அனுராக் எடுத்த, மாலன் அவர்களது பேட்டியின் இரண்டாம் பகுதியில் - மாலன் அவர்களுக்குப் பிடித்தது, 'பத்திரிகை உலகப் பின்னணியில் அவர் எழுதிய கதை' என்பதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான், இந்த எனது 'பத்திரிகையுலகப் பின்னணி கதை'யை (7 வருடங்களுக்கு மேலாகிறது, இந்த கதையை நான் எழுதி) வலைபதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. நான் சிறுகதைகள், நாவல் என அதிகம் எழுதியதில்லை. 'தவிர்க்க முடியாது' என்று உணரும்போது மட்டுமே, அதை வடித்து வைக்க படைப்பிலக்கியத்தைத் தொட்டிருக்கிறேன். அவைகளில் ஒன்று இது. கதை சற்று நீளம்தான். அதற்காக, இரண்டு, மூன்று பகுதிகளாகக் கொடுப்பது அராஜகம் என்று தோன்றியதாலேயே முழுவதுமாக கொடுத்துவிட்டேன். இனி, இதை விமர்சிப்பது உங்கள் பாடு!
வாய்ப்பு
''என்ன மகேஷ்... என்ன... தீடீர்னு பீச்சுக்கு வரச் சொல்லியிருக்கீங்க....? இங்க வந்து உங்கள எங்க தேடனுமோன்னு நெனச்சேன்...''
''உன்னை வரச் சொல்லிட்டு, புதுசா எங்கயாவதா போய் உட்கார முடியும்? அதான் எப்பவும் உட்கார்ர அதே இடத்துலேயே உட்கார்ந்துட்டேன்''
''வந்து ரொம்ப நேரமாவுதா?''
''.................................''
பதில் இல்லை. மகேஷ் கடல் அலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதி. அலைகளின் சத்தம், அமைதியை விரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தது. அமாவாசையானதால் இன்று கடல் அலைகளின் வேகமும், துள்ளலும் சற்று கூடுதல்.
''என்ன மகேஷ்.... இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்கீங்க... வழக்கமான உங்க வேகத்த காணோம்! என்ன பிரச்னை? எங்கிட்ட சொல்ற விஷயமா?, இல்லைன்னா வரச் சொல்ல மாட்டீங்களே?'' என்று அமைதியை உடைத்தாள் சுதா.
மகேஷ் தொடர்ந்து கடலையே வெறித்துக் கொண்டிருந்தான்.
''அக்கா... சூடா சுண்டல் இருக்கு... வறுத்த வேர்கடலை, முறுக்கு.....'' என்றபடி வந்தான் கடற்கரை 'சுண்டல்' பையன்.
''இப்ப எனக்கு சூடா டீ வேணும்... இருக்கா?'' என்றபடி மகேஷ் பக்கம் திரும்பி, ''உங்களுக்கு ஏதும் வேணுமா?'' என்றாள் சுதா.
''இல்லை தம்பி..., எதுவும் வேணாம். நாங்க கிளம்பறோம்'' என்றபடி எழுந்தான் மகேஷ்.
''என்ன.... நான் வந்தவுடனே எழுந்துட்டீங்க?... அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க'' - சுதா.
''ஒண்ணுமில்ல..... இன்னிக்கி 'தினமுரசு' ஆபீஸ் போனபோது, பக்கத்துல ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு? அது ஞாபகம் வந்தது. அதான் யோசிச்சேன்''.
''அப்படி என்ன சொன்னார்.''
''ம்... ரொம்பவே கேஷியுலா, 'பத்திரிகை ஃபில்டுல திறமைல்லாம் ஒரு பக்கம்; வாய்ப்பு கிடைக்கணும்! கிடைச்சா பெரிய ஆள் ஆயிடலாம். கிடைக்காதவரை, யாராயிருந்தாலும் போராட்டம்தான்''ன்னு சொன்னார். அதைத்தான் அசை போட்டுட்டு இருந்தேன்''
''...............................''
''சரி.... நீ என்ன யோசிக்கறே.... கிளம்பு.... போவோம்....''
''என்ன விஷயமா என்னை வரச்சொன்னீங்க? எதுவும் சொல்லாம கிளம்பறீங்க....?''
''எப்ப... வரச் சொன்னேன். நீ எப்ப வர்றே.... இப்ப டைம் ஆயிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். இங்க நாம ரெண்டு பேருதான். இதுக்கு மேல இங்க வேணாம். சூடா டீ கேட்டியே..., அப்படியே போய் டீ சாப்பிட்டு கிளம்பலாம்'' என்று திரும்ப, பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த மீனவ சிறுவர்கள் இடித்துக் கொண்டு ஓடினர். அவர்கள் ஓடியதும் ஆடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடி நடந்தான் மகேஷ். சுதாவும் உடன் நடந்தாள்.
