மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், மார்ச் 24, 2005

'காப்புரிமை' கலாட்டா ஏன்?

என் நினைவில் இருப்பது சரியென்றால், காப்புரிமை விஷயத்தில் இந்தியாவில் கூச்சல் தொடங்கி 6 வருடத்துக்கு மேலாகிறது. 1999 இறுதியில் என்று ஞாபகம். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 'ரைஸ்டெக்' என்ற நிறுவனம், பாசுமதி அரிசி குறித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்தது. இதனால், காலகாலமாக பாசுமதி அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையில் உலக அளவு முன்னோடிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், இனி உலக சந்தையில் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதாவது, இனி இந்தியாவில் விவசாயிகள் பாசுமதி அரிசி பயிரிட்டால், அதற்கு ரைஸ்டெக் நிறுவனத்துக்கு ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றார்கள். அப்போது, CSIR-ன் இயக்குனராக இருந்த மஷோல்கர், சுற்றுப்புற சூழல் ஆர்வலர் வந்தனா சிவா உள்ளிட்ட ஒரு குழு, இது சம்மந்தமாக கோர்ட் படியேறி போராடி அந்த காப்புரிமையை கேன்சல் செய்தனர். ஆனாலும், ரைஸ்டெக் நிறுவனம் தங்களது உற்பத்தியை 'பாசுமதி மாதிரி' என்று முத்திரை குத்தி விற்க வருவதைத் தடுக்க முடியவில்லை.

அடுத்து, காயத்தை ஆற்ற பாரம்பரியமாக இந்திய கிராமங்களில் பயன்படுத்தப்படும் மஞ்சளை, 'ரண நிவாரணி' என, எதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி 'யூனிவர்சிட்டி ஆஃப் மிசுசிபி மெடிக்கல் சென்டர்', 1993ல் அப்ளை செய்திருந்த காப்புரிமை விஷயம் சந்திக்கு வந்து... அதற்கும் சட்ட ரீதியில் போராட்டம் நடந்து அதுவும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கும் மஷோல்கர்தான் படையை நடத்திச் சென்றார்.

இப்படி வேப்பிலை, இந்திய 'டார்ஜிலிங் டீ' என்று பலப் பொருட்களுக்கு படையெடுக்க வேண்டியிருந்தது கடந்த காலங்களில். மேற்கண்ட எல்லாமே, நம்ம பாட்டன்கள் நமக்கு விட்டுவிட்டுபோன சொத்துக்கள்.

பின்னாளில், ஆங்கில மருத்துவ முறைகள், அறிவியல் ஆராய்ச்சிகள் ஆட்சி செலுத்த வந்தவுடன், இன்று அவை குறித்தும் அதே சத்தம் கேட்கிறது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. கடந்தமுறைகள் போலன்றி, வலுவான ஆயுதங்கள் எதுவும் கையில் இல்லாமல், 'ஏழைகளான எங்களை சும்மாவாச்சும் சுரண்டித் திங்காதீங்கப்பா!' என்ற ரீதியில் இருக்கிறது தற்போதைய போராட்டம். அதாவது, உரிமையுடன் கத்த முடியாதபடிக்கு.

எல்லாம் WTO என்ற உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்ந்ததன் விளைவுதான். (இப்படி சொல்வதானால் எனக்கு சிவப்பு கலரடிக்க யாராவது முயன்றால் ஸாரி! வெட்டிவேலை. WTO முடிவால் இந்தியாவுக்கு பலன்களும் உண்டு என்பதை மறுக்காதவன் நான்) உலக வர்த்தக ஒப்பந்தப்படி, TRIPS எனப்படும் - அறிவு சார்ந்த சொத்துரிமையை இந்தியா மதித்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு ஆராய்ச்சி செய்து, புதிதாக ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நபருக்கு, அந்த பொருள் மீதான காப்புரிமை இருப்பதை மதித்து போற்றி, அதற்கான விலையை இந்தியாவும் தர வேண்டும் என்பது. 2005 முதல் இந்தியா இந்த முழு காப்புரிமை சமஸ்தானத்துக்குள் நுழைகிறது.

