அண்மையில் மீண்டும் முகநூலுக்குள் வந்த நான், தொடர்ந்து அதில் எழுதி பங்கேற்பதுடன், எனது சுய விவரக்குறிப்புகளில் தொடங்கி...., மற்ற பலவற்றிலும் சில மாற்றங்களைச் செய்து... முகநூலை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ளவும், அதில் உள்ள பல வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் முயன்று வருகிறேன். அதையொட்டி, அண்மையில் இப்பக்கத்தை தொழில்முறை சார்புடையதாகவும் மாற்றியுள்ளேன். இதில் கண்ட புது விவரங்களை அறிந்த நண்பர் ஒருவரை தற்செயலாக நேரிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியதாக இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு, "மற்ற விஷயங்கள் பற்றியெல்லாம் எழுதும் நீங்கள், அரசியல் குறித்து அதிகம் எழுதுவதில்லையோ!" என்ற அவரது சந்தேகத்தைக் கேட்டார்.
அவரது புரிதல், ஒருவகையில் சரிதான். அதே வேளையில், முற்றிலும் முழுதாக நான் அரசியல் குறித்து எதுவுமே பேசுவதில்லை; எழுதுவதில்லை என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாது. நாட்டின்... மாநிலத்தின் நிர்வாக அரசியல் மட்டுமின்றி... கட்சி அரசியல் குறித்தும் அவ்வப்போது நானும் எழுதுவதுண்டு. ஆனால், ஒரு சராசரி பத்திரிகையாளன் பதிவு செய்யும் அளவைவிட எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று சொன்னால் அது சரி... எல்லாத்துறை குறித்தும் ஒரு மனிதன் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம், எல்லா அரசியல் நடப்புகளையும் பற்றி என் கோணத்தில் யோசித்து, நான் சரியென நம்பும் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கும் நேரம் வேண்டும். எல்லாரையும் போல, எனக்கும் உள்ள ஒரு தினத்தின் 24 மணி நேரத்தில் எழுத்துப் பணிக்குச் செலவிடும் நேரத்தில் - நான் அதிகமாக கவனம் செலுத்தும் நிதி, வணிக துறைகளின் முக்கிய நடப்புகள் குறித்து எழுத முடிவதே குறைவுதான் என்பதால்.... பொதுபுத்தியில் அரசியல் என புரிந்து கொள்ளப்படும் விஷயங்கள் குறித்து, நான் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், முற்றிலும் தவிர்ப்பதாகவோ, ஒதுங்கி நிற்பதாகவோ சொல்ல முடியாது.
சில தினங்களுக்கு முன்பு கூட, அறம் இணைய இதழின் ஆசிரியர் நண்பர் சாவித்திரி கண்ணன் எழுதிய பதிவு ஒன்றில் - "காயத்ரி கார்த்திக்" என்பவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், அந்தக் கட்சியின் எம்பியாக பதவியில் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு இணக்கமாகவும் செயல்படுகிறார் என்பது குறித்து பேசுகையில்.... "சசிதரூரின் மனைவி சுனானந்த புஷ்கரின் மர்ம மரண வழக்கு விசாரணை... அது குறித்த சந்தேகங்கள்.... விசாரணை பின்னர் புஸ்வாணமாகிப் போனது" என விவாதித்தபோது, பதில் பதிவாக எனது விமர்சன கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதை அப்படியே இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
"Gayathri Karthik... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதிலும், எப்போது தொடங்கி இவர் பாஜகவை மிகவும் நெருங்கிறார் என்று கூர்ந்து நோக்கினால் இந்த சந்தேகம் தவிர்க்க இயலாதது. கார்கேவை எதிர்த்து கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்ட போதே, ராகுல்... சோனியா தலைமையை இவர் ஏற்கவில்லை என்பது தெளிவானது - ஜனநாயகம் என்ற போர்வையில்...! அடுத்து, தனது ஆங்கில அறிவை ஆயுதமாக பயன்படுத்தி மயக்க முயன்ற அவரது பச்சா எடுபடவில்லை.
