ப.சிதம்பரம் தாக்கல் செய்த அண்மைய பட்ஜெட் பற்றி பொதுவான கருத்து - கிராமப்புற வளர்ச்சிக்கும், அதன் அடிப்படைத் தேவைகளுக்கும் அக்கறை காட்டப்பட்டுள்ளது என்பதே! கம்யூனிஸ்ட்டுகளுடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொதுத்திட்டத்திற்கு முடிந்தவரை இந்த பட்ஜெட்டில் நியாயம் செய்யப்பட்டுள்ளது என்றால் கூட, அநியாயம். சற்று கூடுதலாகவே இறங்கி வந்திருக்கிறார் ப.சிதம்பரம். ஆனால் அதைத் தாண்டி, இன்னொரு விஷயமும் இந்த பட்ஜெட்டில் தொக்கிக் கிடக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது; உறுதியாக நம்புகிறேன். அது - பங்குசந்தைக்குள் அதிக பணம் பாய, ப.சிதம்பரம் கொஞ்சம் முன்ஜாக்கிரதையாகவே மடை மாற்றுகிறார் என்பதுதான். என் சந்தேகத்துக்கு அடிப்படைகள் இல்லாமல் இல்லை.
சிதம்பரம் மடை மாற்றுகிறார் என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு நிதியமைச்சர்..., அதிலும் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறையிலிருக்கும் ஒரு நாட்டின் நிதியமைச்சர் கட்டாயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய திசையில்தான் அவரது நடவடிக்கை இருப்பதாகவே நினைக்கிறேன். முதலில் எந்தவகையில் பணம் இனி பங்குசந்தைக்குள் அதிகமாக பாயும் என்று நான் நம்புவதைச் சொல்லிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருகிறேன்.
தனிநபர் வருமான வரி முகப்பை, ஒரு லட்சம் என்று உயர்த்தியிருக்கும் சிதம்பரம் - கூடவே இன்னும் ஒரு சலுகையும் தந்துள்ளார். அது, அடுத்து 1 லட்ச ரூபாய்வரை சேமித்து, முதலீடு செய்பவர்களுக்கு - அந்தத் 'தொகை'க்கும் வருமான வரி இல்லை என்பது. சேமிப்புக்கான இந்த சலுகை, முற்றிலும் புதிதானதல்ல. கடந்த ஆண்டுகளிலெல்லாம் கூட, சேமிக்கப்படும் தொகைகளில் - இன்ஸ்யூரன்ஸ் என்றால்... 'இவ்வளவு!'. அதில் பென்ஷன் பாலிசி என்றால்... 'இப்படி!'. சிறுசேமிப்பு பத்திரமா?... 'இந்தா, பிடிச்சிக்கோ!'. வரி சேமிக்கும் பாண்ட்களில் பணம் போட்டால் - 'இந்த மட்டும்', என ஒவ்வொன்றுக்கும் ஒரு வரம்பு இருக்கும். சலுகை தரப்பட்டது.
இப்போது அந்த மாதிரியான வரம்புகள் எதுவும் கிடையாது என்று சொல்லிவிட்டார் சிதம்பரம். யாருக்கு எந்த வகையில் தேவையோ, ஆர்வமோ, தெரியுமோ அந்த வகையில் இஷ்டம்போல முதலிட்டுக் கொள்ளலாம். கதவு திறக்கப்பட்டுவிட்டது.
இதனால் ஏற்படும் நிகர விளைவாக என்ன இருக்கும் என்றால் - வரி சேமிப்பு கட்டாயத்துக்காக குறைந்த வட்டியும், வருவாயும் தரும் பாண்ட் போன்றவற்றில் இனி யாரும் முதலிட மாட்டார்கள். அல்லது யோசிப்பார்கள். மாநில அளவில் சிறுசேமிப்பு திட்டங்களில் போடப்படும் பணத்தின் அளவும் கணிசமாகக் குறையும். இப்படி பல்வேறு வகைகளில் சென்று கொண்டிருந்த குறைந்த வருவாய் பெற்ற பணமெல்லாம் இனி 1. வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அல்லது 2. பரஸ்பர நிதித்திட்டம் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் 3. இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் என்ற வகையில் மட்டுமே அதிகமாக திரும்பக்கூடும். இதில்கூட, எண் 1ம், 3ம் எதிர்கால மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதிதான். மற்றபடி, பெரும்பாலோர் அதிக லாபம் ஈட்ட எண்ணி 2வது வகை திட்டங்களை நாடுவது அதிகரிக்கப் போகிறது. இன்னும் அதிகமாக பணம் சேர்ந்துவிட்டால், அப்புறம் ரியல் எஸ்டேட் போல திசை மாறக்கூடும். மற்றபடி ஓராண்டில் அனுமதிக்கப்படும் சேமிப்பான ஒரு லட்சத்தில் அலுவலகத்திலேயே கட்டாயப் பிடிப்பான தொகைகள், வீட்டுக்கடன் போன்ற இதர இனங்கள் எல்லாம் போக, மீதி கிடைப்பதில் பொதுவாக பெருந்தொகைகளை எதிர்பார்க்க முடியாது. அது போன்ற தொகைகள் சேமிக்கப்படும்போது கிடைக்கும் தொகைக்கு இந்த வழிகள்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரி! ஆனால், அந்த அளவுக்கு நம் மக்களிடம் விழப்புணர்ச்சி இருக்கிறதா என்று கேள்வி எழுந்தால் சரிதான்.
மேலே விவாதிக்கப்படும் தரப்பினரெல்லாம் மாத ஊதியம் பெற்று, முறையாக வருமான வரி செலுத்தும் ஆட்கள் என எடுத்துக் கொண்டு இந்த கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இத்தரப்பினரிடையே ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் போன்ற சேமிப்பு பழக்கங்கள் தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையான அனுமதிப்படி, இத்துறையில் 10 ஆயிரம் வரை முதலிட்டு அதிகபட்சமாக 2000வரைதான் சலுகை பெறலாம் என்பதால், அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும், குறைவாக முதலிட்டவர்களும் கூட இனி தங்கள் பார்வையை திசை திருப்புவார்கள். இவர்கள் பாதுகாப்பு கருதி நேரடியாக பங்குசந்தைக்குள் போகாவிட்டாலும் மியூச்சல் பண்ட்கள் வழிகளையும் தவிர்க்க வாய்ப்புகள் குறைவே! அத்துடன் தற்போது தனியார்த்துறை இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட்கள் என ஏகத்துக்கும் வந்துவிட்டபின், இவர்கள் - விளம்பரங்கள் மூலமே எல்லாருக்கும் தகவல் தந்து அவர்களிடம் பணம் புரட்டும் வேகத்தை அதிகரிப்பார்கள். இந்தப் பணம் எல்லாம் அடுத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்குசந்தைக்குள்தான் பாயும். கவனத்தில் கொள்க - வரி செலுத்தும் ஒவ்வொருவரும் அதிக பட்சமாக 1 லட்சம்வரை கூட இங்கே முதலிடலாம். அப்படியானால் மொத்தத் தொகை எவ்வளவு திரள வாய்ப்பிருக்கிறது? கணக்கு போடுங்கள்.
அடுத்தும், தற்போது புதிய அணுகுமுறையாக, வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிராவிடண்ட் ஃபண்ட் தொகுப்பையும் பங்கு சந்தையில் முதலிட அனுமதிக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதே போல, ஓய்வூதியத் துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்து, தனியார்த்துறை இவ்வகையில் செயல்படும் வேகத்தையும், விவரத்தையும் மேம்படுத்தத் திட்டமிடப்படுகிறது. எனவே இந்த எல்லா பணமும் கடைசியில் 'ஜிஜிபாய் டவர்-ஐ தவிர, வேறு எந்த திசை நோக்கி போகமுடியும்! போட்டி பெருகுவதால் எல்லாருக்கும் அதிக லாபம் ஈட்டித்தர வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
'சிதம்பரத்தின் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம்' என நான் நினைக்கும் கருத்துக்கு ஆதாரமாக நிறுத்த இவை மட்டுமேயல்ல; இன்னும் சில விஷயங்களையும் சொல்ல நான் விரும்புகிறேன்.
