யார் தருவார் இதற்கெல்லாம் தீர்வு?
அண்மையில் பெய்த மழையில் தாம்பரம் பெருங்களத்தூர் அருகில் அமைந்துள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றின் வில்லா வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதுடன், கழிவு நீரும் கலந்து மக்கள் பெருந்துயர் அடைந்ததாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. பார்த்திருப்பீர்கள். கட்டுமான நிறுவத்தைக் குறை சொன்ன ஆட்கள், போகிறபோக்கில் அரசின் மீது புகார் பட்டியல் வாசித்தார்கள். ஆனால், இது போலவும், மற்ற வகையிலும் கட்டுமான நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் புதிதல்ல. அரிதானதும் அல்ல.
குறிப்பிட்ட அந்த வளாகத்திற்குள்ளேயும் நான் போயிருக்கிறேன். ஆனால், அப்போது என் இலக்கு அதுவல்ல. பின்னர் சரியான விசாரணைக்குப் பின் அருகில் இருந்த இன்னொரு பிரபல நிறுவனத்தின் இதே போன்ற வில்லா வளாகம் (Gated community) அடையாளம் கண்டு அங்கு சென்றோம். அதில் இருந்த ஒரு வில்லாவை வாங்கியவர் அதற்கு வங்கியில் வாங்கும் கடனுக்காக அந்த சொத்தை மதிப்பீடு செய்வதுதான் எனது பயணத்தின் நோக்கம்.
அப்போது எனக்கு பரிசீலனைக்கு தரப்பட்ட ஆவணங்களில் Construction Agreementபடி அனைத்து வசதிகளும் உள்ளதா என்று பார்க்க ... அவற்றை நேரில் பார்க்க வேண்டும் என கோரினேன். அது ஒவ்வொன்றும் வெவ்வேறு மூளைகளில் உள்ளதாக அங்கிருந்தபடியே பல திசைகளைக் காட்டினார்கள். "சரி... வாங்க... போய் பார்க்கலாம்" என்று கேட்டபோது, மெள்ள வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்ட அந்த நிறுவனப் பணியாளர் என்னை பார்த்த பார்வையும், விதமும், முனகலும் அலாதி. பின்னர் "அதெல்லாமே மக்கள் பயன்பாட்டில் பல காலமாக இருப்பதுதான் சார்... " என்றார். "சரி.... இப்போது எல்லா வசதிகளும் செயல்பாட்டில் உள்ளதுதான் என்றால், அதைப் பார்த்து இன்றைய தேதியில் அதை ஒரு போட்டோ எடுத்துவிடலாமே...!" என்று சொல்லியபடி நடக்கத் தொடங்கினேன். ஆனால், நின்ற இடத்தில் இருந்து நகராத அவர், "போட்டோ எடுக்கணும்னா, முன்னாடியே பர்மிஷன் வாங்கணும் சார்..." என்றார். "சரி... நெம்பர் சொல்லுங்க போன் போடறேன்" என்றபோது, "சார்... நீங்க கேட்ட உடனே எப்படி சார் பர்மிஷன் கிடைக்கும், நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை. சிஆர்எம்-ல கேக்காம, போட்டோ எடுக்க அனுமதி கிடையாது சார்..." என்றார். "இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் வரோம்ன்னு ஏற்கனவே பேங்க் மேனேஜர் சொல்லியிருங்காங்க!" என்று திரும்பி அருகில் இருந்த மேனேஜரைப் பார்த்தேன். அவரும், "ஆமாம்... உங்க சிஆர்எம்ல பேசிட்டுத்தான் வேல்யுவருக்கு கன்ஃபார்ம் பண்ணோம்" என்றார்.
இப்படியே வாதம் தொடர்ந்தது. வங்கி மேலாளர் முழுவதும் என் தரப்பில் நின்றார். "அவர் கேக்கற டாக்குமெண்ட் எல்லாத்தையும், பார்க்கணும் சொல்ற எல்லா வசதியையும் நீங்க காட்டித்தான் ஆகணும். இல்லாட்டி, அவர் கிட்ட ரிப்போர்ட் வராது. ரிப்போர்ட் இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாது. நீங்க யார் கிட்ட பேசணுமோ, பேசுங்க... நான் பேசணுமா சொல்லுங்க... வேல்யுவர் பேசணுமா.... பேசுவார்" என்று சொல்லி என்னைத் திரும்பிப் பார்த்தார்.
