மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், மார்ச் 14, 2005

அந்தராத்மாக்களின் அட்டசாகங்கள்

நான் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றவன் இல்லை. அதனால், 'அந்தராத்மா' என்ற வார்த்தைக்கு நிஜமான அர்த்தம் தெரிந்துகொள்ள, நல்ல ஹிந்தியில் தேர்ச்சி பெற்றவர்களைத் தேடி, இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன்புகூட இரண்டு நாள் காத்திருந்தேன். இந்த சொல், காந்தியடிகள் உச்சரித்த சொல்லாகத்தான் எனக்கு அறிமுகம். அதற்கு அர்த்தம் - 'மனசாட்சி' அல்லது 'உள்மனசு' என்று சொல்லலாம். அல்லது, அண்மைக்காலமாக அதிகம் கேட்க நேரும் inner voice என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

காந்தியடிகள் சுதந்திர போராட்டக் காலங்களில், பல அஹிம்சைப் போராட்டங்களைத் தொடங்கும்முன் 'அந்தராத்மா'விடம் பேசுவராம். அது என்ன சொல்கிறதோ, அதன்படிதான் நடவடிக்கை. சில நேரங்களில் அவர் போராட்டம் அறிவித்த பின்னர் கூட, போராட்டத்தின் போக்கு எதிர்பார்த்ததற்கு எதிர்திசையில் போய் கலவரங்களில் முடிந்திருக்கின்றன. அதில் பலர் அடிதடி, உதை என துன்பத்துக்கு உள்ளாகி, சில நேரங்களில் உயிர்பலி எனவும் போராட்டம் வழிமாறிச் சென்றபோது, காந்தியடிகள் தனது போராட்டத்தையே திரும்பப் பெற்றும் இருக்கிறார். மனித உயிர்கள் மீது அவருக்கு அத்தனை அக்கறை. அதனால்தான் தனது போராட்டங்களில் பலியாவது இந்திய உயிர்களா? பிரிட்டீஷ் பிரஜைகளாக என்று பார்க்காமல் யாராயிருந்தாலும் ஒரே வழிமுறையை கையாண்டிருக்கிறார்.

இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு தகவல் - இந்த மாதிரி நேரங்களில் போராட்டம்தான் வாபஸாகுமேயன்றி, அதன் நோக்கத்தையே கைவிட்டு அவர் விலகி விட்டதில்லை. அத்தகைய கொள்கை பிடிப்பு, தர்மத்தின் மீதான நம்பிக்கை அவரிடமிருந்ததால்தான் அவரது அஹிம்சைப் போராட்டங்களை ஏற்காத மற்றவர்களும்கூட, அவரது நோக்கத்தைக் குறை சொன்னதில்லை. அவர், 'அந்தராத்மா' என்று உச்சரித்த வார்த்தைக்கு ஒரு மரியாதையும், கௌரவமும் கிடைத்தது. இதெல்லாம் நான் படித்து அறிந்தவைதான். நல்லவேளையாக, காந்தியடிகள் வாழ்ந்த காலங்களில், அவரைத் தவிர மற்ற யாரும் இந்த வார்த்தையைப் பேசி கலங்கப்படுத்தவில்லை, நான் அறிந்தவரையில்.

இன்று நடப்பது என்ன? இந்த அந்தராத்மா... அதாவது, மனசாட்சி... வேறு வார்த்தைகளில், Inner voice... இரண்டு முறையாவது பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளன, மூத்த... முன்னணி அரசியல்வாதிகள் சொன்னதாக! காந்திக்குப் பிறகு, இந்த வார்த்தை முக்கியத்துவம் பெற்றது இன்றைய காந்தி(!)யான சோனியா இதை உச்சரித்தபோது. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 'நான் பிரதமராக பொறுப்பேற்கப் போவதில்லை' என்று (சற்றே தாமதித்துத்தான்) அவர் அறிவித்தபோது, எனக்கு அவர் மீது துளியும் சந்தேகம் வரவில்லை. சரியான சூழலில், சரியான காரணத்துக்குத்தான் இந்த வார்த்தை பயன்படுகிறது என்று சோனியா மீது கொஞ்சம் மரியாதைகூட வந்தது.