இந்த பட்ஜெட்டில்தான் முதன்முறையாக அவர் அறிமுகப்படுத்தும் இன்னொரு அம்சம் - தங்கப் பங்குகள் (Gold Units). இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தெரிந்த பொதுவான முதலீடு - தங்கம் வாங்குவதுதான். அதை குறைந்த பட்சமாக ரூ.100 விலையிலும்கூட, (பரஸ்பர நிதி திட்ட பங்குகள் போல) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் - அது மௌள மௌள மற்ற வகை பங்குகள் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொடுக்கும். அதனால், அடுத்தடுத்த கட்டமாக மெல்ல பரஸ்பர நிதி என்று பயணம் செய்து, அடுத்து நேரடி பங்கு முதலீட்டு எல்லையை எட்ட வழிவகுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அந்தவகையில் தங்கபங்குகள் - ஒரு 'ஆரம்ப பாடசாலை'யாக கட்டாயமாக இருக்கும் என நினைக்கிறேன். ரிசர்வ் வங்கிக்கும், செபிக்கும் இந்த பட்ஜெட்டில், இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து, சிதம்பரம் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள மற்றொரு பங்கு சந்தை ஊக்க மாத்திரை -பங்கு வர்த்தகத்தின் ஒருவகை நீட்சியான டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் இனி, ஊக வணிக வகையில் சேராது என்று சொல்லியிருப்பது. இதனால் ஊக வணிகத்தால் உள்ள இடைஞ்சல் நீங்கி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் அதிகரிக்கும்.
இந்த மாதிரி கன்னாபின்னாவென பணம் பாய்ந்தால், அதைக் கையாள்வதில் பங்குசந்தை இடை அமைப்புகளான தரகர் உள்ளிட்டவர்கள் தடுமாறிவிடக்கூடாது என, இதுகுறித்த முறையான 'பாடசாலை' ஒன்றை உருவாக்கவும் அறிவிப்பு வந்துவிட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ்' என்ற அந்த அமைப்பை 'தேசிய மூலதன கல்வி நிறுவனம்' என்றா... அல்லது வேறு எப்படி தமிழில் சொல்லப் போகிறார்கள் தெரியவில்லை. அதில், இந்த துறை ஆராய்ச்சிக்கும் வழிகள் உருவாக உள்ளன.
இன்னொரு பக்கம், பங்கு சந்தையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு கொள்ளும் வர்த்தக வங்கிகள் தங்களது கையிருப்பு ரொக்கத்தை எப்படி கையாள்வதென, இதுவரை இருந்த அரசு சட்டத் திட்டங்கள் திருத்தப்பட்டு, 'இனி, அதெல்லாம் ரிசர்வ் வங்கியின் வரம்பும், பொறுப்பும்' என மாற்றப் போகிறார்கள். இதன்படி வங்கிகள் இனி அவர்களிடம் வைத்திருக்கும் குறைந்தபட்ச, அதிகபட்ச ரொக்க கையிருப்பு, ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்கும் முன்ஜாக்கிரதை பிணைப் பணம் என்பதையெல்லாம் இனி அரசு நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்தாது. எனவே வலுவான வங்கிகள் கூடுதலாக பணத்தைத் தாங்களே கையாள அனுமதிக்கப்படும். நோஞ்சான்கள், ஏற்கெனவே போட்டியில் அடிபட்டு, வலுவான வங்கிகளுடன் இணைக்கப்படும் திட்டங்கள் உள்ளன. போட்டி நிறைந்த இன்றைய நாளில் கூடுதல் லாபம் காண பல வங்கிகளும் தங்களது கையிருப்பில் ஒரு பகுதியையாவது பங்கு சந்தைக்குத் திருப்பிவிடும். முந்தைய காலங்களில் போல எல்லாவற்றையும் தொழில்துறைக்கு கடனாகக் கொடுத்து Non performing Asset ஆக மாற்றி வைப்பது எந்த வங்கிக்கும் இனி சாத்தியமில்லை. அதனால் யாரெல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கடனைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கடன். மற்ற பணத்தை கையில் சும்மா வைத்திருக்க வாய்ப்பில்லை.
