மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, மார்ச் 25, 2005

காப்புரிமை கலாட்டா ஏன்? - II

கடந்த 22ந்தேதி நாடாளுமன்றத்தில் பாஸானது 3வது சட்டத்திருத்தம் என்று ஏற்கெனவே சொன்னோம். இதிலிருந்தே இதற்கு முன்பு இரண்டு திருத்தங்கள் நடந்துள்ளன என்பது புரியும். அதில், முதல் திருத்தம் 1999ல். இரண்டாவது 2002ல் நடந்தது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. ஆட்சி நடந்தது. 3வது திருத்தத்தின் மூல வடிவம்கூட தேஜகூ.வினர் தயாரித்ததுதான். ஆனால் அதற்கே எதிர்ப்பு தெரிவித்துதான் நாடாளுமன்றத்தில் வௌதநடப்பு செய்தனர் பா.ஜ.க. & தோழர்கள். அந்த 'பாலிடிக்ஸை'த் தனியாக வைத்துக் கொள்வோம்.

எனினும் இப்போது பாஸான சட்ட வடிவம், பாஜக தயாரித்த ஆரம்ப, மூல வடிவம் அல்ல. அது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கம்யூனிஸ்ட்களும் மற்ற சிலரும் கிட்டத்தட்ட 10 மாற்றங்கள் வரைக் கேட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. மீதி உள்ளதை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்கள். தேவைப்படும்போது, பின்னாளில் இன்னொரு திருத்தம் வரும்.

சரி! கம்யூனிஸ்ட்டுகளால் கொண்டுவரப்பட்டு ஏற்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

முதல் விஷயம் - கடந்த கட்டுரையின் முடிவில் சொன்ன பன்னாட்டு மருந்துப் பொருள் நிறுவனங்கள் செய்து வரும் சதிக்கு 'மருந்து'.

இப்போதைய Product Patentபடி, 1995க்குப் பிறகு புதிதாக காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் எதுவானாலும் அவற்றை கண்டுபிடித்த / உருவாக்கியவருக்கு காப்புரிமைத் தொகை தரப்படவேண்டும். இது கட்டாயமாகிறது. இந்தவகையில், 1995 தொடங்கி, 2004வரை 6989 மருந்துப் பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டதாக / கண்டுபிடிக்கப்பட்டதாகக் காப்புரிமை பெற்றுள்ளன (இத்துறை தகவல்). இவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகள் என கோரிக்கை வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் வெறும் 250 பொருட்கள் மட்டுமே நிஜமாகவே புதிதாம். மற்றவையெல்லாம் ஏற்கெனவே ஏதோ ஒருவகையில் மருந்து பொருட்களாகப் பயன்பட்டு வந்தவைதான். காப்புரிமை பெறும் பொருள் 20 ஆண்டுகள் வரை ராயல்டி பெறலாம் என்பதால், விரைவில் காலாவதியாக உள்ள (மேலுள்ள கணக்கின் மீதி) பொருட்களுக்கு சின்ன சின்ன டிங்கரிங் வேலை செய்து, அதையே புதிய பொருள் என்று சொல்லி, இன்னும் ஒரு 20 வருடத்துக்கு ராயல்டி வாங்கி கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள் பன்னாட்டு மருந்து பொருள் நிறுவனங்கள்.

டிங்கரிங் வேலை என்பது - அதே பொருள் வேறொரு நோய்க்கு மருந்தாகிறது என்றோ (சளி மருந்தால் - தலைவலிக்கு நிவாரணம்... வயிற்று வலி போகும் என்பது போல), பழைய பொருளின் மூலக்கூறில் சின்ன மாற்றம் செய்தோ, அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்களை கூட்டி, குறைத்தோ... இப்படித்தான் இருக்கின்றனவாம். அவ்வகையில் இது, 'புதுசு கண்ணா... புதுசு' என்று காட்டி, இன்னும் 20 வருஷம் 'அட்ரா சக்கை' என்று வாரிக் கொட்டலாம் என்பது திட்டம். இதை இத்துறையில் Evergreening என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். அதாவது, எந்நாளைக்கும் பசுமையாக... காமதேனுவாக ஒரு மருந்துப்பொருளை வைத்திருப்பது! கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தியபிறகு 22ந்தேதி பாஸான சட்டப்படி, இனி ஒரு மருந்துப் பொருளை எந்நாளுக்கும் பசுமையாக வைத்திருக்க பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சி, தந்திரம் செல்லுபடியாகாகது. எனவே உத்தேசமாக வெறும் 250 பொருட்களுக்கு மட்டுமே ராயல்டி செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்த விஷயம் - Embedded Software. (இதுபற்றி இணைய நண்பர்கள் பலருக்கு என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கலாம்) தனியொரு நிறுவனத்தின் தேவைக்காக எழுதப்படும் மென்பொருள் போல அல்லாமல், செல்போன் போன்ற பொது பயன்பாட்டுக்கான பொருட்கள் இயங்க எழுதப்படும் மென்பொருள்களை இவ்வகையில் சேர்க்கலாம். எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு மெஷினில் இருப்பதும்கூட இவ்வகைதான். இவற்றை யார் வேண்டுமானாலும் அப்போதைய தேவைக்காக இஷ்டப்படி மாற்றுவது இயலாது. அதேபோல, அடிக்கடி புதிதாக மென்பொருள்கள் வரிசைகளை அறிமுகப்படுத்துவதும் அரிதானதுதான். எனவே, இவ்வகையிலும் இனி பலவற்றுக்கும் காப்புரிமை கோர முடியாது.
தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது இந்த வகையில் தேருமா தெரியவில்லை. முதலில் முத்து நெடுமாறன் இந்த மாதிரியான முயற்சியில் இருக்கிறாரா... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அடுத்து - ஒரு பொருளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இடையிலேயே மறுப்பு சொல்லி வேறு யாரும் அதற்கு தடங்கல் செய்ய முடியாது என்று இருந்த வாசகம் வாபஸாகி விட்டது. இதுதான், 'மஞ்சள்களுக்கும்', 'வேப்பிலைகளுக்கும்' இனி யாராவது காப்புரிமை கோரினால் அதை தடுக்கப் பயன்படும் அம்சம். அதிருஷ்டவசமாக, இந்திய காப்புரிமை சட்டத்தின் இன்றைய வடிவில் - ஒரு பொருள் காப்புரிமைக்கு காத்திருக்கும் போதும், அதைப் பெற்ற பின்னரும் - மறுப்பு, எதிர்ப்பு தெரிவிக்க முடியும். பல நாடுகளில் இப்படியில்லை.

