களது துடிப்பில்லா வருவாயை... Passive income-ஐ விரைவிலேயே மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

இதுபோன்ற சூழலில் நமக்கு கிடைக்கும் மூலதன வளர்ச்சி (Capital appreciation)எனக் குறிப்பிடப்படும் கூடுதல் தொகைக்கு மூலதன ஆதாய வரி எனப்படும் Capital Gains Tax என்பதைக் கட்ட வேண்டி வரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. பொதுவாக இதில் நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி (Long term capital gains tax)... குறுகிய கால முதலீட்டு ஆதாய வரி (Short term capital gains tax)... என இரண்டு விஷயங்கள் உண்டு.  தற்போதைய நிலையில் அசையா சொத்துகளுக்கு 24 மாதங்கள்.... பங்குகள் உள்ளிட்ட தொடர்புள்ள இதர முதலீடுகளுக்கு 12 மாதங்கள் என்பது காலக்கெடு. இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக விற்பனை செய்தால், அவை குறுகிய கால மூலதன ஆதாய வருவாய் எனவும், அந்த காலக்கெடுக்கு பின் விற்பனை செய்தால், அவை நீண்டகால மூலதன ஆதாய வருவாய் எனவும் அழைக்கப்படும். அதற்கு ஏற்ப வருமான வரியும் செலுத்த வேண்டி வரும். இதை... இங்கே... தற்போது குறிப்பிடக் காரணம் Passive income என்பதால் அது கணக்கில் வராது என யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதால்தான். இவ்வருவாய் ஆண்டுக்கு 10 ரூபாய் என்றாலும்... 10 ஆயிரம் ரூபாய் என்றாலும்... 10 லட்சம் என்றாலும் வருமான வரிக்கு... அது தொடர்பான அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டது. தற்போதுள்ள இந்த சட்டங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால், அதற்கேற்ப உங்களது யுக்திகளையும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டி வரலாம். இதில் சற்று கவனமாக இருங்கள். இதுதான் Passive income பெறுபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 

பங்குசந்தை போன்ற நிச்சயமில்லாத... முதலுக்கே மோசம் வரவும் வாய்ப்புள்ள முதலீடுக்கு நான் தயாரில்லை; ஆனால், ரியல் எஸ்டேட் போன்ற வகையில் முதலீடு செய்யவும் என்னிடம் பல லட்சங்களில் முதலீடுகள் இல்லை என்பவர்கள், தங்களிடம் உள்ள ஒரு தொகையை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது... அஞ்சலக மாதாந்திர சேமிப்பு உள்ளிட்ட பிற திட்டங்களில் முதலீடு செய்வது... பிபிஎஃப் (PPF)போன்றவற்றில் முதலீடு செய்வது போன்ற வாய்ப்புகளும் உண்டு. பாதுகாப்பு அதிகமுள்ள.... ஆனால், வருவாய் வாய்ப்பு குறைந்த முதலீடு எனச் சொல்லப்படும் இவற்றைத் தாண்டி, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் டெப்பாசிட் திட்டங்களும் சேமிக்கலாம். ஆனால், இதற்கும் சில முன்னாய்வுகளும், தொடர் கண்காணிப்பும் தேவை.   

சரி.... வாடகை, டிவிடெண்ட்... பிற டெப்பாசிட் திட்டங்கள் போன்றவைதான் துடிப்பில்லா வருவாய் வாய்ப்பா என்றால்... இன்னும் இருக்கின்றன. உதாரணமாக காப்புரிமைத் தொகையைச் சொல்லலாம்.   ஆங்கிலத்தில் இதை, Copyright roylaty என குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு பொருளை உருவாக்கியவர் அல்லது படைத்தவர்... அதைப் படைத்தது இவர்தான் என முறைப்படி சட்டரீதியாக பதிவு பெற்றுவிட்டால், அதன்பின் அப்பொருளை பயன்படுத்துவோர் எல்லாம் ஒரு சிறிய தொகையை அந்த படைப்பாளிக்கு காப்புரிமை தொகையாக வழங்க வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது படைப்புக்கு நுகர்வோர் செலுத்தும் காப்புரிமை தொகை என்ற வகையில்  இதுவும் ஒரு நபருக்கு துடிப்பில்லா வருமானத்தை ஈட்டித்தரும். 

ஆனால், இவ்விதமாக காப்புரிமை தொகை வருவாய் தர வாய்ப்புள்ள பலவும் தனித்திறமை கொண்டவர்களுக்குத்தான் எளிதானது; வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு எழுத்தாளர் ஒரு நல்ல புத்தகத்தை எழுதி வெளியிட்டால், அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஒவ்வொருவர் மூலமும் ஒரு சிறிய தொகையை வருவாயாகப் பெறலாம். சிறந்த படைப்பு என பலராலும் பாராட்டப்படும் புத்தகங்களை எழுதிய பலருக்கு அவர்களது வாழ்க்கையை ஓட்ட போதுமான வருவாய் தரும் புத்தகங்களும் உண்டு.  ஆனால், இதில் புத்தகத்தைப் பதிப்பிக்கும் நபரை... நிறுவனத்தை.... கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும். இன்றைய நிலையில் அமேசான் உள்ளிட்ட பல இணையவழி விற்பனை... 'கிண்டில் (Kindle)'உள்ளிட்ட இணைய வழி புத்தக பதிப்பு என இதில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நல்ல ஒரு தலைப்பில்... நல்லதொரு படைப்பை.... நல்லதொரு புத்தகத்தை உங்களால் எழுத முடியும் என்றால் இவ்வகை வருமானம் பெற நீங்கள் தகுதியானவர். எத்தனை சிறந்த புத்தங்களை உங்களால் எழுத முடியுமோ அத்தனை நல்ல வாய்ப்புண்டு.

புத்தகப் படைப்பு போலவே இன்னும் பலவும் உண்டு. உதாரணமாக இசைக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர், ஓவியர், தனது ஆராய்ச்சி மூலம் புதிய பொருளைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்ற விஞ்ஞானி... என பலரைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் போக, இன்று மிக பிரம்மாண்டமாக வளர்ச்சி கண்டுள்ள  சமூக ஊடகங்கள் திறந்து வைத்துள்ள புதிய வாய்ப்புகள் ஏராளம்.

ஏன், இன்றைக்கு யூ டியுப்பில் 'ஷார்ட்ஸ்'  மூலமும், இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்'  மூலமும்  பலர் ஏராளமாக வருவாய் ஈட்டுவதெல்லாம் கூட இந்த வகையைச் சேர்ந்ததுதானே..... தங்களது முழுநேர தொழில் வேறொன்றாக இருக்க, தனக்குப் பிடித்திருக்கிறது என ஓய்வு நேரங்களில் Hobby என்ற பெயரில் சிலர் செய்த காரியங்கள் கொண்டு வந்து கொட்டிய வருமானத்தால்... இப்போது இந்த பணியையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டவர்கள் அதிகம். குடும்பத் தலைவிகள் பலர் சமையல் செய்தே இன்று உலகப்பிரசித்தி பெற்ற பிரபலங்களாகவும்,  வருவாய் ஈட்டுவோராகவும் மாறியுள்ளனர். யூ டியுப் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே விரைவில் பேஸ்புக் எனும் முகநூல் மூலமும்... எக்ஸ் எனக் குறிப்பிடப்படும் முன்னாள் டிவிட்டர் தளம் மூலமும் வருவாய் பெறும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. கொஞ்சம் கற்பனை... கொஞ்சம் உழைப்பு.... கொஞ்சம் தேடல்.... இருந்தாலே இவ்வித வருவாய்க்கு வாய்ப்புகள் உள்ளன. கோடிக்கணக்கான பலருக்கு முழுநேர பணியையே அளித்துக் கொண்டிருக்கும் மேற்கண்ட சமூக ஊடகங்கள், ஒரு சிலருக்கு இந்த வகையான Passive income தருபவையாக உள்ளன என்பதும் இன்றைய யதார்த்தம். 