சரி, இவ்வளவு பணமும் இந்திய பங்கு சந்தைக்கு தேவையா என்றால் - நான் நினைப்பது தேவை மட்டுமல்ல; அவசியமும்கூட.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழிற்துறையில் மட்டுமின்றி, பங்குசந்தையிலும் அந்நிய நிறுவனங்கள் முதலிட அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் நீர்ஊற்று போல மெதுவாகத் தொடங்கிய இந்த முதலீடுகள் இன்று உருண்டு, திரண்டு வௌளம் போல பாய்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த பங்குசந்தை வர்க்கத்தில் கால் பகுதிக்கும் மேல் அந்நிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டது என்கின்றன புள்ளிவிபரங்கள். இந்தியாவின் அனைத்து நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், மற்ற நிறுவனங்கள், தனி முதலீட்டாளர்கள் என எல்லாரும் சேர்ந்தது மீதி பகுதி. எனவே இன்று நான்கில் ஒரு பங்குக்குமேல் வர்த்தக பங்கை கைக்குள் வைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு எதிர்குஷனாக பங்குசந்தையில் உள்நாட்டு முதலீடு தேவைதான்.
1990களின் இறுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் நடந்த சம்பவங்கள் இங்கே நினைவு கூறத்தக்கவை. அந்நாட்களில் மேற்கண்ட நாடுகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து, அவர்களது நாணய மதிப்பு உலக சந்தையில் கடும் வீழ்ச்சி கண்டு, பொருளாதாரம் படுத்துவிட்டது. அப்போது, அதற்கு காரணமாக கண்டறியப்பட்டது - அவர்களது அந்நிய முதலீட்டுக்கு ஈடாக உள்நாட்டில் சேமிப்பு இல்லாமல் போனது என்பதுதான். லாபம் கிடைக்கும்வரை இருந்த அந்த அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது 'வேலை' முடிந்தவுடன் ஒரே நேரத்தில் கடையை காலிசெய்ய... அதை சமாளிக்க அங்கே உள்நாட்டு மூலதனம் இல்லாததால் எல்லாம் ஆடிப்போனது. அப்போது ஏற்பட்ட பொருளாதார ரத்த வௌளத்தை உலகமே பரிதாபமாக பார்த்தது. அந்த நிலை, இன்று நமக்கும் ஏற்படாமல் இருக்க - நம் உள்நாட்டு சேமிப்பு அதிகரிக்க வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மற்றவர்களை அதிக சேமிப்பு வழக்கம் கொண்டவர்கள்தான். சந்தேகமில்லை. ஆனாலும் இன்றைய சூழல் நமது சேமிப்பை இன்னும் அதிக அளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஐ.மு.கூ. அரசு பதவி ஏற்க இருந்த நாட்களில்... அடுத்த ஆட்சியின் நிச்சயமற்ற போக்கு நிலவியபோது... அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஆட்சிதான் அடுத்து அமையும் என்ற தகவல்கள் கசிந்தபோது அந்நிய முதலீட்டாளர்கள் ஒருமுறை பின்வாங்கினர். அப்போது, இதுவரையான சரித்திரத்திலேயே இல்லாத அளவு ஒரே நாளில் 800 புள்ளிகள் வரை அதள பாதாளத்தில் பாய்ந்த பங்குசந்தை குறியீட்டெண், பின்னர் சமாளித்து 500+ புள்ளிகளில் அன்றைய தினத்தை முடித்தது. அன்றைய தினம் LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணம் பங்குசந்தைக்குள் கணிசமாகப் பாய்ந்ததால்தான் சிக்கல் அந்த அளவோடு அடங்கியது. இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும். எனவே இது போன்று எதிர்பாராத சம்பவங்களை சமாளிக்கவும் நாடு தயாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே கணிசமான பங்குசந்தை சார்ந்த முதலீடு இந்தியாவுக்கு தேவைதான். அதற்காகத்தான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக்கூட, ப.சிதம்பரம் பங்கு சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீட்டை ஊக்குவிக்கிறாரோ என்றும், மறுபுறம் இதைக் கொண்டு இந்திய தொழில்களையும், உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த எண்ணுகிறாரோ என்றும் நான் நினைக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
எனக்கு இதில் சில மாற்று கருத்துக்களூண்டு, இரண்டு மூன்று தினங்கள் கழித்து ஆர அமர பதிகிறேன்.