ஆனால், இன்று? 'எத்தனைதான் வேஷம் போட்டாலும், சூழ்நிலை - ஒருவனுக்குள் ஔதந்திருக்கும் திருடனை ரொம்ப நாட்களுக்கு மறைந்திருக்க அனுமதிக்காது; வௌதக்கொண்டு வந்துவிடும்' என்று டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி சொல்வார். அதைப்போலத்தான் இப்போது நடந்திருக்கிறது. பிரதமர் பதவி, நாட்டின் மிக சக்திவாய்ந்த பதவி. அதையே தனக்கு வேண்டாம் என்று சொல்லும் ஒரு நபர், நிஜமாகவே அர்ப்பணிப்பு குணம் கொண்டவராக... நிஜமாகவே காந்திக்கு அடுத்த ஸ்தானத்தில் வைக்கப்பட வேண்டியவர் என்று எதிர்ப்பை கிளப்பிய சோனியா, 'நானும் இன்றைய சராசரி அரசியல்வாதிதான். வேறு எந்தவிதத்திலும் இவர்களில் இருந்து குறைந்தவரோ, தரமற்றவரோ, மாறுபட்டவரோ அல்ல' என்பதை இன்று நிருபிக்கிறார் என்று தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் - ஜார்க்கண்ட், கோவா, பிகார் போன்ற இடங்களில் இன்று நடக்கும் சம்பவத்திற்கும், சோனியாவுக்கும் எந்தவகையிலும் சம்மந்தம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கே தெரியும், அதெல்லாம் பத்திரிகையில் அப்படி செய்தி வர வேண்டும் என்பதற்காகத்தானென்று! நிஜம், இதிலிருந்து ரொம்பவே தள்ளியிருக்கிறது என்பது, பல்வேறு நடப்புகளைத் தொடர்புபடுத்தி பார்க்கத் தெரியும் எல்லாருக்கும் புரிந்துபோகும்.

முதலில், 'கோவா' சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு முதல்வராக பொறுப்பில் இருந்த பாஜகவின் மனோகர் பரிக்கர் ஆட்சி, கம்பி நுனியில் காலம் ஓட்டிக் கொண்டிருந்ததுதான். ஆனால் அமைதியாக, ஒருவகையில் நல்லவகையிலும் அங்கு ஆட்சி நடந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். 'எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் சொன்னேனேயன்றி, எனது கட்சிக்காரர்களுக்கு பதவி வேண்டாம் என்று எப்போது நான் சொன்னேன்?' என்று ஒரு கேள்வியை சோனியா நம்முன் வைத்தால், நம்மில் யாரும் பதில் சொல்ல முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கேள்வியை அவருக்குள்ளாகவே வைத்துக் கொண்டு, அல்லது காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே வைத்துக் கொண்டு காரியத்தில் இறங்கிவிட்டார்கள் அக்கட்சியினர். மனோகர் பரிக்கர் மந்திரி சபைக்கு ஆதரவு தந்த ஆட்களை வாபஸ் பெறத் தூண்டி, அதன்மூலம் அங்கு ஆட்சி கவிழ்ப்பு நடத்தி, வாபஸ் பெற்ற நபர் காங்கிரஸை ஆதரிக்கச் செய்ய...

இப்படியெல்லாம், நடப்பதைச் சமாளிக்க தெரியாதவர்களா என்ன பாஜகவினர்? கூத்துகள் தொடங்கின.

நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸுக்கு வாக்களிக்கக்கூடும் என்ற நபரை வாக்களிக்க அனுமதிக்காமல் செய்து, சபாநாயகர் ஓட்டு மூலம் பாஜக. மெஜாரிட்டி காட்ட... கவர்னர் ஜமீர் அதை ஏற்க மறுத்து, உடனடியாக காங்கிரஸ் ஆட்சியமைக்க வழி ஏற்படுத்த... அதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது, பாஜக ஆதரவு சபாநாயகர் பதவி விலக... புதிய சபாநாயகர் முன்னிலையில் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு. காலச் சக்கரம் ஒரு U திருப்பத்திற்குள்ளாகி, மீண்டும் அதே சதிவேலை... சபாநாயகர் வாக்குடன் காங்கிரஸ் மெஜாரிட்டி என்பது கவர்னரால் ஏற்கப்படுகிறது. ஆனால் நல்லவேளையாக மத்தியில் இருந்து தலையிட்டு, சட்டசபையை முடக்கிவைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது.
'பதவி சுகம் அல்ல, தான் வேண்டுவது' என்று சொன்ன சோனியா, இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரது மனசாட்சி... inner voice அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ! கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் அண்மையில் தேர்தல் முடிந்து தொங்கு சட்டசபை வந்த 2 மாநிலங்களில் யார் ஆட்சியமைப்பது என்ற கேள்வி வருகிறது. வழக்கத்தில் உள்ளதுபடி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி..., தனி பெருங்கட்சி என இரண்டு வகையிலும் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான 'என்டிஏ'தான் ஆட்சியமைக்க அழைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை தூக்கியடித்து, துவம்சம் செய்து காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஜெஎம்எம் ஆட்சியமைக்க அழைக்கப்படுகிறது, போதுமான எண்ணிக்கை எம்எல்ஏ ஆதரவு இல்லாமலேயே! ஆனால், பாவம் என்ன செய்வது? சோனியாவின் மனசாட்சி ஒவர் டைம் வேலை இருந்திருக்குமோ என்னவோ, இந்த சம்பவங்களின்போதும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
ஆனால் சோனியாவின் மனசாட்சி உண்மையில் தூங்கிக் கொண்டுதான் இருந்ததா என்ற கேள்விக்கு, இன்னொரு வகையில் பதில் கிடைத்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளை எந்தவித குறுக்கீடும் இன்றி நடத்த ஒத்துழைப்பதாக சில நாட்களுக்குமுன் ஒப்புக் கொண்டிருந்த பாஜகவினர், இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுபடியும் பாராளுமன்ற நடவடிக்கைக்கு இடைஞ்சல் செய்ய...., இதனால் 'எங்களைப் போன்ற இளம் எம்பிக்கள் உறுப்பினர் என்றவகையில் செய்ய வேண்டிய பங்காற்ற வாய்ப்பு இல்லை' என்று சோனியாவின் மகள் ராகுல் தனது பரிவரங்களைச் சேர்த்துக் கொண்டு உண்ணாவிரதம்... தர்ணா போராட்டம் என களம் இறங்குகிறார். இதைப்பற்றி தாய் சோனியாவிடம் சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவு ராகுல் என்ன minor குழந்தையா? அதனால் சோனியாவின் அந்தராத்மாவுக்கு எந்த தகவலும் எட்டவேயில்லை போல!