இதை அடுத்து, இன்று நல்ல திறமையுள்ள ஆசிரியர்கள் தங்களது அனுபவம் மற்றும் அறிவு செழுமையால் நுட்பமான விஷயங்களை எளிமையாகச் சொல்லித் தந்து வகுப்பு எடுக்க முடியும் என்றால்... அதுவும் உங்களுக்கு ஒரு துடிப்பில்லா வருவாய் தரும் வாய்ப்பைப் பெற்றுத் தரும். பாடம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். கணிதம் முதல் கணினி வரை.... ஏன் தமிழ் மொழி பாடம் முதல் ஸ்போக்கன் இங்கிலீஷ் வரை... எதுவும்  இருக்கலாம். இது போன்ற அன்றாட பள்ளிப் பாடம் தவிர ஓவியம்... நாட்டியம், இசைப்பாடல் என பலவுக்கும் இன்று இணையம் மூலம் சர்வதேச சந்தை வாய்ப்புண்டு. அனேகமாக நீச்சல், டிரைவிங் போன்ற சில மட்டும்தான் இவ்வகையில் சாத்தியமில்லை என நான் கருதுகிறேன். எனவே உங்களது நுண்ணறிவை... பட்டறிவை... அனுபவ அறிவை ஒரு வீடியோவாக பதிவு செய்து குறைந்த கட்டணம் செலுத்தி அதைப் பார்த்து கேட்டு பலன் அடையாலம் என்ற வகையில் நீங்கள் களமிறங்கினால் இன்று Passive income பெற வாய்ப்புகள் அதிகம். ஆனால், தொடக்க காலத்தில் இதற்கு சற்றே மெனக்கெட வேண்டும். இந்த வகையிலான வருவாய் மெள்ள மெள்ள அதிகரிக்கும் என்பதோடு தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ள வருவாய்... அதோடு நாளாக நாளாக அதிகரிக்க வாய்ப்புள்ள வருவாய் என்பதும் கவனிக்கத்தக்கது.

கணினி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற சிலர், தங்களது ஓய்வு  நேரத்தில் மற்றவர்களுக்கு தேவையான சேவைப் பணிகளை செய்து வழங்கி... மென்பொருள்... வன்பொருள் என இரு வகையிலும் தங்களது முழுநேரப் பணி ஊதியம் / வருவாயைத் தாண்டி கூடுதல் வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, பன்னாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டுரிஸ்ட் கைடு... வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உள்நாட்டு சொத்துகளை நிர்வகிப்பது... பராமரிப்பது என இன்னும் இன்னும் யோசித்தால்... பலவற்றை பட்டியலிட முடியும். அதன் மூலம் ஒரு துடிப்பில்லா வருவாய் பெற முடியும். ஆனால், இதெல்லாம் யாரால் முடியும் என்றால், சிந்தனையில் புதுமையும், கற்பனையில் வளமையும், செயலில் வேகமும் கொண்டவர்களால்தான் முடியும். நீங்களும் அத்தகையவராக இருந்தால் வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான்.

ஞாயிறு, நவம்பர் 23, 2025

நம்பகமான முதலீட்டு வாய்ப்புகளில் இடம் பிடிக்கும் ”ரீட்ஸ் (REITs)”

 ரீட்ஸ்.... அதாவது, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் என்ற பெயரைப் பார்த்துவிட்டு.... நண்பர்கள் சிலர் போனில் அழைத்துக் கேட்டார்கள்.  

"இந்த நிறுவனத்தோட பெயர் 'டிரஸ்ட்'ன்னு முடியுதே.... அப்படின்னா இது இந்திய டிரஸ்ட் சட்ட நிர்வாகத்துக்கு உட்பட்டதா?" 

பொதுவா தற்போதைய நிலையில் இந்தியாவில் செயல்படும் சில டிரஸ்ட்கள் மிகச் சிறப்பாக இருந்தாலும், பல.... ஏன் பெரும்பாலான டிரஸ்ட்கள், அதன் டிரஸ்டி.... அதாவது அறங்காலவர்களின் தனிப் பெயரில் இல்லாத... ஆனால் தனிப்பட்ட சொத்துகளாக படிப்படியாக மாறியுள்ளனவே... அதுபோல் இங்கு எதுவும் நடந்துவிடாதே என்பதுதான் நண்பரது கவலை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நம்மைப் போன்ற நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கு வர வேண்டிய நியாயமான கேள்வி.. சந்தேகம். ஒப்புக் கொள்கிறேன்.

இதற்கான என் பதில். "கவலைப்பட வேண்டாம்". ஏற்கனவே நான் சொன்னபடி, இந்தியாவில் தற்போது உள்ள... வரும் நாட்களில் வரக் கூடிய... எல்லா ரீட்ஸ் நிறுவனங்களும் செபியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவைதான். அதனால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து செபிக்கு தகவல் அளிக்க வேண்டியது அவர்கள் கடமை. ரீட்ஸ் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட விதிகளை செபி சரியாகவும், முழுமையாகவும்  நடைமுறைப்படுத்தும் என நம்பலாம். இது தவிர, பங்குசந்தையில் விற்பனையாகும் பங்குகள்.... மியூச்சுவல் பண்ட் யூனிட்கள் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நிறுவனம் தனது செயல்பாடு, நிதிநிலை போன்றவை குறித்து தகவல் தர வேண்டும் என்ற அதே போன்ற வழிமுறைகள் ரீட்ஸ் நிறுவனங்களுக்கும் உண்டு. 

அண்மையில், நான் சிறிய அளவில் இதில் முதலீடு செய்துள்ளேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த நிறுவனங்களிடம் இருந்து எனக்கு நடப்பு நிலை குறித்த நிதியறிக்கை இ மெயில் மூலம் கிடைத்துள்ளது. அதுபோல ரீட்ஸ் நிறுவங்களில் முதலீடு செய்தால் உங்களுக்கும் தகவல் வரும். அவை பல தகவல்களை... நடப்புகளைப் புரிந்துகொள்ள உதவும். அதனால், பெரிய அளவில் அச்சமின்றி ரீட்ஸில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

இப்படி சொல்வதன் மூலம்... மற்ற நிச்சயமற்ற.... அசாத்தியமான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ள பிற முதலீடுகளை விட ரீட்ஸ் சிறப்பானது என நான் சொல்வதாக புரிந்து கொண்டால்.... அது முற்றிலும் தவறு எனச் சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் 100% சரி என சொல்வதற்கும் இல்லை. காரணம், காலகாலமாக சொல்லப்பட்டு வரும் முதலீடு குறித்த பால பாடத்தை நாம் எப்போதும்.... மறந்துவிடக் கூடாது. அதாவது, உங்களது முட்டைகள் அனைத்தையும், ஒரே இடத்தில் ஒரே கூடையில் வைக்காதீர்கள் என்பதுதான். அந்த வகையில் எந்த தனி நபரது மொத்த முதலீட்டையும்.... தங்கம், வெள்ளி, பங்குகள், மியூச்சுவல் பண்ட்கள், கடன் பத்திரங்கள் எனச் சொல்லப்படும் பாண்ட்கள், வங்கி டெப்பாசிட், போஸ்டாபிஸ் முதலீடுகள், ரியல் எஸ்டேட் என இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் முதலீடுகளில்... புதிதான ஒன்றாக இனி நாம் இந்த ரீட்ஸ்-ஐயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

அதே வேளையில் உங்கள் சேமிப்பு முழுவதையும் வங்கியிலோ.... போஸ்டாபிஸிலோ... தங்கத்திலோ முதலீடு செய்து வந்த பெரும்பாலான தமிழ் குடும்பங்கள்.... இன்று அதைத் தாண்டி பங்குகள்.... மியூச்சுவல் பண்ட்கள்.... என வளர்ந்திருப்பது சிறப்பு. இது மட்டுமல்ல. இன்னும் சில இளைய தலைமுறையினர் பங்குசந்தையில் தற்போது அதிகரித்துள்ள ஆப்ஷன் டிரேடிங்.... ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்.... கமாடிட்டி டிரேடிங்.... கரன்ஸி டிரேடிங்... போன்றவற்றையெல்லாம் தாண்டி, பிட்காயின் என சொல்லப்படும் முற்றிலும் கண்காணிப்பு இல்லாத ஒரு சர்வதேச சந்தையிலும் இப்போது ஈடுபடுகிறார்கள். 

