'நல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுத்து போடுங்கள்' என்று உஷா கேட்டுக் கொண்டதால், நான் ரசித்த சில கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதனால், மற்ற கவிதை... மற்றவர்களின் கவிதைகள் பற்றி, நான் வேறு மாதிரி எண்ணம் கொண்டிருப்பதாக எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கு நவீன இலக்கியவாதிகள், பல்வேறு 'இஸங்க'ளைப் பேசுகிறார்கள். அதில் பலவும் என் தலைக்கு மேலே போகும் விஷயங்கள். அத்தகைய சில கவிதை நூல்களும் சிறப்பானவை என எனக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி நான் கருத்து சொல்வதோ, மறுப்பு சொல்வதோ... இரண்டுமே சரியில்லை என்பது என் கருத்து. எனவே, எனது மூளைக்கு எட்டியவற்றுள், நல்ல கவிதை என நான் எண்ணியவற்றில் சிலதை மட்டும்தான் இங்கே கொடுத்துள்ளேன்.
நண்பர்களின் தேவை, விருப்பம், வரவேற்பு, கருத்துகளைப் பார்த்து அவசியம் என்றால் பின்னும் தொடர்வேன். அல்லது...
இனி கவிதைகள்....
பழ.புகழேந்தி என்பவர் எழுதிய 'கரும்பலகையில் எழுதாதவை' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து......
நின்றது மழை.
நனைந்த சிறகோடு
மைதானத்தில் வண்ணத்துப்பூச்சி.
ஒலித்தது
பள்ளியின் கடைசி மணி.
கூட்டமாய் 'பூட்ஸ்' கால்கள்.
பதற்றத்தில் மனசு.
***********
அந்த வகுப்புக்குள்
வௌவால்கள் அதிகம்
அன்று உள்ளே நுழைகையில்
குழந்தைகளின் கும்மாளம்,
விழுந்து கிடந்த வௌவாலைச் சுற்றி
வௌவாலைத் துரத்திய பிறகு
மனசுக்குள் சங்கடம்
குழந்தைகளின்
சிரிப்பைக் கொன்றுவிட்டோமோ
இருப்பினும்
உயிரோடு இருந்தது
வௌவால்
**************
அடுத்து பச்சியப்பன் என்பவரது 'கல்லால மரம்' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து....
வாய்ப்பு
----------
ஒலி கூட்டி
உச்சரிக்கையில்
கவனிக்காது நானிருந்தால்
முகத்தில் அடிக்கும்
முறைத்தால்
சிறுஇதழ் கொண்டு முத்தமிடும்
முடிபற்றி இழுத்து
வீடெங்கும்
ஒரு குதிரைக்காரன்போல
நடக்கும்
மறுத்துப் படுத்தால்
தண்ணீர் கொண்டுவந்து
முகத்தில் ஊற்றும்
தெருவில் நடக்கிறேனென
அடம் பிடிக்கும்
இறக்கிவிட்டால்
மண் கிளறும்
'அவளை' நெருங்குகையில்
இடையில் படுத்து
உரத்துச் சிரிக்கும்
இப்படியாய்
எல்லோருக்கும் போல
எனக்கும் வாய்த்திருக்கிறது
மகளின் குறும்புகள்
ஆனால்
எவருக்கேனும் நேருமோ
மழலையின் மோதிரத்தை
அடகு வைக்கும் வாழ்க்கை
*************
எம்.ஜி.கன்னியப்பன் எழுதிய 'என் நந்தவனத்து பட்டாம்பூச்சிகள்' என்ற தொகுப்பில் இருந்து.....
