மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், ஏப்ரல் 06, 2005

'டிஸ்கோ சாந்தி'க்குத் தடை

நிஜந்தாங்க! 'டிஸ்கோ சாந்தி'... 'சிலுக்கு ஸ்மிதா'.... 'ஜெயமாலினி'.... இப்படி போன தலைமுறை ஆட்களைச் சொன்னால் கோவித்துக் கொள்பவர்கள் 'பாபிலோனா'... மாதிரி இன்றைய ஆட்ட நாயகிகளை (பட்டியல் இப்போ ஞாபகம் வரலீங்க! மன்னிக்கனும்!) நினைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கெல்லாம் தடை விதித்திருக்கிறார்கள். இங்கல்ல; மகாராஷ்ட்ராவில்!

''இவங்கல்லாம் சென்னையை விட்டுட்டு எப்ப அங்க போனாங்க?'' என்று அப்பாவித்தனமா கேக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நம்ம Blog சமுதாயம்தான் இதிலெல்லாம் சமுத்தாச்சே; இந்த மாதிரி செய்தியெல்லாம் தெரியாமலா இருக்கும். தேசிகன் எழுதிய 'நானும் ஒரு டஜன் பெண்களும்' என்ற தலைப்புக்கு வந்த Feedback மற்றும் கிளிக் ரேட்டிலேயே தெரிந்ததே எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று! என்னையும் சேர்த்திதான். சரி விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரத்தில் மகாராஷ்ட்ர துணை முதல்வர் ஆர் ஆர் பட்டேல், அந்த மாநில இளைஞர்கள் ரொம்ப கெட்டழிந்த போவதாகச் சொல்லி, அந்த மாநிலத்தில் இருந்த 'டான்ஸ் பார்'களுக்கு தரப்பட்ட லைஸன்சை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதையொட்டி எல்லா டான்ஸ் பார்களும் இழுத்து முடப்பட்டன. (மும்பை நகரத்தில் மட்டும் விதிவிலக்கு (!) என தகவல் - தற்போதைக்கு). பிபிசி வலைதள தகவல்படி அந்த மாநிலத்தில் 1500 பார்கள் அனுமதியுடன் செயல்பட்டனவாம். அதில் கிட்டத்தட்ட 1 லட்சம் பெண்கள் வேலை செய்து வந்தார்களாம். எல்லாருக்கும் டான்ஸ் ஆடும் வேலைதான். 'நான் சிரிச்சா தீபாவளி....' நினைவிருக்கிறதா?

அரசின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் தொழிலை இழந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த பெண்கள் இப்போது போராட்டத்தில் உள்ளனர். இந்த பெண்களுக்கு என்று தனியாக தொழிற் சங்கம் கூட இருக்கிறதாம். பாரதிய பார் கேர்ள்ஸ் யூனியன். மொத்தம் 60 ஆயிரம் பெண்களுக்கு மேல் இப்போதைய அரசு தடையால் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்கிறது இந்த யூனியன் தகவல். கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் இவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தால் கொஞ்சம் ஆடிப்போன ஆர் ஆர் பட்டேல், ''இந்த பெண்களில் பெரும்பாலோர்... கிட்டத்தட்ட 70 சதவிகிதம்வரை பங்களா தேஷ், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன'' என்று, இந்திராகாந்தி காலத்து 'காங்கிரஸ் பாணி'யில் அறிக்கை விட்டிருக்கிறார்.

இது இந்த பெண்களை இன்னும் அதிக ஆவேசம் பெற வைத்துள்ளளது. யூனியன் தலைவி வார்ஷா காலே, ''இந்தியர் அல்லாதவர்களும் எங்களுடன் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், தனது நடவடிக்கையை நியாயப்படுத்த இதுகுறித்து விபரங்களை அரசு அநியாயத்துக்கு கூட்டிச் சொல்கிறது. மொத்தத்தில் 4 சதவிகித பெண்கள்கூட மற்ற நாட்டவர் இல்லை. அதைவிட முக்கியம் இந்த தொழிலில் இருப்பவர்கள் யாரும் ரேஷன் கார்டு உள்ளிட்ட எந்த விதமான அடையாள அட்டைகளும் கொண்டில்லாதபோது அவர்கள் எல்லாரையும் எந்த அடிப்படையில் மாநில அரசு இப்படி முத்திரை குத்தி ஒதுக்கிறது?'' என்று கேட்கிறார்.