அதெல்லாம் சரியா... தவறா.. என்று கேட்டால், எனது பதில் - 'அது முதலீடு செய்யும் நபரைப் பொறுத்தது.... அவரது நிதிவளத்தை மட்டும் சொல்லவில்லை. வசதியான நபராக இருந்தாலும், அவரது முதலீட்டை அவ்வப்போதாவது திரும்பிப் பார்க்க நேரம் உள்ளவர்களும், அதைப் பற்றிய செய்திகளையாவது அன்றாடம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை என்பவர்கள் மேற்கண்ட பட்டியலில் உள்ள பல முதலீடுகள் பக்கம் போகாமல் இருப்பதுதான் உத்தமம். 

அண்மையில் செபி வெளியிட்ட ஒரு தகவல்படி.... இந்தியாவில் உள்ள...   ஆப்ஷன் டிரேடிங்.... ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்.... கமாடிட்டி டிரேடிங்.... கரன்ஸி டிரேடிங்... உள்ளிட்ட இன்னபிற ஊக வணிக சந்தைகளில் முதலீடு செய்தவர்களில் 90%க்கும் மேல் நஷ்டம் அடைந்தவர்கள்தான். லாபம் அடைந்த மீதி ஆட்களில் உள்ள பலர் நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்தவ்ர்கள். அதனால் தனி நபர்... அதிலும் சவாலான வாழ்க்கையின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு சாமானியன் அதிக நஷ்டம் அடைய வாய்ப்புள்ள ஊக வணிகம் பக்கம் செல்வதை நான் ஆதரிக்க மாட்டேன். 

அதனால், இன்று "எனக்கு ஆய்வு செய்ய எல்லாம் அதிகம் நேரமில்லை; தகவலுமில்லை; பொறுமையும் இல்லை" என்பவர்களும் கூட ரீட்ஸ் யூனிட்களில் முதலீடு செய்வது குறித்து துணிந்து முடிவு எடுக்கலாம். தற்போதுள்ள 5 ரீட்ஸ்களில் எதில் முதலீடு செய்வது என்பது குறித்து உரிய நபர்களிடம் ஆலோசனை செய்து தொடங்குங்கள். இனி வரும் காலங்களில் இந்த ரீட்ஸ் முதலீடு இன்னும் வேகமெடுக்கவும்... தேவை அதிகரிப்பதால் முதலீட்டு வளர்ச்சி வேகமெடுக்கவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

அதாவது, அணமையில் செபி வெளியிட்ட வழிகாட்டு விதிகளில் ஒன்று, இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்கள் இனி ரீட்ஸ் யூனிட்களில் முதலீடு செய்யலாம் என்கிறது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், இவ்வளவு நாட்களாக கையிருப்பு பணத்தில் நல்ல பங்குகளை வாங்க முடியவில்லை. விலை அதிகமாக உள்ளன. அது குறையும் வரை காத்திருக்கிறேன் என முடி செய்து கையிருப்பை ரொக்கமாகவோ... வங்கியிலோ வைத்திருந்த மியூச்சுவல் ஃப்ண்ட் முதலீட்டு முடிவு எடுக்கும் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.  சரியான விலையில் சரியான பங்குகள் கிடைக்கும்வரையோ... அல்லது நீண்டகால அடிப்படையிலோ முதலீடு செய்ய இன்னொரு வாய்ப்பாகவோ ரீட்ஸ் அவர்கள் முன் நிற்கிறது. அவ்வகையில் மியூச்சுவல் ஃப்ண்ட் பணமும் ரீட்ஸ் யூனிட்கள் பக்கம் வந்தால்... அவற்றுக்கான தேவை அதிகரிக்கவும், அதனால் அவற்றின் மீதான முதலீட்டு வளர்ச்சி அளவு... விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மறுபடியும் இங்கே இன்னொரு விஷயத்தை நினைவூட்டுகிறேன்.

ரீட்ஸ் என்பது இப்போது புதிதாக வந்துள்ள... அதிகம் அறியப்படாத இன்னொரு முதலீட்டு வாய்ப்பு. அவ்வளவுதான். அதனால், இதில் முதலீடு செய்யும்போதும் உங்களது மொத்த முதலீட்டில் ஒரு பகுதியை மட்டும் இதில் முதலிடுங்கள். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. அது மறக்கக்கூடாத அடிப்படை பால பாடம் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. 

#ரீட்ஸ் #Realestate investment trust #REIT #புதிய முதலீட்டு வாய்ப்பு #ரியல் எஸ்டேட் முதலீடு #நாலாவது கண் #சந்திரன் # தமிழில் முதலீடு #எழுத்தாளர் சந்திரன் #நிதித்துறை பத்திரிகையாளர் சந்திரன்.

வெள்ளி, நவம்பர் 21, 2025

 லட்சங்களை முதலிடாமல் ரியல் எஸ்டேட் லாபம்! (ரியல் எஸ்டேட் லாபம் - 2ம் பகுதி)

வீடு... மனை... அடுக்குமாடி குடியிருப்பு.... இப்படி எதுவானாலும் குறைந்தபட்சம் சில லட்சங்களாவது இல்லாவிட்டால்...., பேச வாய் திறக்கவே முடியாது என்கிற ரியல் எஸ்டேட் சந்தையில், நம்மை மாதிரி  நடுத்தர வருவாய் உள்ள குடும்ப ஆட்களும் முதலீடு செய்ய முடியும்.... சின்னதாக முதலீடு செய்யலாம். அதுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும் என்ற புதிய வாய்ப்பை திறந்துள்ளது ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்! கடந்த பதிவுல இது பத்தி சொன்ன  அறிமுகத்தைத் தாண்டி, இப்ப இந்த முதலீடு பத்தின மத்த விஷயங்களைப் பார்க்கலாம். 

இந்தியாவில் இந்த மாதிரியான ஒரு விஷயம்... அதான் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் (REIT - Real estate investment trust).. "ரீட்ஸ்"ன்னும் சொல்வாங்க.  இது  எப்ப தொடங்குச்சுன்னு, 2019 ஆம் ஆண்டு. இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் - 'எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ்'. அடுத்தது, 'மைண்ட் ஸ்பேஸ் பிஸினஸ் பார்க்ஸ்' 2020ல வந்தது. அடுத்த வருஷமே 'புரூக்ஃபில்ட் இந்தியா'! அடுத்தது 'நெக்ஸஸ் செலக்ட் டிரஸ்ட்'. கடைசியா, இந்த வருஷ ஆரம்பத்துல சென்னையில் உள்ள சொத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரேன்னு சொல்லிகிட்டு "நால்ட்ஜ் ரியால்டி" என்ற நிறுவனமும் களம் கண்டிருக்கு.  

