மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், நவம்பர் 27, 2025

 செயலற்ற வருவாய் (Passive income) அவசியமா?

தலைப்பே, கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நானும் உங்களுக்கு வாக்களிக்கிறேன். ஆனால், இதற்கு நான் பொறுப்பல்ல; கடந்த காலங்களில் சக பயணியாக இருந்த பத்திரிகை நண்பர் கண்ணன்தான் காரணம்.

மாத சம்பளக்காரர்களுக்கு Passive income-ன் அவசியம் குறித்து எழுதும்படி அவர் கேட்டிருந்தார். அதற்கு ஒப்புக் கொண்ட நான், அந்த ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் உண்டா என்று யோசித்தேன். 'செயற்கை நுண்ணறிவு... அதான் AI, என்ன சொல்கிறது' எனக் கேட்டுப் பார்த்தேன். “செயலற்ற வருமானம்” என்று பதில் வந்தது. சரியா.... தவறா என்று யோசித்தால்... பதில் - “சரிதான்!” ஆனால், ஏனோ... எனக்கு அந்தச் சொல்லில் அத்தனை ஏற்பில்லை. சில விஷயங்களை நம்மால் அப்படியே ஏற்க முடியாது. இதுவும் அந்த ரகம்தான். 

இதுபோன்ற வேளைகளில் துணைக்கு வருவது - எழுத்தாளர் சுஜாதாவுடன் பணியாற்றிய என் அனுபவமும், பயிற்சியும்தான். அந்த வகையில் எனது யோசனையில்... கற்பனையில் உருவான சொல் - துடிப்பில்லா வருவாய்!  செயலற்ற வருமானம்  என்று சொல்வதைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது. ஆனாலும் இது என் கருத்துதான். மற்றவர்கள் கருத்து மாறுபடலாம். இன்னும் கொஞ்சம் சிறப்பான... நளினமான... அழகியலுடனான சொல் தோன்றினால்.... நண்பர்கள் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன். 

சரி... மாத சம்பளக்காரர்களுக்கு இந்த துடிப்பில்லா வருவாய் / செயலற்ற வருவாய் ஏன் அவசியம் என்பது நண்பர் கண்ணனின் கேள்வி. ஆனால், "நிஜமான தேடல், அது அல்ல!" என நான் புரிந்து கொள்கிறேன். 

மாறாக, இன்று மாத சம்பளம் வாங்கும் ஒரு நபர்... அந்தப் பணிக்கு  எந்த இடையூறும் (!)... ஆபத்தும்(?)... இல்லாமல்..., மாத சம்பளம் பெற்றுத் தரும் அந்த 8 மணி நேரக் கடமைகளில் இருந்து விலகாமல்... அந்தப் பணிக்கான நேரத்தில் கை வைக்காமல்... மற்ற நேரங்களில்... மற்ற செயல்பாடுகள் மூலம் கூடுதலாக இன்னொரு வருவாய் (Passive income) பெற வாய்ப்புகள் உள்ளதா என அவர் தேடுகிறார். இதுதான் எனது புரிதல். அவர் மட்டுமல்ல;  இன்று மாத ஊதிய நெருக்கடியில் உள்ள பலருக்கும் இதே நெருக்கடிதான். 

பணவீக்கம் என புரியாத வார்த்தையில் சொல்லப்படும் "விலைவாசி ஏற்றம்" மற்றும், Peer pressure என ஆங்கிலத்தில் சொல்லப்படும், அடுத்தவனைப் பார்த்து தானும் ஆசைப்படுவது என்ற சாமானியனின் புரிதல் இல்லாத போக்கு... போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் பணத்தேவைகள்தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம். 

