நண்பர் ஒருவர் 'A Blogger' என்ற பெயரில் அருணா சீனுவாசன் அவர்களின் 'அலைகள்' பதிவில் - திசைகள் மே மாத இதழ் குறித்து எழுதியதில் பின்னூட்டம் இட்டுள்ளார்.
அந்த 'அனானிமஸ்' அவர்களுக்கு பதில் சொல்ல மட்டுமே இந்த பதிவை நான் இடவில்லை. எனது மனசாட்சிக்கும் சில பதில்களைச் சொல்ல வேண்டியுள்ளது.
முதலில் நண்பர் எழுப்பிய கேள்விக்கு பதில். 'ஐயா, எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் குறிப்பிட்டிருந்தபடி தராக்கி சிவராம் அவர்களின் படுகொலை பற்றி எந்தவிதமான ரியாக்ஷனும் நான் காட்டாமல் இருக்கிறேன் என்றவகையில், தாங்கள் அதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்றவகையில்... அதை என் மட்டில் எனது தனிப்பட்ட தவறாக ஒப்புக் கொள்கிறேன். நான் மன்னிப்பு கோர வேண்டும் என்றாலும் தயார். மன்னிக்கவும்.
ஆனால், இதன்பிறகு எனது சில வரி பதிலையும் கேட்பீர்கள் என எண்ணுகிறேன்.
தராக்கி சிவராம் பற்றி நான் அதிகம் தெரிந்தவன் அல்ல. இது, முதல் காரணம். பத்திரிகையாளன் என்றவகையில் ஒருவருக்கு தேவையானது என பலர் சொல்வது - Master of All ஆக இல்லாவிட்டாலும், Jack of all trades ஆகவாவது இருக்க வேண்டும் என்பதே! அந்தவகையில் மதி கந்தசாமியின் தொகுப்பில் சில கட்டுரைகளை படித்து மட்டுமே நான் தராக்கியின் சிந்தனை, வீச்சு பற்றி தெரிந்து கொண்டேன். படிக்க மீதியும் பாக்கியிருக்கிறது. ஒருவேளை இலங்கை அரசியல் பற்றி அதிகமாகவும், குறிப்பாக இலங்கை தொடர்புடைய ஊடகங்கள் வழியாக அதையும் தெரிந்து கொள்பவனாகவும் இருந்திருக்கும் பட்சத்தில், முன்னமே நான் அவரை அறிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி இல்லாமல் போனது இரண்டாவது காரணம். அதுதவிர, நண்பர்கள் சிலரது (மட்டும்) பதிவுகளில் தராக்கி சிவராம் பற்றி இன்னும் கொஞ்சம் தற்போது தெரிந்து கொண்டேன். எனவே எனது அறியாமையும் இவ்விஷயத்தில், நான் ரியாக்ட் செய்யாமைக்கு காரணம். எனது காரணங்கள் பலவும் மற்ற சக பத்திரிகையாளர்களுக்கும் பொறுந்தும் என நினைக்கிறேன்.
மறுபடியும் என் விஷயத்துக்கு வருகிறேன். சக பத்திரிகையாளர்களுக்காக... பத்திரிகை சுதந்திரத்துக்காக... என போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை பல கடந்த காலங்களில் நடந்தபோதும் அவை பலவற்றில் நான் நேரடி பங்களித்ததில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே ஒப்புக் கொள்வதில் எனக்கு சம்மதமே! எனது மானசீக ஆதரவு இவ்வகை போராட்டங்களுக்கு எப்போதும் இருந்துள்ளன. என்றாலும், நானே ஒரு பத்திரிகையாளன் என்றவகையில் இதுவரை நேரடி பங்களிக்காமைக்கு வேறு எந்த காரணமும் இருந்ததில்லை. வேறு முக்கிய அலுவல் இருந்தன என்றெல்லாம் பொய் சொல்ல நான் விரும்பவில்லை. அந்த போராட்டங்கள் பலவும் எனது உளப்பூர்வமாக நியாயமானவைதான் என்றும் அறிவேன். இருந்தாலும் நடந்தவை இவைதான். அதுதான் நிற்கும்.
இப்படி தொடர்ந்து 'பாவ மன்னிப்பு' கேட்டுக் கொண்டு... பட்டியல் போட்டுக் கொண்டு செல்வதில் தற்போது எந்த அர்த்தமுமில்லை. ஆனாலும் இதைக் குறிப்பிட காரணம் மேற்கண்ட பல போராட்டங்களில் - நண்பர் 'A Blogger' குறிப்பிட்டுருந்த பலரும் பங்கேற்றார்கள் என்பதை நான் அறிவேன். மாலன் போன்ற பலர் அதில் சிலவற்றில் முன்னால் நின்று பங்கேற்றனர் என்பதை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்தவன். அருணா அவர்களை எனக்கு இந்த வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகுதான் அறிமுகம். எனவே அவரைப் பற்றி தெரியாது. ஆனால் பங்கேற்று இருப்பார் என்பது எனது நம்பிக்கை. எதிர்பார்ப்பு. அண்ணா கண்ணன் போன்ற நண்பர்களும் அப்போராட்டங்களில் பங்கேற்றதாக ஞாபகம். எனவே அந்த போராட்டங்களுக்கும் சேர்த்து நான் குறை சொல்லப்பட தகுதியானவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
ஒரு வரியில் சொல்வதானால், 'செயலின்மையின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளாத..., யோசிக்காத பொறுப்பின்மை' எனலாம். இப்போது உணர வாய்ப்பு கிடைத்தது. அதை திருத்தி, என்னை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் மற்றபடி, இதர எனது சகோதர பத்திரிகையாளர்கள் பலர் முந்தைய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றவர்கள் என்பதால், இம்முறையும் அவர்களுக்கு தயக்கமோ, மாற்றுக் கருத்தோ இருக்க வாய்ப்பு இருக்காது என்றே நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)