முதல் நிறுவனம் கால் பதிச்ச 2019க்கு சில ஆண்டுகளுக்கு முன்னாடிதான், சரியா சொன்னா 2014க்குப் பிறகுதான் இது தொடர்பான வழிமுறைகள்... சட்ட விதிகள் எல்லாம் உருவாக்குற பணிகள் நடந்தது.  இந்த நிறுவனங்களையும்.... அதாவது, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்ங்கிறதையும் கண்காணிச்சு... வழிநடத்தி... அவங்களுக்கு ஆலோசனை சொல்லி... அவை ஒரு சீரா நடக்கிறதுக்கு வழிகாட்றது 'செபி'தான். அதாவது, இந்தியாவுல ஏற்கனவே பங்கு சந்தை முதலீட்டை வழி நடத்திக் கொண்டிருக்கிற அதே வழிகாட்டு ஆணையம் தான். இப்ப கூடுதலா, இந்த ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டையும் கண்காணிச்சு வழி நடத்திட்டு வராங்க. ஆகவே, மேலே சொன்ன எல்லா நிறுவனங்களும் முழுமையா செபியோட கட்டுப்பாட்டுக்கும், கண்காணிப்புக்கும் உட்பட்டதாகதான் இருக்கும். எனவே, எம் பணத்தை தூக்கிட்டு ஓடிடுவாங்களோன்ற சந்தேகம் உங்களுக்கு தேவை இல்லை. நாம போட்ட பணத்துல வாங்கின சொத்தை நாம் கண்ணால் கூட பார்க்கலையேன்ற கவலையும், சந்தேகமும் தேவையில்லை

நீண்ட காலமாக பங்கு சந்தையை கட்டுப்படுத்துற வழிகாட்டு ஆணையம்தான் இதையும் பாக்கறாங்கன்றதால் ஒழுங்கா.... முறையா.... வழிகாட்டி, பாதுகாப்பான முதலீடாக அதை வச்சிருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அது சரி..., இப்ப இந்த துறையில இருக்குங்கிற இதுமாதிரி நிறுவனங்கள் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கொடுக்குறாங்க... ன்ற கேள்வி நியாயம்தான். ஏன்னா, பங்குசந்தை முதலீடு.... மியூச்சுவல் ஃபண்டு முதலீடு... இப்படி பலதும்  சொல்றீங்க.... இதோடு, வங்கி டெப்பாசிட்... போஸ்ட் ஆபீஸ் முதலீடு இப்படி பலதும் இருக்கு. அதுல எல்லாம் கிடைக்கற வருவாய் இதுலயும் சாத்தியமா...? முதலீடுன்னு வந்தா, பொதுவா... பரவலா சொல்லப்படறது அல்லது நம்பப்படுற விஷயம் என்னன்னா.... நீண்ட கால அடிப்படையில பங்கு முதலீடுதான் நல்ல ரிட்டன் தரும். ஒருவேளை இடையில் சில நேரங்கள்ல பங்கு சந்தைல வீழ்ச்சி ஏற்பட்டா கூட,  நீண்டகால அடிப்படையில பங்கு முதலீடுதான் சிறப்புன்னு சொல்றாங்க. ஆனா, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ரீட்ஸ் வந்து நெறைய காலம் ஆகல. அதிக பட்சமா சொல்றதுன்னா, 5 வருஷம்ன்னு சொல்லலாம். இதை மட்டும் வச்சி உறுதியா எதுவும் சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. அதே நேரத்துல போட்ட பணத்துக்கு வருமானம்ன்னு இப்ப சொல்றதுன்னு சராசரியா இப்ப 6 முதல் 8 பர்செண்ட் வரை வருமானமா கிடைக்குது. இது இந்த மாதிரி விஷயங்கள் ஏற்கனவே நல்லா வளர்ச்சியடைந்த அமெரிக்கா... ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைவிட அதிகம். அதைத் தாண்டி நாம ஆரம்பத்துல போட்ட பணம்..  அதனோட வலர்ச்சின்னு பார்த்தா.... அதாவது மூலதன வளர்ச்சின்னு பார்த்தா.... இன்னும் உடைச்சி சொல்றதுன்னா... நீங்க பணம் போட்டபோது உங்களுக்கு கொடுத்த யூனிட்களை இப்ப வித்தா எவ்வளவு பணம் கைக்கு வரும். அது எந்த அளவு வளர்ந்திருக்கும்ன்னு பார்த்தா... சராசரியா 15% வரைக்கும் நடந்திருக்கு. ஆக மொத்தமா பார்த்தா ஆண்டு சராசரி வளர்ச்சி 15% வரை. கூடவே ஆண்டு சராசரி வருமானம் 6 முதல் 8%. ரெண்டும் சேர்த்து பார்த்தா இது இப்ப நம் முன்ன இருக்கற முதலீடுகளில் சிறந்த ஒரு முதலீடுன்னு கட்டாயம் சொல்லலாம். ஆனா... ஆமாம் இங்க ஒரு ஆனான்ற எச்சரிக்கை இருக்கு. அது என்னனா... இந்தியாவுல இந்தத் துறை இன்னும் பெரிய அளவுல வளர்ச்சி அடையல.... அனுபவப்படல....ன்றதுதான். 

மற்ற நாடுகளைவிட இந்திய ரீட்ஸ் நிறுவனங்கள் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், குறைந்த கால அனுபவத்தை மட்டுமே வச்சி உத்தரவாதமா எதுவும் சொல்லிடக் கூடாதுன்ற பாதுகாப்பு உணர்வோட பார்த்தா, உங்களோட பல்வேறு முதலீடுகளில் ஒன்னா இதையும் வைச்சிகலாம். குறிப்பிட்ட அளவு பணத்தை இதுலயும் முதலீடு செய்யலாம். இண்ட்ரா டே டிரேடிங்... ஆப்ஷன் டிரேடிங்... ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் போன்ற ஆபத்தான வழிகளைவிட கட்டாயம் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் பாதுகாப்பானதுதான்னு உறுதியா சொல்லலாம். 

இன்னைக்கு ரீட்ஸ்ல இருக்கற வருவாய் வாய்ப்பு...ன்னு பல விஷயங்கள பார்த்தோம். இதே மாதிரி ரீட்ஸ் சம்மந்தப்பட்ட மற்ற பல விஷயங்களை அடுத்த பகுதியில பார்க்கலாம். 

 வணக்கம் நண்பர்களே!

மறுபடியும் முகநூலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது பதிவுக்கு எதைக் கருப்பொருளாக எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது... முதல் பதிவை படித்த நண்பர் ஒருத்தர் கேட்ட கேள்வி.... மின்னலாக வெட்டியது.... அதைத்தான் இப்போது தலைப்பாக எடுத்திருக்கிறேன். 

நண்பர் கேட்டது இதுதான்..... "சரிங்கண்ணா,  டிஜிட்டல் கோல்டு பத்தியும், அதன் பாதுகாப்பு பத்தியும் சொன்னீங்க.... ஆனா தங்கத்தைத் தாண்டி... எங்களுக்கும் சொந்தமாக வீடு இருந்தா.... எப்படி இருக்கும்ன்னு ஒரு ஆசை இருக்கு. ஆனா, இன்றைய நிலைக்கு அதுக்கு சில லட்சங்களாவது தேவைப்படுது. அப்படி ஒரு சில லட்சங்களை என்னால முதலீடு செய்ய முடியாத சூழ்நிலையில, ரியல் எஸ்டேட் வகையிலான முதலீட்டு லாபம் எனக்கு எட்டா கனியாத்தான் இருக்குமா.....?" 

இப்படி ஒரு கேள்வி, நான் எதிர்பார்க்காததுதான்.  ஆனால், கேட்டார். அது எனக்கு நியாயமா தோணுச்சு. சரி அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தீவிரமா யோசித்தேன் அப்போ எனக்கு தோன்றின யோசனைதான் இது. 

நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். அண்மை காலமாக, அதுல கொஞ்சம் முதலீடும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். நம்மை மாதிரி  நடுத்தர வருவாய் உள்ள குடும்ப ஆட்களுக்கு இருக்கற முதலீட்டு வழிகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட். ரீட்ஸ்... அப்படின்னும் சொல்றாங்க! அது பற்றி பேச முடிவு எடுத்திருக்கேன். அதைத்தான் இன்னைக்கு நம்ம பதிவுல பார்க்க போறோம்.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் பற்றி விரிவா போறதுக்கு முன்ன அது பத்தி சின்னத ஒரு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கு.  

ஏற்கனவே நீங்க மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்யக்கூடிய ஒரு நபரா இருந்தா,  அது இன்னும் கொஞ்சம் ஈஸியா புரிய வாய்ப்பு இருக்கு. மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டத்துல நீங்க செய்யற முதலீட்டை... பணத்தை பங்குசந்தை பத்தி நல்லா தெரிஞ்ச நிபுணர்கள் மூலமா, சந்தைல புழங்கற பங்குகள்ல முதலீடு செய்யறாங்க...! அதே மாதிரி நீங்க செய்யற முதலீட்டு பணத்தை ரியல் எஸ்டேட்ல முதலீடு செஞ்சா அதுல ஒரு லாபம் வரும். அந்த லாபம் உங்களுக்கு வரும். அதுதான் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட டிரஸ்ட்.  மொத்தமா பணம் போட்டு ஒரு வீடோ... மனையோ... வாங்க முடியாதவங்க இந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம். பேரு பெருசா இருக்குன்னு "ரீட்ஸ்"ன்னு (Real Estate Investment Trust - REITs) சுருக்கி சொல்வாங்க..! 

சரி..., நான் போட்ட பணத்தை எடுத்து ரியல் எஸ்டேட்ல முதலீடு செய்வாங்கன்னா... எந்த மாதிரி இடத்துல முதலீடு செய்வாங்கன்னு நீங்க கேட்டா... நியாயமான கேள்விதான். 

ஒருவர் மொத்தமா ஒரு சொத்தை வாங்க முடியாத சூழ்நிலையில... அதாவது, சில லட்சங்களில் முதலீடு செய்ய முடியாதுங்குற ஒரு ஆளு.... அவர்கிட்ட இப்ப ஆயிரங்கள்ல... இல்லை பத்தாயிரங்கள்ல இருக்கலாம்..... இல்ல அதைவிட கூடவும் இருக்கலாம். ஒரு வருஷத்துக்கு 10 ஆயிரம்ன்னு அவர் சேமிச்சா,  அடுத்த வருஷம் 20,000 இருக்கும். அதை ரீட்ஸ்ல முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃப்ண்ட்ல யூனிட்கள் தர்ற மாதிரி நீங்க போடற பணம் 100 ரூபாயோ... லட்ச ரூபாயோ... அதுக்கு ஏத்த மாதிரி கணக்கிட்டு யூனிட்கள் கொடுத்துடுவாங்க.  அப்புறம், இது மாதிரி பலர் கிட்ட இருந்து வாங்கின பணத்தை எல்லாம் மொத்தமா சேர்த்து... அது பல கோடிகளில் வருதுன்னா... அந்த கோடிகளை எடுத்துட்டு போயி ஒரு சொத்தை வாங்குவாங்க.... அந்த சொத்தை வாங்கி தேவையானவர்களுக்கு வாடகைக்கு விடுவாங்க... வாடகைக்கு விடும்போது, அது மூலமா கிடைக்கக்கூடிய வாடகை வருவாயை..... யார் யாரெல்லாம் ஆரம்பத்துல முதலீடு செஞ்சாங்களோ, அவங்களுக்கெல்லாம் பிரிச்சு கொடுப்பாங்க!

அந்த வகையில நமக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கு. பங்குகளில் முதலீடு செய்தால் டெவிடென்ட்ன்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான். இந்த மாதிரி வருவாய் ஆண்டுக்கு ஒரு முறை கொடுக்க வாய்ப்பு இருக்கு. சில நிறுவனங்கள் மட்டும் அதிகமாக வருவாய் பெறக்கூடிய சூழலில்.... இடையில் ஒருமுறையும் டிவிடெண்ட் கொடுப்பாங்க! வாடகையிலயே அவ்ளோ காசு வருமான்னு நீங்க ஒரு கேள்வி கேட்டீங்கன்னா... அது நியாயமான கேள்விதான். வரும்....! எப்போ வரும்ன்னா இந்த பணத்தை நாம எந்த மாதிரியான சொத்து வாங்குவதற்கு பயன்படுத்துறோம்ங்கறதை பொறுத்தது. அதுதான் முக்கியம். 

உதாரணத்துக்கு ஒரு இன்டஸ்ட்ரியல் பார்க்ல..... அதாவது,  இன்னைக்கு மிகப் பெரிய ஆபீஸ் காம்ளெக்ஸ்ல... பாக்குறீங்களே, பல ஐடி நிறுவனங்கள்  பெரிய பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களில் செயல்படறதெல்லாம் பாக்கிறீங்க இல்லையா.... பல பன்னாட்டு நிறுவனங்களோட அலுவலகங்கள் அங்க இருக்கிறத பார்த்திருப்பீங்க! அந்த மாதிரி சொத்துக்களை இவங்க வாங்கும்போது அதுல கிடைக்கக்கூடிய வாடகை வருமானம் கட்டாயம் கூடுதலா இருக்கும். அது மட்டும் இல்லாம, இந்தியாவிலேயே இருக்கக்கூடிய மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், மத்தவங்களுக்கும் கூட லீஸ் அடிப்படையிலும்... அல்லது மாதாந்திர வாடகை அடிப்படையிலும் ஒரு கான்ட்ராக்ட் போட்டுகிட்டு வாடகைக்கு கொடுப்பாங்க. அதனால, அவங்களுக்கு வாடகை ரெகுலரா கிடைச்சிடும். அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. அந்த வருவாயை தான் இப்போ பிரிச்சு கொடுக்குறாங்க.  இந்தியாவுல இப்போதைக்கு பாத்தீங்கன்னா நாலு... அஞ்சு நிறுவனங்கள் இந்தத் துறையில் செயல்படுறாங்க...  அவங்க இந்த மாதிரி வருவாய முதலீட்டாளர்களுக்கு கொடுத்துட்டு இருக்காங்க. 

சரி.... அப்படின்னா அதுல எவ்வளவு வருவாய் வர வாய்ப்பிருக்கு என்பதுதானே அடுத்த கேள்வி... அது மட்டுமில்லை. இந்தியாவுல, இதுமதிரி ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் எப்போது தொடங்கியது என்ற மத்த விஷயங்களையும் அடுத்த பதிவில்  பார்க்கலாம்.

 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

"ஏன் நீண்ட நாட்களாக முகநூல்.... இந்த ப்ளாக் பக்கமே, ஆளை காணோம்" என என்னிடம் கேள்வி கேட்டவர்கள் பலர்.  அன்பு மற்றும் உரிமை மிகுதியால், "இந்தப் பக்கமே வர முடியாத அளவு அப்படி என்ன உனக்கு பெரிய வேலை?" என்றவர்களும் உண்டு. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால்...!

என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்! வேறென்ன.... "சோம்பேறித்தனம்"தான்.

ஆனால் இப்படியே காலம் ஓடிவிடாது என்ற உண்மையும், இருக்கத்தானே செய்கிறது. அதனால்தான் மீண்டும் வந்திருக்கிறேன். ரஜினி படத்தில் வரும் வசனம் போல, "போய் சொல்லு....திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!" என்று பேசும் அளவு என்னிடம் அதிரவிடும் விஷயங்கள் இல்லை. 

