மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, ஏப்ரல் 01, 2005

மோடியா...? மோடி மஸ்தானா!

மோடியா...? மோடி மஸ்தானா!

இப்படி கேட்கத்தான் தோன்றுகிறது.

என்ன மாய மந்திரம் செய்வாரோ! மனுஷன் இந்த முறையும் தப்பிவிட்டார். திட்டமிட்டு தப்பினாரா? அல்லது, நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அவருக்கு சாதகமாக அமைந்துவிடுகிறதா? அல்லது, நடக்கும் சம்பவங்களை தன் சாதுர்யத்தால்... புத்திசாலித் தனத்தால் தனக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்கிறாரா? எப்படியோ! சிக்கலான சூழலில் அவர் மாட்டும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் கட்சித் தலைமையே மோடியின் பின்னால் உறுதியாக நிற்கும்படி ஆகிவிடுகிறது என்பதுதான் ஆச்சரியம் தருகிறது. அதனால், இந்தமுறையும் குஜராத் மாநிலத்தின் பாஜக பெருவாரி தலைவர்கள் (பெருவாரி கட்சியினர் என சொல்ல முடியுமா, தெரியவில்லை) எதிர்த்தும் நரேந்திர மோடியை முதல்வர் பொறுப்பிலிருந்து அசைக்க முடியவில்லை.

நான் அறிந்தவரையில், முதல் சம்பவம் 2002ல்! அதற்கு முந்தைய ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த பல இடைத்தேர்தல்களில்... மாநகராட்சித் தேர்தலில்... பிற உள்ளாட்சித் தேர்தல்களில்... ஏன் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில்கூட என்று படித்த ஞாபகம்! எல்லாவற்றிலுமே ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. தோல்வி மேல் தோல்வி என கண்டுவந்தது. அதனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது. எனவே, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்கு போட்டியும்கூட! தொடர்ந்த தோல்விகளைச் சந்திக்கும் பா.ஜ.க., மறுபடியும் ஆட்சிக்கு வர இயலாது என்று மற்றவர்கள் போலவே பாஜக பெருந்தலைகளும் நம்பினர். அதனால், 'தனக்கு உரிய மரியாதை தரவில்லை' என்று கருதிய பாஜகவின் 'முன்னாள் பெருந்தலை' சங்கர்சிங் வகேலா, காங்கிரஸுடன் இணைந்து கொண்டு மாநிலத் தலைமையையும் கைப்பற்றினார். அந்நாளில் குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு, தகுதியான வேறு தலைவர் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அப்போது மத்தியில், மாநிலத்தில் என இரண்டு இடங்களிலும் பா.ஜ.க. ஆட்சி என்பதால், அவர்களது மாய்மாலங்களில் பழக்கப்பட்ட ஒருத்தரையே எதிர்தரப்பில் நிறுத்தினால்...? காங்கிரஸ் கட்சி, இதை தனது சாணக்கியத்தனம் என்று எண்ணிக்கொண்டு, பழைய காங்கிரஸ்காரர்கள் சிலரை சங்கடப்படுத்தி வகேலாவை தூக்கிப் பிடித்தது. 'இன்னும் சரியாக ஓராண்டுதான் இருக்கிறது, மாநிலத் தேர்தலுக்கு' என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டுவரும் பல வெற்றிகளுக்கும் காரணம் 'இன்னார்தான்' என அந்தந்த வட்டாரத்தில் முக்கியஸ்தர்கள் தங்களையே முன்னிறுத்திக் கொண்டிருந்தனர்.

மோடி செய்த யோகம். பிப்ரவரி மாதத்தின் ஒருநாளில் குஜராத் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸில் தீ! (இது திட்டமிட்டு செய்யப்பட்டதா? தற்செயலான விபத்தா? திட்டமிட்டு செய்தது என்றால் - செய்தவர்கள் ஹிந்து வெறியர்களா? முஸ்லீம் முரடர்களா? இந்த சம்பவத்தில் பாகிஸ்தானியர் கை இருந்ததா...? இல்லையா? இப்படி பல கேள்விகள், விடை தேடி விசாரணைக் கமிஷன் இருட்டுக்குள்ளிருந்து இன்னும் வௌதவரவில்லை. வருமா?) அதற்கடுத்து நடந்த சம்பவங்களையெல்லாம் மறுபடியும் ஒருமுறை சொல்லி... மனதில் ஓட்டிப் பார்த்து சங்கடப்படுவானேன்! ஆனால் இந்தச் சம்பவத்தையொட்டி கிளறிவிடப்பட ஹிந்துமத உணர்வின் ஈரம் காயும் முன்னே மஸ்தான் வேலையை காட்டிவிட்டார் மோடி!

