நேற்று மாலை சுமார் 7 மணியிருக்கும். நண்பரும், கவிஞருமான வஸந்த் செந்தில் அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அதை 'அறை' என்று சொல்வது சரியா? செந்தில் திருமணமாகாதவர் என்பதால் - அவர் வசிக்கும் வீட்டை (எனது வீட்டுப் பரப்பைவிட அதிகம்) அறை என்றே குறிப்பிடுவது வழக்கம். Bachelorராக, அறை எடுத்துத் தங்கியிருந்தவர்கள் இதன் சூட்சமத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
செந்தில், என்னை ஒப்பிடும்போது நிறையவே இலக்கியம் படிப்பவர். ஓரளவு தேர்ந்த விமர்சகர் என்று, பெயரும் பெற்றவர். 'சாளரம்' என்ற பெயரில் வௌதயான அவரது இலக்கிய விமர்சனத் தொகுப்பு நூல் கவனிக்கப்பட வேண்டிய புத்தங்களில் ஒன்று என்பது எனது கருத்தும். அவரது அறைக்கு எப்போது சென்றாலும், 'புதிதாக என்ன புத்தகம் வந்திருக்கிறது?' என்று பார்ப்பேன். அப்படியான முயற்சியால்தான் நேற்று இந்த விபத்து... அதிர்ச்சி!
பலரது நன்மதிப்பிற்கும், விருப்பத்திற்கும் உரிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் படைத்த, வௌதயானபோது பரபரப்பை கிளப்பிய 'உலக சினிமா' புத்தகம் நண்பரின் மேஜை மீது இருந்தது. அவரது மேஜையில் இருக்கும் வஸ்துகளை உரிமையோடு எடுத்து புரட்டும் சலுகையை, நான் உள்பட சிலருக்கு செந்தில் வழங்கி வருகிறார். அதனால்தான் புத்தக விலையைக் கண்டு கொஞ்சம் பயத்தோடு ஒதுங்கிவிட்ட நான், இப்போது அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். புத்தகம் வௌதயாகி இப்போது 6 மாதங்களுக்கு மேலாவதாக நினைவு. இடைப்பட்ட காலத்தில் சில இடங்களில் அந்த புத்தகம் கண்ணில் பட்டும், எடுத்துப் புரட்ட இயலாத சூழல்.
இந்த புத்தகம் வௌதயான நேரத்தில், விழாவுக்கு எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தனர், புத்தகத்தை வௌதயிட்ட 'கனவு பட்டறை'யினர். நண்பர் ஜெரால்ட் மற்றும் அவரது துணைவி - கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை (மாத்தம்மா, பறை உள்ளிட்ட சில குறும்படங்கள் மூலம் கவனத்தைப் பெற்றவர்) போன்றவர்கள்தான் கனவு பட்டறையின் உரிமையாளர்கள். நண்பர் ஜெரால்ட் எனக்கு நல்ல பரிச்சயம். விகடனில் பணியாற்றியபோதே அறிமுகமானவர். லீனாவின் கவிதைநூல் வௌதயீட்டு விழாவுக்கு அழைத்திருந்தபோது, கவிஞரை ஜெரால்ட் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
'உலக சினிமா'வை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன், லீனாவுக்கு முன்பே எனக்கு பரிச்சயமானவர். எனது மரியாதைக்குரிய நண்பர். அவர் ஒரு முன்னணி எழுத்தாளர் என்றவகையில்விட, ஒரு நண்பர் என்றவகையில்தான் எனக்கு தெரியும். அவரது அட்சரம் பத்திரிகை தொடர்பான சில விஷயங்களுக்காக, எனது அலுவலகத்தில் அவருடன் பேசிக்கொண்ட நாட்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஆஸ்கர் விருதின் 75 ஆண்டு நிறைவை யொட்டி வௌதயான எனது புத்தகமான ''ஆஸ்கர் - 'அ' முதல்...''ஐ நான் விரும்பி சென்று கொடுத்து... பின்னர் கருத்து கேட்டவர்களில் ஒருவர். பலரைப் போல மேம்போக்காக இல்லாமல், புத்தகத்தைப் படித்துவிட்டுதான் பேசுகிறார் என்பதுபோல அவரது விமர்சனம் இருந்தது. அவரது விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, 'இன்னும்...' என்று அவர் எதிர்பார்த்ததாக சொல்ல வந்த விஷயங்கள் குறித்து, எனது பதிலையும் பகிர்ந்து கொண்டேன். நன்றி சொல்லிவிட்டு பிரிந்தோம். இடையில் சில நேரங்களிலும் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு.