என்டிடிவியில் கேள்விக்கு பதில் சொன்ன இவர், ''இந்த பெண்களில் பெரும்பாலோருக்கு வேறு தொழில் எதுவும் தெரியாது. பலரது குடும்பம் இவர்கள் மூலமாக வரும் வருமானத்தை நம்பி இருக்கிறது. இதனால் பல குடும்பங்களும் பட்டினி சாவுக்குத் தள்ளப்படுகிறது. எங்களுக்கெல்லாம் சரியான நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். அல்லது தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்'' என்கிறார்.

'இளைஞர்கள் இது போன்ற பார்களால் சீரழிந்து போகிறார்கள் என்பது உண்மைதானே! இதில் இளம் பெண்களையும் பழக்குவதால் இந்திய கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதானே!' என்றால், ''இந்திய இளைஞர்கள் இதனால்தான் கெட்டுப் போகிறார்கள் என்றால் மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி? அத்துடன் இந்த மாதிரி பார்களுக்கு எல்லாதரப்பு இளைஞர்களும் வருவதில்லை. பணத்தால் கொழுத்த... சமூக விரோத காரியங்களில் பழகிய... என கொஞ்சம் திசை மாறிய, அதிலும் பெரும்பாலும் நடுத்தர வயது... அதைத் தாண்டியவர்கள்தான் வருகிறார்கள்'' என்கிறார்கள் போராடுபவர்கள். மேலும், ''பெண்களைப் பொறுத்தவரை - இந்திய கலாச்சாரத்தில் இது புதிதான தொழில் அல்ல. இந்தத் தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ள பெரும்பாலோருக்கு பாரம்பரியமான தொழிலே இதுதான். அதனால்தான் அவர்களால் இதற்கு மேல் வேறு வேலைகளை கற்றுக் கொண்டு அதற்குச் செல்ல முடியாது என்று சொல்கிறோம்'' என்கிறார் தொழிற் சங்க தலைவி.

இந்த தடை குறித்து மும்பையில் இருந்த வௌதவரும் 'மகாநகர்' பத்திரிகை ஆசிரியர், ''ஆர் ஆர் பட்டேல் அவசரப்பட்டுவிட்டார். இதைத் தடுப்பதால் சமூகத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்று உணராமலேயே செய்துவிட்டார். இந்தத் தடையால் - இந்தத் தொழிலில் இருந்தவர்கள்.... இந்த பாருக்கு வந்தவர்கள் என இருதரப்பும் - தஞ்சம் அடைய இடம் இல்லாமல் வேறு வழிகளில்... தடங்களில்... திசைகளில்... இறங்கி வேறு மாதிரியான புதியப் பிரச்னைகளை உருவாக்கிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்'' என்கிறார். உண்மைதான் எனத் தோன்றுகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படக்கூடியதல்ல. அதைத்தாண்டி மனோரீதியான அணுகுமுறையும் தேவைப்படும் இந்த விஷயத்தில் மும்பை நகரம் மாதிரியான - பேட்டை தாதாக்கள் அல்ல; கோட்டை தாதாக்கள் உள்ள இடங்களில், அவசரம் காட்ட வேண்டிய விஷயம் இது அல்ல எனத் தோன்றுகிறது. திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து இதை வழிக்கு கொண்டுவரலாம் என்று போலிஸார் சொல்கிறார்கள். இதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறீர்கள்?

2 கருத்துகள்:

Narain Rajagopalan சொன்னது…

மகாராஷ்டிரா முதல்வர் செய்தது முட்டாள்தனம். டான்ஸ் பார்களை மூடிவிட்டால், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள டான்ஸ் ப்ளோர்களை மூடுவாரா? Page 3 பார்ட்டிகளில் நடக்கும் கூத்துக்களை தடுப்பாரா? இதெல்லாம் சும்மா. கலாசாரத்தின் பற்றிருப்பது போல காட்டிக் கொள்ள முயற்சிக்கும் பாவலா.

//இந்த தடை குறித்து மும்பையில் இருந்த வௌதவரும் 'மகாநகர்' பத்திரிகை ஆசிரியர், ''ஆர் ஆர் பட்டேல் அவசரப்பட்டுவிட்டார். இதைத் தடுப்பதால் சமூகத்தில் என்னென்ன மாற்றம் ஏற்படும்? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்று உணராமலேயே செய்துவிட்டார். இந்தத் தடையால் - இந்தத் தொழிலில் இருந்தவர்கள்.... இந்த பாருக்கு வந்தவர்கள் என இருதரப்பும் - தஞ்சம் அடைய இடம் இல்லாமல் வேறு வழிகளில்... தடங்களில்... திசைகளில்... இறங்கி வேறு மாதிரியான புதியப் பிரச்னைகளை உருவாக்கிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்'' என்கிறார். //

இதுதான் நடக்கும். கொஞ்ச நாளில் இந்த டான்ஸ் பார்களை பார்க்காதவர்கள் தங்களின் பாலியல் இச்சைகளை தீர்க்க வேறு வழிகளை நாடலாம். வேலைக்கார பெண்கள் வன்புணரப்படலாம். உத்தர,மத்திய பிரதேசங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் புதியதாய் பாலியல் இச்சை தீர்க்க பெண்கள் இறக்குமதி செய்யப்படலாம். இல்லையெனில், சும்மா இல்லாது அடுத்த மாநிலங்களில் போய் பிரச்சனைகள் செய்யலாம். இன்னமும் இந்திய அரசாங்கத்தின் மிலிட்டரி கலாச்சார துப்பாக்கிகள் இந்திய ஆண்களின் குறியை குறிப்பார்த்துக் கொண்டே இருக்கின்றன. என்ன செய்வது ? தலையிலடித்துக் கொண்டு பின் விளைவுகளுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

நாலாவது கண் சொன்னது…

நரேன்

இதில் கொடுமை என்னவென்றால், 'இந்த மாதிரி டான்ஸ் பார்கள் பலவற்றின் முதலீட்டாளர்களே (!) [உற்பத்தி, பிற சேவைத் தொழில் முதலீட்டாளர்கள் மன்னிக்கவும்.] பெரிய போலிஸ் ஆபிஸர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர்மட்ட அதிகாரிகள்தான் என்பதை ஆதாரத்துடன் சொல்வேன்' என்கிறார் 'மகாநகர்' ஆசிரியர். அதோடு, ஓரிடத்தில் இதற்காக ரெய்ட் போனபோது, அங்கே தேசியவாதக் கட்சியின் மூத்த அரசியல்வாதி ஒருவர் இருந்தார் என்பதும் தகவல்.

எனக்கிருக்கும் சந்தேகம் எல்லாம் - 'அம்மாநிலத்தில் கொஞ்சம் தொய்வடைந்திருக்கும் சிவசேனா கட்சியினர் (தற்போது பாஜகவுடன் கூட கொஞ்சம் கசப்பில் இருப்பதாகத் தகவல்) தங்களது இருப்பை காட்ட இந்த மாதிரி எதையாவது திட்டமிட்டுக் கொண்டிருந்து..., அது உளவுத்தகவலில் கிடைத்து ஆர் ஆர் பட்டேல் முந்திக் கொண்டாரோ!' என்றுதான் தோன்றுகிறது. மறுபுறம் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கான நிலத்தை ஆக்ரமித்திருந்த ஏராளமான குடிசைகளை அதிகாரத்தைக் கொண்டு காலி செய்து, அதனால் பரபரப்பு கிளம்பி... இன்னும் சரியாக ஒருமாதம்கூட தாண்டவில்லை என நினைக்கிறேன். சரத்பவாருக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா? மூன்றாவது அணி முயற்சிக்கு முனைவோர் பட்டியலில் இருக்கும் சரத்பவாருக்கு இந்த நடவடிக்கைகள் எல்லாம் தேர்தல் நஷ்டம்தான் என்று தோன்றியும், தொடர அனுமதிக்கிறார் என்றால் எங்கோ கோளாறு இருக்கிறது என்றே நினைக்கிறேன். - சந்திரன்.