இதேவகையில், எதிர்பாராத சூழலில் சார்ஸ்... அல்லது பறவை ஜுரம் (Bird flu) போன்ற ஏதாவது புதிய நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவ நேர்ந்தால், அந்த நேரத்தில் அவசர, அத்தியாவசிய காரணங்களுக்காக - காப்புரிமை பெற்ற மருந்துப் பொருளின் Generic வடிவம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு அனுமதி உண்டு. இதை Compulsary Licence முறை என்கிறார்கள். அடுத்து ஒரு நாட்டில் மருந்து உற்பத்திக்கான முறையான தொழிற்சாலைகளே இல்லை எனும்போது, ஆர்டரின் பேரில் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திக்கும் அனுமதி உண்டு. இப்படியான சிலவற்றுக்கும் முழு ராயல்டி கேட்டு, இனி கழுத்தை நெரிக்க முடியாது. ராயல்டியில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு காப்புரிமைக்காரர் வாய்மூடி இருக்க வேண்டியதுதான் - குறிப்பிட்ட காலம் வரை. ஆனால் இந்திய அதிகார வர்க்கத்திடம் compulsary license அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுமே என்பது, பலநாட்டு மருந்துப் பொருள் இறக்குமதியாளர்களின் கவலை.

அதேபோல, தாவர வகைகள் குறித்த காப்புரிமை கோரும் அம்சங்கள் இந்த சட்டவரம்புக்குள் வராது என்பது மிகவும் தௌதவாக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட்டுகள் கோரி ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படிமாற்றங்கள் தவிர, தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள் இன்னும் நுட்பமானவை. அவசர கதியில் முடிவுக்கு வரக்கூடாது என்பதால், நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அவை அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது நுண்ணுயிரிகள் குறித்த காப்புரிமை. அதாவது, வைரஸ், பாசிவகை போன்ற இன்னும் பல சின்னஞ்சிறு உயிரிகள் குறித்தவை. அதேபோல, முற்றிலும் புதிதான மருந்து / வேதியியல் பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை அனுமதிக்கப்படும் என்பதில் 'புதிதானவை' என்றால் என்ன, அதன் அடிப்படை தேவை என்ன என்பதற்கும் இன்னும் தௌதவான விளக்கம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் வரவிருக்கும் நாட்களில் பொது விவாதத்திற்கும், நிபுணர் ஆய்வுக்கும் உட்படும்.

எப்படியானாலும் இந்தியாவின் பழைய காப்புரிமை கதைகள் காலாவதியாகிவிட்டன. அவ்விடத்தில் புதிய சவால்கள் தவிர்க்க முடியாதவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தோஹா தீர்மானத்தில் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 'அறிவுசார்ந்த சொத்துரிமை' அம்சங்களின்படியே கூட, இன்னும் பலவகையிலும் திட்டமிட்டு - ராயல்படி பிசாசிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் நிபுணர்கள் பலரது கருத்தும். இதற்கான வழிகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காப்புரிமை விஷயத்தில் இத்தனை கலாட்டாவும், கூச்சலும்.

4 கருத்துகள்:

ந. உதயகுமார் சொன்னது…

இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி சந்திரன். நான் காப்புரிமை சட்டம் பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவியது. மிகவும் எளிமையாக எழுதியிருக்கிறிர்கள். வாழ்த்துகள். - உதயகுமார்

ராஜா சொன்னது…

விபரமான பதிவு சந்திரன். நன்றி!

நாலாவது கண் சொன்னது…

ந. உதயகுமார், ராஜா.... உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி! - சந்திரன்

பெயரில்லா சொன்னது…

mortgage rates