தனக்கு 25 ஆண்டுகள் முடிந்ததை இந்த வாரத்தில் பா.ஜ.க. வெற்றிகரமாக (!) கொண்டாடியது.
பாராளுமன்ற ஜனநாயகம் என்றான பிறகு ஒரு அரசியல் கட்சிக்கு.., அதிலும் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைப் பெற்றுவிட்ட கட்சிக்கு, ஆளுங்கட்சிக்கு இணையான அந்தஸ்த்தை தந்துதான் ஆகவேண்டும். அந்தக் கட்சியை பிடித்திருக்கிறதோ இல்லையோ, அதன் தலைவர்கள் நம்பிக்கையளிக்கிறார்களோ இல்லையோ, அதன் கொள்கைகள், திட்டங்கள் ஏற்புடையதாக இருக்கிறதோ இல்லையோ... ஆனால் பிரதான எதிர்க்கட்சி என்றானபின் அந்த கட்சியை அலட்சியப்படுத்திவிட முடியாது; கூடாது என்பதுதான் உண்மை. இது, இன்றைய நிலையில் பா.ஜ.க.வுக்கு வாய்த்திருக்கிறது. நேற்று-காங்கிரஸ். நாளை-யாரோ!
தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் இந்தியாவில் உண்டு. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்... ஆந்திரத்தில் என்.டி.ஆர், அஸ்ஸாமில் மகந்தா இப்படி! ஆனால் தேசிய அளவில், பல மாநிலங்களில் தனது இருப்பை உணர்த்தி, தனித்தில்லாவிட்டாலும் கூட்டணிக்கு தலைமையேற்று கிட்டத்தட்ட 6 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி செய்யும் வாய்ப்பு பெற்றது பா.ஜ.க. இதன் 25 ஆண்டுகால ஆயுளுக்குள்.
1980ன் முதல் காலாண்டில்தான் பா.ஜ.க. என்ற பெயரில் முறையாக இந்த கட்சியைத் தொடங்கினார்கள். ஆனால் அப்போதே இந்தக் கட்சியின் தலைவர்கள் பலர், பழுத்த அரசியல்வாதிகள். வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள் அப்போதே முன்னாள் மத்திய அமைச்சர்கள். எமர்ஜென்ஸிக்கு பிறகு, 1977ல் நடந்த தேர்தலில் 'ஜனதா கட்சி' என்ற பொது பெயரில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆலோசனையில், மொரார்ஜி தேசாயை பிரதமராகக் கொண்டிருந்த அந்த அமைச்சரவையில் மந்திரிகள்.
ஆனால் அந்தக் கட்சிக்குள் பிரதமர் பதவியைப் பிடிப்பதில் சரண்சிங், ஜெகஜீவன் ராம் போன்ற இன்னும் பலருக்கு இருந்த போட்டியில் - 'ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் இருப்பது' என்றது சிக்கிக்கொள்ள... வில்லங்கம் தொடங்கியது.
யார் பிரதமர் என மல்லுக்கு நின்றபோது... ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து ஒன்றாக இருக்க வேண்டுமானால் - 'ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் தகுதியை துறக்கவேண்டும்' என்பதை மறுத்த பழைய ஜனசங்கம் உறுப்பினர்கள் அப்படியே ஒதுங்கிபோய் உருவாக்கியதுதான் பா.ஜ.க. அதாவது, பாரதீய ஜனசங்கம், பாரதீய ஜனதா என்றானது.
இன்றைய பா.ஜ.க. தலைவர் எனக்கு அறிமுகமான 1977 தேர்தலின்போது நான் பள்ளிக்கூட மாணவன். அரசியல் அதிகம் தெரியாது. ஆனால் ஆர்வம் உண்டு. இப்போது போல அல்லாமல் - அப்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கினால் இரண்டு... மூன்று நாட்கள் கூட ஆகும் இறுதிநிலை தெரிய. அதுவும் சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை என்று தொடங்கிவிட்டார்களானால் தாவு தீர்ந்துவிடும்.