''ம்... இன்னையோட ஆறுமாசம் முடிய போவுதா?... என்னயிருந்தாலும் நீங்க அவசரப்பட்டிருக்க கூடாது! இன்னிக்கு ஒவ்வொரு பத்திரிகை ஆபிஸா நாய் மாதிரி அலைய வேண்டியிருக்கு... சரி... பத்திரிகைலதான் சான்ஸ் கிடைக்கலன்னு, அத விட்டுட்டு படிச்சதுக்கு ஏத்தபடி டிரைபண்ணா இன்ஜினியரா வேலைக்கு சேந்துக்கலாம். அதையும் பண்ணாம, எவ்வளவு நாளைக்கி இப்படியே காலத்த ஓட்டப் போறீங்க! எனக்கென்னவோ நீங்க பண்றது நல்லதா தெரியல.''
''சரி... அதை விடுமா...''
''பின்னென்ன! ஆரம்பத்துல எழுதணும்; நம்ம பேரு பத்திரிகைல வரணும்னு தவிச்சீங்க! 'சரி'ன்னு எங்க ஆபிஸிலயே இண்ட்ரடியூஸ் பண்ணேன். கொஞ்ச கொஞ்சமா எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ரெகுலரா வேலைக்கு சேர்ந்தீங்க.... பத்திரிகை ஒரு பப்ளிக் மீடியம். அதுக்கு சில பொறுப்பு உண்டுதான். ஆனா பத்திரிகை நடத்தறவங்களுக்கு அது ஒரு பிஸினஸும்கூட. அதோட, நீங்க வேலை செஞ்சது ஒண்ணும் பெரிய நிறுவனத்திலிருந்து வந்த எஸ்டாபிலிஸ்டு பத்திரிகை இல்ல... அதனால நீங்க கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கத்தான் வேணும்''.
''இங்க பாரு சுதா! நீயும் மத்தவங்க மாதிரியே பேசாதே! நீ சொல்றதெல்லாம் எனக்கும் தெரியாம இல்ல! ஆனா இங்க என்னோட பிரச்னை, அது இல்லே! இது முழுசா ரெண்டு பேருக்கிடையேயான ஈகோ பிரச்னை. அதுவும் நான் சேர்ந்த புதுசுல, என்னை அறியாம நடந்த ஒரு பொறி! அப்ப ஆரம்பிச்ச மிஸ் அண்டர்ஸ்டேண்டிங், இப்படி வந்து முடிஞ்சது. இதுதான் உண்மை. அஞ்சு வருஷமா என்கூட பழகறே! ரெண்டு வருஷமா என் கூட வேலை செஞ்சே! உனக்கே இது புரியலைன்னா நான் என்னத்த சொல்றது... சரி.... இப்ப அந்த பேச்சைவிடு. உன் மேரேஜ் விஷயம் என்னாச்சு....''
''அத பேசவா என்ன வரச் சொன்னீங்க.... பேச வந்த விஷயத்தையே விட்டுட்டீங்களே! ம்.... அப்புறம்... உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு.... ஆனா இன்னிக்கி உங்கள பாக்க முடியும்ணு தெரியாதில்லே. அதனால எடுத்துட்டு வரலை. ஹாஸ்டல்ல இருக்கு...''
''அப்படியா? எங்கிருந்து வந்திருக்கு..... பாத்தியா?''
''திருச்சியிலிருந்து.... உங்க ஃப்ரெண்ட் யாராவதிருக்கும்'' பேசியபடியே மணலைவிட்டு, லைட் அவுஸ் அருகில் இருந்த நெடுஞ்சாலை கடைக்கு வந்தனர்.
''ஏம்பா.... ரெண்டு டீ, ஸ்ட்ராங்கா?'' என்றான் மகேஷ், டீ கடையைப் பார்த்து.
''சரி... வேற அட்ரஸ் தேடற விஷயம் என்னாச்சு!''
''சுதா..... கொஞ்சம் பொறுத்துக்க... ஆறு மாசமா அடிக்கடி இடம் மாறிட்டேயிருக்கேன். ஒரே இடத்துல தங்க முடியலன்றதாலதான் உன் அட்ரஸை கேர்-ஆப் அட்ரஸா யூஸ் பண்ண வேண்டியிருக்கு. சீக்கிரத்துல வேற ஏற்பாடு பண்ணிடறேன். அது வரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்க... ப்ளீஸ்....''
''எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல. உங்களுக்குதான் உடனே தகவல் கிடைக்காது. அதுக்குதான்''
டீ கடைப் பையன் டீ கொண்டு வர, ஒரு கிளாஸை வாங்கிக் கொண்டு, 'அங்க ஒரு டீய கொடு' என்று சுதாவைக் காட்டினான் மகேஷ்.
டீ கிளாஸை வாங்கியபடி, ''சரி.... சொல்லுங்க... என்ன விஷயம்?'' என்றாள் சுதா.
''விஷயமென்ன! நீ சொன்ன மாதிரி மறுபடியும் என்ஜினியராயிடலாம்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். அது பத்தி பேசத்தான் வரச் சொன்னேன். இப்ப வௌதயிலிருந்துகிட்டு நிறைய பத்திரிகைக்கு எழுத முடியுது. ஆனா நாம கொடுக்கறத அவங்க வௌதயிடறாங்களான்றது உறுதியில்லாமயிருக்கு! சில நேரங்கள்ல..., கொஞ்சம் லேட்டானாலும் அதுக்குள் வேற பத்திரிகைல, அதே மேட்டரு வந்துடுது. சில நேரத்துல பர்மிஷன் வாங்கிட்டு செய்ய வேண்டிய மேட்டருக்கு, சந்தர்ப்ப சூழ்நிலை ஒத்துவரலேன்னா அந்த மேட்டர் அதோகதி! இது மாதிரி மிஸ்ஸான விஷயங்களே நிறைய. இதே மாதிரி போனா, ஒத்து வராதுன்னு தோணுது. அதனால வேற ஏதாவது பண்ணித்தான் ஆகணும். அதுதான் யோசிக்கறேன்.''
''ஹா.... ஹ்ஹா..... ஹா'' சுதா வாய்விட்டு சிரித்தாள்.
''என்ன சுதா சிரிக்கிற! சொல்லிட்டு சிரியேன்''
''....சிரிக்கறேன்னு தப்பா நெனக்காதீங்க.... யாரோ சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது, அதான் சிரிச்சேன்... ஸாரி....''
''என்ன விஷயம்?''
''ம்... பாரதிராஜா படம் பண்ணணும்னு மெட்ராஸ் வந்து அலைஞ்சிட்டு வாய்ப்பு கிடைக்காம ஊருக்கு திரும்ப போறதுன்னு முடிவு பண்ணராம். அப்ப அவர் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு போவ நெனச்சிருக்காரு. ஃப்ரெண்ட் அந்த நேரத்துல ஒரு ப்ரிவியூ தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்க, அங்க போயிருக்காரு பாரதிராஜா. வாட்ச்மேன் இவரைப் பாத்துட்டு 'உள்ளே விடமாட்டேன்''னு மறுத்துட்டாராம். பாரதிராஜா எவ்ளோ சொல்லியும் கேக்காம அவரை கைய பிடிச்சி இழுத்துட்டு வந்து வௌதயே விட்டுட்டுட்டாராம். அதை பெரிய இன்சல்டா நெனச்சி, 'இதே ப்ரிவியூ தியேட்டர்ல நம்ம படம் போடணும். அதுக்கு நாம வரும்போது இதே வாட்ச்மேன் நம்ம வரவேற்கணும்'னு முடிவோட திரும்பப் போராடித்தான் ஜெயிச்சாராம்.... இது உண்மையா... கற்பனையான்னு எனக்குத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டது''
''சரி... இதுல சிரிக்க என்னயிருக்கு? அதோட, இதே நிலைமை எனக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல! பார்ப்போம்.''
டீ கடை பையன் மீண்டும் வந்து, டீ கிளாஸை வாங்கிக் கொள்ள, மகேஷ் சில்லறை கொடுத்தான்.
''சரி..... இருட்டிடுத்து.... நான் கிளம்பறேன்.... நாளைக்கி ஞாயித்துக்கிழமைதானே.... சாய்ந்திரம் வாங்களேன். எங்க அண்ணன் வந்தாலும் வருவாரு.... வந்தா, அவரையும் கூட்டிகிட்டு வரேன். அப்ப பேசுவோம்'' என்றாள் சுதா.
''சரி கிளம்பு... உனக்கு ஹாஸ்டலுக்கு போக லேட்டாயிட போவுது. நாளைக்கு வரும்போது ஞாபகமா அந்த லெட்டரை கொண்டு வா?''
சுதா மொப்பட்டை கிளப்பிக் கொண்டு ஹாஸ்டலுக்குப் பறந்தாள்.
***
ஞாயிற்றுக்கிழமை மாலை.
நெருக்கடி நிறைந்த கிண்டி பஸ் ஸ்டாப். விடுமுறையானதால் கூட்டம் குறைந்திருந்தது. கைக்கடிகாரத்தைத் திரும்பி பார்த்தான் மகேஷ். மணி 3.30. அண்ணா சதுக்கம் செல்லும் 45Bக்காக காத்திருந்தான். தற்செயலாக திரும்ப பக்கத்தில் நின்ற தம்பதியரை எங்கோ பார்த்தது போல் தோன்றியது. யோசித்தபடி மகேஷ் நிற்பதை கவனித்து விட்ட அந்த பெண்மணி -
''ஏங்க.... இங்க பாருங்க.... 'தமிழ் மணி' மகேஷ்!'' என்றாள் தன் கணவனிடம்.
திரும்பிப் பார்த்த அவர், ''ஹலோ.... எப்படியிருக்கீங்க.... அப்புறம் இந்த பக்கமே காணோம்... நீங்க எழுதின அந்த ரிப்போட்டுக்கு நல்ல எஃபெக்ட் சார்... அடுத்த மூணு மாசத்துல எல்லா வேலையும் முடிஞ்சுது. இப்ப எங்க ஏரியா மக்கள் ரொம்ப சந்தோஷமாயிருக்காங்க.... ரொம்ப தேங்கஸ் சார்....'' என்றார்.
''பரவாயில்ல.... நீங்க எப்படியிருக்கீங்க....'' என்றான் மகேஷ்.
''நல்லாயிருக்கோம்.... காலேஜ் அட்மிஷன் பத்தி நீங்க எழுதின ஒரு கட்டுரைக்கு கூட நல்ல இம்பேக்ட் இருந்துதாம். என் பொண்ணு சொல்லுவா.... அவங்க காலேஜ்ல உங்க பத்திரிகைக்கு தனியா ஒரு 'ரசிகர் மன்றமே' இருக்காமே...''
''அப்படியா?''
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே 45B வந்து நிற்க, ''நான் அவசரமா பீச்சுக்கு போறேன். பஸ் வந்துடுச்சு... அப்புறம் பேசலாம்... வரட்டுங்களா?'' என்றான் மகேஷ்.
''சரி.... அப்புறம் வீட்டுப் பக்கமா வாங்க....'' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே மகேஷ் பஸ்ஸில் ஏறினான்.
பஸ்ஸிலும் கூட்டம் இல்லை. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்ததும் மகேஷ் சன்னல் பக்கம் திரும்பினான்.
பஸ் செல்லம்மாள் கல்லூரியைக் கடந்து கொண்டிருந்தது. மகேஷின் கண்களில்பட்டது பிரபல வாரப்பத்திரிகையின் புதிய தொடர் குறித்த விளம்பரம். கல்லூரி நாட்களிலேயே, பத்திரிகைகள் மகேஷைக் கவர்ந்த விஷயம். பாடப் புத்தங்களுடன் செலவிட்ட நேரத்தைவிட பத்திரிகை, புத்தகங்கள், எழுத்தாளர்கள் என இவன் செலவிட்ட நேரம்தான் அதிகம்.
அறிவியல், தொழில் நுட்பம் என அப்போது தமிழில் ஏராளமாக படைப்புகள் - கதைகளாகவும், கட்டுரைகளாகவும் வௌதவந்து கொண்டிருந்தன. எலக்ட்ரானிக் தொழில் நுட்பங்கள், நாவல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து எல்லாரையும் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தன. சம்மந்தமில்லாமல் 'மின்னணு அறிவியல்' படைப்பிலக்கியத்தில் மாற்றங்களை உண்டாக்கி......
மகேஷ் கற்பனை எங்கோ பறந்து கொண்டிருந்தது.