சந்திரன்,
நல்ல விரிவான பதிவு. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக விரிவாக இருக்கிறது. நான் இது குறித்து தமிழோவியத்தில் எழுதியிருந்தாலும் இவ்வளவு விரிவாக எழுதவில்லை.
உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.
நன்றி
நரேன்,
நன்றி! மாற்றுக் கருத்துகளை நான் எப்போதும் வரவேற்பவன்தான். ஒருவேளை நான் கவனிக்கத் தவறிய விஷயங்கள் எதாவது இருந்தாலும் தாராளமாக அதை நீங்கள் சுட்டிக் காட்டலாம்! அத்துடன், ஒரு விஷயத்தை அணுகும் முறையிலும் கருத்தும், திசையும் மாறுபடலாம். அதையும் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன்.
அப்புறம்... 'கெட்ட வார்த்தை அரசியல்'... 'சிலுக்கு புராணம்'னு போட்டுத் தாக்கறீங்க! வாழ்த்துகள்.
- சந்திரன்.
சசி,
முதலில் உங்கள் தன்னடக்கத்துக்கு தலை வணங்குகிறேன். நீங்கள் குறிப்பிட்டபடி தமிழோவியத்தில் நீங்கள் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு அதற்கு எனது பின்னேட்டத்தையும் அளித்திருந்தேனே! பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.
இந்த கட்டுரை 'புதிய பார்வை' இதழுக்காக எழுதப்பட்டது. எனவே, அது சந்தைக்கு வருமுன்னர் எனது பதிவில் அரங்கேற்றுவது தர்மமில்லை என்பதால்தான் இதை பட்ஜெட் வௌதயாகி இவ்வளவு நாட்கள் கழித்து பதிக்கிறேன்.
அடுத்து, ஒருவேளை நான் விரிவாக பதிவு செய்ய காரணம் எழுத்து எனது முதல் தொழில் என்பதாக இருக்கலாம். இந்தத்துறையிலேயே தொடர்ந்து புழங்குவதால் சற்றே கூடுதல்அனுபவம் இருக்கலாம்.அவ்வளவுதான். மற்றபடி தங்கள் பதிவுகளையும் படித்தவன் (லேட்டாக வலைப் பதிவுகளில் நுழைந்து.... இன்னும் சரியாக ஒரு மாதம் கூட முடியவில்லை) என்றவகையில் நீங்களும் பல விஷயங்களில் விரிவான வகையில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிகிறேன்.
மற்றபடி சில கருத்துகள் ஏற்புடையதாகவோ...மறுக்கும்படியோ கூட இருக்கலாம். பார்த்தீர்களா..., நரேன் பின்னூட்டத்தை! ஆனால் மாற்றுக் கருத்துக்கும் செவி கொடுத்து... அதில் சாரமும், உண்மையும் இருந்தால் எற்றுக் கொள்வதும்... ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும் புறக்கணிக்காமல் அங்கிகரிப்பதும்தானே சரி! நியாயமும்.
பார்ப்போம் நரேன் என்ன சொல்கிறார் என்று!
ஆனால் தொடர்ந்து எழுதுங்கள்! ஏற்கெனவே நான் சொன்னபடி இந்தத் துறை குறித்து தமிழில் எழுத ஆட்கள் மிகவும் குறைவு. அதனால் இணைந்த கைகளாக சேர்ந்து எழுதுவோம். உணர்ந்ததை, புரிந்ததை, நினைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
- சந்திரன்.
சந்திரன்,
தன்னடக்கம் எல்லாம் இல்லை. மனதில் தோன்றியதையே கூறினேன்.
பங்குச்சந்தை பற்றி தொடர்ந்து நிச்சயமாக எழுதுவேன். உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.
எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. இணைந்து எழுதுவோம். நம் பதிவைப் பார்த்து சிலராவது பங்குச்சந்தைக்கு வந்தால் மகிழ்ச்சியே
நஷ்டம் வந்து நம்மை சபிக்காமல் இருந்தால் சரி
பங்குச்சந்தை பற்றி எழுதுவதால் பணக்காரர்களாக, பங்குச்சந்தையில் லாபம் கொழிக்கும் பண முதலைகளாக நம்மை பார்க்கும் மனோபாவம் கூட நிறைய பேரிடன் ஏற்பட்டு விடுகிறது. என் பதிவுகளைப் படிக்கும் சில நண்பர்கள் எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறாய், எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறாய் என்று தான் முதலில் கேட்பார்கள். இந்த IPO வில் முதலீடு செய்யலாமா என்று கேட்பார்கள். அவர்களுக்கு கருத்து சொல்லும் அந்த நேரத்தில் எனக்கு முதலீடு செய்ய மிகுதியான பண இல்லாமல் இருந்த சூழ்நிலைகளும் உண்டு.
மாற்றுக் கருத்துகள் இல்லாமல் இருந்தால் பதிவுகளில் சுவராசியம் இருக்காது. நரேன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். வெங்கட்டும் அவரும் பதிவு செய்த இந்திய நிறுவனங்கள் பற்றிய பதிவுகளிலேயே எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் முன்னேறினால் தான் இந்தியா முன்னேறும் என்ற கருத்தே விவாதத்திற்குரியது. MADE IN INDIA வேண்டும், ஆனால் MADE BY INDIAN என்று இருப்பது அவசியமில்லை.
நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றி எழுதுகிறேன்.
நன்றி
வெகு விளக்கமான பதிவுதான். ஆனால் வரிசேமிப்புக்காக ஒரு லட்சத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யுமுன் இந்த அர்ஷத் மேத்தா, கேதன் பரிக் போன்ற பேர்வழிகளால் நம் முதலுக்கே மோசம் வரும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா எனத் தெரிந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் :)
வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ்!
உங்கள் சந்தேகம் நியாயமானது. ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்ற நபர்கள் உங்கள் முதலீட்டை காலி செய்ய மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதத்தையும் 'என்னால்' தர முடியாது. ஆனால் SEBI என்ற பெயரில் பங்குசந்தையின் காவல் நாயாக செயல்படும் அமைப்பு, முன்பு எப்போதையும்விட இப்போது அதிக கவனத்துடன் கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறது; அல்லத அப்படி பரவலாக நம்பப்படுகிறது என்று மட்டும் சொல்ல முடியும். தப்பு ராஜாக்கள் கண்காணிக்கப்படுவதோடு, மற்ற survillance நடவடிக்கைகளும் முன்னைவிட இப்போது வலு பெற்றுள்ளன.
அடுத்து, செபியின் தலைவராக இருந்த பாஜ்பாய் ஓய்வு பெற்றபின், அந்த பொறுப்புக்கு வந்திருக்கும் - UTIக்கு மறுபடியும் உயிர் ஊட்டிய திரு. தாமோதரன் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை பெற முடிகிறது. அதைத் தாண்டி, ஒரு விஷயம்தான் இறுதியானது. அது, உங்கள் பணத்திற்கு காவல்காரன், உங்களைவிட சிறந்தவன் வேறு யாரும் இல்லை என்பதே! அதனால் பங்குகளில் முதலிட்டுவிட்டு, சொந்த கிராமத்தில் Plot வாங்கிப் போட்டதுமாதிரி கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள் என்றுதான் சொல்வேன். தினமும் 15 - 30 நிமிடம் மட்டும் 'ஜிஜிபாய் டவரி'ல் என்ன நடக்குது என்ற செய்திகளைப் படித்து வாருங்கள். அதுபோதும்.
இப்படி இருந்தாலே எதாவது அசம்பாவிதம் நடப்பது உங்களுக்குத் தெரியவரும். அப்போது வாங்கிய பங்குகளை விற்றுவிட்டு வௌதவந்தால் லாபத்தில் கொஞ்சம் குறைவாக வௌதவரும் நிலைதான் இருக்குமேயன்றி, முதலுக்கு மோசம் வராமலேயே தப்பிக்கலாம்.
அடுத்து அவ்வப்போதாவது www.watchoutinvester.com என்ற தளத்துக்கு போய் வாருங்கள். முதலீடு தொடர்பான பல விஷயங்களை அங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது
இதெல்லாம் இருக்கட்டுங்க! இதென்ன வித்தியாசமான பெயராக இருக்கே! All the Best!!!
- சந்திரன்
கருத்துரையிடுக