என் அப்பா அரசு ஊழியர்தான் என்றாலும், அதி தீவிர தி.மு.க. அனுதாபி. (பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், எனது கடும் அதிருப்திக்கு இடையில் நகராட்சி மன்ற உறுப்பினராக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைக் கண்டவர். அது தனிகதை) அப்போது திமுக, காங்கிரசை எதிர்த்ததால் 'மிசா' கணேசன், (அந்தப் படம் அப்போது கொடுத்ததுதான்) ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் எல்லாம் சிறையில் அடி, உதை வாங்கி திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தில் எங்களது தொகுதிக்கே...ஊருக்கே வந்தார்கள். (ஆற்காடு வீராசாமியின் நெருங்கிய உறவினர் எனது தந்தையின் ஆத்ம நண்பர், எனக்கு ஆசான். அதோடு, முந்தைய திமுக ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்த புலவர் கோவிந்தன் எமக்கு தூரத்து உறவினர்; என் பாட்டன் முறை) இதனாலெல்லாம் எப்படியும் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் (ஜனதா ஜெயிக்கவேண்டும் என்றல்ல) தேர்தல் முடிவுகளுக்காக வானொலிப் பெட்டியைத்தான் நம்பி காத்துக் கிடப்போம். அப்போது டிவி பார்த்ததேயில்லை. நடு இரவில் 1 மணி, 2 மணி... என ஒருமணிநேர இடைவௌதயில் சொல்லப்படும் செய்திகளுக்கு தூக்கம் கலைந்து எழுந்து அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தந்துவதே, ராஜ் நாராயணன் (அதான் இந்திராகாந்தி போட்டியிட்ட தொகுதி) போன்றவர்களது தொகுதி முடிவுகளை கேட்டு, அப்பாவின் சந்தோஷத்தை பார்த்து, அதில் பாதியை வாங்கிக்கொண்டு நானும் குதித்திருக்கிறேன். அப்படி எனக்கு அறிமுகமானவர்தான் அத்வானி. இன்றைக்கு பா.ஜ.க.வை மறுபடியும் ஆட்சிக் கட்டிலுக்கு அருகில் அழைத்துவரவேண்டிய பொறுப்பைச் சுமப்பவர்.
அப்போது, எனக்கு வாஜ்பாயைத் தெரியாது. பின்னர் மொரார்ஜி அமைச்சரவையில் மந்திரியான பிறகுதான் அவரைப் பற்றி கேள்விப்பட்டேன். அப்போது கூடுதலாக தெரிந்துகொண்ட இன்னொருவர் சாந்திபூஷன் - சட்ட அமைச்சர். (இந்திரா மீது நடத்தப்பட உள்ள கேஸை எப்படி கொண்டு செல்வார் என்பதால், அவரைப் பற்றி அப்பா பேசுவார்) ஆனால் அந்த 'அரசியல் அறிவொளி'ச் சுடர் எனக்கு நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து கிட்டவில்லை. ஒரு கும்மிருட்டு சூழ்ந்து கொண்டது. என் அப்பாவுக்கு தி.மு.க. விஷயங்கள்தானே முக்கியம். அதனால் பதவிப் போட்டியில் ஆட்சியை கை நழுவவிட்டார்கள் என்பது தெரிந்ததே தவிர மற்ற விபரங்கள் அப்போது எனக்குத் தெரியாது.
அரசியல் மதிப்பீடுகள் செய்வதில் அமெச்சூர்தனமில்லாமல் திறமையாக செயல்பட கூடியவரான கருணாநிதி, அடுத்து 1980 தேர்தல் வந்தபோதே 'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!' என்று அழைத்து விடுத்துவிட்டார். இந்தமுறை 'காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும்' என்ற எதிர்பார்ப்பில் - வானொலி நடுஇரவு தேர்தல் முடிவு அறிவிப்புகள். 'ஏன் அதற்குள் கட்சி மாறிவிட்டீர்கள்?' என்றெல்லாம் என் அப்பாவை நான் கேட்கவும் முடியாது. கேட்டால் பதிலும் கிடைக்காது; வேறென்று கிடைக்கும். அதைச் சொல்லி, இப்போது உங்களுக்கும் அழுவாச்சி வரவழைக்க எனக்கு விருப்பமில்லை.
இந்த 1980 தேர்தல்களின் அரசியல் 'தோல்வி தூசி' அடங்க எடுத்துக்கொண்ட நேரத்தில்தான் பா.ஜ.க. உதயமாகிறது. ஜனதாவின் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சிலரும், தோல்வி கண்ட பலரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் தகுதியை கைவிட மனமில்லாமல்தான் ஜனதாவை துறந்து, பா.ஜ.க.வில் இணைந்தனர். இது, இந்துமதவாதக் கட்சி என்று அப்போதே பெயர் உண்டு. பழைய ஜனசங்கத்தினர்தானே! அதேபோல சிக்கந்தர் பந்த் என்ற மூத்த முஸ்லீம் தலைவர் ஒருவர் அப்போதே பா.ஜ.க.வில் இருந்ததாக ஞாபகம்.
அப்புறம் மற்றவர்கள் இருந்த ஜனதாக்கட்சிக்கு சந்திரசேகர் (பின்னாளில் பிரதமரானவர்) தலைவர். (எனது மாமா ஒருவர், இவரது அபிமானி. பாரத் யாத்ரா என்று அவர் [வெட்டித்தனமாக (!)] கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியபோது அவரை மகாத்மா காந்திக்கு இணையாக எங்களிடம் எடுத்துப் பேசுவார்) ஆனால் எதிர்க்கட்சிகளாக இந்த இரண்டுமே பெரிய அளவு பலம் பெற்றவை இல்லை. தென்னிந்தியாவில் அப்போது பா.ஜ.க. சுத்தமாக கிடையாது. கர்நாடகத்தில், தமிழகத்தில், கேரளாவில், ஆந்திராவில் எல்லாம் பழைய காங்கிரஸ் (காமராஜர் சிஷ்யர்கள்தான்) ஆட்கள்தான். அவர்களும் ஜனதாவில் இருந்தனர்.
குஜராத், ஓரளவு உ.பி. ம.பி., ஹி.பி, ஓரளவு ராஜஸ்தான், தில்லி போன்ற இடங்களில் பா.ஜ.க. வலுவாக இருந்தது. குவாலியர் ராஜ்யத்தின் முன்னாள் மகாராணி அப்போது பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர். ராஜ்மாதா என்றுதான் சொல்வார்கள்.
இந்தச் சூழலில் பொற்கோவில் - நீல நட்சத்திர நடவடிக்கை எதிரொளியாக 1984ல் இந்திராகாந்தி கொல்லப்பட, அந்த சோகத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்த தேர்தலை நடத்திவிட்டார் இடைக்கால பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ராஜீவ்காந்தி. அப்போது பானியாக்கள் என்று அழைக்கப்பட்ட வடநாட்டு வணிக குலத்திடம் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சி பா.ஜ.க. என்று சொல்வார்கள். நாடு முழுக்க அடித்த அந்த சூறாவளியில் பானியாக்கள் ஆதரவெல்லாம் காற்றில் பறக்க, பா.ஜ.க.வுக்கு இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி கிட்டியது. அதில் ஒருவர் வாஜ்பாய். லக்னோவில் வென்றதாக ஞாபகம். அப்போதுதான் அவர் எனக்கு நன்றாக பரிச்சயமாகிறார். அதாவது அவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. Comes under watchlist.
ஆரம்பத்தில் மிஸ்டர் க்ளின் என்று பத்திரிகைகளால் பாராட்டப்பட்ட ராஜீவ் (இப்போதுபோல, ஏராளமான சின்னத்திரைகளோ, மற்ற வகையில் ஊடக மட்டத்தில் போட்டியோ, பரபரப்போ அப்போது கிடையாது) பல மாநிலங்களில் வரிசையாக ஒப்பந்தங்கள் செய்து - (பஞ்சாபில் லோங்கோவால்; அஸ்ஸாமில் மகாந்தாவுடன்; காஷ்மீரில் பாருக் அப்துல்லாவுடன்...) 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை அழைத்துச் செல்லும் பிரதமர் என்று பேசப்பட்டார். சாம் பிட்ரோடா இந்தியாவை எங்கேயோ அழைத்துச் செல்லப் போவதாக சொல்லி கனவுகளை உண்டாக்கினார். இந்த நேரத்தில் நான் கல்லூரி மாணவன். கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் இதுகுறித்து கார்ட்டூன்கள் போட்ட ஞாபகம் இருக்கிறது. இப்போது நம்மைத் தலை சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் VAT பற்றி அப்போதே ராஜீவின் நிதியமைச்சர் வி.பி.சிங் தனது பட்ஜெட் உரையில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.