மறுபுறம், இப்படியான ஒரு வருவாய் வாய்ப்பு - சட்ட வரம்புகள் எதையும் மீறாமல்.... சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடாமல்... வருமானம் பெறுவதாக இருக்க வேண்டும் என்பது நண்பர் கண்ணனின் அளவுகோலாக இருக்கும். அவருக்காக இல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியுள்ள ஆதரவு... நட்பு வட்டத்தின் தேவைகளுக்காக கண்ணன் இதை யோசிக்கிறார் என நான் நம்புகிறேன். காரணம் - அவரோடு நானும் பணியாற்றிய நாட்களிலேயே கவனித்திருக்கிறேன்; அவர் குறித்த மற்றவர்களின் மதிப்பீட்டையும் உணர்ந்தவன் என்ற வகையில் இதைச் சொல்கிறேன்.    

சரி... விஷயத்துக்கு வருவோம். நிஜத்தைச் சொல்வதானால்.... மாத சம்பளம் வாங்குபவர்களைபோல, உத்தரவாதமான ஒரு வருவாய்க்கும் கூட வாய்ப்பில்லாத சிறுவணிகர்களைக் கேட்டால்... செயலற்ற வருவாயின் அவசியம் குறித்து இன்னும் நிறைய சொல்வார்கள். மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் Passive income அத்தியாவசியமற்றதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குதான் இவ்வித வருவாய்க்கு அதிக வாய்ப்பிருக்கிறது...  நடைமுறையில் சாத்தியமாகிக் கொண்டும் இருக்கிறது. மறுபுறம், மற்றவர்களைப் போலவே, அவர்களும் கூட, இன்று அதிகம் விரும்புவது... 'இதைத்தான்' என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் எல்லா தரப்பினருக்கும் இன்று செயலற்ற வருவாய் அவசியம் என நான் நினைக்கிறேன்

Passive Income அல்லது ‘துடிப்பில்லா வருவாய்’ என்பது ஒரு நபரின் அப்போதைய பங்களிப்பு இல்லாமல்.... தானாகவே... கிடைக்கக்கூடிய வருவாய் எனச் சொல்லலாம். அதனால்தான் இதைத் துடிப்பிலா வருவாய் எனக் குறிப்பிடலாம் என எனக்குத் தோன்றியது. இப்போதைக்கு நீங்கள் மெனக்கெட போவதில்லைதானே! மறுபுறம், இன்று எதுவும் செய்யாமல், முன்பு எதோ ஒரு நேரத்தில் செய்த காரியத்தை ஒட்டி, அதன் பலனாக இன்றும் தொடர்ந்து வருவாய் வருகிறது என்பதால்தான் அது Passive Income. இந்தவகை  வருவாய்க்கு உதாரணம் சொல்வதானால்..., 1. வாடகை வருவாய், 2. டிவிடெண்ட் எனச் சொல்லப்படும் முதலீட்டின் மீதான வருவாய் (பங்கு அல்லது மியூச்சுவல் ஃப்ண்ட் உள்ளிட்ட முதலீடுகளில்), 3. ராயல்டி எனச் சொல்லப்படும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வருவாய், 4. ஓய்வுநேர சேவைகள்..... என இன்னும் சிலவற்றையும் சொல்லலாம். 

இவ்வகை வருவாய் வாய்ப்புகள், இப்போது உங்கள் உடல் உழைப்பைக் கோருவதில்லை என்பது சரி... ஆனால், வாடகை என்ற வகையில் இந்த ரக வருவாய் வேண்டும் என்றால்... அதற்கு நம்மிடம் ஒரு சொத்து இருக்க வேண்டும். அதுவும், அந்த சொத்து இன்றைய தினம் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட தகுதியான நிலையில் இருக்க வேண்டும். அப்படியானால், கடந்த காலங்களில் எதோ ஒரு கட்டத்தில் நீங்களோ... உங்களைச் சார்ந்தவர்களோ.... உங்கள் முன்னோரோ... சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட அல்லது அவர்களே வாங்கி வைத்த சொத்தாக அது இருக்கும்.  அவ்வகையில் இன்று நமது உடல் உழைப்பு, நேரம், பணத்தைக் கேட்காவிட்டாலும் முன்னொரு காலத்தில்... நேரத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த சொத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, நேற்றோ.... இன்றோ... ஒரு பெரும் தொகையை முதலிட வாய்ப்பில்லை என்பவர்களுக்கு, இவ்வகையான வருவாய்க்கு.... "வாய்ப்பில்லை ராஜா.... வாய்ப்பில்லை". அதிகபட்சமாக, கடந்த சில பதிவுகளில் நான் விரிவாக எழுதியிருந்த 'ரீட்ஸ் (Real estate Investment trust - REIT)' யூனிட்களில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது முதலீடு செய்து வந்து... அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வகை வருவாய் பெறலாம்.  