......... மின்னணுத் துறை இப்படிப்பட்ட ஒரு புரட்சியை உண்டாக்க முடியுமானால் இன்னொரு தொழில் நுட்பமான 'சிவில் என்ஜினியரிங்' நுட்பங்களைப் பயன்படுத்தி விறுவிறுப்பும், வேகமும் கொண்ட கதைகளை நாமும் ஏன் எழுத முடியாது? நாம் படித்த சிவில் என்ஜினியரிங் துறை நுட்பங்கள் பலவற்றை பிரமிப்பூட்டும் நாவலாக மாற்ற முடியுமே! இந்தத் துறையில் புதைந்து கிடக்கும் இப்படிப்பட்ட இன்னும் பல விஷயங்களை, சிக்கல்களை பயன்படுத்தி எத்தனை நாவல்களை எழுத முடியும் என்ற சிந்தனையிலேயே நேரத்தை ஓட்டிய கல்லூரி நாட்கள் மகேஷின் மனக்கண்முன் ஓடின. ஒருவேளை மீண்டும் என்ஜினியராகத்தான் மாறியாக வேண்டும் என்றால் அப்போது 'நாவல்'களை மட்டுமாவது விட்டுவிடக் கூடாது! ஒருவழி செய்ய வேண்டும். கடந்த சில வருடங்களாக செய்தி, விமர்சனம்.... இத்யாதி இப்படியே கவனம் செலுத்தியதால் 'கதை', 'கவிதை' போன்ற படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் பத்திரிகையில் கதை எழுதுவது, நாவல் எழுதுவது எல்லாம் மட்டும் சுலபமா? நாம் சந்தித்த எத்தனையோ தொடக்க நிலை எழுத்தாளர்களின் அனுபவம் என்ன? கதை தேர்வில் பிரபல பத்திரிகைகளிலும் கூட 'நட்பும், உறவும்'தான் அதிக அளவில் உதவ முடியுமாமே! ஏதேனும் சந்தர்ப்பம்... ஏதேனும் ஒரு வாய்ப்பு... சரிதான், மறுபடியும் வாய்ப்புதான்....! பத்திரிகைத் துறையே வாய்ப்பில்தானா? மற்றதெல்லாம்...?
''சார்... கொஞ்சம் தள்ளி உட்கார்றீங்களா....?'' சக பயணி, மகேஷின் முதுகைத் தொட - மகேஷ் சிந்தனை கலைந்து நினைவுக்கு வந்தான். நகர்ந்து பயணிக்கு இடம் தந்து விட்டு மீண்டும் சன்னல் பக்கம் திரும்பினான்.
"குயின் மேரிஸ்ஸெல்லாம் எறங்கு..."
கண்டக்டர் முன்புறமிருந்து கத்த, மகேஷ் வேகமாக எழுந்தான். ஞாயிற்றுக்கிழமை பீச் கூட்டம், பஸ்ஸில் நிரம்பி வழிந்தது. வண்டி மெல்ல நகரத் தொடங்க, மகேஷ் படியில் இருந்தவரைத் தள்ளிக்கொண்டு கீழே குதித்தான்.
.
.
.
.
.
.
.
"ஹாய் மகேஷ்... வாடா... ஏன் லேட்.... பஸ்ல கூட்டமா? - சுதாவின் அண்ணன் பிரகாஷ்.
"ஆமாண்டா! நீ எப்ப வந்தே?"
"நான் காலைல வந்தேன். ஆனா பீச்சுக்கு நாலு மணிக்கே வந்துட்டோம். உட்கார்."
"அப்புறம் என்னடா சுதா மேரேஜ், எந்த ஸ்டேஜ்ல இருக்கு?" என்றபடி அமர்ந்தான் மகேஷ்.
"நான் மெட்ராஸ் வந்ததே அதுக்குதான்! ஆனா அதுக்கு முன்ன... நீ மறுபடியும் என்ஜினியரா ஆயிடலாம்னு யோசிக்கறதா சுதா சொன்னா! என்ன விஷயம்? அப்ளிகேஷன் ஏதுவும் போட்டிருக்கியா?"
"இல்லடா, அப்படி ஒரு யோசனை இருந்தது... ஆனா...."
"என்னடா ஆனா... இப்படியேதான் சொல்லிட்டு இருக்கே! சரி. பத்திரிகை... பத்திரிகைன்னு கட்டிட்டு அழறதைவிட டி.வி. மீடியா எதுக்காவது டிரை பண்ணலாமில்லயா?"
"ஆமாம்! டி.வியும் ஒரு மீடியாதானே; நீங்க சொல்ல நெனக்கறதை அதுல சொல்லலாமில்லையா" என்றாள் சுதா.
"நம்ம சாடிலைட் மீடியா ஃபுல்லா, இப்ப வேற திசையில போயிட்டு இருக்கே! நல்லவேளை இப்பவாவது முன்னயிருந்த பரிசு..... போட்டின்னு இருந்த டிரண்ட் மாறியிருக்கு. அதுக்கான போஸ்ட் கார்டுக்கு விலை கூட்டினது எவ்வளவோ பரவாயில்லை. இல்லைன்னா இது மூலமா கவர்மெண்டுக்கும் எவ்வளவு நஷ்டம் !" - மகேஷ்.