இன்று
அப்பாவின் திவசம்
அண்ணனும் - அண்ணியுமாய்
அக்காவும் - மாமனுமாய்
குழந்தைகுட்டிகள்
கொட்டமடித்து
உற்றார் உறவினரால்
கலகலப்பாகும் வீடு
ஓரத்தில் சோர்ந்து
கிடக்கும்அம்மாவிடம்
மட்டும்ஏதேதோ சொல்கிறது
கொடியில் காயும்
அப்பாவின் ஜிப்பா
--
வரம் கேட்கிறேன்
_________________
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
வில்லங்கம் ஏதுமில்லா
காணிநிலம்
அதில் தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை
அடைப்பில்லாத
ட்ரைனேஜ் கனைக்ஷன்
வைரஸ் வராத
கம்ப்யூட்டர்
விளையாடி மகிழ
வெப்சைட்
சரியான முகவரியோடு
எலக்ஷன் கார்டு
பக்க விளைவில்லா
பாஸ்ட் புஃட் அயிட்டங்கள்
மறக்காமல்கொஞ்சம்
மினரல் வாட்டர்
வேறென்ன கேட்பேன்
பராசக்தி
இவையாவும்
தரும்நாளில்
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்
---
மா. வெங்கடேசன் எழுதிய 'சில்லுக்கோடு' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து.....
கையில் சில்லறையுடன்
காத்துக் கொண்டிருந்தேன்
தூரத்தில் கைக்குழந்தையுடன்
வரும்பிச்சைக்காரிக்காக
'இல்லை' என்று சொல்லி
விலகுபவரும்
தொலைவில் பார்த்து
தன் இருப்பிடத்தை
காலி செய்பவர்களாக
மனிதர்கள்
கையில் சில்லறையுடன்
காத்துக் கொண்டிருந்தேன்
மனிதர்களைக் கூர்ந்து கவனித்தபடி
.......................
..........................
என்னைக் கடந்தபடி அவள்.
*******************
வஸந்த் செந்தில் எழுதிய 'ஒற்றை இறகு' என்ற புத்தகத்திலிருந்து.........
கடிதம்
--------
விடுமுறை முடிந்து
வீடு திரும்புகிறோம்.
இருந்த கூடொன்றை
இழந்து நிற்கிறது
முன்பக்க மரக்கிளை
கடிதம் வந்திருக்கலாமென
கதவைத் திறக்கிறாய்
வீழ்ந்து கிடக்கிறது
ஒற்றை இறகு
எதுவும் இல்லையென்று சொல்லி
எடுத்து வீசுகிறாய்
கடிதம் இல்லையா அது?
----------------
'ஜெய பாஸ்கரன் கவிதைகள்' என்ற புத்தகத்திலிருந்து........
வாடகை
-----------
வாடகை
ஆயிரம் ரூபாய்
குடிநீருக்கு
ஐம்பது
மின்சாரத்துக்கு
மாதாந்திரக்
குத்துமதிப்பாக
இருநூறு
முறைவாசலுக்கும்
கழிவறைக்கும்
முப்பது ரூபாயாம்
ஆக மொத்தம்
ஆயிரத்த இருநூற்றுஎண்பது
ரூபாயை
தேதி தவறாமல்
கொடுத்து வருகிறேன்
வீட்டுக்காரனுக்கு
நாள் கடத்தாமல்
வாடகை தருவதாக
என்னை வியந்து
போற்றுகிறான் வீட்டுக்காரன்
அவனிடம்
சொல்லிக் கொள்வதில்லை
நான்
கொடுக்கற
வாடகை,
வீட்டருகே கூவும்
வேப்ப மரத்துக் குயிலுக்காகவும்
உனக்குத் தெரியாமல்
வந்து போகும்காற்றுக்காகவும்தான் என்று!
--
பேரம்
--------
முழம் மூன்றுரூபாய் என்று
தௌதவாகச் சொன்னாள் அவள்
இரண்டரை ரூபாய் வீதம்
இரண்டு முழம் கொடு
தேள்ளத் தௌதவாகச் சொன்னேன் நான்
மூன்று நிமிடங்களுக்கும்
மேலாகநீண்டு கொண்டு போனது
முழம் மூன்று ரூபாய்க்கான
அவளது நியாயங்களும்
இரண்டரை ரூபாய்க்கான
எனது விளக்கங்களும்
இறுதியாகஐந்தரை ரூபாய்க்கு
இரண்டு முழம் பூவை
சுருட்டிக் கொடுத்துவிட்டு
இரண்டி அடிக்கு அப்பால்
இயல்பாகத்தான் துப்பினாள்
வெற்றிலை பாக்கு எச்சிலை
ஆயினும்
சந்தேகமாகத்தானிருக்கிறது
ஷோரூம்காரன்
சொன்ன விலைக்கு
நான்செருப்பு வாங்கி அணிவதை
பார்த்திருப்பாளோ அந்த பூக்காரி?