அப்படியானால், "இப்ப என்னத்தான் பண்ணப்போறே?" என்பதுதானே உங்கள் கேள்வி. முதலில், நட்பு வட்டத்தை புதுப்பிப்பது... பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வது..., இடையிடையே, நான் விரும்பும் விஷயங்களை... என்னை பாதித்த விஷயங்களை... நான் உணர்ந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது... 

ஒரேயொரு எச்சரிக்கை.

இவற்றில் பெரும்பாலானவை, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிதி மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களாகவும் கூட இருக்கலாம். ஆனால், முடிந்தவரை வெகுஜன பங்கேற்புக்கு உகந்த விஷயங்களாக... அவர்களை தொடர்புபடுத்தும் விஷயங்களாக இருக்கும்படி  பார்த்துக் கொள்கிறேன்.

முதல் விஷயமாக நான் எழுத நினைப்பது பெருவாரியான சாமானிய மக்கள் மனதில் இன்று உழன்று வரும் தங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விஷயங்கள் குறித்துதான்.

கடந்த ஓராண்டில் 50%க்கு மேல் விலையேற்றம் கண்ட தங்கம், கடந்த 1 மாதத்துக்கு மேல்... வெள்ளியோடு சேர்ந்து மேலும் கீழும் தாறுமாறாக பயணிப்பதால், பலருக்கும் கவலை... பயம்! முடிந்தவரை சிறிது சிறிதாக... மில்லி மில்லியாகத்தான் தங்கம் வாங்கிதான் நம்மால் சேர்க்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு, அண்மைக்காலமாக இருந்த ஒரே ஆறுதல் - டிஜிட்டல் தங்கம்.... அதான் Digital Gold. சம்பளம் வாங்கி... செலவுகள் போக... கையில் மீதி இருக்கும் 100... அல்லது 500... ஏன் 1000 ரூபாய் என்றாலும், அதை அன்றைய விலையில்... அப்போதே தங்கத்தில் முதலீடு செய்து... நாளைய தேவைக்கு சேர்த்து வைக்க நினைத்தவர்களுக்கு இருந்த ஒரு எளிய வழி டிஜிட்டல் கோல்டு (Digital Gold). 

டிஜி கோல்ட் (Digigold).... இ கோல்டு (E-Gold)என பல பெயர்களில் குறிப்பிடப்படும் மிக எளிய சேமிப்பு முறை இது. ஆனால், அதில் பாதுகாப்பில்லை என, இதில் சேமித்த எளியவர்களின் வயிற்றில் செபி (SEBI) இன்று புளியைக் கரைத்திருக்கிறது. ஆம். இந்திய பங்குசந்தை வழிகாட்டு ஆணையம் என்கிற செபி சொல்வது என்னவென்றால், "இப்போது டிஜிட்டல் தங்கம் என்ற வகையில், தனியார் நிறுவனங்கள்.. அல்லது கைப்பேசி ஆப்கள் (Apps) மூலம்... நம்மால் அவ்வப்போது மில்லி கிராமிலோ... செண்டி கிராமிலோ.... அதிகபட்சம் கிராமிலோ சேமிக்க முடிந்த தங்கமும், அதன் மதிப்பு தொகையும்... பாதுகாப்பாற்றது" என்றும், "நாம் செலுத்தும் பணத்துக்கு உடனே நம் கணக்கில் வரவு வைக்கப்படும் தங்கத்துக்கும் பாதுகாப்பு இல்லை" என்பதுதான். கடந்த வார இறுதியில் செபி (2025 செப்டம்பர் முதல் வாரம்) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

நாட்டின் மிக முக்கியமான அரசு அமைப்புகளில் ஒன்றான....  இந்திய பங்குசந்தையை வழிநடத்தி வரும் செபி, நமது நாட்டின்  மதிப்புமிக்க ஒரு அமைப்பு. அது ஒரு எச்சரிக்கையை தருகிறது என்றால் கவனிக்க வேண்டாமா... அலட்சியப்படுத்த முடியுமா... உண்மையில், டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பு இல்லாததா.... ஏன் இந்த எச்சரிக்கை..... அப்படியானால் அடுத்த வழி என்ன... மாற்று என்ன... இதெற்கெல்லாம் விடை தேடுவதுதான் இந்த பதிவின் நோக்கம். 

முதலில் டிஜிட்டல் தங்கத்தின் தோற்றம் பற்றி பார்க்கலாம். பற்பல ஆண்டுகளாக, நான் அறிந்த வகையில்... தமிழ் மண்ணில் இருந்த பல பிரபல நகைக்கடைகளில்... நகைச்சீட்டு என்ற வகையில் மாதம்தோறும் ஒரு தொகையைச் செலுத்தி வந்து... ஆண்டு இறுதியில்... அல்லது 2 ஆண்டுகளுக்குப் பின்... அதுவரை சேர்த்த பணத்துக்கு உரிய தங்கத்தை நகையாகவோ.... தங்க நாணயமாகவோ மாற்றி வந்த... நம் தாத்தா பாட்டிகளின் சேமிப்பு முறையில் உருமாறிய அதிநவீன வடிவம்... கணினிகால வரவுதான் இந்த டிஜிட்டல் தங்கம். அந்த வகையில் நம் தாத்தாவும்... பாட்டியும்.... மாமாவும்.. அத்தையும்.... அப்பாவும், அம்மாவும் தங்கம் சேமித்தக் காலத்தில் சம்மந்தப்பட்ட நகைக்கடைகள் பல திடீரென காணாமல் போய் அதில் பணம் கட்டியவர்கள் நடுத்தெருவுக்கு வந்ததுண்டு. "கடை முதலாளி ஓடிவிட்டார்....",  "இன்னொரு நபரிடம் ஏமாந்துவிட்டார்....",  "எதிர்பாராத நஷ்டம்... அதனால் குடும்பத்தோடு தற்கொலை"... இப்படியான பலவும் அன்று காரணமாகச் சொல்லப்பட்டது. கடையோ, கடை முதலாளியோ காணாமல் போனால், அதோடு நம் முதலீடும் போச்சே, என்ற அன்றைய நிலை மாறி.... இன்று நாம் செலுத்திய பணத்துக்கு அந்தந்த நாளில்... தேதியில் அன்றைய விலையிலேயே... நம் கணக்கில் தங்கமாக கணக்கு வைத்துவிடுகிறார்களே... அதுவும் மில்லிகிராம் கணக்கில்... அப்புறம் என்ன பாதுகாப்பு குறை என்ற கேள்வி எழலாம்.  அது மட்டுமல்ல.

இன்று நாம் கடைக்குக்கூட போக வேண்டிய அவசியம் இல்லாமல்... உங்களது UPI கணக்கு மூலம், வீட்டில் இருந்தபடியே மாதம் தோறும்... அல்லது ஒப்புக் கொண்டபடி வாரந்தோறும் அல்லது அன்றாடம் பணம் கட்டி நம் கணக்கில் பெறப்படும் தங்கம் எப்படி பாதுகாப்பற்றதாக போகும் என்ற கேள்வி பலரது மனதில். காரணம், இன்று டிஜிட்டல் தங்கம் வாங்க பலரும் பணம் செலுத்த பயன்படுத்தும் எல்லா UPI-ம், அதாவது பணம் செலுத்தும் முறை, இந்திய அரசால்... இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கிகரிக்கப்பட்டவை என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யப்பட்டது. கோவிட் பெருந்தொற்று காலத்திலும், அதன் பிறகும் ஏன்... இந்திய ரூபாய் மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலம்தொட்டே டிஜிட்டல் பணபரிமாற்றத்துக்கு பரிந்துரைத்ததே அரசாங்கம்தான்... அப்படியிருக்க, இப்போது அதே வகையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட தங்கம் எப்படி பாதுகாப்பற்றதாக மாறும்.