இவராவது பரவாயில்லை; அந்தராத்மாவை துணைக்கழைத்த இன்னொரு நபர்தான் இன்னும் அதிர்ச்சி தருகிறார். முதல்வராக பதவியேற்று இரட்டை இலக்க நாட்களைக்கூட தாண்ட இயலாத சிபுசோரன், சில நாட்களுக்குமுன் தனது பதவியை ராஜினமா செய்தபோது, 'எதனால் பதவியை ராஜினாமா செய்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வது - 'அந்தராத்மாவின் கட்டளை'. 'அப்படியானால், அது தில்லியில் இருக்கிறதா?' என்று யாரும் அவரைக் கேட்கவில்லை போல! ஏற்கெனவே நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதே 'காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள்' என்று இவரது கட்சி எம்பிக்களின் மீதுதான் குற்றச்சாட்டு. அடுத்து, இந்த முறைகூட இவர் மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற புதிதில் - கடந்த காலத்தில் எப்போதோ பதிவான கிரிமினல் வழக்கு ஒன்றின் விசாரணையில் இவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது, பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், மந்திரியாக இருந்துகொண்டே தலைமறைவாகிப் போனவர்தான் இவர். அந்த சம்பவங்களின்போதெல்லாம் இவர்களது மனசாட்சிகள் மாடு மேய்க்கப் போயிருக்குமோ என்னவோ! பிறகென்ன... இல்லாவிட்டால், பெரும்பான்மை பலம் இல்லை என்று தெரிந்தும் பொறுப்பேற்க துணிந்திருப்பாரா?
இப்போது, இதுமாதிரியான காரணங்களுக்காக இவரைக் குறை சொல்வதற்கு, எனது Inner voice என்னையே கேள்வி கேட்கிறது! 'இவர்களுக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் இவர்களை ஒப்பிடும்போது எந்தவகையில் யோக்கியமானவர்கள்?' என்ற அதன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. என்ன செய்வது?

எது எப்படியோ, கோவா சம்பவம் தற்போதைக்கு கிடப்பில் கிடக்க, ஜார்க்கண்ட் விவகாரம் உச்சநீதி மன்றம் சென்று, அதன் தீர்ப்பாக - ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இடைக்கால சபாநாயகர் மூலம் வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுகள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட, பலரது அந்தராத்மாக்களுககு ஒரே நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னால்... அதுவும் 'மேல் அப்பீல் இல்லை' என்ற நிலையில் இருக்கும் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னால் அதை நிறைவேற்றுவதா? அல்லது, சட்டமியற்றும் இவர்களது அதிகாரத்தில் குறுக்கிட நீதிமன்றத்தை அனுமதிப்பதா என்ற கேள்வி, பல inner voiceகளை தட்டி எழுப்பியது. குய்யோ... முறையோ... என்ற கூச்சல், பாராளுமன்றத்தில்!

காங்கிரஸ் சார்பானவர்கள் ஜனாதிபதி மூலம் உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்கலாம் என்று சொல்ல, இன்னொரு தரப்பு 'தர்ம காவலர்கள்', உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்பதா? என்று வானத்துக்கும் தரைக்கும் குதித்தார்கள். தீர்ப்பு - இவர்களுக்கு சாதகமாக இருந்ததுதான் காரணம். அதனால், உச்சநீதிமன்றத்தை எதிர்த்து கருத்து சொன்ன பாராளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என்று முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர். அண்மைக்காலங்களில் சபாநாயகர் பதவியில் அமர்ந்த சிலர் நடந்து கொண்ட விதங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சோம்நாத் சாட்டர்ஜி, அது பற்றியெல்லாம் தனது தனிப்பட்ட வருத்தத்தைக்கூட தெரிவிக்கவில்லை. ஆனால், சட்டமியற்றும் அவைகளின் உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியே அதிகம் யோசித்தது இவரது அந்தராத்மா. 'இதற்காக என் மீது நம்பிக்கையில்லா தீர்மானமா? செய்யயுங்கள்! நான் எனது கருத்தை வாபஸ் பெறப் போவதில்லை' என்றார். நல்லவேளை, இவரும் பல்டி அடிக்கவில்லை.