"ம்... போட்டின்னதும் ஞாபகம் வருது. 'பாலிடிக்ஸ் & ப்பிபூள்ஸ்'ல்ல ஒரு போட்டி வைச்சிருக்கான். 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், அதன் சவால்களும்'ன்ற தலைப்புல ஒரு ஆய்வு கட்டுரை எழுத சொல்லியிருக்காங்க! இங்கிலிஷ்ல. முதல் பரிசு ரூ.10,000/-. ஆறுதல் பரிசு ரூ.1000/-. அதுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன், மகேஷ். கட்டுரைய அனுப்ப இன்னும் பத்து நாள் இருக்கு. இந்தாங்க அந்த கட்டிங்." என விளம்பரத்தை நீட்டினாள் சுதா.
"ம்... பார்ப்போம்" எனக் கூறி, அதை வாங்கிக் கொண்ட மகேஷ், "சரி.... இதெல்லாம் இருக்கட்டும்!. உன் மேரேஜ் விஷயம் என்னாச்சு, அதுபத்தி சொல்லும்மா" என்றான்.
சுதா, அண்ணன் பிரகாஷைப் பார்த்து புன்னகைத்தபடி தலையை கவிழ்த்தாள்.
"ஆமாண்டா. நான் வரும்போது பையன் போட்டோ கூட கொண்டாந்தேன். என்னம்மா, போட்டோ ஹாஸ்டல்ல இருக்கா?" என்று சுதாவைத் திரும்பிப் பார்த்தான் பிரகாஷ்.
"ஆமாம்" - சுதா
"என்ன உனக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கா... மாப்பிள்ளை என்ன பண்றார்?"
"அவரும் ஜர்னலிஸ்ட்தான்" என்று சிரித்தாள் சுதா.
"அடுத்த வாரம் பெண் பார்க்க வீட்டுக்கு வர்றாங்க... இவளுக்கு தகவல் சொல்லத்தான் வந்தேன்" என்றான் பிரகாஷ்.
"சரி அதை விடுங்க!. உங்க விஷயத்த பேசுங்க" என்றாள் சுதா.
"என்ன.., வேலை விஷயம்தானே! நேத்து உன்னை அனுப்பிட்டு ரூம் போய் யோசிச்சேன். வாழ்க்கைல போராடாத எவனுக்கும் வெற்றி ஈஸியா கெடைக்கறதில்லை. முன்னேறின எல்லாருமே போராடி போராடித்தான் ஜெயிச்சிருக்கான். நாமும் இன்னும் கொஞ்ச நாள் போராடுவோம். அப்புறம் வேணா பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" - மகேஷ்.
"என்னவோடா, பாத்துக்கோ! நானும் ஊருக்கு கிளம்பணும். டைம் ஆயிட்டு இருக்கு." என்றபடி பிரகாஷ் எழ, சுதாவும் மகேஷும் கிளம்பினர்.
***
வௌளிக்கிழமை. மாலை 4 மணி. கரிகாலன் தெருவில் 'சரஸ்வதி நியூஸ் மார்ட்'டில் டெலிபோன் அலறியது.
ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...
கடை பையன் வாடிக்கையாளர்களுக்கு மாலை பத்திரிகை வினியோகத்தில் சுறுசுறுப்பாக இருக்க, கடையின் ரெகுலர் விசிட்டர் என்ற உரிமையோடு மகேஷ் ரிஸீவரை எடுத்தான்.
"ஹலோ... நாங்க 'தமிழ் மணி' பத்திரிகைலயிருந்து பேசறோம். எதிர் வீட்ல மகேஷ்ன்னு... அவரைக் கூப்பிட முடியுமா?"
"யாரு... சுதாவா? நான் மகேஷ்தான் பேசறேன். சொல்லுமா?"
"எப்படி... நீங்க கரெக்டா போன் எடுக்கறீங்க, கடைக்கு காவலா? எனிவே, 'பாலிடிக்ஸ் & ப்பியூள்ஸ்'க்கு நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். உண்மைலேயே ரொம்ப நல்ல அனாலிஸிஸ். நான் படிச்சிட்டு இருக்கும்போது நம்ம ஆபிஸ் 'மனோகர்' சார்கூட பாத்துட்டு கேட்டாரு, நீயா எழுதினன்னு! 'நாளைக்கு எடிஷன்ல போட்டுடுவோம்'ன்னு கைல எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அப்புறம் 'போட்டி'க்குன்னு சொன்னேன். ஆனா நீங்க எழுதினதுன்னு சொல்லல. உங்களுக்கும் அவருக்கும் தானே இங்க பிரச்னை, அதனாலதான். 'ரொம்ப நல்லாயிருக்கு. அனுப்புமா! கட்டாயம் பிரைஸ் கிடைக்கும்'னு சொன்னாரு. அதை உங்களுக்கு சொல்லத்தான் போன் பண்ணேன்."