யாரை குறை சொல்கிறார்கள்.... தங்கத்தையா.... அது முடியாது. டிஜிட்டல் பணபரிமாற்ற முறையா.... அதுவும் முடியாதே என்ற சந்தேகம் பலரது மனதில்.

டிஜிட்டல் தங்கம் அறிமுகம் செய்தபோது சொல்லப்பட்டது என்னவென்றால், நாம் செலுத்தும் ஒவ்வொரு தவணை பணத்துக்கும் ஈடாக, நிஜமாகவே தங்கம் வாங்கி சேமிக்கப்படும். அந்த தங்கத்தைப் பின்னாளில் தேவையானபோது அப்படியே உலோகமாக வேண்டும் என்றாலும், அல்லது தவணைத்திட்டத்தை முடித்துக் கொள்ளும்போதும்... அதுவரை சேமித்த தங்கத்தை தங்க நாணயமாக... அல்லது, அன்று சந்தையில் தங்கம் விற்பனையாகும் விலைக்கு கணக்கிட்டு, அதற்கு ஈடான ரொக்கமாகவோ நம் விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம் என்பதே. நாம் செலுத்தும்  தொகைக்கு அவ்வப்போது தங்கம் வாங்கி நம் கணக்கில் சேர்ப்பதால், இதில் பிரச்னை வராது என்பது பலரது நம்பிக்கை.

இதனால்தான் ஆரம்ப நாட்களில் இந்த வகை முயற்சியில் இறங்கிய டிஜிட்டல் வழி பணம் செலுத்தும் வாயில்களான Phone Pe, Paytm, Google pay போன்றவர்கள் இந்த வகையில் தங்கம் சேமிக்கும் திட்டங்களைத் தொடங்கியபோது, சரசரவென முதலீடுகள் திரட்டன. UPI என்ற அரசு அங்கிரித்த பண பரிமாற்ற முறையில் பங்கெடுத்துள்ள தளங்கள் இவை என்பதால் இவற்றின் மூலமான முதலீடுகள் பாதுகாப்பானவை என நம்பி கணிசமாக முதலீடுகள் செய்யப்பட்டன.

இதை கவனித்தத் தங்க நகைக் கடைகள் தங்களது நகைச்சீட்டு வாடிக்கையாளர்கள் குறைவதாக உணர்ந்தார்களோ என்னவோ.. தாங்களும் களம் இறங்குவோம் என பின்தொடர்ந்தார்கள். இதனால் இன்று இந்த டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்பவர்களின் பட்டியலில் நகைக்கடைகளும் சேர்ந்து கொள்ள.... அது மிக நீளமானது.

PhonePe, Paytm, Google Pay, MMTC-PAMP போன்ற நிறுவனங்கள் தவிர, டாடா குழுமத்தின் Tanishq, Jos Alukkas, Kalyan Jewellers, Thangamayil Jewellery, Pothys Swarna Mahal, AVR Swarna Mahal போன்றவை இன்று தமிழகத்தில் டிஜிட்டல் தங்கம் விற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அப்படியானால், பாதுகாப்பு குறைபாடு எங்கே?

மியூச்சுவல் ஃபண்டு.... காப்பீட்டு திட்ட விளம்பரங்களில் அவசர அவசரமாகச் சொல்லப்படுவதை நாம் பொருட்படுத்துவதே இல்லைதானே! அதைப் போலவே, டிஜிட்டல் தங்க முதலீடுகள் குறித்து அப்போது சொல்லப்பட்ட... ஆனால், நம் கவனத்தை அதிகம் ஈர்க்காத ஒரு அம்சம்தான், இன்றைக்கு டிஜிட்டல் தங்கத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, செபியின் எச்சரிக்கை அப்படி சொல்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது சார்பில் திரட்டும் டிஜிட்டல் தங்க முதலீடுகளுக்கு இணையாக வாங்கி வைக்கப்படுவதாகவும், தேவைப்படும்போது முதலீட்டாளர் விரும்பும் வடிவில் திருப்பித்தரப்பட காத்திருப்பதாகவும் சொல்லப்படும் தங்கம் எங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ளது... அதற்கான வழிமுறைகளும், செயல்திட்டங்களும் சரியாக உள்ளதா... அவை முறைப்படி, விதிகளை மீறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது முக்கியம். பங்குசந்தை வழிகாட்டு ஆணையம் எழுப்பும் சந்தேகம் இங்கேதான்.

ஒரு டிஜிட்டல் தங்க திட்டத்தில் திரளும் முதலீட்டுக்கு ஈடான தங்கம், பொதுவாக இந்தியாவுக்குள் தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்திய அரசு நிறுவனங்களான MMTC-PAMP உள்ளிட்ட பிறவற்றின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும். Augmont, SafeGold, Brink’s போன்றவை இந்தியாவில் தற்போது மேற்கண்ட பாதுகாப்பு பணி நிறுவனங்களில் முக்கியமானவை. இவ்வகை நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் தங்கம், அதற்கு தேவையாக காப்பீடு போன்றவற்றையும் பெற்றிருக்கும் என்பதோடு, பிற தேவையான வழிமுறைகளும் கையாளப்படும் என ஆரம்பகால விதிமுறைகள் சொல்கின்றன. அவை ஏற்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். உங்களிடம் தங்கத் முதலீட்டைத் திரட்டும் நிறுவனமே, இந்தப் பாதுகாப்புப் பணியைச் செய்வதில்லை. வேறொரு.... 3ம் நபரின் கண்காணிப்பில்... அவரது கட்டுப்பாட்டில் இவை பாதுகாக்கப்படுகிறது.சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு மட்டுமின்றி எதிர்பாராத அசம்பாவிதங்களால் பாதிப்பும், இழப்பும் கூடாது என காப்பீடு உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் இதில் அடங்கும். இதுதவிர திரட்டப்பட்ட முதலீட்டுக்கு இணையான தங்கம் உள்ளதா என்ற சரிபார்ப்பும், அதாவது ஆடிட் வழிமுறைகளும் உண்டு. இதுபோன்ற காரணங்களால்தான் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே டிஜிட்டல் தங்கம் மிகப் பெரிய வீச்சை காட்டியது.

ஆனால் காகிதத்தில்... எழுத்தில் உள்ள இவை எல்லாம் நடைமுறையில் உள்ளதா என்ற கேள்விதான் இப்போதுசெபி எழுப்பியுள்ள சந்தேகத்துக்கு பின்னணி என தெரிகிறது.  காரணம், டிஜிட்டல் தங்க முதலீடு என்பது செபியின் வரையறைக்குள் இல்லாத வேறு முதலீட்டு வழிமுறை. டிஜிட்டல் தங்க விற்பனையாளர்களை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ செபிக்கு அதிகாரம் இல்லை. இதுதவிர, வேறு எந்த ஒரு அங்கிகாரம் பெற்ற ஆணையமும் இவர்களை கட்டுப்படுத்த முடியுமா.... கண்காணிக்கின்றனவா என்பதும் தெளிவாக இல்லை. அதனால், ஒருவேளை டிஜிட்டல் முதலீடுகளுக்கு இணையாக தங்கம் சேமிக்கப்படாமல் போனாலோ, வாங்கி சேர்த்த தங்கத்துக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படாமல் போனாலோ பிரச்னை வரலாம் என்பதுதான் செபியின் சுற்றறிக்கைக்கு காரணமாகத் தெரிகிறது. ஆனாலும் செபியின் இந்த சுற்றறிக்கை ஒரு எச்சரிக்கை அறிவிப்பு என்றே சொல்லப்படுகிறது.