அடுத்து ஷபானு என்ற முஸ்லீம் பெண்ணின் தலாக் விவகாரத்தில் அவருக்கு சார்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னபோது பாஜகவினர் கொண்டாடினர். ராஜீவ்காந்தியும் கூட ஆரம்பத்தில் அதை ஆதரித்து.... பின்னர் தங்களது முஸ்லீம் ஓட்டுவங்கி போய்விடும் என்று யாராவது சொன்னார்களோ என்னவோ பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். அதாவது முஸ்லீம்களின் மத நம்பிக்கை தொடர்பான (Persoanal law affairs) விவகாரங்களில் இந்திய நீதிமன்றங்கள் தலையிடாது. அவ்வளவுதான்! பாஜகவினர் வானத்திற்கும் தரைக்கும் குதித்தனர். இந்தியாவில் ஒரேமாதிரியான சட்டம் (Common Civil code) வேண்டும் என்ற கூச்சல் கூரையை பிய்த்துக் கொண்டு அலறியது. பாவம் ராஜீவ்காந்தி! கொஞ்சம் பயந்துவிட்டார் போல! எங்கே தங்களது இன்னொரு முக்கிய வாக்கு வங்கியான வட நாட்டு பிராமணர்கள் ஓட்டுவங்கி போய்விடுமோ என்று அவர்களைத் திருப்திபடுத்த அதுவரை அனுமதிக்காமல் - நீதிமன்றத்தின் ஆளுகைக்குள் இருந்த ராமர் கோவில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து அங்கு பூஜை செய்து கொள்ள வழிவிட்டார். அப்போதுதான் பா.ஜ.க. தனது அரசியல் பிழைப்புக்காக ராமஜென்ம பூமி பிரச்னையை முதலில் உரக்க பேசத் தொடங்கியது. ஐடியா கொடுத்தது ராஜீவ் காந்திதான் என்றால் நான் தலையாட்டுவேன்.
கால ஓட்டத்தில் காட்சிகள் மாற, வி.பி.சிங், ராஜீவை விட்டு விலகி போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு வௌளத்தால் எதிர்க்கட்சிகளின் ஹீரோவாகிவிட்டார். ஒருவேளை வி.பி.சிங் மாதிரி ஒரு வலுவான சின்னம் அப்போது காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்திருக்காவிட்டால் பா.ஜ.க. இன்னும் முன்னதாகவே தலை உயர்த்தியிருக்கும் என்பது என் இப்போது என் கருத்து. ஆனால் வி பி சிங் வந்ததால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. ரேஸில் பின்தங்கிவிட்டது. 1989ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிட்டவில்லை.
ஜனதா தளம் வேட்பாளராக பிரதமருக்கு முன்னிருத்தப்பட்ட வி.பி.சிங்குக்கு பா.ஜ.க.வும், கம்யூனிஸ்டுகளும் வௌதயில் இருந்து ஆதரவு தர... 'ராஜா சாகிப்' மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ராஜா சாகிப்' ஆகிறார். அதாவது பிரதமராக பொறுப்பு ஏற்கிறார். ஆனால் ராஜா வம்சத்தில்.... அந்த தோரணையோடு வளர்ந்தவர் - பிரதமரானதும் கூட மற்றவர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதே என்ற உறுத்தல் காரணமாகவோ என்னவோ தனக்கென தனி ஓட்டு வங்கியை உருவாக்கிக்கொள்ள திட்டமிட்டு விரைவிலேயே 'மண்டல் கமிஷன்' பரிந்துரையை செயல்படுத்த அறிவிப்பு வௌதயிட்டார்.
அதுதான்.. அதுதான் சரியான தீப்பொறி என சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் வீரிய... வீர வரலாறு இங்கேதான் தொடங்குகிறது. அதற்கு முன்பு எல்லாம் பாலகன் வாழ்க்கை.
- தொடரும்