"சரி... இப்ப ஆபிஸில வேற யாரும் இல்லயா?"
"இல்லை. சரி, கட்டுரையை அனுப்பிட்டீங்களா? அடுத்த முறை பாக்கறப்ப இந்த காப்பிய வாங்கிடுங்க! அதுக்குள்ள அண்ணன் வந்தா அவருக்கும் காட்றேன்.''
"சரி சுதா... இப்ப இன்னொரு யோசனை!"
"என்ன சொல்லுங்க?"
"சரியா ஒரு இடத்துல தங்க முடியலன்னு இதுவரைக்கும் உன் அட்ரஸை, கேர்-ஆப்ன்னு.. யூஸ் பண்ணிட்டேன். ஆனா உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ற நேரத்துல இது நல்லதில்லைன்னு தோணுது! இதனால ஏதும் பிரச்னை கூடாதுன்னு நெனக்கிறேன்"
"அதை விடுங்க. பிரச்னையெல்லாம் ஆகாது. எங்க வீட்ல, அண்ணனுக்கு, என் ஃபிரெண்ட்ஸ், எங்க ஹாஸ்டல் மேடம் எல்லாருக்குமே உங்களைத் தெரியுமே! இதுவரைக்கும் ஒருத்தர் கூட உங்களைப் பத்தி தப்பா பேசினதில்ல. நீங்க ஏன் வீணா போட்டு குழப்பிக்கிறீங்க."
"இல்லம்மா! உடனே நான் வேற அட்ரஸ் புடிக்கறதும் கஷ்டம். அதுக்காக உனக்கு தொடர்ந்து பிரச்னையா இருக்கவும் பிடிக்கல... அதனாலே ஒரு சின்ன ஹெல்ப்..."
"என்ன சொல்லுங்க."
"வேற ஒண்ணும் இல்ல. இவ்வளவு நாளா உன் அட்ரெஸ கடன் கொடுத்த... இப்ப உன் பேர கடன் கொடுக்க முடியுமா?"
"என்ன சொல்றீங்க, புரியலயே!"
"இந்தக் கட்டுரைய உன் பேரிலேயே, உன் அட்ரஸ் போட்டு அனுப்பலாம்னு நெனக்கிறேன். பரிசு கிடைச்சா நீ எனக்கு குடுத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு. அதனால... என்ன முடியுமா?"
"என்ன மகேஷ் நீங்க..."
"ப்ளீஸ்...."
"ப்ளீஸெல்லாம் வேணாம். ம்... போட்டு அனுப்புங்க. ஹாஸ்டல் அட்ரஸ்ல அனுப்பப் போறீங்க, அவ்ளதானே! பரிசு கிடைச்சா எனக்கு கமிஷன் கிடைக்குமா?" என்றபடி சிரித்தாள் சுதா.
"கமிஷனா..., நீயுமா? சரி விடு... ரொம்ப தேங்க்ஸ். இங்க போன் பண்ண மத்தவங்க வெயிட் பண்றாங்க. அப்புறம் பேசலாம்" என்று போனை வைத்தான் மகேஷ்.
***
இரண்டு மாதங்களுக்கு பின் ஒருநாள் -
காலை 11 மணி. மகேஷ் வௌதயே செல்லத் தயாராகி, அறைக் கதவை பூட்டினான். அதற்குமுன் சுதாவிடம் பேச எண்ணி, 'சரஸ்வதி நியூஸ் மார்ட்'டில் 'தமிழ்மணி' எண்களைக் சுழற்றினான்.
"ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்..."
"ஹலோ... தமிழ்மணி எடிட்டோ ரியல்... யார் வேணுங்க!"
"சுதா இருந்தா குடுங்க."
சில நிமிடங்களுக்கு பிறகு சுதா பேச-
"ஹலோ சுதா, நான் மகேஷ் பேசறேம்மா! எப்படியிருக்க! என்ன, மேரேஜுக்கு என்னையிலிருந்து லீவு போடற! வுட்பிகிட்ட பேசினியா!"
"ஸாரி... மகேஷ்! நானே உங்ககிட்ட பேசணும்னு நெனச்சேன். நல்லவேளை நீங்களே போன் பண்ணிட்டீங்க! நடுவுல அண்ணனைப் பாத்தீங்களே, அவர் ஏதும் சொன்னாரா?" என்றாள் சுதா.
"ஏன்... ஏம்மா? பேச்சே டல்லாருக்கு"
"ஸாரி மகேஷ். அண்ணன்தான் சொன்னாரு..., அவரு கொஞ்சம் ரிசர்வ் டைப் போலன்னு..."