Passive income பெறுவதற்கு, வீட்டு வாடகை மட்டும்தான் வாய்ப்பு என்றில்லை. தேர்ந்தெடுத்த பங்குகளில்....  தேர்ந்தெடுத்த மியூச்சுவல் பண்ட் திட்ட யூனிட்டுகளில் என, மற்ற வகையிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாகவே முதலீடு செய்தவர்களுக்கும் இது பொறுந்தும். முதலீட்டின் மீதான வருவாய் என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு டிவிடெண்ட் வருவாய் கிடைக்க, இது உதவும். இதில் தேர்ந்தெடுத்த என்ற சொல்லையும் நான் சேர்த்து பயன்படுத்தி இருப்பதன் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். நிஜம்தான். இன்றைக்கு பங்குசந்தையில் அன்றாடம் வணிகம் நடக்கும் முன்னணி பங்குகளை எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த எல்லா பங்குகளிலும் டிவிடெண்ட் கிடைப்பதில்லை. அதுவும்... வருவாய் எனக் குறிப்பிடும் அளவு, ஒரு நியாயமான தொகையைத் தொடர்ந்து தரும் பங்குகளின் எண்ணிக்கை எனப் பார்த்தால் அது மிக நீண்டதொரு பட்டியல் என சொல்வதற்கில்லை. 

இங்கே மற்றொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மூலதன வளர்ச்சி (Capital Appreciation) பெறும் பங்குகளின் எண்ணிக்கை இன்றைய சந்தையில் கூடுதலாக இருக்கலாம். அதாவது நீங்கள் ஒரு பங்கை வாங்கும்போது முதலீடு செய்த தொகை..., சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது கிடைக்கக் கூடிய தொகை... இந்த இரண்டுக்குமான வளர்ச்சி என்பது, பரவலாக கணிசமான பங்குகளில் சாத்தியம். ஆனால், இவ்வகை பங்குகள் அனைத்தும், உங்களுக்கு Passive income-ஐத் தருவதில்லை; தராது என்பதையும் உணர வேண்டும். எனவே, துடிப்பில்லா வருவாயைத் தருவதற்கு ஏற்ற பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கினால்தான் நல்ல டிவிடெண்ட் கிடைக்கும். இவ்வகைப் பங்குகளில் நாம் ஏற்கனவே சொன்ன மூலதன வளர்ச்சிக்கும் வாய்ப்புண்டு.. மறுபுறம் அந்த பங்கை வாங்கி, காத்திருந்து, பின்னர் விற்பதற்கு முன்பான இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் மூலதன வருவாயை (Dividend)நல்ல விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பெற விரும்புவோர், தாங்கள் முதலீடு செய்ய ஏற்ற பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது மிக முக்கியம். 

அதேபோல, மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்களிலும் பல நிறுவனங்கள்.... ஒவ்வொரு நிறுவனத்திலும் பல திட்டங்கள்..... அந்த ஒவ்வொரு திட்டத்திலும் சில வாய்ப்புகள் என... நிறைய விஷயங்களை கவனித்து முதலீடு செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. 