நான் அந்த நிறுவனப் பணியாளரைப் பார்த்தேன். "ஏன் மேடம்.... இவர் மட்டும்தான் இதெல்லாம் கேக்கறார்... வேற பேங்க்ல இருந்தும் எத்தனை பேர் வராங்க... போறாங்க... எல்லாரும் இப்படி நிக்கலையே!" என்று புலம்பினார்.
சொத்து வாங்கும் நபர், குற்றவாளியைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார். நான் தேவையில்லாத பிரச்னை செய்வதாக அவர் நினைத்தாரோ என்னவோ.... அந்த பார்வையில், "ஏன் சார் பிரச்னை பண்றீங்க!" என்ற கேள்வியிருந்தது. மீண்டும் திரும்பி பேங்க் மேனேஜரைப் பார்த்து, கண்ணில் அதே கேள்வி தொனிக்கப் பார்த்தார்.
மேனேஜர், "மேடம்... உங்க ரைட்ஸூக்காகத்தான் அவர் கேக்கறார்!", என்று சொத்து வாங்கும் பெண்மணிக்கு விளக்கம் அளித்தார்.
காலம் கடந்து கொண்டே இருந்தது. ஆனால் தீர்வு வரவில்லை. சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசிவிட்டு வந்த நிறுவனப் பணியாளர் வங்கி மேலாளரிடம், "மேடம்... நாளைக்கு வாங்க.... நான் ஏற்பாடு செய்து வைக்கிறேன்" என்றார். சொத்து வாங்கும் பெண்மணியில் முகத்தில் கலவரம் நீங்கி, அமைதி திரும்பி, மெல்லிய புன்னகை தெரிந்தது. வங்கி மேலாளர் என்னைத் திரும்பி பார்த்தார்.
"மேடம்.... ஏற்கனவே 3 நாளா பேசி... இப்பதான் வந்திருக்கோம்.... அடுத்த 3 நாள் நான் சொந்த வேலையா வெளியூர் போறேன். அப்புறம்... ஒத்துக்கிட்ட மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் வரணும். ஆனா, நாம் முன்னாடி சொல்லாமலே... எதோ சர்ப்ரைஸ் விசிட் வந்த மாதிரி பேசறாங்களே... இதே கேஸ்ஸுக்கு இன்னொரு முறை ஏன் நான் வரணும்" என்றேன்.
"ரைட்தான் ஸார்...!" என்றபடி போனை எடுத்தவர், சில எண்களை அழுத்தினார். மெல்ல நகர்ந்து சிறிது தூரம் சென்று அங்கிருந்து சில நிமிடங்கள் யாரிடமோ பேசிவிட்டு காத்திருந்தார். 5 நிமிடங்கள் ஓடின. மீண்டும் அவரது போனில் அழைப்பு வந்திருக்கும் போல. எடுத்து பேசினார். அங்கிருந்து அருகில் வந்தவர் அந்த நிறுவனப் பணியாளரிடம் போனைக் கொடுத்து... "இந்தாங்க...பேசுங்க!" என்றார்.
போனை வாங்கி பேசியவர், "சரி, சார்... காட்டிறேன் சார்..." என்று முடித்துக் கொண்டு என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு, வெறுப்பான முகத்தோடு, அலுவலகம் வந்து இன்னொரு ஆளை அழைத்து கூட அனுப்பி வைத்தார்.
இதில் 2 விஷயங்கள் எனக்கு புரிந்தது.