"ஓ... அதுவா? அண்ணன் லெட்டர்ல எழுதியிருந்தானே! பார்த்தேன். அதனாலென்ன? இதுக்கெல்லாம் போய்... எல்லாம் போகப் போக சரியாயிடும். ஆனா ஒரு விஷயம் எனக்கு நல்லதுன்னு தோணுது"
"என்னது..."
"நல்லவேளையா அந்தப் போட்டி கட்டுரை அனுப்பினபோது பழையபடி கேர்-ஆப்ன்னு போடாம போனோன். வாழ்க்கைல ஒருமுறை சின்ன கீறல் விழுந்துட்டாலும் அது உறுத்திக்கிட்டேயிருக்கும். அதனால முடிஞ்சவரை அது வராம பாத்துக்கணும். நான் வேற அட்ரஸ்ஸுக்கு ஏற்பாடு செஞ்சிக்கிறேன். நீ இதுக்கு வருத்தப்படாதே."
"அப்புறம்... இன்னொரு விஷயம். அவரு ஜெர்னலிஸ்ட்ன்னு சொன்னேனே, அது எந்த பத்திரிகைன்னு தெரியுமா?"
"இல்லம்மா! ஏதோ எனக்கும் கேக்கணும்னு தோணல. ஏன்...? எங்க ஒர்க் பண்றார்?"
"பாலிடிக்ஸ் & ப்பிபுள்ஸ்'ஸில அஸோஸியேட் எடிட்டர் அவர்தானாம். இன்னும் மூணு மாசத்துல மெட்ராஸ் எடிஷன் வருதாம். அதுக்கு இவர்தான் இப்போதைக்கு ரெசிடண்ட் எடிட்டரா வறாராம் . அதோட நீங்க அனுப்பின கட்டுரைய கூட பாத்திருக்கார். 'நல்லாயிருந்தது. இவ்வளவு விஷயம் தெரியுமா, உனக்கு'ன்னு என்னைப் பாராட்டினார். நான் விஷயத்த சொல்ல வந்தபோது அண்ணன் குறுக்கிட்டு பேச்சை மாத்திட்டு, அப்புறம் என்கிட்ட சொன்னாரு. 'அந்தக் கட்டுரை நீங்க எழுதனதுன்றதைச் சொல்ல வேணாம்'னும் சொல்லிட்டாரு!"
"அப்படியா? அதுகூட நல்லதுக்குன்னுதான் நினைக்கறேன். சரி அதை விடு. ரிசல்ட் எப்ப வருதாம்? பரிசு கிடைச்சா செலவுக்கு பணமாவது கிடைக்கும்னு பாக்கறேன்."
"பரிசுக்கான இறுதி முடிவை அவங்க எடிட்டர்தான் எடுப்பாராம். ஆனா இந்தக் கட்டுரைகளை வெச்சு வெவ்வேற பகுதியிலிருந்து ஆளை செலக்ட் பண்ணி, ட்ரெயினிங் கொடுக்க போறாங்களாம். 'நல்ல நிறுவனம்'ன்றதால நல்ல சம்பளம் இருக்கும்னு சொன்னார். மெட்ராஸிலிருந்து இந்தக் கட்டுரையும் செலக்ட் ஆகியிருக்குன்னு சொன்னார்''
"என்னது... அப்படியா?"
"ஸாரி மகேஷ். அதுக்காக போன வாரம் அவங்க ஆபீஸிலிருந்து லெட்டர் வந்தது. ட்ரெயினிங் அடுத்த வாரம் தொடங்குது. இன்னிக்கி 'தமிழ்மணி'ல ரிசைன் பண்ணிட்டு நாளைக்கு நான் பாம்பே போறேன், ட்ரெயினிங்க்ல ஜாயின் பண்ண! நான் பாம்பே போய் லெட்டர் போடறேன். வேற ஒண்ணும் விஷயமில்லையே! வெச்சிடவா...." என்றபடி அவள் போனை வைப்பது, மகேஷின் காதுகளில் இடியாய் இறங்கியது.
மகேஷ் மெல்ல உறைந்தான்.
"சார்... என்ன பண்றீங்க..., நீங்க பேசறீங்களா, இல்லன்னா அவங்களாவது பேசட்டுமே! ஒரு வாய்ப்பு குடுங்க" என்றான் கடைப் பையன். 'வாய்ப்பு' என்ற சொல் மீண்டும் மகேஷைத் தாக்க, போனை வைத்து பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான், அடுத்த வாய்ப்பைத் தேடி....