இங்கே காப்புரிமை என்று சொல்லும்போதே, இதில் இரண்டு வகையிருப்பதையும் சொல்ல வேண்டும். ஒன்று - உருவாக்கப்பட்ட பொருள் குறித்த முழு காப்புரிமை. Product Patent. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற பல WTO அங்க நாடுகளிலும் தற்போது நடைமுறையில் இருப்பது. இலங்கை உட்பட. இரண்டு - புதிதாக உருவான பொருளைத் தயாரிக்கும் வழிமுறை மட்டும் பற்றிய காப்புரிமை. Process Patent. கடந்த 2004ம் ஆண்டு இறுதிவரை இந்தியா, இந்த இரண்டாவது தளத்தில்தான் இருந்தது.

இந்த இருவகையையும் இன்னும் தௌதவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்லலாம். நமக்கு, சென்னையிலிருந்து தலைநகர் தில்லி செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு பல வழிகள் உண்டு. ஒன்று - நேரடியாக விமானம் ஏறி, தில்லியில் இறங்குவது. மற்றொன்று - சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், அல்லது ஜிடி.யைப் பிடிப்பது. இது தவிர - வசதியும், நேரமும் இருப்பவர்கள்,சாவகாசமாக ஒரு கார் எடுத்துக் கொண்டு, வழியில் இருக்கும் பல ஊர்களையும் பார்த்துக் கொண்டு செல்லலாம். வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆக, நமது இறுதி இலக்கு - தில்லி செல்வது. அதற்கு இருக்கும் பல வழிகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பது போல, ஒரு பொருளை தயாரிக்கவும் பலமுறைகள் உள்ளன. அதில் அந்த பொருளைக் கண்டுபிடித்தவர் கையாண்ட வழியல்லாத மற்ற முறையில் அந்த பொருளைத் தயாரிக்கும் முறை இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி, அது வேலைக்காகது.

இப்போது இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கும் புதிய காப்புரிமை முறையை நடைமுறையாக்க, ஏற்கெனவே அமலில் இருந்த 'இந்திய காப்புரிமை சட்டம் 1970'ல் திருத்தங்கள் கொண்டு வருகிறார்கள். கடந்த வாரத்தில் (மார்ச் 22ந் தேதி) நாடாளுமன்ற மக்களவையிலும், மறுநாள்
மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த 3வது திருத்தம்தான் இந்தியாவை Product Patent வரம்புக்குள் தள்ளுகிறது. மாற்றம் நடப்பது இந்தியாவில்தான் என்றாலும், இந்தியர் அல்லாத மற்ற பலரும் இது குறித்து கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தத்திற்கு முன்பு நைரோபி நகரில் இந்திய தூதரகம் நோக்கி ஒரு பேரணியே கிளம்பியது. தர்ணா போராட்டமும், மற்றவகை எதிர்ப்பும் அதிகம் இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம், இந்தியா அண்மைக் காலம்வரை விலை மலிவாக உலக சந்தையில் சப்ளை செய்து வந்த மருந்து பொருட்கள்தான்.

பொதுவாக உலக சந்தையில் மருந்து பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அந்த மருந்து பொருளைத் தயாரிக்கவும், அதற்கான ஆரம்ப கட்ட ஆராய்ச்சிக்கும் மிக அதிகமாக செலவிடுவதாகச் சொல்லி, அந்த காசையெல்லாம் திரும்ப எடுக்கவும், கூடுதலாக லாபம் பார்த்து, அடுத்த சில ஆராய்ச்சிகளுக்கு செலவழிக்கவும் வேண்டி தாங்கள் கண்டுபிடித்த புதிய மருந்து பொருளுக்கு, ஒன்றுக்கு பத்தாக விலை வைத்துதான் சந்தையில் விற்பார்கள். இது வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு வேண்டுமானால் கட்டுபடியாகலாம். உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கு வழங்கப்படும் ஏஆர்வி (ARV - Anti-retroviral drug) மருந்துகளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் தயாராகும் இவ்வகை மருந்து, மாதம் முழுமைக்கும் 1000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்க, Product Patent கொண்ட மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கு செலவழிக்க வேண்டியிருக்கிறது. அன்றாடம் வயிற்றுக்கே போராடும் மக்கள், அந்த விலை கொடுத்து வாங்கி என்னத்தை செய்ய?

அதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளும்... நம்மைவிட மோசமான நிலையில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் மக்களும் அவ்வளவு விலை கொடுத்து மருந்து பொருட்களை வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆனாலும் நம்மைப் போன்றவர்களும் நோய் நொடி தவிர்த்து வாழ, மருந்துகள் தேவைப்பட்டால், அதை உட்கொண்டுதானே ஆக வேண்டும். அதற்கு இத்தனை நாட்களாக நாம் கையாண்டு வந்த முறை - அதே மருந்தை மாற்றுவழிகளில் தயாரிப்பது என்பதுதான். இங்கேதான் Process Patent நமக்கு அனுகூலமாக இருந்தது. அதே மருந்தை வேறு வழிகளில் தயாரித்து நாமும் உட்கொண்டு, மற்ற நாடுகளுக்கும் அளித்து வந்தோம். இந்த மருந்துகளைத்தான் Generic drugs என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இவ்வகையில், உலகநாடுகளில் அதிக மருந்துப் பொருள் தயாரிக்கும் நாடு என இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. பொருள் அளவில் 4வது இடத்தைப் பிடித்தாலும், அவற்றின் விலை மதிப்புப்படி உலகின் 13வது நாடாகத்தான் இருக்கிறது. அமெரிக்காதான் மருந்துப் பொருள் உற்பத்தியில் அதிக வருவாய் பெறும் நாடு. ஒரு புள்ளிவிவரக் கணக்குப்படி, இன்றைய உலகின் மொத்த மருந்துப் பொருள் உற்பத்தி மதிப்பான 300 பில்லியன் அமெரிக்க டாலரில், அமெரிக்கா மட்டும் 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுவருகிறது.

இந்தியாவில் எவ்வளவு விலை குறைவாக, அதே நேரத்தில் தரமானதாகவும் மருந்துப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்பதற்கு இன்னும் சில புள்ளிவிபரங்களும் தரலாம். மற்ற நாடுகளில் புதிதாக ஒரு மருந்துப் பொருள் தயாரிக்க 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கும் என்றால், அதே மருந்துக்கு மாற்றாக இந்தியாவில் ஒரு generic மருந்து தயாரிக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர்தான் செலவாகிறது என்பது மருந்துப் பொருள் தயாரிப்புத் துறையினரது தகவல் என்கிறது வணிக நாளிதழ் பிஸினஸ் ஸ்டாண்டர்ட். எத்தனை மடங்கு குறைவு என கணக்கிடுங்கள்! இதையெல்லாம் சொல்வதனால் இந்தியாவில் செய்வதெல்லாம் இந்த 'உல்டா' வேலை மருந்துகள்தானோ என்று எண்ணி விடாதீர்கள். இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக..., குறிப்பாக '2005 கெடு' நெருங்குகிறது என்ற ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் பல நிறுவனங்கள் சொந்தமாக ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இவர்களாக ஆராய்ந்து வெற்றி பெற்று, மற்ற நாட்டு நிறுவனங்கள் போலவே புதிய மருந்து பொருட்களைத் தயாரித்து விற்று வருகிறார்கள்.

