மறைந்த, எழுத்தாளர் சுஜாதா குறித்து ஏராளமான வலை பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன.
ஜெயமோகனில் தொடங்கி, எஸ். ராமகிருஷ்ணன், 'எனி இந்தியன்' ஹரன் பிரசன்னா, 'பிச்சை பாத்திரம்' சுரேஷ் கண்ணன் உட்பட இன்னும் பல இலக்கிய ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நான் ஆர்வத்துடன் தேடிச் சென்று... ஏமாந்தது மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வலை பதிவில்! அவர் 2006லேயே பதிவதை நிறுத்திவிட்டிருக்கிறார்.
நானும் அப்படியே! அவருக்கும் முன்பாகவே. கடைசியாக, நான் பதிவு செய்த உருப்படி விஷயம் 2005 மே மாதத்தில். அதன்பின், வலைபதிவு பக்கம் அதிகம் வருவதில்லை; படிப்பதற்கும்! சில நண்பர்கள் சொன்னதற்கு செவி சாய்த்து, 'மீண்டும் வருவேன்' என மிரட்டல் ;-) விட்டதோடு சரி! சுஜாதா அவர்களின் மரணம் அதை சாத்தியமாக்கியிருக்கிறது.
சுஜாதா குறித்து வலையேறியிருக்கும் பதிவுகளில் பல - அவர் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் பல்வேறு தளங்களில் ஆற்றிய பங்கு குறித்தவை. இன்னும் சில, அவரது தனிப்பட்ட விஷயங்கள், குணம், ஆளுமை, போக்கு, நடத்தை குறித்த எதிர் கருத்துகளாகவும், அதற்கு பின்னூட்டமாகவும், அதையொட்டிய விவாதங்களாகவும் இருப்பவை.
கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் அம்பலம் இணைய தளத்தில் நான் பணியாற்றியபோது, குறைந்தது 4 ஆண்டுகளாவது அவருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளேன். தினமும் சில மணி நேரங்களாவது அவருடன் இருக்க நேர்ந்துள்ளது. அத்துடன், 2002ல் ஒருமுறை, இதேபோல அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அவரது மகன் அமெரிக்காவில் இருந்து நாடு... வீடு திரும்பும் வரை, சில நாட்கள் அவருடன் இருந்து உதவி செய்ததில் எனக்கும் பங்குண்டு. அந்தவகையிலும், இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் அவருடன் நெருக்கமாக இருந்தவன் என்ற வகையில், என் புரிதலிலான 'சுஜாதா' வேறு!
எழுத்தாளர் சுஜாதா மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானவை - அவர், தான் ஒரு தீவிர மத நம்பிக்கை கொண்ட வைணவர்; பிராமணர் என்பதை அப்பட்டமாக வௌதச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார் என்பது. அடுத்து எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ள... சந்திக்க, ஏற்க மறுக்கிறார் என்பது.
முதலில் இரண்டாவது விஷயத்தைப் பார்ப்போம்... 'விமர்சனத்தை ஏற்க மறுக்கிறார்' என்பது, எனக்கென்னவோ மிக பெரிய ஜோக்காக தோன்றுகிறது. தன்னைப் பற்றிய... தனது படைப்புகள் குறித்த விமர்சனத்தை வௌதப்படையாக வரவேற்கும்... முக நகையுடன் ஏற்றுக் கொள்ளும் எத்தனை மனிதர்கள் இப்போது இருக்கிறார்கள்? எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை. நேற்றுதான், தன் முதல் கவிதையை பிரசவித்த நபர்களேகூட, அது குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ள மறுக்கும் ஒரு சிக்கலான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்து. வலை பதிவுகளில் நடக்கும் பல்வேறு சம்பவங்களே இதற்கு சாட்சி! இந்நிலையில் பிரபலங்கள் குறித்த விமர்சனம் குறித்து என்ன சொல்வது! இங்கு மட்டுமல்ல; இன்று உலக அளவிலும் அப்படித்தான். இதில் சுஜாதா மட்டும் மாறுபட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் நியாயம் எனக்கு புரியவில்லை.
அடுத்தது, நான் அறிந்த வரையில் சுஜாதா தன் மீதான விமர்சனங்களை முடிந்தவரை கேட்காமல் இருக்க... பார்க்காமல் இருக்க... தவிர்க்க விரும்பினார் என்பதுதான் நிஜம். பெரும்பாலும் பதில் சொல்ல மாட்டார். அதற்கு காரணம், அவரைப் பொறுத்தவரை என்னவோ! நான் புரிந்து கொண்ட வரையில், அவரை விமர்சிப்பவர்களில் இருதரப்பினர் இருந்ததாக நம்புகிறேன்.
ஒருதரப்பு, நிஜமாகவே சுஜாதா அவர்களின் அணுகுமுறை குறித்து ஏதேனும் ஒரு விஷயத்தில் அதிருப்தியடைந்து அந்த காரணத்துக்காக அம்புகளை நாணேற்றியவர்கள். இன்னொரு தரப்பு - எழுத்தாளர் சுஜாதாவின் பிரபலம் குறித்த வயிற்றெரிச்சல் கேஸ்கள். அவரைப் போலவே... அல்லது அவருக்கு இணையான திறமையை தானும் பெற்றிருப்பதாக நம்பும் 'புண்ணியாத்மா'க்கள்! சுஜாதாவின் சாயலில் 'பிரதி எடுக்கும்' திறமையை வளர்த்துக் கொண்டவர்களும் இந்த பஜனை கோஷ்டியில் உண்டு. இவர்களுக்கெல்லாம் 'சுஜாதாவுக்கு இணையான தாமும் வௌதச்சம் பெற வேண்டும்' என்ற ஆவல்... எதிர்பார்ப்பு... ஆசை! அவருக்கு கிடைக்கும் அளவு இல்லாவிட்டாலும், அதில் சில சதவீதமாவது தங்களுக்கும் பெற்றுவிட ஏங்குபவர்கள். அது கிடைக்காதபோது... 'என்ன செய்வது?' என அறியாமல், 'போட்டுதாக்கு...!' என இந்த காரியத்தில் இறங்கி விடுபவர்கள். ஆனால், இவர்கள் பூனைக்கு மணி கட்ட துணிந்து இறங்கிவர மாட்டார்கள். யாராவது முதலில் திரிக்கு தீ வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் சத்தம் கேட்டால் போதும்... பின்னாலேயே, பல 'பத்தாயிரம் வாலா'களால் சாலையை நிறைத்து விடுவார்கள்.
இந்த பஜனை கோஷ்டியில் ஒரு சிலரை எனக்குத் தெரியும். 60களில்... 50களில்... ஏன் இன்னும் வயது 40களில் உள்ள சிலருக்கே... பெரிதாக எதையும் சாதிக்காதபோதே, இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதுதான் ஆச்சரியத்திலும் அதிசயம். இதில் வினோதம் என்னவென்றால் இவர்களில் சிலரை, எழுத்தாளர் சுஜாதாவே பெயர் குறிப்பிட்டு தனது எழுத்துகளில் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த மாதிரி ஆட்கள், வேறு சிலருக்கு 'பெத்தட்டின் ஊசி போட்டு' தூண்டிவிடுவதும், அரிதாரம் பூசி மேடையேற்றுவதும் தொடர்ந்து நடக்கிறது. இத்தகைய சிலர், தங்கள் அடையாளங்களை மறைக்க சுஜாதாவுக்கு 'பிராமண வேடம்' போட துணிந்துவிடுகிறார்கள். இப்படி ஒரு அரசியல் நடந்ததை, நடப்பதை எழுத்தாளர் சுஜாதா அறிந்திருப்பார் என்றுதான் நம்புகிறேன். நான் ஓரிரு முறை Hint செய்திருக்கிறேன். ஆனால், ஒரு அளவுக்கு மேல், அவர் இது போன்ற விஷயங்கள் குறித்து பேச விரும்புவதில்லை; செவி சாய்க்கவும் மாட்டார்.
எழுத்தாளர் சுஜாதாவுக்கு வைணவத்தின் மீதும்... அந்த இலக்கியங்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதை எந்த நேரத்திலும் அவர் மறைக்க முயல்வதில்லை. அவரது எழுத்துகளில் - அம்பலம்... விகடன்... குமுதம்... குங்குமம்... கல்கி... போன்றவற்றில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய Blogகளில் (Columns இப்போது, இந்த புதிய பெயருக்கு மாறிக் கொண்டிருக்கிறது) இது வௌதப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர் ஆரியக் கூத்தாடுவதாகவும், பிராமணர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.
நான் அறிந்தவரையில் - கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக... கூடுதலாகப் போனால் 4 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரு கருத்து அவரது மனதில் வலுப்பட்டு வந்திருக்கிறது என்றே நான் உணர்கிறேன். அவர் விமர்சிக்கப்படுவதன் பின்னணி... நோக்கம் எல்லாம் - மற்ற பல காரணங்களைவிட 'அவர் ஒரு பிராமணர் என்பதால்தான்' என்று அவர் நம்பத்
தொடங்கியிருந்தார்! ஒருவேளை, தான் ஒரு பிராமணராக இல்லாத பட்சத்தில் - தனக்கு இன்னும் அதிக அங்கிகாரம் கிடைத்திருக்குமோ என்று அவர் நம்பியதாகவே நான் கருதுகிறேன். பன்முக தன்மையுடன் செயல்பட்ட அவருக்கு, இதனால் பல இடங்களில் இருந்தும், துறைகளில் இருந்தும் புகழ்... பாராட்டுகள் குவிவதை ஜீரணிக்க முடியாதவர்களின் கைங்கரியம் அவருக்கு தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தது.
நோக்கம்... திட்டம் பற்றியெல்லாம் பெரிய அளவில் யோசிக்காமல் 'புறநானூறு - ஓர் எளிய அறிமுகம்' நூலின் முதல் பாகம் வௌதயான நேரத்தில் 'சுஜாதா, ஆரிய கூத்தாடுகிறார்' என்றெல்லாம் விமர்சனங்கள் வரத் தொடங்கியபோது, தீவிர Self defence யுக்தியாகவும் பிராமண இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நேர்ந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். கடைசி சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவரிடம் அந்த கருத்து இருந்ததா?... பெங்களூரில் வாழ்ந்தபோதும்... குமுதம் ஆசிரியராக இருந்தபோதும் இப்படியான சிந்தனை அவருக்கு இருந்ததா என தெரியவில்லை. ஒருவேளை அண்மையில்தான் இது உருவானதா என்பது குறித்தும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் அவரை நெருங்கிய நாட்களில் இருந்ததைவிட... இந்த எண்ணம் மௌள மௌள உறுதிப்பட்டது என்பதை என்னால் உணர முடிந்தது.
ஆனால், அந்த நேரத்திலும் தனது பழைய நண்பர்கள் நெருக்கமானவர்களிடம் அவரது போக்கு மாறவில்லை. நான் அறிந்த சுஜாதா - ஜாதி, மத வரம்புகளைக் கடந்தவர். அவரது எழுத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமான 'மார்க்கண்டேய' தன்மையை அவர் பெற்றது - பெரும்பாலான நேரங்களில், அவரைச் சுற்றி இருந்த இளைஞர் பட்டாளத்தால்தான். அந்த பட்டாளத்தில், நான் அறிந்தவரை மிகச் சிலரே பிராமணர்கள். மற்ற எல்லாரும், வேறு வகுப்பினர். செட்டியார், நாடார், முதலியார், வன்னியர், தலித் போன்ற பல இனத்தைச் சேர்ந்தவர்களும், கிருஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பலரும்தான் அவருக்கு நெருக்கமாக இருந்து வந்தனர் என்பது எனக்கு தெரியும். இந்த தரப்பினர் பலர்தான் அவரிடம் முன் அனுமதி பெறாமல்... அதிரடியாக வந்து சந்திக்கும் சலுகையைப் பெற்றிருந்தனர். அவர்களை விரும்பி வரவேற்று பேசி... அவர்களுடன் தனது நேரத்தைப் பகிர்ந்து கொண்ட, பகிர்ந்து கொள்ள அவர் விரும்பிய தருணங்கள் பல! எழுத்தாளர் சுஜாதா மட்டுமல்ல; அவரது மனைவியும் கூட - இந்த நண்பர்களது குடும்ப நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றையும் விசாரித்து அறிந்து ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார். அது மட்டுமல்லால் தொடர்ந்து விசாரணை, உபசரிப்பு, அவர்களுடன் உணவு உண்பது வரை வேறுபாடு காட்டாமல் நடந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். இதில் எங்கும் நான் பிராமண சார்பு... அல்லது, பிராமணரல்லாதவர் அசார்பை பார்க்கவில்லை.
அம்பலம் இணைய தளத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒருகட்டத்தில் அங்கு பணியாற்றிய, மூத்த பொறுப்பில் இருந்த பிராமணர் ஒருவரால், பிராமணரல்லாத வேறொருவர் பணியில் இருந்து நியாயமான காரணம் இன்றி கழட்டிவிடப்படும் முயற்சி நடந்தது. அப்போது, 'அநீதிக்கு இடம் தந்துவிடக்கூடாது' என்பதில் எழுத்தாளர் சுஜாதா தனிப்பட்ட முறையில் காட்டிய அக்கறை, ஆர்வத்தால் மட்டுமே அந்த Non Brahmin மீண்டும் அங்கு பணியில் தொடர முடிந்தது. அத்துடன், அநீதி இழைக்க முயன்றவர் - சுஜாதாவின் இந்த நடவடிக்கையால்... போக்கால் சங்கடப்பட்டு, மன
உளைச்சல் கண்டு, மாற்று ஏற்பாடு செய்துகொண்டு பதவி விலகிச் செல்ல நேர்ந்தபோதும் சுஜாதா தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதாவது சுஜாதா மத, இனப் பாகுபாடுகளைக் கடந்து, அவரது மனசாட்சிப்படித்தான் முடிவுகள் எடுத்தார் என்பதை நேரில் கண்டு, இதைச் சொல்கிறேன். இதுபோல நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள்... சம்பவங்கள் இன்னும் எத்தனையோ!
தற்போது சுஜாதா மீது வைக்கப்படும் பல விமர்சனங்களைப் பார்க்கும்போது - அவர் சரியாக புரிந்து கொள்ளப்படாத மனிதர் என்பதுதான் எனது கருத்து. இதற்கு அவரும் ஒரு காரணம். அவர் ஒரு Man of moods! எந்த சூழலில், அவரிடமிருந்து எந்த வகையான எதிர்வினை இருக்கும் என்பதை கணிப்பது சிரமம். அவரது எழுத்துகளில் காணும் 'வசந்த்'-ஐ எதிர்பார்த்து, நாம் செல்லும்போது, சில நேரங்களில் - அந்த சுற்றுவட்டாரம் முழுக்க கணேஷ் வந்து சென்றதற்கும்கூட அடையாளமே இருக்காது. அவ்வளவு அந்நியப்பட்டிருக்கும். மாறாக, ரொம்ப சீரியஸாக... 'Nano Technology பற்றி பேசலாம்' என்று செல்லும்போது - சிவாஜி பட விழாவுக்கு வந்த அரைகுறை உடை ஸ்ரேயா அருகில் உட்கார நேர்ந்த அனுபவம் பற்றி கலகலப்பார்.
அவர் பங்களித்த தளம் மிகப் பரவலானது என்பதால், அவர் மனதில் ஒன்றை அடுத்து மற்றது என பல விஷயங்கள் ஆக்ரமித்து வரிசைகட்டி நின்று, அவரது அனுபவம், கற்பனை, படைப்புருவாக்கம் போன்றவற்றோடு நடத்திக் கொண்டிருக்கும் வேதிவினையில் நீங்களும் சிக்கி செம்பழுப்பு நிற வாயுவாகவும், செம்மண் நிற வீழ்படிவாகவும் சின்னாபின்னமாக வேண்டி வரலாம்.
அப்படித்தான் ஒருமுறை! எனக்கு நெருக்கமான நண்பர்; இன்றைக்கு பிரபலமான எழுத்தாளர்! அவர் எழுதத் தொடங்கியிருந்த நாட்களில் இந்த சம்பவம் நடந்தது என்று சொன்னதாக ஞாபகம். ஆழ்வார்பேட்டையில் இருந்த சரவணா அப்பார்மெண்ட்டில் எழுத்தாளர் சுஜாதா வசித்து வந்த நாட்களில்! 'நம் ஆதர்ஷன எழுத்தாளர் சுஜாதாதானே! சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசிக்காமல் செல்வதாவது' என... வீட்டை விசாரித்துக் கொண்டு கதவைத் தட்டிவிட்டார்களாம். கதவு திறக்கப்பட்டபோது எதிரில் நின்றவர் - சுஜாதா! 'உங்கள் எழுத்தின் ரசிகர்கள்' என அறிமுகம் செய்து கொண்டு, உள்ளே நுழைந்தவர்களிடம் 'சரி சொல்லுங்க! என்ன விஷயமாக பார்க்க வந்தீர்கள்?' என்று கேட்டிருக்கிறார் சுஜாதா.
'விஷயம் ஒன்னுமில்லைங்க சார்! இந்தபக்கம் வந்தோம். உங்க வீடு இங்கதான்னு ஞாபகம் வந்தது. உங்களை பார்க்கணும்னு தோணுச்சு! அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தோம்' என்று சொல்லியிருக்கிறார் நண்பர்.
'சரி... பார்த்திட்டீங்க இல்லை! அப்ப கிளம்புங்க....' என்று சுஜாதா சொன்னதாகக் கூறி, அந்த நண்பர் என்னிடம் அதிர்ந்தார்.
இதற்கு யார் பொறுப்பு? 'ஒரு எழுத்தாளரிடம் இப்படியான அணுகுமுறை சரியா?' என்று கேட்டால், இதற்கு யார், என்ன பதில் சொல்ல முடியும்? இதில் எழுத்தாளர் சுஜாதாவின் தீர்க்கமான கருத்து - 'எழுத்தில் ரசித்த நபர்களை அப்படியே பாதுகாப்பது நல்லது. நேரில் சந்திக்க செல்லும் விபத்தில் சிக்காதிருக்க வேண்டும். பல நேரங்களில் ஏமாற்றம்தான் ஏற்படும்' .
தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டு, பல்வேறு விஷயங்களோடு டூயட் பாடி... சண்டை போட்டு... வாதம் செய்து கொண்டோ இருந்ததால்தான், இன்றைக்கு அவர் நாம் காணும் 'சுஜாதா'வாக இருக்கிறார். இல்லாவிட்டால் எங்கோ... எத்தனையோ ரங்கராஜன்களில் ஒருவராக வாழ்ந்து... அரசின் மரண பதிவேடுகளில் மட்டும் என்ட்ரியாகியிருப்பார்.
அவரது நினைவுக்கு எனது நிஜ அஞ்சலி, சுஜாதாவின் பாணியிலேயே அவரது விமர்சகர்களை அணுகுவதாகத்தான் இருக்கும் என்றே நினைத்தேன். என்றாலும், நான் அறிந்த சுஜாதாவைப் பற்றி... அவர் குறித்த எனது புரிதலை இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம் என கருதியதால்தான் இந்த பதிவு. இங்கே இடம் பெறுவது, எழுத்தாளர் சுஜாதா குறித்த எனது கருத்து, அனுபவம், பார்வை! ஜாதிய ரீதியில் மட்டுமே, அவரை அணுகும் நபர்கள் இதற்கும் விமர்சனங்களை வைப்பார்கள் என்பது எனக்கு தெரிந்துதான் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் நான் பதில் சொல்லப் போவதில்லை; அவசியமில்லை என்பதை முடிவு செய்துவிட்டுதான் இதை எழுதத் தொடங்குகிறேன்.
அத்துடன், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். சுஜாதா குறித்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்ல முனைவதால் - அவரது எழுத்துகள் அனைத்தையும் கரைத்து குடித்து... அதில் எம்ஃபில்., பிஎச்டி பட்டம் பெற்றவன்... அதற்கு நான் தகுதியானவன் என்று அர்த்தமல்ல; எனது கருத்துகள் எதுவும் அவரது எழுத்து சார்ந்த புரிதலால் விளைந்ததல்ல. எனது நேரடி அனுபவத்தால் விளைந்தவை மட்டுமே! மற்றபடி, அவர் எழுத்தில் நான் படித்தது குறைவே! எனவே, அவரது எழுத்துகளை கட்டுடைப்பதாகச் சொல்லும் விமர்சனங்களுக்கும் நான் பதில் சொல்லப் போவதில்லை. சுஜாதா என்ற மனிதரைக் கட்டுடைக்கும் முயற்சிக்கான பதில் மட்டுமே இது!
இது தவிரவும் எழுத்தாளர் சுஜாதாவுடன் எனது அனுபவங்களை சில பதிவுகளாக எழுத திட்டங்கள் உள்ளன. மீண்டும் சந்திப்போம்!
சனி, மார்ச் 01, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)