வழக்கமா சீரியஸ் மேட்டர் பேசும் சந்திரன், இந்த தலைப்புல பொது தொண்டுல இறங்கிட்டாரோ? அப்படி என்ன சீரியஸ் விஷயம் இதுல பேசப் போறாருன்னு ஆர்வமா வந்தவங்களுக்கு ஸாரி! ஜூட் வுட்டுக்கலாம்.
இந்த ஆள் எப்பவும் இப்படித்தான். இதுவும் எதாவது கனமாகத்தான் இருக்கும் ஓடிப் போக நினைப்பவர்கள் ஒரு நிமிஷம் ஸ்டாப்!
நான் வெயிட்டீஸ், சொல்லாம ஓய்வுக்கு போய்ட்டேன். அதனால் இப்ப light subjectதான். பெரிதாக எதிர்பார்த்தவர்கள் இப்ப ரெண்டாவது முறை சொல்றேன். கழண்டுக்கலாம்.
இன்றைய நிலையில் பேச நிறைய சீரியஸ் சப்ஜெக்ட்கள் என்னவோ இருக்கின்றன. அதைப் பற்றி பேச ஆசையும் கூட இருக்கு! ஆனால் டைமும், கூடவே மனமும் உதைக்குது. ஒத்துழைக்க மறுக்குது. ஒவ்வொன்றிலும் சில விஷயங்களையாவது verify பண்ண வேண்டியிருக்கு! அப்படியில்லாமல் நினைவில் கொண்டதை எழுத மனமில்லை. தகவல் தவறாகிவிடக்கூடாதே!
இப்போது எழுதுவதானால் 1. சீன - இந்திய நட்புறவு பற்றி, கடந்த கால கசப்புணர்வு, போர் பற்றி, நேருதான் ஆரம்பத்திலேயே திபேத் விஷயத்தையொட்டி அசட்டையாக இருந்து, போர் வரும் அளவுக்கு காரணமாகிவிட்டார் என்றிருக்கும் கருத்து பற்றி... இப்படி பல பதிவுகள் போடலாம்.
2. உச்ச நீதி மன்றத்தில், 'தேர்தலின்போது யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' என்றே ரகசிய வாக்குபதிய அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு நேற்றுதான் அனுமதித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் இதற்கு ஆதரவாக கருத்து சொல்லியிருக்கிறது. இந்தமுறை அமலானால் அதன் சாதக பாதகம் பற்றியும் விவாதிக்க விருப்பம்.
3. அடுத்து முஷாரப் இந்திய பயணம், ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் அவரைச் சந்திக்க இருப்பது...
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எதைப் பற்றியும் எழுத மனது ஒத்துழைக்க மறுப்பதால்.... அதை கொஞ்சம் விளையாட அனுமதித்து இந்த பதிவு.
இதன் உள்ளடக்கம்கூட விஜய்க்கு பின்னூட்டமாக போட தயாரானதுதான். பின்னர் மனம் மாறிவிட்டேன்.
***
சென்னை வலைபதிவர்களின் கடற்கரை சந்திப்புக்கு போய் வந்ததிலிருந்து இதை எழுதணும்னு நெனச்சேன். ஆனா ஒன்னு... ரெண்டு.... ஒப்தறதுக்கு (அப்படின்னா என்னா என்று யாராவது கேட்டால் உதைப்பேன். வயதானவர்களானால் சபிப்பேன் ;-) எங்க பாட்டி தாத்தா சொன்னாங்க... நானும் சொல்றேன்) மூணுன்னு (ஐகாரஸ் பிரகாஷ், நாராயணன், அண்ணாகண்ணன்).... மூணு பேர் அதைப்பற்றி எழுதிவிட்டதால் நான் எழுதவில்லை. அல்லது எழுத விஷயமில்லை.
'அப்படியா? இருக்காதுங்க! விஷயம் எதாவது இருக்கும். எதையாவது தோண்டி பாருங்க!' என்று மனது விடமால் நச்சரிக்க... தேடிப் பார்த்ததில் இது போன்ற நிறைய விஷயங்களை நீங்களெல்லாம் இழந்து விட்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சியானேன். அதுக்கு நான்தானே பொறுப்பு! சரி விஷயத்துக்கு வருகிறேன்.
தமிழ் சினிமா பாடல்களை போட்டுத் தாக்கிக்கிட்டு இருக்கும் நண்பர் விஜய் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கறது நல்லது! நல்லவேளை அறிவியல் சமாச்சாரங்கள் எழுதுறேன்னு இப்ப கொஞ்சம் திசை திரும்பப்போய் தப்பிச்சாரு! அப்படியில்லாம தொடர்ந்து ஏடாகூடமாக இருக்கும் தமிழ் சினிமா பாடல்களின் ஆசிரியர்களை விமர்சித்து அவர் தொடர்ந்து எழுத முனைந்தால்.... என்னவாகும்?
தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமால்.... (அதாவது உங்களுக்கு... எனக்கு... இன்னும் நம்மைப் போல பலருக்கு) தமிழைக் கொல்றாங்கன்னு அவர் போக்குல போட்டு தாக்க, பின்னாடி 'இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அது தெரியலன்னா சும்மா கிடக்கோணும்... இப்படி எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசிட்டு அலையக்கூடாது'ன்னு யாராவது மெயில் போட்டா? மெயில் போட்டா கூட பரவாயில்லை. விஜய் செய்ய போறதா சவடால் விட்டுக் கொண்டிருந்தபடி... இவரையே வெட்ட வந்தா.... ? ('ரொம்ப நல்லதா போச்சு! அறிவியல் அது, இதுன்னு எழுதி, நம்ம கழுத்தறுக்கமா இருப்பாரில்லையா?'ன்னு பாலு மணிமாறன் சொல்றது யார் யாருக்கு கேக்குது!)
'அப்படி என்னத்தை அங்கன பேசிக்கிட்டீங்கன்னு சொல்லாம.... வெட்டிக் கதைதானே ஓடுது'ன்னு யாரும் கேக்கறதுக்கு முன்னாடி...., மறுபடியும் ஒருமுறை விஷயத்துக்கு வரேன்.
''மாறுகோ... மாறுகோ... மாறுகையி.... ஜோருகோ... ஜோருகோ.... ஜோருகையி!'' பாடல் ஞாபகமருக்கா?
இதில் 'மாறுகோ' என்ற வார்த்தை என்ன மொழி... அதற்கு என்ன அர்த்தம் என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்திருந்தால் ஓகே! அப்படியில்லாமல் என் போல எல்லாருக்குமே இந்த சந்தேகம் இருந்தால்... அதைப் பற்றி ஒருவேளை விஜய் எழுதப்போய்... ஆமாங்க, இங்கதான் பிரச்னையே!
கடற்கரை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது 'இயற்பியல்' போன்ற வார்த்தைகளை தமிழுக்கு தந்த (நம் வலைபதிவர்களில் ஒருவர்) இராம.கி அவர்களிடம், 'Marketing' என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான 'தமிழ் சொல்' என்ன என்று பேச்சு வர, அவர் 'மாறுகொள்'தான் சரியான வார்த்தை என்றார். சந்தைப்படுத்தலை அவரிடம் சந்தைப்படுத்த முடியவில்லை. பாரதியாரும் கூட தனது 'சிந்து நதியின்....' பாடலில், 'மாறுகொள்ளுவோம்' என்று பாடியிருக்கிறார் என்று தொடங்கி பெரிய பிரசங்கமே நடத்திவிட்டார். இவ்விடம் 'மாறுகொள்ளுவோம்' என்பது 'பண்டமாற்று வகையில் பரிமாற்றிக் கொள்வோம்' என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் Marketing பணியில் நடப்பது. அதனால் மாறுகொள்ளுதல் என்பதுதான் Marketingக்கு சுத்தமான தமிழ் வார்த்தை என்று வாதிட்டார்.
இப்போது கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு விளையாட்டுக்கு வாருங்கள். (மூன்றாவது முறையும் 'விஷயத்துக்கு வாருங்கள்' என்று சொன்னால் என்னை வெட்ட வருவீர்கள்தானே!) 'மாறுகொள்' என்பதை ஆணையிடும் தொனியில் பயன்படுத்தும்போது 'மாறுகோ...' என்று குறிப்பிடலாமில்லையா? அப்படித்தான் மேற்கொண்ட பாடலும் எழுதப்பட்டுள்ளது. அது சுத்தமான தமிழ் வார்த்தைதான் என்று யாரும் வாதிட்டால்....
அதற்காகச் சொல்கிறேன் விஜய்! ஒரு பாடலை விமர்சிக்க நினைக்கும்முன் எதற்கும் ஒருமுறை அதை இராம.கி அவர்களைப் போன்ற தேர்ந்த தமிழ் அறிஞர்கள் யாரிடமாவது கொடுத்து Check செய்து கொண்டபின் விமர்சிக்கத் தொடங்குவது நல்லது.
உயிர் காப்பான் தோழன் என்பார்கள்... ஆஹா.... விஜயின் உயிருக்கு வர இருந்த ஆபத்திலிருந்து அவரைத் தடுத்துக் காப்பாற்றிய நான் அல்லவா நல்ல தோழன். என்ன விஜய்! சரிதானே! காலாகாலத்துக்கு எனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறீர்கள்தானே!
என்னப்ப! இதைக்கூட நானே சொல்ல வேண்டியிருக்கு!