நல்ல அளவில் வாடகை வருவாய் பெற விரும்பினால், அதற்கான சொத்தை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்படி அதீத கவனமும், அக்கறையும் செலுத்துகிறோமோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் ஆரம்ப நாட்களில் நாம் மிக கவனமாக தேர்ந்தெடுத்து பங்குகளில்... மியுச்சுவல் ஃப்ண்ட் யூனிட்டுகளில் முதலீடு செய்தால் போதும். அதன்பின் கண்காணிப்புதான் தேவை. தொடர்ந்து வருவாய் நம்மை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.  இந்த இரண்டு வகை முதலீட்டிலும் தொடர்புள்ள சொத்தை விற்பனை  செய்யும்போது ஆரம்ப நாட்களில் செலுத்திய அதே கவனத்தைச் செலுத்தினால் விறபனையிலும் நல்ல வருவாய் வரலாம். ஆனால், அப்படி விற்பனை செய்யும்போது Passive income முடிவுக்கு வரும். சுதாரிப்பு உள்ளவர்கள் நேரம்.. காலம்.. பார்த்து சரியான ஒரு கட்டத்தில் அதை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அதை வேறு நல்ல சொத்தைத் தேர்ந்தெடுத்து....  வேறு நல்ல பங்குகளை.... மியூச்சுவல் ஃப்ண்ட் யூனிட்களைத் தேர்ந்தெடுத்து மறு முதலீடு செய்கிறார்கள்... அவ்வகையில் தங்களது துடிப்பில்லா வருவாயை... Passive income-ஐ விரைவிலேயே மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

இதுபோன்ற சூழலில் நமக்கு கிடைக்கும் மூலதன வளர்ச்சி (Capital appreciation)எனக் குறிப்பிடப்படும் கூடுதல் தொகைக்கு மூலதன ஆதாய வரி எனப்படும் Capital Gains Tax என்பதைக் கட்ட வேண்டி வரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. பொதுவாக இதில் நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி (Long term capital gains tax)... குறுகிய கால முதலீட்டு ஆதாய வரி (Short term capital gains tax)... என இரண்டு விஷயங்கள் உண்டு.  தற்போதைய நிலையில் அசையா சொத்துகளுக்கு 24 மாதங்கள்.... பங்குகள் உள்ளிட்ட தொடர்புள்ள இதர முதலீடுகளுக்கு 12 மாதங்கள் என்பது காலக்கெடு. இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக விற்பனை செய்தால், அவை குறுகிய கால மூலதன ஆதாய வருவாய் எனவும், அந்த காலக்கெடுக்கு பின் விற்பனை செய்தால், அவை நீண்டகால மூலதன ஆதாய வருவாய் எனவும் அழைக்கப்படும். அதற்கு ஏற்ப வருமான வரியும் செலுத்த வேண்டி வரும். இதை... இங்கே... தற்போது குறிப்பிடக் காரணம் Passive income என்பதால் அது கணக்கில் வராது என யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதால்தான். இவ்வருவாய் ஆண்டுக்கு 10 ரூபாய் என்றாலும்... 10 ஆயிரம் ரூபாய் என்றாலும்... 10 லட்சம் என்றாலும் வருமான வரிக்கு... அது தொடர்பான அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டது. தற்போதுள்ள இந்த சட்டங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டால், அதற்கேற்ப உங்களது யுக்திகளையும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டி வரலாம். இதில் சற்று கவனமாக இருங்கள். இதுதான் Passive income பெறுபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 

பங்குசந்தை போன்ற நிச்சயமில்லாத... முதலுக்கே மோசம் வரவும் வாய்ப்புள்ள முதலீடுக்கு நான் தயாரில்லை; ஆனால், ரியல் எஸ்டேட் போன்ற வகையில் முதலீடு செய்யவும் என்னிடம் பல லட்சங்களில் முதலீடுகள் இல்லை என்பவர்கள், தங்களிடம் உள்ள ஒரு தொகையை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது... அஞ்சலக மாதாந்திர சேமிப்பு உள்ளிட்ட பிற திட்டங்களில் முதலீடு செய்வது... பிபிஎஃப் (PPF)போன்றவற்றில் முதலீடு செய்வது போன்ற வாய்ப்புகளும் உண்டு. பாதுகாப்பு அதிகமுள்ள.... ஆனால், வருவாய் வாய்ப்பு குறைந்த முதலீடு எனச் சொல்லப்படும் இவற்றைத் தாண்டி, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் டெப்பாசிட் திட்டங்களும் சேமிக்கலாம். ஆனால், இதற்கும் சில முன்னாய்வுகளும், தொடர் கண்காணிப்பும் தேவை.   