இப்படி சொல்வதாலேயே சோனியாவை நான் ஆதரிப்பதாக எண்ணக்கூடாது. சோனியாவுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் பலர் போல, அவர் 'அந்நிய மண்ணில் பிறந்தவர்' என்பதால் நான் அவரை விமர்சிக்கவில்லை. ராஜீவ் மரணத்துக்காக, பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் பலியானாலும் பரவாயில்லை என வியூகம் வகுத்து பழி தீர்த்துக் கொண்டவர். அது மட்டுமல்ல. இவரது எதிர்பார்ப்புக்கு எல்லாம் ஒத்திசைய மாட்டார் என்பதால், பெருவாரி இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகவிடாமல் காய் நகர்த்தியவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியிருக்க, அவரது கட்சியில் இருப்பவர்கள் மட்டும் இவருக்கும், கட்சிக்கும் விஸ்வாசமாக இருப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?!. போபர்ஸ் ஊழல் விசாரணையை நிறுத்த, ஒரு ஆட்சியை ஆட்டம் காண வைத்து, ஒரு தனி நபர் அதை விலக்க முடியும் என்றால்.... அந்த சூழலில்தானே, சோனியா அரசியலில் அடி எடுத்து வைத்து, கட்சியை கைப்பற்றினார்!.
பெருவாரி மக்களின் விருப்பத்தை, தனிநபரின் தேவைக்காக வளைக்க முடியும் என்றால்... அவரைத் தூக்கிப்பிடிக்கும் யாருக்கும்..... சசி தரூரைக் குறை சொல்லவோ... கேள்வி கேட்கவோ அருகதை இல்லை. சாமானியர்களான நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சசிதரூரை விமர்சிக்கலாம். வாக்காளர் என்ற வகையில் அதற்கு நாம் உரிமை பெற்றவர்கள்.”
இரண்டு பக்கமும் நானே கோல் போடுவதாக நினைக்க வேண்டாம். இருவரில் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதுதான் என் வாதம்" என்று சொல்லி என் கருத்தை முடித்திருந்தேன்.
இது மட்டுமல்ல; வரவிருக்கும் தமிழகச் சட்டமன்ற தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வியூகம் என்ன.... ஒருபக்கம் - ஐவர் குழு அமைத்து திமுகவுடன் பேச்சு வார்த்தை என ஒரு முகம். இன்னொரு பக்கம் - காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தியை அனுப்பி தவெகவின் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை என இன்னொரு முகம்.... பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் விஜயைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி பலன் அடையலாம் என்ற யோசனை... அப்படி நடந்தால், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லையா.... பாத்துக்கலாம் என்ற அலட்சியமா.... அல்லது திமுகவை குறைத்து மதிப்பிடுவதா... எங்கெல்லாம் உங்களுக்கு சாதகமோ... அங்கெல்லாம் காய் நகர்த்தி மற்ற கட்சிகளை குறைத்து மதிப்பிடும் ஆணவம்... இந்த போக்கு மாறாதவரை, எதுவும் நடக்காது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால்.... அதற்கு காங்கிரஸ் கட்சி உழைக்காது; அதன் செயல்பாடுகளால் அது முடியாது; பாஜக மனது வைத்தால்தான் முடியும்!. அது சாத்தியமா.... அதற்கு வாய்ப்புண்டா என்றால்.... எதற்கும் ராகுலை நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால், யாராவது கேட்டுச் சொல்லுங்கள்.
இப்படிச் சொல்வதற்கு காரணம் - ஸ்டாலினைச் சகோதரன் என்று சொல்லிவிட்டு, அவரது கட்சிக்கு.... திமுகவுக்கு போக்கு காட்டும் காங்கிரஸின் செயல்பாடு புதிதல்ல.