செந்தில் அறையில் 'உலக சினிமா' புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது இடையில் மின்னல்! அல்லது அது போல - எனது பெயர், அந்தப் புத்தகத்தில்! கொஞ்சம் அதிர்ச்சி. ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டு மறுபடியும் கவனித்துப் பார்த்ததில் நிஜம்தான். ''ஆஸ்கர் - 'அ' முதல்...'' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை (ஆஸ்கர் விருது வரலாறு) எடுத்து இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார் எஸ்.ரா. அனேகமாக, அந்த 'உலக சினிமா' புத்தகத்தில் ஆஸ்கர் விருது பற்றிய விபரங்கள் வேறு எந்த வகையிலும், எங்கும் இடம் பெறவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை 'இது போதும்' என நினைத்தாரா தெரியவில்லை.
ஆனால், எனக்கு இந்த விஷயத்தில் இரண்டு காரணங்களுக்காக வருத்தம்.
முதற் காரணம் எளிமையானது. மறக்கக்கூடியதும். எனது புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து பயன்படுத்தியிருப்பது குறித்து புத்தகத்தின் உள்ளடக்க உரிமையாளரான எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் இந்த நிமிடம்வரை... ஒரு தகவலாகக்கூடச் சொல்லவில்லை. சில நேரங்களில் கைப்பேசி தகவல் - எஸ்எம்எஸ் போலகூட செய்தியனுப்பலாம். அப்படி எதுவுமும் வரவில்லை. இதற்கு, நான் அவரது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவன் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. எனது அந்த புத்தகத்திலேயே எனது தொடர்பு எண் அச்சிடப்பட்டுள்ளது. அதை அவருக்கு சொல்லிக் காட்டியே நாங்கள் பேசியிருக்கிறோம். அடுத்து, அவர் எனது அலுவலகம் வராதவர் என்று சொல்லிவிட முடியாது. அதைத்தாண்டி புத்தகம் வௌதயான காலத்ததல் 'கனவு பட்டறை' அலுவலகம்கூட, எனது அலுவலகத்திலிருந்து 5 நிமிட நடை தூரம்தான். ஆனால் ஒரு courtesy sakeகூட எஸ்.ரா எனக்கு தகவல் சொல்லாததும், தற்செயல் விபத்துபோல நானே அதை புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொண்டதும் எனக்கு வருத்தம்தான். என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதை ஒரு காரணமாக அவர் சொல்வதை எந்தவகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
எனது புத்தகத்திலிருந்து எதையோ எடுத்துக் கையாளும்முன், அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக நான் எதிர்பார்க்கவில்லை - அவர் எனது நண்பர் என்பதால். பரவாயில்லை. பயன்படுத்திக் கொள்ளலாம்தான். ஆனால் பயன்படுத்திய பின்னராவது அதை ஒரு செய்தியாக... தகவலாக எனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் நினைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். நினைக்கிறேன். அதற்காக அவர் என்னைத் தேடி மெனக்கெட வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. பின்னர் எங்காவது சந்திக்கும்போது சொல்லியிருக்கலாம். அல்லது, இந்த புத்தக வௌதயீட்டு விழாவுக்கே நான் சென்றிருந்தபோதுகூட சொல்லியிருக்கலாம்தான். அந்த விழாவிலேயே நானே தேடிச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினேனே அப்போது கூட சொல்லியிருக்கலாம். அன்றைய அவரது busy scheduleல் கூட இரண்டு நிமிடம் என்னுடன் பேசிவிட்டுதான் சென்றார். அப்போதும் கூட அவர் மறந்துவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும் பின்னர் இன்றுவரை 6 மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை ஒரு செய்தி இல்லை. என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை.
ஒருவேளை அவர் தொடர்பு கொண்டு தகவல் சொல்லும் அளவுக்கு வேறெதாவது தகுதிகளை எதிர்பார்க்கிறாரா தெரியவில்லை. அப்படி இருக்காது என நம்புகிறேன். அப்படிதான் என்றால்....? என்ன சொல்ல......?