எந்த ஒரு நிறுவனமோ... தொடர்புள்ள மற்ற இடைப்பட்ட அமைப்புகளோ.... வேறு எங்கும் மற்றவர்களோ தவறு இழைத்ததாக.... சந்தேகம் எழும் வகையில் செயல்பட்டதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் அப்படியான தகவல் பொதுத்தளத்தில் நான் அறிந்த வகையில் இல்லை. அதனால், செபியின் இந்த சுற்றறிக்கையைக் கண்டு டிஜிட்டல் தங்க முதலீட்டாளர்கள் பீதியடைய வேண்டியதில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. காரணம் - இன்று தங்கம் விற்கும் விலையில்... முன்னதாக எந்த அளவிலும் தங்க சேமிப்பு இல்லாத ஒரு நடுத்தர வருவாய் கொண்ட குடும்பம் தங்களது பிற்கால தேவைக்கு குருவி போல மணி மணியாக சேமிக்க இப்போதுள்ள வாய்ப்புகளில் டிஜிட்டல் தங்க முதலீடும் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த டிஜிட்டல் தங்க முதலீட்டுக்கு மாற்றாக செபி பரிந்துரைப்பது - இப்போது பங்குசந்தையில்... பங்குகள் போலவே விற்பனையாகும் யூனிட்கள். அதாவது, தங்க முதலீட்டு திட்டங்கள் (Gold ETF), மின்னணு தங்கப் பத்திரங்கள் (Electronic Gold receipts)மற்றும் விளைபொருள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கான ஊக வணிக திட்டங்களில் (Commodity derivative) நடப்பது போன்ற தங்க உலோகத்தின் மீதான ஊக வணிகம். இவ்வகை வணிகத்திற்கு தேவைப்படும் டிமேட் கணக்கு போன்றவை படித்த இன்றைய இளம் (GenZ) தலைமுறைக்கு வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். ஆனால், அதிக விவரம் இல்லாத சாதாரண அப்பாவி பொது மக்களுக்கு செபி பரிந்துரைக்கும் திட்டங்கள் ஏற்றவைதானா என்ற கேள்வி எழுகிறது. மாறாக, பங்குகள்  வாங்க தேவைப்படுவது போன்ற டிமேட் கணக்கை தொடங்கி பராமரிப்பது... அதில் உள்ளே.... வெளியே.... என முதலீடு செல்வதை கண்காணிப்பது... அதற்கான மின்னஞ்சல் தகவலை சரி பார்ப்பது என... இதையெல்லாம் அவர்களால் செய்ய முடியுமா....  தெரியுமா என்ற பல கேள்விகள் உள்ளன.

நடைமுறையில் உள்ள சிரமங்களுக்கு இடையில் செபி கண்காணிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து அதில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான முறையீடு செய்வது இவ்வகையான எளிய சிறு முதலீட்டாளர்களுக்கு எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி எழாமல் இல்லை. அவ்வாறு முறையீடு செய்யவில்லை என்றால், செய்ய வேண்டிய அவசியம் தெரியாமல் போனால், தனிநபர் இழப்புகளுக்கு தீர்வு என்ன? பொதுவான... பலருக்குமான இழப்பு என்றால் அவர்களால் செய்யப்படும் முறையீடுதான் அப்பாவி மக்களுக்கும் தீர்வாகும் என்றால்.... செபியின் பரிந்துரை அப்பாவிகளுக்கு எந்த வகையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் எனத் தெரியவில்லை.

மாறாக, டிஜிட்டல் தங்க முதலீடுகளில் இப்போது "இல்லை" எனச் சூட்டிக் காட்டப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட உரிய வழிமுறைகளை செபி முன்வைக்க வேண்டும். அல்லது, இவ்விஷயத்தில் இந்திய அரசு என்ன செய்யலாம் என பரிந்துரைக்க வேண்டும். அரசும் இதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால், அதுதான் டிஜிட்டல் தங்க முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கான சரியான முன்னெடுப்பு என்பது எனது கருத்து. மாறாக, செபியின் தற்போதைய எச்சரிக்கை ஒருவகையான அச்சத்தை டிஜிட்டல் தங்க முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதுகிறேன். அப்படிதான் பரவலாகக் கருதப்படுகிறது

எனவே, தவிர்க்க இயலாத வகையில் மாறிப்போனதால் டிஜிட்டல் பணபரிமாற்றத்தைக் கற்ற, அதிகம் படிக்காத... அப்பாவி மக்களுக்கு நடைமுறையில் இன்று சாத்தியமான... எளிதான தங்க சேமிப்பு வாய்ப்பு - டிஜிட்டல் தங்க முதலீடுதான் என்பது எனது புரிதல். அதோடு, UPI போன்ற மற்றொரு வழிமுறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட நேர்ந்தால் தையும் கற்றுதேரும் திறன் நம் மக்களுக்கு உண்டு என்றும் நான் நம்புகிறேன். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை.

ஆனால், இங்கே விவாதிக்க வேண்டிய மிக முக்கிய கருத்து - மேலே சொன்ன அப்பாவிகளுக்கான பாதுகாப்புதான். எனவே, இனி வரும் நாட்களில் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த... நம்பகமானவர்களின் ஆலோசனை பெற்று... அவர்களது வழிகாட்டுதலோடு... தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது. அவ்வாறு டிஜிட்டல் தங்கத்தில்தான் முதலீடு செய்வது என முடிவு செய்தால்... உங்களைப் போன்றவர்களின் முதலீட்டில் வாங்கி சேர்க்கப்படும் தங்கம் சேமித்து வைக்கப்படும் கிடங்கு, அதன் பாதுகாப்பு, அதன் தற்போதைய சேமிப்பு அளவு, திரட்டப்பட்ட மொத்த முதலீட்டில் தங்கமாக உள்ள அளவு எவ்வளவு... என்பது போன்ற தகவல்களை வெளிப்படையாக... குறிப்பிட்ட கால இடைவெளியில்... பொதுத்தளத்தில் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய தளங்களாக தேடி அறிந்து... அவற்றில் மட்டும் முதலீடு செய்வது நல்லது. கூடவே, ந்த வெளிப்படை தன்மையைத் தொடர்ந்து கையாளும் நிறுவனமாக இருத்தல் சிறப்பு. ஒருவேளை மேற்கண்ட விவரங்களை ஒரு நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், அது குறித்த விவரங்களை வெளியிட மறுத்தாலும், மழுப்பினாலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மெல்ல மெல்ல ஏற்கனவே செய்த முதலீடுகளையும் திரும்பப் பெற்று, நம்பகமான வேறு நிறுவனத்தை தேடிச் செல்வது நல்லது.

வேறு வழியே இல்லை என்ற நிலையில், “முதலீட்டுக்கு மோசம் வரக்கூடாது என்றால், சில சிரமங்களும் சங்கடங்களும் இருக்கும் என்றாலும், அதைச் சந்திக்கும் உறுதியுடன் செபி பரிந்துரைக்கும் தங்க மியூச்சுவல் பண்ட் திட்டங்களுக்கோ, தங்க இடிஎஃப் திட்டங்களுக்கோ மாறிக் கொள்வதுதான் சிறப்பு.

உங்கள் பணம், உங்களது வியர்வை! அதன் பலனை நீங்கள் பெறாமல் மற்றவர்கள் களவாடிச் செல்லாமல் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்புதான். குறிப்பாக, நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களுக்கு இது மிக மிக முக்கியம். அவர்களும் வளர்ச்சி கண்டு... மேம்பட்ட நிலை நோக்கி நகர வேண்டும்தானே!