சரி.... வாடகை, டிவிடெண்ட்... பிற டெப்பாசிட் திட்டங்கள் போன்றவைதான் துடிப்பில்லா வருவாய் வாய்ப்பா என்றால்... இன்னும் இருக்கின்றன. உதாரணமாக காப்புரிமைத் தொகையைச் சொல்லலாம்.   ஆங்கிலத்தில் இதை, Copyright roylaty என குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு பொருளை உருவாக்கியவர் அல்லது படைத்தவர்... அதைப் படைத்தது இவர்தான் என முறைப்படி சட்டரீதியாக பதிவு பெற்றுவிட்டால், அதன்பின் அப்பொருளை பயன்படுத்துவோர் எல்லாம் ஒரு சிறிய தொகையை அந்த படைப்பாளிக்கு காப்புரிமை தொகையாக வழங்க வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது படைப்புக்கு நுகர்வோர் செலுத்தும் காப்புரிமை தொகை என்ற வகையில்  இதுவும் ஒரு நபருக்கு துடிப்பில்லா வருமானத்தை ஈட்டித்தரும். 

ஆனால், இவ்விதமாக காப்புரிமை தொகை வருவாய் தர வாய்ப்புள்ள பலவும் தனித்திறமை கொண்டவர்களுக்குத்தான் எளிதானது; வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு எழுத்தாளர் ஒரு நல்ல புத்தகத்தை எழுதி வெளியிட்டால், அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஒவ்வொருவர் மூலமும் ஒரு சிறிய தொகையை வருவாயாகப் பெறலாம். சிறந்த படைப்பு என பலராலும் பாராட்டப்படும் புத்தகங்களை எழுதிய பலருக்கு அவர்களது வாழ்க்கையை ஓட்ட போதுமான வருவாய் தரும் புத்தகங்களும் உண்டு.  ஆனால், இதில் புத்தகத்தைப் பதிப்பிக்கும் நபரை... நிறுவனத்தை.... கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும். இன்றைய நிலையில் அமேசான் உள்ளிட்ட பல இணையவழி விற்பனை... 'கிண்டில் (Kindle)'உள்ளிட்ட இணைய வழி புத்தக பதிப்பு என இதில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நல்ல ஒரு தலைப்பில்... நல்லதொரு படைப்பை.... நல்லதொரு புத்தகத்தை உங்களால் எழுத முடியும் என்றால் இவ்வகை வருமானம் பெற நீங்கள் தகுதியானவர். எத்தனை சிறந்த புத்தங்களை உங்களால் எழுத முடியுமோ அத்தனை நல்ல வாய்ப்புண்டு.

புத்தகப் படைப்பு போலவே இன்னும் பலவும் உண்டு. உதாரணமாக இசைக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர், ஓவியர், தனது ஆராய்ச்சி மூலம் புதிய பொருளைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்ற விஞ்ஞானி... என பலரைக் குறிப்பிடலாம். இவையெல்லாம் போக, இன்று மிக பிரம்மாண்டமாக வளர்ச்சி கண்டுள்ள  சமூக ஊடகங்கள் திறந்து வைத்துள்ள புதிய வாய்ப்புகள் ஏராளம்.