அண்மையில் நடந்து முடிந்த பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை எப்படி நடத்தினார்கள் என்பதைப் பார்த்தோம். ஜார்க்கண்ட் மாநில அமைச்சரையில் பதவியில் இருந்து கொண்டே, அவர்களுக்கு 2 இடங்களில் போட்டியிட கூட கூட்டணியில் இடம் இல்லை என்ற உங்கள் வியூகம், கடைசியில் என்ன ஆனது.... அதிக தொகுதியில் போட்டியிட்டு, சிறப்பான வெற்றியா... உத்திர பிரதேசத்தில் எம்பி தேர்தலில், அகிலேஷ் தயவில் ஓரளவு இவர்களது கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், ஹரியானா தேர்தலில் அகிலேஷ் கட்சியை நீங்கள் நடத்திய விதம் சரியா....
காங்கிரஸ் கட்சியின் geneனே சரியில்லை; மரபணு மாற்ற சிகிச்சை செய்தால்தான் காங்கிரஸ் கட்சி தனது பெரியண்ணன் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளும் என்றால்... அந்த வைத்தியம் செய்யும் மருத்துவராக மோடியை அங்கிகரிப்பது காங்கிரஸ் கட்சிதான். மாநில அளவில் உள்ள நபர்கள்தான் காங்கிரஸ் கட்சி அண்மையில் அடைந்துள்ள அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று சொல்லி, பழியை வேறு திசைக்கு திருப்ப முயலக்கூடாது. காங்கிரஸ் தலைமைதான் காரணம். ரிமோட் கண்ட்ரோலில் தில்லியில் இருந்து அனைத்தையும் நிர்வகிக்கிறேன் என ஆண்டாண்டு காலாமாக நீங்கள் நடத்தும் மையப்படுத்தல் மனோபாவம்தான் இதற்கெல்லாம் காரணம். இன்றைக்கு அத்தகைய போக்கில் மாறியிருப்பதாக ராகுல் சில விஷயங்களில் தோற்றமளித்தாலும், இன்னும் காங்கிரஸ் கட்சி சோனியாவில் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
எண் 24, அக்பர் சாலை, புது டில்லி என்ற இடத்தில் இருந்து..., எண் 9A,கோட்லா சாலை, புது டில்லி என்ற முகவரிக்கு அலுவலகத்தை மாற்றினால் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போதாது. அடிப்படையில் "பல ஆண்டுகாலம் இந்த தேசத்தை ஆண்ட கட்சி" என்ற மேலாதிக்க மனோபாவம், காங்கிரஸ் டெல்லித் தலைவர்களுக்கு... அதன் நிர்வாகிகளுக்கு மாறாதவரை காங்கிரஸ் கட்சியை மீட்க முடியாது - மோடி மனது வைத்தாலன்றி!
பின்குறிப்பு : இன்றைக்கு தன் கட்சிக்கு சாதகமாக மாநில எதிர்க்கட்சிகளை உடைப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதாக பாஜகவை... அதன் என்டிஏ கூட்டணியைக் குறை சொல்லும் காங்கிரஸ் கட்சி, சோனியா தலைமையில் யுபிஏ கூட்டணி ஆட்சி காலத்தில் எத்தனை புனித காரியங்களில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதை, அப்போதே விமர்சித்து எழுதியிருக்கிறேன். "அந்தராத்மாவின் அட்டகாசங்கள்" என்ற தலைப்பில் அப்போது நான் எனது வலைப்பூ "நாலாவது கண்" (http://naalaavathukann.blogspot.com)-ணில் எழுதிய விமர்சனம், இப்போதும் அங்கு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதை அங்கு சென்று படிக்கலாம். மற்றவர்களுக்காக அதை அடுத்த பதிவாக இங்கேயே மறுபதிவு செய்கிறேன்.
#சந்திரன் #நாலாவதுகண் #காங்கிரஸ் #தவெக #பாஜக #நரேந்திரமோடி #மோடி #ராகுல் #சோனியா #அகிலேஷ் #ஸ்டாலின் #திமுக #ஜார்க்கண்ட்முக்திமோர்ச்சா #பிகார்தேர்தல் #பிரவீன்சக்ரவர்த்தி #அறம் #சாவித்திரிகண்ணன் #சசிதரூர் #கார்கே #சுனானந்தா #naalaavathukann #பத்திரிகையாளன் #Journalist