அதாவது, இன்னும் சில மாதங்கள் இருப்பு இருந்த ஆட்சியைத் தியாகம் செய்து, சட்டசபைத் தேர்தலுக்கு வழிவகுக்க, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட இன்னும் ஒரு பெரும்படையே எதிர்தரப்பில் நின்று சத்தம் மட்டும் போட்டுவிட்டு நிர்கதியாகிவிட, அடுத்து நடந்த தேர்தலில் சூறாவளியாக வெற்றி வந்து மோடியைத் தழுவிக் கொண்டது. இடையில் சிக்கிய மற்ற கட்சிகள் கட்டுத்தனமாக கரையொதுக்கப்பட்டன. அந்த நேரத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலமே, இனி இவர்தானோ என்றெல்லாம் எழுத பத்திரிகைகளுக்கு துணிச்சல் வந்தது. ஒரு லோக்கல் மஸ்தான், மாநிலத்துக்கு வௌதயில் ஒரு பெருந்தலைவராக, வெற்றி வீரராக தெரியத் தொடங்கியது இந்த வெற்றியின் விளிம்பில்தான்.

அதன்பிறகு கர்நாடகம், ஹி.பி. ம.பி., ராஜஸ்தான் போன்ற பல மாநிலத் தேர்தல்கள் நடந்தபோது, இவர் முன்னணித் தலைவர் அந்தஸ்த்தில் தேசிய அளவில் நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார்.

அப்போதும் வெற்றிகண்ட மிதப்பில் பாராளுமன்றத்துக்கு முன்னதாக தேர்தல் என்று முயன்ற பா.ஜ.க., இதில் 'இந்தியா ஔதரவில்லை' என்பதைக் கண்டவுடனும் மறுபடியும் மோடிக்கு தலைவலி தந்தார்கள் பா.ஜ.க.வினரே! அப்போதும் அதை சமாளித்தார்.

அடுத்த சம்பவம் இப்போது! இம்முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநிலத்தில் கட்சியின் முன்னோடிகள் நாராயணன்சிங் ரானே, கேசவ் பாய் பட்டேல், சுரேஷ் மேத்தா என்று ஒரு பெரும்படை, திட்டமிட்டு வில்லாவாரியாக 'Modi Ouster' வேலை செய்து கொண்டிருந்தபோது - 'ஜார்ஜ் புஷ்' உருவில் தனக்கொரு ஆபத்பாண்டவன் வருவான் என்று மோடியேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இதைத்தான் 'விதி' என்ற கணக்கில் சொல்லி சேர்த்துக் கொள்கிறார்களோ!

மோடி, அமெரிக்கா போக விசா மறுத்தது - சரி, தவறு என்று பல விதமான காரணங்கள்... தர்க்கங்களோடு விவாதங்களும், கருத்து மோதல்களும் கூட நடந்தன. இந்த விஷயத்தில், எனது கருத்து பெரும்பான்மைக்கு எதிரானது (மோடிக்கு விசா மறுத்ததை ஆதரித்து, அமெரிக்காவை பாராட்டியதுதான் பெரும்பான்மை கருத்து என நினைக்கிறேன்). மோடியை கேள்வி கேட்க, அமெரிக்காவுக்கு என்ன உரிமையிருக்கிறது என்ற எதிர்கேள்வியைவிட, இந்திய அரசு சார்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில்தான் எனக்கு நம்பிக்கை. அங்கேதான் நானும் நிற்கிறேன். மோடிக்கு அமெரிக்கா விசா கொடுத்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில், நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு விசா தரலாமா, கூடாதா என்பது வேறு விஷயம். ஆனால் ஜனநாயக ரீதியாக நடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு, ஜனநாயக நாடு... ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா விசா மறுத்திருக்கக்கூடாது. மோடிக்கு விசா தர அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவுக்கு பின்னாளில்தான் அமெரிக்க நிர்வாகம் வந்திருப்பதாக சொல்லப்பட்டாலும், போராட்டம் நடத்தியவர்களுக்கு அந்த அனுமதியையும் கொடுத்து... கடும் பாதுகாப்புடன் மோடியின் திட்டங்களை சுருக்கிக்கொள்ள சொல்லி ஆலோசனையுடன் அமெரிக்கா அனுமதி தந்திருக்கவேண்டும். வேண்டுமானால், அதை ஒரு IF Clauseவுடன் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை.