சரி! நாமாகவும் புதிய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். மற்ற நாடுகளின் மருந்துகளுக்கு மாற்றாக வேறுவழிகளில் விலைகுறைவான மருந்துப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறோம். அப்படியிருக்கையில் எதற்காக இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்? இதில் அர்த்தம் இருக்கிறதா? இந்திய நிறுவனங்கள் மற்றவர்களின் மருந்துகளை உல்டா பண்ண அனுமதிக்கவில்லை என்பதுதான் இந்த கூச்சலுக்கெல்லாம் காரணமா? இப்படியெல்லாம் கூட கேட்கத் தோன்றலாம். அடுத்து, இந்த மாதிரி உல்டா வித்தைகள் எல்லாம் இனியும் அவசியம்தானா என்றும் கேட்கலாம். அதற்கு அவசியம் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், பன்னாட்டு மருந்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்தான்.

இதை பற்றியும், இன்னமும் அடுத்த பகுதியில்....!

5 கருத்துகள்:

Narain Rajagopalan சொன்னது…

நல்ல பதிவு சந்திரன். எப்போதோ டிகிரி படித்து முடித்து தூக்கிப் போட்டு விட்ட பொருளாதார விஷயங்களை நன்றாகவே தொட்டு விட்டு போயிருக்கிறீர்கள். WTO பற்றிய கருத்தரங்கினை கல்லூரி காலத்தில் பொருளாதார துறை சார்பாக நடத்தியவன் என்றாலும், அதெல்லாம், முழுக்க, முழுக்க ஏட்டுச் சுரைக்காய், டப்பா அடித்தல். கொஞ்சம் படித்துவிட்டு இதைப்பற்றி யோசித்துப்பதிகிறேன்.

நாலாவது கண் சொன்னது…

கருத்துகளுக்கு நன்றி நரேன். நீங்கள் பொருளாதாரம் படித்தவரா? நானில்லை. அடுத்த பகுதியை இன்று மாலை பதிக்கிறேன். - சந்திரன்

ஒரு பொடிச்சி சொன்னது…

useful post, expecting the part 2, thank you.

நாலாவது கண் சொன்னது…

Thanks for comment from oru poduchee - Chandran

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

சந்திரன்,
இப்படி சும்மா புலம்புவதில் அர்த்தமில்லை. அமெரிக்காவில் 'bench to bedside' என்று சொல்லப்படுகிற ஆய்வகப் பரிசோதனைகளில் ஆரம்பித்து preclinical, Phase I, Phase II, Phase III என்று படிப்படியாக சென்று Food and Drug Administration இன் ஒப்புதல் பெற்று ஒரு மருந்தை சந்தைக்குக் கொண்டுவர சராசரியாக 5 ஆண்டுகாலமும், 1 பில்லியன் டாலர்களும் தேவைப்படுகின்றன. அப்படியும் சில மருந்துகளை சில நேரம் திரும்பப்பெற வேண்டியுள்ளன. இங்கும் generic மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றைத் தயாரிக்க காப்புரிமை முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இது நாள்வரை process patent சட்டத்தை வைத்து இந்திய மருந்து கம்பெனிகள் நோகாமல் நோன்பு கும்பிட்டு வந்தன. இனிமேல் இந்திய மருந்து கம்பெனிகள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன, இந்திய அரசு எத்தகைய regulatory process ஐ உருவாக்கப்போகின்றன என்பதைப் பார்க்கவேண்டும். உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் இந்த காப்புரிமை சட்ட மாற்றத்தைக் குறித்த புலம்பலை நிறுத்திவிட்டு தொண்டர்களை வைத்து நடத்தப்பட வேண்டிய Phase III clinical trials எந்த அளவுக்கு வெளிப்படையாக, தொண்டர்களையும், அரசையும் ஏமாற்றாமல் மருந்து கம்பெனிகள் எப்படி நடத்தப்போகின்றன என்பதை கண்காணிக்கவேண்டும். அப்படி ஏமாற்றப்படும் பட்சத்தில் தொண்டர்களுக்கு நிவாரணம் பெற என்னென்ன சட்டரீதியிலான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.