இந்தவேளையில் பிரதமரது அந்தராத்மாவுக்கு சிக்கல். எங்கே அரசியல் சட்ட சிக்கல் வந்து, எக்குதப்பாக எதாவது நடந்துவிட போகிறதோ என்று இவர் காரியத்தில் இறங்கி, அமைச்சரை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சிபுசோரன் மாநில கவர்னரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்றுதான் செய்தி. திடீரென்று, உள்துறை அமைச்சருக்கு கட்டளை பிறப்பிக்க, 'ஜார்க்கண்ட் முதல்வர் டிஸ்மிஸ்' என்று செய்தி சொன்னார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் எனது அந்தராத்மா சும்மா இல்லை. என்னுள் பல கேள்விகளை எழுப்பி அது ஆட்டம் போட்டது. இந்திய அரசியல் சட்டப்படி - 'சட்டம் இயற்றும் அவை'யின் உரிமைகளில் நீதிமன்றமும், இவர்கள் உரிமையில் அவர்களும் தலையிடக்கூடாது என்பதெல்லாம் சரி! ஆனால், ஒரு மாநில முதல்வரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் அதில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. எந்த பிரிவின் கீழ் இப்போது மேன்மைமிகு சிபுசோரனை டிஸ்மிஸ் செய்கிறார்கள். சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய அவர், அப்படி செய்ய இயலவில்லை என்று அந்த அவையின் சபாநாயகர் எந்த முடிவையும் இன்னும் சொல்லவில்லை. எனவே, இந்தப்படிக்கு டிஸ்மிஸ் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை. அடுத்து, வழக்கமாக டிஸ்மிஸுக்குச் சொல்லப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இப்போது யாராலும் எழுப்பப்படவில்லை. அதைத்தாண்டி, அரசியல் சட்ட மீறல் எதாவது நடந்திருக்கிறதா என்றால்... அப்படி எதையும் கூட இப்போது திடீரென்று முதல்வர் மீது யாரும் எழுப்பவில்லை. அப்படியில்லாத நிலையில், எந்த காரணத்துக்காக சிபுசோரன் டிஸ்மிஸ் தெரியவில்லையே! எதற்கும் அப்பாவியான சிபுசோரனை இப்படி அநியாயமாக பதவியிறக்கிவிட்டார்கள் என்று நாளையே ஒரு வழக்கறிஞர் வைத்து அதே உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துவிட வேண்டியதுதான் என்று என் அந்தராத்மா துடித்துக் கொண்டிருந்தது. அப்போது, என் நினைப்பு எல்லாவற்றுக்கும் வில்லனாக அந்த சிபு சோரனே தன் பதவியை ராஜினாமா செய்தார் என்ற அறிவிப்பு வந்தது. எனது inner voice அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் இன்னொரு ஓட்டை அல்லது காலி இடம் இப்போதைக்கு கேள்விக்கு உள்ளாகாது என்று சந்தம் அடைந்தது.

ஆனால் எனது inner voice இன்னும் தௌதவு பெறாத கேள்விகள் சில உள்ளன.
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரம் வரையான தகவல்கள்படி, சோம்நாத் சாட்டர்ஜி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கைவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், அதற்கு காரணம் என்ன? உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்பது போல சாட்டர்ஜி பேசியதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அதை சபாநாயகரே செய்தார் என்பதும்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி அவர்கள் பேசக் காரணம். இப்போது சாட்டர்ஜி தான் பேசியதை வாபஸ் வாங்கிவிட்டாரா? இல்லையே! மறுபடியும் அதுபற்றி பேசியபோதுகூட 'நான் பேசியதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் சந்திக்கத் தயார்' என்றுதானே சொல்கிறார்.

அப்படியானால், இங்கே தவறிழைத்தது யார்?

'உச்ச நீதிமன்றம் எங்களது உரிமையில் தலையிடுவதா? இது குறித்து ஜனாதிபதி மூலம் கருத்து கேட்போம்' என்று பாராளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் கூச்சலிட்ட காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் வாதம் இப்போது என்னவானது? லேட்டஸ்ட் தகவல்படி கருத்து கேட்கும் திட்டம் கைவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது!

அப்படியானால், உச்சநீதி மன்றம் தலையிட்டதா, இல்லையா? தலையிட்டு இருந்தால், அதை வாபஸ் பெற்றுக் கொண்டதா? அல்லது தலையிடுவதற்கு முன்பே, சும்மாவாச்சும் நமது எம்பிக்கள் அப்படி சொல்லிக் கொண்டிருந்தார்களா? இதற்காகத்தான் பாராளுமன்றத்திலும், ஜார்க்கண்ட் சட்டமன்றத்திலும் அத்தனை கூச்சல், குழப்பமா?