இறுதியில், மோடிக்கு மரியாதை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் நடந்த அந்த சம்பவமும் கூட (விசா மறுப்பு), அவரது மஸ்தான் வேலைக்குத்தான் மறுபடியும் பயன்பட்டிருக்கிறது. 'குஜராத் அஸ்மித்தா!' என்று கோஷத்தை மறந்திருந்தவர்களுக்கு மறுபடியும் அதை ஞாபகப்படுத்தியது தவிர, வேறு எதுவும் இந்த தடையால் நடந்துவிடவில்லை. ஒரு வில்லன் சந்தர்ப்ப சூழலால், மறுபடியும் ஹீரோ(!)வாக மாறியதுதான் நடந்தது.

இந்த சம்பவம், இந்தியாவுக்கு அவமானம்! இல்லை, மோடிக்குத்தான் அவமானம்! அப்படியில்லை; மோடியைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவமானம்! ஏன் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கே அவமானம்!! இப்படி யார் என்ன சொன்னாலும், இறுதியான வீழ் படிவு - மோடிக்கு இந்த முறையும் தலை தப்பியது என்பதுதான்.

'மோடிக்கு விசா தரவேண்டும்; மறுபரிசீலனை செய்யுங்கள்' என பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டதை எதிர்த்து பலர் கருத்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வௌதப்படையாகவும் சொன்னார்கள். ஆனால் பிரதமரின் கோரிக்கையை நான் முழுமையாக ஆதரிப்பதோடு, அதைச் செய்யாமல் போயிருந்தால் கண்டித்திருக்கும் கோஷ்டியில் இடம் பெற்றிருப்பேன்.

இந்த விஷயத்தில் என்தரப்பு நியாயத்தைப் புரிய வைக்க, முற்றிலும் மாறுபட்ட சூழலில் - ஆனால் அடிக்கடி இதே போல சர்ச்சைக்குள்ளாகும்... கேள்வி எழும்... சூழலை வைத்து பேச விரும்புகிறேன்.

இங்கே விவாதம் - நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் தளத்துக்கு இடம் மாறுகிறது. இதில் தீவிரவாதிகள், போலீஸார் இருவருக்கும் இடையில் நடக்கும் தொடர் போராட்டங்களில்... அது ஆந்திர நக்ஸலைட்டுகளோ, வீரப்பன்கள் வகையறாவோ, மற்றவர்களோ... இவர்கள் மீதான encounterகள் நடக்கும்போது பெரும்பாலானவை Fake encounter என்றோ... போலிஸார் இன்னும் சற்றே பொறுமை காட்டியிருக்கலாம் என்றோ... அல்லது தீவிரவாதிகளிடம் வரம்பு மீறி, அடக்குமுறையைக் கையாண்டனர் என்றோ.... மனித உரிமைகள் மீறப்பட்டன என்றோ... தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டால்... அதில் சந்தேகங்கள் எழுந்தால்... இப்படி பல விஷயங்களில் போலீஸார் மீது குறை சொல்லப்படுவதுண்டு. அந்த மாதிரி நேரங்களில், நான் அறிந்த வரையில் பல விவரமானவர்களும்கூட 'மனித உரிமை' என்ற வார்த்தை உச்சரிக்கப்படுவதைக் கேட்டதும்... 'அதே மனித உரிமை, சம்மந்தப்பட்ட போலீஸாருக்கு இல்லையா? தீவிரவாதி ஒரு காரியத்தை செய்துவிட்டால் அதை பேச மாட்டார்கள். ஆனால் அதே காரியத்தை அந்த போலிஸார் செய்துவிட்டால், மனித உரிமை என்கிறார்கள். அப்படியானால் போலிஸாருக்கு மனித உரிமை... வாழும் உரிமை கிடையாதா? தன் உயிரைக் காத்துக் கொள்ள எதிரியைத் தாக்க சட்டத்தின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.அந்த நேரத்தில் போலீஸார் சுடாமல் விட்டிருந்தால் தீவிரவாதி இவர்களைச் சுட்டிருக்கலாம் என்று பதில் கேள்வி எழுப்புவார்கள். குறிப்பாக - தில்லி திரையரங்கு ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம், வீரப்பன் விவகாரத்தில் பலமுறை, ஆந்திர நக்ஸலைட்டுகள் விவகாரத்தில்... கடந்த ஆண்டுக்கு முன் தர்மபுரியில் தமிழக போலிஸார் எடுத்த சில நடவடிக்கைகளில் இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் எனது வாதம் இதுதான். தீவிரவாதிகள், வீரப்பன்... நக்ஸலைட்டுகள்... போன்றவர்கள் அந்தந்த முத்திரையைச் சுமந்தவர்கள். அவர்கள் தவறு செய்துவிடலாம்; சட்டத்தை மீறிவிடலாம். ஆனால் 'சாமி' படத்து வசனம் போல - போலீஸ், 'பொரிக்கி'யாகிவிடக்கூடாது! அரசு சார்பில் அதன் யூனிபார்மைச் சுமக்கும் அதிகாரிகள் மற்றவர்கள் போல அதே பொறுப்பற்ற தவறைச் செய்துவிடக்கூடாது. இதற்காகத்தான் போலிஸாரைத் தேர்ந்தெடுத்து... பயிற்சி கொடுத்து... சம்பளம் கொடுத்து... பிற சமூக பாதுகாப்பு கொடுத்து... பணியில் இறந்துபோனால், அதற்கு இழப்பீடு கொடுத்து... இதெல்லாம் கொடுத்து அவர்களை அரசுப் பணத்தில் பராமரிப்பது! 'எதிராளி' தவறு செய்கிறான் என்பதால் - அதே தவறை 'இவர்களும் செய்யக்கூடாது' என்பதற்காகத்தான் இதெல்லாம். அதற்காக, 'அவன் முன்னால் போய் நின்று குண்டடிப்பட்டு செத்துப் போ!' என்று சொல்வதாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