இரண்டாவது வருத்தம். ஆழமானது. மறக்க முடியாததும். 'உலக சினிமா'வில் பயன்படுத்தப்பட்டுள்ள அந்த பகுதிக்கு courtesy credit கொடுக்கும் இடத்தில் புத்தகத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ''ஆஸ்கர் : அ முதல் ஃ வரை - சந்திரன்'' என்று எஸ்.ரா. குறிப்பிட்டுள்ளார். இதுதான் எனக்கு மதகவும் ஆழமான வருத்தத்தைத் தருகிறது. அதாவது, ஒரு புத்தகத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் அதற்கான credit தரும் விஷயத்தில்கூட எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அடுத்து எனது புத்தகத்தையும், அதன் உள்ளடக்கத்தை அவர் அணுகிய வததம், அதை புரிந்த கொண்ட விதம் என பலவற்றில் எனக்கு புதிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார் எஸ்.ரா. இப்படி செய்திருப்பது வேறு யாராவது என்றால் பரவாயில்லை. நான் கண்டு கொள்ளாமல் கூட இருந்திருப்பேன். ஆனால் மதிக்கப்படும் இலக்கியவாதி என்று பெயரெடுத்து வரும் எஸ்.ரா செய்யத்தகுந்த காரியமாக இது எனக்கு படவில்லை.
''ஆஸ்கர் - 'அ' முதல்....'' என்பதற்கும், அதனுடன் ''ஃ வரை'' என்பதைச் சேர்த்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆஸ்கர் விருது - இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் வரலாறு. அதற்கு 'ஃ' போட்டு முடிப்பது முடியுமா? நீண்ட யோசனைக்குப் பிறகு.... பல நண்பர்கள் (மனுஷ்ய புத்திரன் உட்பட), 'தலைப்பை மாற்றினால் பரவாயில்லை' என்று சொன்ன ஆலோசனைகளை மீறி.... வைத்த தலைப்பு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறதோ என்று மறுபடியும் எனக்கு தோன்றுகிறது. நான் என்ன மாதிரி புரிதலை எதிர்பார்த்தேனோ, அப்படி இந்த புத்தகத் தலைப்பு சென்றடையவில்லையோ என்று இப்போதும் நினைக்கிறேன்.
இப்படியான ஒரு courtesy credit மூலம் எஸ்.ரா செய்திருப்பது என்ன? இதே அளவு அசட்டையாகத்தான் அவரது புத்தகமும் தயாராகியுள்ளதா என்ற கேள்வி எனக்கு இப்போது எழுகிறதுதானே? இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. கேட்டிருக்கிறேன். படித்துப் பார்க்க வேண்டும்.
எஸ்.ரா மீது எனக்கு இன்னும் மரியாதை இருப்பதால் இதற்குமேல் நான் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை. ஆனால், எனது புத்தகத்தைப் பார்க்காதவர்களுக்கும், எஸ்.ரா.வின் 'உலக சினிமா'வை முதலில் பார்ப்பவர்களுக்கும் தவறான புரிதல் தொடரக்கூடாது என நினைக்கிறேன். அதனால் இதை எழுத வேண்டியுள்ளது.
இதில் இன்னொரு வருத்தம் என்னவென்றால், பதிப்பாளரான நண்பர் ஜெரால்டும் இந்த நிமிடம்வரை இது குறித்த தகவல் எதையும் எனக்குச் சொல்லவில்லை. எஸ்.ரா.வுக்கும் எனக்குமான நட்பு பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால், ஏற்கெனவே என்னிடம் எஸ்.ரா. சொல்லியிருப்பார் என்று ஜெரால்ட் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது அப்படி சொல்லி என்னைச் சாந்தப்படுத்திக் கொள்கிறேன்.
வேறென்ன செய்வது? இதற்குமேலும் நான் வேறு எதாவது கேட்டு வைத்தால் - அது எனது நண்பர் எஸ்.ரா.வுக்கும் அழகல்ல; எனக்கும்தான். ஆனால், இதைகூட கேட்காமல் நான் சும்மாயிருந்துவிட்டால் - என் புத்தகத்திற்கும், அதற்கான உழைப்புக்கும், அதை வௌதயிட்ட பதிப்பகத்திற்கும் நியாயம் செய்ததாகாது. பதிப்பகத்தில் இன்னும் 4 பார்ட்னர்கள் உள்ளனரே!