'பாராளுமன்றத்தில் இளம் எம்பிக்களுக்கு பேச வாய்ப்பு இல்லாமல் போகிறது' என்று போராட களம் புகுந்த ராகுல்காந்தியின் அந்தராத்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்கிறது?

எனக்கு ஒன்று மட்டும் புரியவுமில்லை. பதில் தெரியவும் இல்லை. 'பாராளுமன்றம் என்பது யாருக்காக?' என்ற, என் அந்தராத்மா கேள்விக்கு பதில் தெரியவில்லை. அதனால், அதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை. உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

you are biased.you have not read fully what the speaker said.btb how about bjp and nda.were they perfect examples of following in letter and spirit.i think you have a blinkered vision.in 2000 nitish kumar was installed as c.m when he had no support from majority of members.governor of UP, a nda appointee acted in favor of the ruling party to save the coalition govt.mr.fourth eye your vision is that of one eyed.it lacks depth.

நாலாவது கண் சொன்னது…

Dear Mr.Anonymous,

First, let me thank you for the feedback. Are the the one coming in the name of 'Peyarili' or this is someone else? Anyway, that doesn't matter.

The coming to your pt., that I am biased, I don't accept your view or contradict it, for the reason that - I have never ever mentioned that BJP & its allies are in any way sacred compared to cong - in my article.

If you permit me to say - I have equally pointed out the BJP's malafides in this article.

Pl. refer to the article again where I am talking about Jharkhand episode.
// நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதே 'காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள்' என்று இவரது கட்சி எம்பிக்களின் மீதுதான் குற்றச்சாட்டு. அடுத்து, இந்த முறைகூட இவர் மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற புதிதில் - கடந்த காலத்தில் எப்போதோ பதிவான கிரிமினல் வழக்கு ஒன்றின் விசாரணையில் இவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது (whoo did it & with what intention), பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், மந்திரியாக இருந்துகொண்டே தலைமறைவாகிப் போனவர்தான் இவர். அந்த சம்பவங்களின்போதெல்லாம் இவர்களது மனசாட்சிகள் மாடு மேய்க்கப் போயிருக்குமோ என்னவோ! பிறகென்ன... இல்லாவிட்டால், பெரும்பான்மை பலம் இல்லை என்று தெரிந்தும் பொறுப்பேற்க துணிந்திருப்பாரா?
இப்போது, இதுமாதிரியான காரணங்களுக்காக இவரைக் குறை சொல்வதற்கு, எனது Inner voice என்னையே கேள்வி கேட்கிறது! 'இவர்களுக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் இவர்களை ஒப்பிடும்போது எந்தவகையில் யோக்கியமானவர்கள்?' (what do you think is the meaning of this statement) என்ற அதன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. என்ன செய்வது? //

Not only this. I have also crticised BJP, for planning to drop a no confidence motion which they planned against the speaker.//உச்ச நீதிமன்றத்தையே கேள்வி கேட்பது போல சாட்டர்ஜி பேசியதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அதை சபாநாயகரே செய்தார் என்பதும்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி அவர்கள் பேசக் காரணம். இப்போது சாட்டர்ஜிதான் பேசியதை வாபஸ் வாங்கிவிட்டாரா? இல்லையே! மறுபடியும் அதுபற்றி பேசியபோதுகூட 'நான் பேசியதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் சந்திக்கத் தயார்' என்றுதானே சொல்கிறார்.

அப்படியானால், இங்கே தவறிழைத்தது யார்?//

But again, I wish to support you to the right you have to criticise my article. You may or may not accept my views. You can also have your own views regarding the entire happenings. But I cannot accept your criticism as myself being biased.

- Chandran (Fourth Eye)