'சட்டம் எல்லாருக்கும் சமம்; அவன் சட்டத்தை மதிக்கவில்லை. கையில் எடுத்துக் கொண்டான்' என்பதற்காக போலீசும் அதைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் முக்கியம். இங்கே போலீஸ் - ஒரு அரசை, நாட்டை, நிர்வாகத்தை முன்னிறுத்துகிறது என்பதுதான் முக்கியம். தனிநபர் தவறு செய்வதற்கு போட்டியாக, ஒரு நாடு தவறு செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.

இப்போது இதே analogyஐத்தான் மோடி விஷயத்திலும் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். மோடி என்ற தனிநபர் தவறு செய்திருக்கலாம்; ஆனால் அந்த தவறைச் சுட்டிக்காட்டி, ஒரு நாடு தவறு செய்துவிடக்கூடாது. இது காலகாலத்திற்கும் தவறான ஒரு முன்னுதாரணமாக நின்றுவிடும்.

மோடி என்ற தனிநபர் செய்த காரியத்தை கண்டிக்கும் நோக்கில், அவர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்திருக்கும் வெறுப்பின் கண்ணாடி வழியே பார்க்கையில் அவருக்கு விசா வழங்காதது நியாயமாகத் தெரிந்தாலும், அவர் ஒரு ஜனநாயகத் தேர்தலில் வென்று வந்த ஒரு மாநில முதல்வர் என்ற வகையில்.. முதல்வருக்கான எல்லா அனுகூலங்களும், மோடிக்கும் கிடைக்க நினைப்பதுதான் ஜனநாயகத்தை மதிப்பதாக இருக்கும்.

இந்த விஷயத்தில்தான் அமெரிக்காவிற்கு செல்ல, மோடிக்கு விசா தர மறுத்த அமெரிக்காவை எதிர்க்க வேண்டும். ஆனால் அவருக்கு விசா தர எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க வாழ் இந்தியர் அனைவரையும் பாராட்டுகிறேன். தடைகோருவது அவர்களது உரிமை; அதை ஏற்பதும் ஏற்காததும் அந்நாட்டு அரசின் நிர்வாகத்தின் பொறுப்பு. தனது பொறுப்பில் எப்போதும்போல, இந்த முறையும் அமெரிக்கா தவறிழைத்திருக்கிறது. இதன்மூலம் அறியாமலேயே அது எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் மோடிக்கு உதவியிருக்கிறது.

இவ்விஷயத்தில் இங்கிலாந்தும் இம்முறை தவறு செய்யவில்லை என்பது ஆறுதல் தருகிறது. அப்படி நடந்திருந்தால்...!

நல்லவேளை! ராஜினாமா செய்து இன்னொரு தேர்தல் கோரும் அந்தஸ்த்தில் பா.ஜ.க. இன்று இல்லை. இருந்தால், இதையே காரணம் காட்டி இன்னொரு முறை ஆட்சிக்கு வர முயற்சி செய்வார்கள்!