1. சொத்து வாங்க பல லட்சங்களை... சில நேரங்களில் கோடியும் கொடுத்து வில்லாவோ... பெரிய 3 BHK ஃப்ளாட் வாங்கும் நபர்களில் பெரும்பாலோர், நிறுவனம் காகிதத்தில் அச்சிட்டு தரும் விஷயங்கள் அனைத்தும் நிஜமாக செயல்பாட்டில் உள்ளதா என்பதை கவனிப்பதில்லை. 'இருக்கும்' என அவர்களாக நம்பிவிடுகிறார்கள். அத்தனை பேரிடம் இவ்வளவு காசு வாங்கும் கட்டுமான நிறுவனம் இதையா செய்யாமல் இருக்கும் என்பது அவர்களது அலட்சியத்துக்கு காரணமாக இருக்கலாம். நாம் கேட்காவிட்டாலும், பார்க்காவிட்டாலும்.... இங்கே வில்லா.... குடியிருப்பு வாங்கிய மற்றவர்கள் பார்த்திருப்பார்கள். நாம் இப்போது அதைத் தேடிப்போய் பார்க்காவிட்டால் என்ன என்ற சிந்தனை காரணமாக இருக்கலாம். அதைத் தாண்டி இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் இறுக்கமும், உறுதியும் காட்டினால் அங்கே வசிக்கும் காலத்தில் நமக்கான மற்ற பிற சேவைகள் வேண்டிச் செல்லும்போது தர்மசங்கடம்... இழுத்தடிப்பு... தாமதம் வரலாம் என்ற அச்சம்.. அல்லது முன்னெச்சரிக்கை காரணமாக பலரும் தனியாக நின்று எதையும் வலியுறுத்துவதில்லை.
இதைத்தாண்டி, இதுபோன்ற பெருந்திட்டங்களில் முதலீடு செய்யும் பெரும்பாலோர் அதை ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் அங்கே வசிப்பதில்லை. அதனால், எந்த வசதி இல்லை; எது இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொள்வதில்லை. ஆனால், அங்கேயே குடியிருக்கும் நபர்களுக்குத்தான் இது போன்ற பிரச்னைகள். இப்படி எதாவது பிரச்னை வந்தால், அவற்றை சாமளிக்க தெரிந்த களப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், இதை ஒரு சேவை குறைபாடு என உணர்வதே இல்லை.
2. சொத்து வாங்கிய நபர்கள்தான் அதை கவனிக்கவில்லை. அவர்கள் கடன் வாங்கும் வங்கியின் சார்பில் களத்துக்கு வரும் வங்கி மேலாளர்... மதிப்பீட்டாளர் போன்றவர்களையாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதையும் செய்வதில்லை. மாறாக, என் வேலையைச் சரியாக செய்வேன் என்று உறுதியாக நிற்கும் வங்கி தரப்பினரையும் தலைவலியாகக் கருதும் பலர்தான் இதுபோன்ற சில கட்டுமான நிறுவனங்களின் ஆதார வலிமை. மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நாம் ஏன் தவிர்க்க வாய்ப்புள்ள கேள்விகளைக் கேட்டு தனிநபர் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பல நபர்களின் சுயநலமும் இதுபோன்ற சூழலுக்கு தீனி போடுகிறது என்பதுதான் உண்மை.
Construction agreementல் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களும், களத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக Completion certificate கொடுக்கும் அதிகார வர்க்கமும் இதற்கு பொறுப்பு. ஆனால், அவர்கள் களத்திற்கு வரும்போது அவர்களைத் திருப்திபடுத்திவிட்டு, சான்றிதழ் வாங்கிக் கொள்ளும் பல நிறுவனங்கள் அதைப் பராமரிப்பதை சரியாகச் செய்வதில்லை எனவும் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அந்த வளாகத்தில் உள்ள சொத்து உரிமையாளர்களின் கூடுமுயற்சி இருந்தால் ஒப்பந்தப்படியான சேவை குறைபாடுகளுக்கு இன்றுள்ள ஒரே விடை - நுகர்வோர் நீதிமன்றமும், RERAவும்தான். ஆனால், இதுவும் கூட ஒவ்வொரு திட்ட ஆவணங்களைப் பொறுத்து மாறுபடும் வாய்ப்புள்ளது.
எந்த திட்டமாக இருந்தாலும் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளாத வரை இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடிவு காலம் இல்லை
திங்கள், டிசம்பர் 08, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக