கவிதை ரசிகர்கள் நிறையத்தான் இருக்கிறார்கள் இங்கே! ஆனால் தீவிர, நவீன கவிதை ரசிகர்களும் இருப்பார்கள் நிறையவே என்னும் தோன்றுகிறது. பிரமிள் பற்றியும், இன்னும் அவரையொத்த மூத்த கவிஞர்களின் கவிதைகளும் எல்லாருக்கும் ரசிக்க சிரமம் என்பதால்..... நான் ரசித்த என்பதைவிட, என்னை கண் சிமிட்ட வைத்த கவிதைகள் என்று இங்கே சிலவற்றைத் தருகிறேன். இந்த பட்டியலில் நமது Blogக்கர்கள் குழுவின் உறுப்பினரான பாலு மணிமாறனின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் அம்பலம் இணைய இதழில் நான் கவிதைத் தேர்வுக்கு பொறுப்பில் இருந்த காலத்தில் பிரசுரமானவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துத் தருகிறேன். இனி கவிதைக்குச் செல்வோம்.
அணில்
வேலி மேல் ஓடிக்கொண்டிருந்த
ஓர் அணில் திடீரென்று நின்றது
களைப்பாறவாக இருக்கலாம்
அடர்ந்த வாலில் இளமைத் துடிப்பு
மூன்று பட்டையில் இறைவனின் நாமம்
பிச்சிப்பூ மொட்டுப் பற்களில்
கவ்விய வாதாங்கொட்டை
இது எனக்குத் தெரியாத அணில்
புதிதாக வந்திருக்கிறது போல
இதுவரை வரும் அணில்கள் எல்லாம்
கோழிக்குப் போட்ட இரை தானியத்தைத்
திருடித் தின்றுவிட்டு ஓடும்
புது அணிலும் கோழி இரையைத் தின்றது
இதுவும் திருட்டு அணில்தான் என்று
பெருமூச்சு விடும் என்னை முறைத்தது
வாதாங்கொட்டையை விலையாய்
விட்டுச் சென்றது
பண்டமாற்று முறை புரிந்த புது அணில்.
- காஞ்சனா தாமோதரன்
நதியிடம் அதன் பால்யம் பற்றிக்
கேட்டேன்
ஒரு நாள் அடர்ந்த மரங்களின் ஊடே
மலையினடியில்
கிடந்த சிறிய ஓடைதான் நான்
அப்போது
இலைகள் தன் வாசனை கலந்து நீர்
உதிர்க்க
உதிர்க்க
ஊர்களைக் கடந்து பெரிய
நதியாகிவிட்டேன்
ஆனால் இன்னும் வனத்தில் ஞாபகமாய்
அலைகிறேன் என்றது
வண்ணத்துப்பூச்சி தன் பால்யத்தைப்
பற்றி
வருத்தமாய் சொன்னது
அப்போது நிறங்கள் பூசிய சிறகுகளற்று
பாதுகாப்பற்ற வீட்டில்
இருப்பது போல்
எப்போதும் எதிர்காலம் குறித்த
பயத்தோடு காற்றில் ஊஞ்சலாடும்
இலையில்
அசூயையூட்டும் புழுவாய் கிடந்தேன்
நல்ல வேளை
அப்போது என்னைப் பார்த்த
உறவினர்கள்
தற்சமயம் இல்லை
ஒரே வேடிக்கையாய் இருந்திருக்கும்
என்றது
தன் பால்யம் பற்றி புறநகர் பகுதி
மரமொன்று சொன்னது
இப்போது போல் அன்றைக்கு வீடுகள்
எல்லாம் நெருக்கமாய் வரவேயில்லை
எப்போதும் ஆடுகள்
குறித்த துர்சொப்பனங்களே
இரவெங்கும்.
- சங்கர ராம சுப்ரமணியம்
கிடைக்குமா!
ஆதாம் ஏவாளுக்கு அப்புறம் வந்து
ஏதோ நினைத்து எதற்கோ
கிறுக்கிய
ஆதிகால மனிதர்களின்
பழங்கால பாறை ஓவியங்களை
ஆராய்ச்சி செய்யும் மாமா...!
என் எழுத்தை எதிர்காலத்தில்
எவரேனும் ஆராய வேண்டுமென
ஆசையுண்டு எனக்கும்.
முழுக்கத் தேடிவிட்டேன்...
சிங்கப்பூர் தீவில் சிக்கவேயில்லை
பாழாய்ப்போன பழைய பாறை!
- பாலு மணிமாறன்
இங்கு இப்படியாக இலக்கியம்
ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்
லா.ச.ரா.
இன்னும் எவர் எவரோ
நூலக அடுக்குகளில் வரிசையாய்
எத்தனையோ நாளாய் என்னோடு
பேச...
மன்னிக்கவும்.
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு.
ஒரு மணி நேர இன்டர்நெட்டில்
பிரான்ஸ் தேசத்துப் பெண்ணோடு
பில் கிளிண்டன் பற்றிப் பேச
இன்னும் இருப்பதோ இருபதே நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்?
பேசலாமே பின்னொரு நாள்!
- பாலு மணிமாறன்
சிங்கையில் கூடி மகிழும் நண்பர்களுடன் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கொரிக்கவாவது எதையாவது அனுப்ப முடியுமா என்ற ஏக்கம் இருந்தது.
யப்பா!........... இப்போது என் ஏக்கம் எல்லாம் தீர்ந்தது - மற்றவர்களுக்கும் சேர்த்து, எதோ பழங்கஞ்சியாவது குடிக்க கொடுத்ததில்!
வியாழன், மார்ச் 17, 2005
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)