-------
இது போதும் என்று நினைக்கிறேன். இதில் ஜெயபாஸ்கரன் கவிதைகளில்தான் இன்னும் கொஞ்சம் வார்த்தை சிக்கனம் இருக்கலாமோ என நான் நினைத்திருக்கிறேன். ஆனால் கவித்துவத்தில் எந்த குறையும் வைக்காத எளிய கவிதைகள் இவை என்பது என் கருத்து.
-சந்திரன்
7 கருத்துகள்:
//வேறென்ன கேட்பேன்பராசக்தி// :-))
பதிவிலிட்ட கவிதைகளுக்கு நன்றி, சந்திரன். எளிமையான கவிதைகளெனினும், நல்ல வாசிப்பைத் தந்தன.
//ஆனால்
எவருக்கேனும் நேருமோ
மழலையின் மோதிரத்தை
அடகு வைக்கும் வாழ்க்கை//
நல்ல கவிதைகள்! நன்றி!
முன்பே ரசித்ததுண்டு நீங்கள் இட்டுள்ள ஜெயபாஸ்கரனின் கவிதையை. நன்றி...
காசி,
பின்னூட்டத்துக்கு நன்றி. 'சிறுவாணி தண்ணி பைத்தியங்கள்' படித்தேன். அடுத்து தங்கள் பின்னணி குறித்தும் படித்துப் பார்த்தேன். நானும் சில காலம் சுற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சி நகர..., கொங்கு நாட்டுவாசி நீங்கள் என அறிந்துபோது இன்னும் ஆர்வமானேன். கோவை மக்கள் பற்றி... கொங்கு நாட்டு அனுபவம் பற்றி... எனது கருத்துகளைத் தனி பதிவாக எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன. பின்னர் வாய்ப்பான நேரம் வரும்போது எழுதுகிறேன்.
- சந்திரன்.
டி சே.தமிழன், தங்கமணி, மாண்ட்ரீஸர்!
பின்னூட்டத்துக்கு நன்றி! எனவே, அவ்வப்போதாவது 'இந்த வேலை'யையும் செய்யலாம் என்ற நம்பிக்கை தந்தீர்கள். தொடர்கிறேன்.
- சந்திரன்.
உஷா,
தேடல் என்ற ஒன்றுதான் நம்மை அடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கிறது. அதிலும், நானும் blogகத் தொடங்கியதும், தொடர்ந்து பல விஷயங்களை இங்கே படித்து நம்மைச் செறிவூட்டிக் கொள்ள முடிகிறது என்று நானும் உணர்கிறேன். எல்லாத் துறையிலும் ஜாம்பவான் நிறைந்த இடமாக இருக்கிறது இது. கணிணி தொழில்நுட்பம், அதை மற்றவர்களுக்கும் கற்றுத்தர காட்டப்படும் ஆர்வம் - இதெல்லாம் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அடுத்து, 'உலகின் மூன்றாவது பணக்காரர் - இந்தியர்' படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதன் பின்னூட்ட விவாதங்கள் இன்னும் அருமை. இது போன்று இன்னும் நிறைய...! அக்கா அருணா, தமிழச்சி, மீனாக்ஸ், மதி கந்தசாமி என பட்டியலிட்டுக் கொண்டே செல்ல நிறைய ஆட்களும்... விஷயங்களும் இங்கே உள்ளன(ர்). தமிழ்ப் பத்திரிகையாளர் கூடங்களில் கலந்து கொள்ளும்போது கிடைக்காத ஒரு லயம், சுகம், நிறைவு இங்கே வந்து 2 மணி நேரம் blog படித்தால் எனக்குக் கிடைக்கிறது என்பதுதான் உண்மை. அதனால் இதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கும் ஏற்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள் உங்கள் தேடலை மற்ற திசைகளிலும்.
மற்றபடி, அடுத்தவர்களுக்கு அயர்ச்சி உண்டாக்காத அளவுக்கு.... நல்லக் கவிதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வழங்க முயல்கிறேன்.
- சந்திரன்.
கருத்துரையிடுக