ஏன், இன்றைக்கு யூ டியுப்பில் 'ஷார்ட்ஸ்'  மூலமும், இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்'  மூலமும்  பலர் ஏராளமாக வருவாய் ஈட்டுவதெல்லாம் கூட இந்த வகையைச் சேர்ந்ததுதானே..... தங்களது முழுநேர தொழில் வேறொன்றாக இருக்க, தனக்குப் பிடித்திருக்கிறது என ஓய்வு நேரங்களில் Hobby என்ற பெயரில் சிலர் செய்த காரியங்கள் கொண்டு வந்து கொட்டிய வருமானத்தால்... இப்போது இந்த பணியையே முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டவர்கள் அதிகம். குடும்பத் தலைவிகள் பலர் சமையல் செய்தே இன்று உலகப்பிரசித்தி பெற்ற பிரபலங்களாகவும்,  வருவாய் ஈட்டுவோராகவும் மாறியுள்ளனர். யூ டியுப் மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே விரைவில் பேஸ்புக் எனும் முகநூல் மூலமும்... எக்ஸ் எனக் குறிப்பிடப்படும் முன்னாள் டிவிட்டர் தளம் மூலமும் வருவாய் பெறும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. கொஞ்சம் கற்பனை... கொஞ்சம் உழைப்பு.... கொஞ்சம் தேடல்.... இருந்தாலே இவ்வித வருவாய்க்கு வாய்ப்புகள் உள்ளன. கோடிக்கணக்கான பலருக்கு முழுநேர பணியையே அளித்துக் கொண்டிருக்கும் மேற்கண்ட சமூக ஊடகங்கள், ஒரு சிலருக்கு இந்த வகையான Passive income தருபவையாக உள்ளன என்பதும் இன்றைய யதார்த்தம். 

இதை அடுத்து, இன்று நல்ல திறமையுள்ள ஆசிரியர்கள் தங்களது அனுபவம் மற்றும் அறிவு செழுமையால் நுட்பமான விஷயங்களை எளிமையாகச் சொல்லித் தந்து வகுப்பு எடுக்க முடியும் என்றால்... அதுவும் உங்களுக்கு ஒரு துடிப்பில்லா வருவாய் தரும் வாய்ப்பைப் பெற்றுத் தரும். பாடம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். கணிதம் முதல் கணினி வரை.... ஏன் தமிழ் மொழி பாடம் முதல் ஸ்போக்கன் இங்கிலீஷ் வரை... எதுவும்  இருக்கலாம். இது போன்ற அன்றாட பள்ளிப் பாடம் தவிர ஓவியம்... நாட்டியம், இசைப்பாடல் என பலவுக்கும் இன்று இணையம் மூலம் சர்வதேச சந்தை வாய்ப்புண்டு. அனேகமாக நீச்சல், டிரைவிங் போன்ற சில மட்டும்தான் இவ்வகையில் சாத்தியமில்லை என நான் கருதுகிறேன். எனவே உங்களது நுண்ணறிவை... பட்டறிவை... அனுபவ அறிவை ஒரு வீடியோவாக பதிவு செய்து குறைந்த கட்டணம் செலுத்தி அதைப் பார்த்து கேட்டு பலன் அடையாலம் என்ற வகையில் நீங்கள் களமிறங்கினால் இன்று Passive income பெற வாய்ப்புகள் அதிகம். ஆனால், தொடக்க காலத்தில் இதற்கு சற்றே மெனக்கெட வேண்டும். இந்த வகையிலான வருவாய் மெள்ள மெள்ள அதிகரிக்கும் என்பதோடு தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ள வருவாய்... அதோடு நாளாக நாளாக அதிகரிக்க வாய்ப்புள்ள வருவாய் என்பதும் கவனிக்கத்தக்கது.

கணினி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற சிலர், தங்களது ஓய்வு  நேரத்தில் மற்றவர்களுக்கு தேவையான சேவைப் பணிகளை செய்து வழங்கி... மென்பொருள்... வன்பொருள் என இரு வகையிலும் தங்களது முழுநேரப் பணி ஊதியம் / வருவாயைத் தாண்டி கூடுதல் வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, பன்னாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டுரிஸ்ட் கைடு... வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உள்நாட்டு சொத்துகளை நிர்வகிப்பது... பராமரிப்பது என இன்னும் இன்னும் யோசித்தால்... பலவற்றை பட்டியலிட முடியும். அதன் மூலம் ஒரு துடிப்பில்லா வருவாய் பெற முடியும். ஆனால், இதெல்லாம் யாரால் முடியும் என்றால், சிந்தனையில் புதுமையும், கற்பனையில் வளமையும், செயலில் வேகமும் கொண்டவர்களால்தான் முடியும். நீங்களும் அத்தகையவராக இருந்தால் வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான்.

கருத்துகள் இல்லை: